வழக்கத்துக்கு மாறாக நேற்று காலை 7 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். வழக்கமாக 9 லிருந்து 9.30 மணிக்குள் எழுந்து, அவசர அவசரமா குளிச்சிட்டு ஆபிஸ் செல்வது தான் என் அன்றாட காலைப்பணி. இன்று சீக்கிரமே எழுந்ததால் அலமாரியில் இருந்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் ஒரு துண்டு நிலம் என்ற நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சுவர் விளம்பர ஆய்தம் எனும் கட்டுரைத் தொகுப்பு தொண்டர்கள் யார் என்பதை மிக தெளிவாக உணர்த்தியது. சமகால அரசியல், உறவுகளுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிரிவினையை பேசியது. தேர்தல் நேரங்களில் யாரோ முகம் தெரியாத வேட்பாளருக்காக சுவர் விளம்பரம் செய்ய ஒரே கிராமத்து சொந்தங்கள் மோதிக் கொண்டு வாய் வார்த்தை முத்தி, கை கலப்பாகி கலவரம் வரை எப்படி செல்கிறது என்பதை பற்றியெல்லாம் ரொம்ப ஆழமா விவாதித்து இருந்தார். அந்த சிந்தனை மாறாத முகத்தோடு டீக்கடைக்கு டீ குடிக்க சென்ற போது ஒரு செய்தியைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். "ஏற்காடு இடைத்தேர்தல் இறுதி நாள் பிரச்சாரத்தில், தி.மு.க. - அ.தி.மு.க. வினரிடையே ஏற்பட்ட மோதலில் தி.மு.க. கள்ளக்குறிச்சி தியாகதுருகம் ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்முருகன் இறந்து விட்டார் என்பது தான் அந்த அதிர்ச்சிகரமான செய்தி." தேர்தலில் வெற்றி, தோல்வி மாறி மாறி வரும், ஆனால் இனி எந்தக் காலத்திலும் ராஜ்முருகனின் உயிர் திரும்பி வருமா? அதைப் பற்றி எவரும் யோசிக்க கூட தயாரில்லை. ராஜ்முருகனின் மரணம் தற்செயலாக நடந்த ஆக்சிடெண்ட் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அது கொலை, நடந்தது அதிகார வெறி தாக்குதல், பதவி வெறி தாக்குதல்...
கட்சித் தலைவனுக்கு பேனர் வைப்பதில் தொடங்கி, கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு சுவரொட்டி ஓட்டுவது வரை எதிர்க்கட்சிக்காரன், மாற்றுக் கட்சிக்காரனோடு சண்டைப் போடுவதில் தொடங்குகிறது இன்றைய அரசியல் கட்சி தொண்டர்களின் மக்கள் தொண்டு (?). தொண்டர்கள் என்பவர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு உதவி செய்வது, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வழிகாட்டுவது என்பது தான் அவர்களின் பணி. ஆனால் இன்றைக்கு எந்த கட்சியிலும் தொண்டர்கள் இல்லை, எல்லோரும் குண்டர்களாகவே இருக்கிறார்கள். நேரடியாக எடுத்த எடுப்பிலே தொண்டர்களை குறை கூறிவிட முடியாது. இவர்களின் தலைமை எப்படிபட்டது என்பதை பொருத்து தான் இவர்களின் செயல்பாடுகளும் அமைகிறது. பெரும்பாலும் இன்றைய கட்சித் தொண்டர்களிடம் தொண்டு மனம் கொஞ்சமும் கிடையாது. கட்சிக்கு கிடைக்கும் வெற்றிக் கணியில் ஒரு சிறிய துண்டாவது நமக்கு கிடைக்காதா? என்ற சுயநலமே மேலோங்கி நிற்கிறது. கட்சி தலைமைகள் கூட்டணி வைத்து எப்படியாவது வெற்றியை ஈட்டிவிட வேண்டும் என்ற நப்பாசை மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதனால் தொண்டர்கள் தங்களின் ஆவேசக் குரலை உயர்த்தி கட்சித் தலைமையின் கடைக்கண் பார்வையை தம் பக்கம் திருப்பிவிட முடியும் என்ற தவறானப் பாதையை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அரசியல் வாதிகள் தங்களின் கள்ள மவுனத்தின் மூலம் இதனை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார போதையில், பதவி வெறியில் மக்களாட்சித் தேர்தலை ஒரு யுத்தக் களத்தைப் போல வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் எதிர்கட்சிக் காரன் கொல்லப்பட வேண்டியவன் என்ற கொடிய மனத்தை தொண்டர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பொதுவாகவே