புதன், 31 ஜூலை, 2013

சாதியே வென்றது !

காதல் துளிரும் போது ஆயிரமாயிரம்
கனவுகளோடு துளிர்கிறது - அதற்கு
சாதியெல்லாம் தெரியாது

அவனுக்கும், அவளுக்கும் சாதியில்
எவ்வித நாட்டமுமில்லை  - மனம் நேராய்
இருந்தது; இணைந்து வாழவே விரும்பினார்கள்
அவர்களுக்கு நடுவே கோடொன்று போட்டார்கள்
அதற்கு பெயர் சாதியென்று  சொன்னார்கள் ...    

சாதி அவர்களை  மிரட்டியது
முதலில் அவர்கள் பயந்தார்கள்
தொடர்ந்து அச்சுறுத்தியது
இப்போது அவர்களின் அச்சம்
விலகியது துணிவு துளிர்விட்டது ...

மீண்டும் அது  மிரட்டியது
இப்போது அவர்களிடம் பயமில்லை
சாதிக்கு சவால் விட்டார்கள்

சாதி தன் கோரப்பல்லை கூர்தீட்டி கொண்டது
பல குடிகளில் கோரதாண்டவம் ஆடியது ...

துரத்தலும், ஓட்டமுமாய் நகர்ந்தது வாழ்வு
ஆனாலும் வானத்து நட்சத்திரங்களோடு
இணைந்து மின்னிக் கொண்டிருந்தார்கள்

திடீரென ஒருநாள்

வானத்தை கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது போல
அவர்களையும்   கறுத்த நெஞ்சுடையோர் சூழ்ந்து
கொண்டார்கள்  - வானத்தையே இரண்டாக பிளப்பது
போன்ற இடி ஒன்று விழுந்தது

ஆம் ! பிளந்தே விட்டது...
இரு நட்சத்திரங்களையும் பிரித்தே விட்டது

வானத்தின் சோகம் மண்ணை ஈரமாக்குவது போல
இவர்களின் பிரிவு கண்ணை ஈரமாக்கியது      
கனவுகளில் கடப்பாறையை சொருகினார்கள்
காதல் கலங்கி நின்றது

இரண்டும் எதிரெதிர் துருவங்களில் நின்றன
ஒன்றை வீட்டுச்சிறையில் அடைத்தார்கள்
மற்றொன்றை ஈட்டிக் கொண்டு மிரட்டினார்கள்
நம்பிக்கையில்  நச்சுரம் பாய்ச்சினார்கள்
நியாயம் வெல்லும் என்பார்கள் - ஆனால்
இங்கே சாதியே வென்றது
நீதி குடை சாய்ந்தது ...

ரயில் அவனை கொன்றது என்றார்கள் - ஆனால்
ரயிலுக்கும் அவனுக்கும் யாதொரு பகையுமில்லை    
அவனை கொன்றே விட்டார்கள்  - அவளை
கொன்று கொண்டிருக்கிறார்கள் ...

இப்போது கனவுகள் களைந்து விட்டன
வாழ்வை அவநம்பிக்கை சூழ்ந்து கொண்டது
காதல் மட்டும் நிலாக்குருவி போல
கேவிக் கொண்டிருக்கிறது ...

- தமிழன் வேலு

திங்கள், 29 ஜூலை, 2013

இறையாண்மை

சகதியில் நசுக்கப்பட்ட புழுவைப் போல
அவர்கள் எங்களை நசுக்கும் போது
எந்தவொரு தேசிய இறையாண்மையும்
தடுத்து நிறுத்திட துணியவில்லை

சாக்கடை ஓரங்களில் வீசப்படும்
குப்பைக் கழிவைப் போல அவர்கள்
எங்களை சேரிக்குள் வீசி எரியும் போது
எந்தவொரு தேசிய இறையாண்மையும்
எங்களை தாங்கிப் பிடிக்கவில்லை

சாணிப்பாலையும், மனிதச்சாணத்தையும்
உணவாய் அவர்கள் எங்களுக்கு ஊட்டியபோது
எந்தவொரு தேசிய இறையாண்மையும்
வெட்கப்படவில்லை