அரசியல் தலைமைகள் தொண்டர்களை சிந்திக்க விடுவதில்லை. கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல, சிறிதளவு நெல்மணியை அள்ளிப் போட்டதும் சீட்டு எடுத்துக் கொடுக்கும் கிளியைப் போல, கை செலவுக்குப் பணமும், போதைக்கு மதுவும் கொடுத்து வாக்கு சேகரிக்கசொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள். இதுவரை எந்த கட்சி தலைமையும் வன்முறையில் ஈடுபட்ட தொண்டர்களை கட்சியில் இருந்து நீக்கியதாக வரலாறு கிடையாது, மாறாக பதவி உயர்வு கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். "தம்பி மக்களிடம் சென்றிடு, மக்களிடம் கற்றிடு, மக்களுக்காக பணியாற்றிடு" என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் மக்கள் இன்றைக்கு அரசியல்வாதிகளை கண்டாலே பயந்து நடுங்குகிறார்கள். ஏற்கனவே மதமெனும், சாதியெனும் நஞ்சுப் பிரிவினைகள் மக்களை, உறவுகளை ஒன்றுகூட விடாமல் தடுத்துக் கொண்டிருக்க, போதாக்குறைக்கு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய அரசியல், பிரிவினையாய் உருவெடுத்து மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அழகாக சிரிக்கும் நிலவும், இடைவிடாமல் சிணுங்கும் விண்மீனும், ஆக்க வரும் மழையும், ஏன் அழிக்க வரும் சுனாமி கூட பேதம் பார்ப்பதில்லை; உயர்சாதிக்காரர், கீழ்சாதிக்காரர், நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரன், ஆண், பெண் இப்படி எந்த வித பேதத்தையும் கணக்கில் கொள்ளாமல் அது தன்னுடைய கடமையை அல்லது சேவையை எல்லோருக்குமாய் செய்துவிட்டு தான் செல்கிறது. எனக்கு தெரிந்தமட்டில் மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதனுக்குள் மட்டும் சாதிய பிரிவினை, மத பிரிவினை, வர்க்க பிரிவினை, கலாசார பிரிவினை, இன பிரிவினை, மொழி பிரிவினை, பாலின பிரிவினை என ஏராள பிரிவினைகள் ஒருவரோடு ஒருவரை நெருங்க விடாமல் தடுக்கும் சக்திகளாக வளர்ந்து நிற்கின்றன. இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதிய பிரிவினை வாத கலாச்சாரமாக உருவெடுத்து நிற்கிறது அரசியல் பிரிவினை வாதம்.
அரசியல் பிரிவினை வாதம் என்ற மோசமான கலாச்சாரம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தேதிக்கு, மாற்று கட்சிகாரர்களை சந்திப்பதே பெரும் பாவம், மன்னிக்க முடியாத குற்றசெயல் என்று கட்சி தலைமைகள் கருதுகின்றன. கடந்த காலங்களில் அரசியல் நாகரிகம் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இரண்டு நிகழ்வுகளை சுட்டிக் காட்டுகிறேன். ஒன்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கை நிரந்தர எதிரியாக கருதப் பட்டவர் ராஜாஜி. ஆனால் தம் இரண்டாவது திருமணத்திற்கு ஆலோசனையே ராஜாஜியிடம் தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக் கொண்டார்.இரண்டாவது நிகழ்வு 1967 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இது அன்றைய தி.மு.க. தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் " குச்சியை உடைத்து வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். மரத்தையே சாய்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை" என்று காமராஜர் தோல்விக்காக வருத்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் தம் அமைச்சர்களை காமராஜரின் வீட்டிற்கே அழைத்து சென்று வாழ்த்து பெற்றதோடு எங்கள் அரசுக்கான அறிவுரைகளை அவ்வப்போது வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதுபோன்ற நாகரிக சூழ்நிலைகள் தற்போது அரசியலில் இல்லை.அப்படிப்பட்ட உறவுகள் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறதே என்பது தான் வருத்தம்..
தமிழக சட்டமன்றத்திற்கு ஏராளமான பெருமைகளும், மாண்புகளும் உண்டு என்று சொல்வார்கள். ஆனால் அவையெல்லாம் இனி இருக்குமா? என்று தெரியாது. அ.தி.மு.க. வின் கடந்த ஆட்சிகாலத்தில் கலைஞரை "கிழிந்த ஜிப்பா, தகர டப்பா" என்று கிண்டல் அடித்தார்கள். இன்றைய ஆட்சிகாலத்தில் கலைஞரை தள்ளுவண்டி என்றும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தை தண்ணியிலே இருப்பவர் என்றும் பகடி செய்து மகிழ்ந்தார்கள். கண்டிக்க வேண்டிய சபாநாயகரும் கண்டிக்கவில்லை, அவையில் இருந்த முதல்வரும் கண்டிக்கவில்லை. மாறாக அப்படி பேசியவருக்கு மறுநாளே அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கலைஞரை கருணாநிதி என்று ஒருமையில் அழைத்தமைக்கே, அப்படி சொன்னவரை எம்.ஜி.ஆர். கண்டித்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் வழி வந்த ஜெயலலிதாவோ பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கிறார். அதுபோல தமிழக சட்டமன்றத்தில் வைத்தே ஜெயலலிதாவின் சேலையை உருவ முயன்றார்கள் என்பதும் பழைய அவமானகரமான சோக வரலாறு. இந்த ஆட்சி காலத்திலே கூட தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ வை தே.மு.தி.க. உறுப்பினர்களே தாக்க முயன்றார்கள் என்பதும் தமிழக சட்டமன்ற வரலாற்றில் அழிக்க முடியாத ஆவணமாக நிற்கப் போகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசாமல் ஒருவரை ஒருவர் அருவருப்பாக வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களே இப்படி இருக்க, இவர்கள் பெற்றிருக்கும் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்?
ஒரு அரசியல்வாதி, தன் மகள் வேறொரு கட்சிக்காரரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் மகளின் திருமணத்திற்கே செல்லவில்லையாம். முன்பெல்லாம் இந்த பிரச்சனை சாதியில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. வேறொரு சாதியில் மகனோ, மகளோ காதலித்து திருமணம் செய்து கொண்டால் மகனையோ, மகளையோ தள்ளிவைத்து விடுவார்கள். ஆனால் இன்று அது அரசியலிலும் தொடருகிறது. இந்த கட்சிக்காரன், அந்த கட்சி காரனோடு பேசுவதில்லை, உறவு வைத்துக் கொள்வதில்லை. மீறினால் கட்சியில் பதவி போய்விடும் என்ற அச்சம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்சிக்காரன் வைத்த பேனரை அந்த கட்சிக்காரன் கிழிப்பது, அந்த கட்சிக் கொடி கம்பத்தை இவன் வெட்டி சாய்ப்பது, ஒருவன் செய்திருக்கும் சுவர் விளம்பரத்தில் இன்னொருவன் வந்து சாணி அடிப்பது இவையெல்லாம் எதை எதிர்பார்த்து செய்யப்படுகின்றன? தன் கட்சித் தலைவன் கைதானால் பேருந்தை மறிப்பது, மீறினால் பேருந்தை கொளுத்துவது, பேருந்தில் இருக்கும் மக்களையும் சேர்த்து கொளுத்துவது, அப்பாவிகளின் குடிசைகளை தீவைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது, இவையெல்லாம் எதை எதிர்பார்த்து நடக்கின்றன? எல்லாவற்றிற்கும் வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகள் இதுபோன்ற விஷயங்களுக்கு மவுனம் சாதிக்கிறார்கள்... மவுனத்தின் மூலம் ஆதரவு அளிக்கிறார்கள்...
ஏற்காட்டில் நடந்த சம்பவம் பதவி வெறியில் நடந்தது. தேர்தல் வெற்றிக்காக நடத்தப்பட்டது. அவர்களுக்கு தம் கட்சியின் கொள்கை மீதெல்லாம் சிறிதும் நம்பிக்கையில்லை. எதிர்கட்சிகாரனை அழித்துவிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்கள் போலும். மக்களுக்காக சேவை செய்வதாக சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..! சாமானிய மக்களிடமும் போய் சேரவேண்டிய அரசியல் சாமான்ய மக்களை அழித்தொழிக்கும் ஆபத்தான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படித்த தொண்டர்களை பதவி வெறியர்களாகவும், படிப்பறிவு அற்றவர்களை அடியாட்களாகவும் மாற்றி வைத்திருக்கும் இன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கைகளால், அமைதியாக நடக்க வேண்டிய தேர்தல்களம், யுத்தகளமாக மாறியிருக்கிறது.மக்களுக்குப் பயன்படவேண்டிய அரசியல் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணையும், மக்களையும் செல்லரித்துக் கொண்டிருக்கிறது. அன்பும், அறனும் போதிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் மேடைகளில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. சமத்துவமும், சகோதரத்துவமும் கற்பிக்கவேண்டிய அரசியல் கருத்தரங்ககள் வெறுப்பு பிரச்சாரங்களை பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலை முற்றிலுமாக மாறவேண்டும், மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கட்டும்... இல்லையென்றால் நந்தவனமாக இருக்கவேண்டிய தமிழகம், நம் கண் முன்னாலே நாசக்காடாக மாறுவதை காண்பதை தவிர வேறு வழியில்லை ..!
- தமிழன் வேலு