எங்கள் குடிசையை கொளுத்தி குளிர்காய்கிறான்;
அவனுக்கு இறையாண்மையை பற்றி எந்த
கவலையும் இல்லை

எங்களை கொன்றுபோட்டு குதூகலிக்கிறான்
அவனுக்கு இறையாண்மை மீது எந்த
அச்சமும் இல்லை
 
ஆணவமும், அடக்குமுறையும்
எப்போதும் இறையாண்மையை
மதித்ததே இல்லை

இறையாண்மையை மதிக்காத
ஆணவத்தின் மீதும், அடக்குமுறையின் மீதும்
இறையாண்மை சட்டம் எப்போதும்
பாய்ந்ததே இல்லை

நீதிகேட்டுப் போராடும் நாங்கள்
மட்டும் இறையாண்மைக்குட்பட்டு
போராட வேண்டுமென்று நீதிமன்றம்
சொல்கிறது ..!

- தமிழன் வேலு        

சனி, 27 ஜூலை, 2013

"கக்கூஸ்" கழுவ வந்த அம்மா "கம்புயூட்டர் திருடி"யா?

என்றாவது ஒருநாள் என் நண்பன் இதை படிக்க நேர்ந்தால் அவமானத்தால் கூனிக் குறுகி போய்விடுவான்; அதனால் எங்கள் நட்பும் சிதைந்து போய்விடும் என்ற தயக்கத்தில் இதை எழுத வேண்டாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஒவ்வொரு முறையும் எழுத தோன்றும் எண்ணங்களை அடக்கி கொண்டே இருந்தேன். நீண்ட மனப்போராட்டத்திற்கு பின்பு என் நண்பனை விட, எங்களின் நட்பை விட அந்த அம்மாவின் பக்கம் உள்ள நியாயமே வென்றிருக்கிறது. இன்றைக்கு எழுதியே தீருவது என்று முடிவுக்கு வந்துவிட்டேன்...

அந்த அம்மாவை நான் நிறைய முறை யாருமற்ற வீதிகளில் தனியாக பேசிக்கொண்டும், தன்னந்தனியாக விளையாடிக் கொண்டும் செல்வதை பார்த்திருக்கிறேன். நான் பார்த்த அநேக நாட்களில் எப்போதும் ஒரே உடுப்பு தான். தலைக்கு எண்ணெய் தேய்த்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும், கேசங்கள் கலைந்திருக்கும். அழுக்கு படிந்த சேலை தான். குள்ளமான உயரம். தலை வறண்டு போயிருந்தாலும் முகம் மட்டும் வாடி இருந்ததை நான் கண்டதில்லை. மனதில் எத்தனை சோகங்கள் இருக்குமோ தெரியாது, ஆனால் சிரித்த முகத்துடனே இருப்பார். யாராவது சொல்லும் சிறு, சிறு வேலைகளை செய்து சாப்பிட்டுக் கொண்டும், யாராவது ஒருவருக்கு இவர் முன்பொரு நாளில் வாசல் பெருக்கி இருப்பார், இல்லை என்றால் கக்கூஸ் சுத்தம் செய்து கொடுத்திருப்பார். அதற்காக இப்போது ஒரு டீ வாங்கி கொடுப்பார்கள். அதை டீக்கடையில் அமர்ந்து குடித்து கொண்டிருப்பார். யாருமே சொல்லாமல் வீதியில் கிடக்கும் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவாங்க. தெரிந்தவர்களிடம் ஒரு டீ வாங்கி குடுங்களேன் என்று இயலாமையோடு கேட்பாங்க. அப்படித்தான் அந்த அம்மா எனக்கு பழக்கம். எனக்கு தெரிந்து அவங்களுக்கு சொந்தம், பந்தம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டொரு முறை என்னிடமும் டீ வாங்கி தர சொல்லி கேட்டு இருக்காங்க. அவங்க  கேட்ட நேரங்களில் நான் கொடுத்ததில்லை. மாத ஊழியக்காரன் என்பதால் கிட்டத்தட்ட நானும் அந்த நிலையில் தான் இருந்திருக்கிறேன். நமக்கெல்லாம் சம்பளம் வாங்கும் அன்று ஒருநாள் மட்டும் தான் மாதத்தின் முதல்நாள், மீதி நாட்கள் எல்லாம் மாதக் கடைசி தான். சம்பளம் கைக்கு வரும் முன்னரே அதற்கான பட்ஜெட் ரெடியாகி விடும். அதனால் நம்ம நிலையம் அப்படித்தான். 

சரி விஷயத்துக்கு வருவோம்...

ஒருநாள் என் நண்பனின் குடவுனுக்கு சென்றிருந்தேன். அவனோட குடவுனில் தண்ணீர் குழாய் வசதி கிடையாது. அதனால் பாத்ரூமை பயன்படுத்தி நீண்ட ஆகியிருந்தது. பயங்கர துர்நாற்றத்துடனும், குப்பையாகவும், கழிவறை எங்கும் ஆங்காங்கே கருப்பு நிறத்தில் இருந்தது. அதுபோலவே அங்கிருந்த இரண்டு கழிவறையும் இருந்தது. அதை சுத்தம் செய்ய அவனது முதலாளி சொல்லி இருந்திருப்பார் போலும். அதற்கு அந்த அம்மாவை பயன்படுத்தி கொள்ள நினைத்து என்னிடமும் சொன்னான். நானும் சரி என்றேன். அவனே சென்று அந்த அம்மாவை அழைத்து வந்தான். கழுவுவதற்கு தேவையான துடைப்பம், பிளீச்சிங் பவுடர் எதுவும் இல்லை. கழிவறை முதல்மாடியில் ஒன்று, இரண்டாவது மாடியில் ஒன்றுமாக இருந்தது. அந்த அம்மாவிடம் சுத்தம் செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அந்த அம்மா வெள்ளந்தியாக "எதோ நீங்களே பார்த்து கொடுங்கள்" என்று சொல்லி விட்டு  மேல் மாடிக்கு செல்ல அந்த அம்மா எத்தனிக்க கொஞ்சம் பொறுங்கள் என்றான். இன்னொரு பையனிடம் சொல்லி துடைப்பம், பிளீச்சிங் பவுடர் எல்லாம் வாங்கி வர சொல்லிவிட்டு உள்ளே வந்து என்னிடம் சொன்னான் "மேலே கம்ப்யூட்டர், இன்னும் நிறைய பொருளெல்லாம் இருக்கு, அதான் மேல அனுப்பல, அவன் வந்ததும் அவனை மேலே அனுப்பி பார்த்துக்க சொல்லலாம்" என்றான். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தனக்கு வேண்டிய கூலியை கூட சரியாக கேட்டு வாங்க தெரியாத அந்த அம்மா, கம்ப்யூட்டர் திருடும் என்று என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த அம்மா படிப்பறிவு இல்லாதவர், கம்ப்யூட்டரில் எந்த பொருளை கழற்றி விற்றால் அதிக விலை போகும் என்றும் தெரியாது; எந்த பொருளை எப்படி கழட்ட வேண்டும் என்றும் தெரியாது. ஆனால் படித்த அறிவாளிகள் அவர் கம்ப்யூட்டர் திருடுவார் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க இயலவில்லை. இப்படி பட்ட ஆழ்மனதின் வக்கிரங்கள் இன்றைக்கு நேற்றைக்கு புதிதாக நடந்ததல்ல. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே "எளியவர்கள் தான் திருடுவார்கள்" என்ற பொதுப்புத்தி கட்டமைக்கப் பட்டிருக்கிறது. புழுங்கி கொண்டே இருந்தேன். அவனோ எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சர்வ சாதாரணமாய் மற்ற வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். " என்றாவது ஒருநாள் இவனுக்கு இப்படி ஒரு அவமதிப்பு நிகழ்ந்தால் என்ன செய்வான்? தன் தேவைக்காக அந்த அம்மாவை வலிய சென்று அழைத்து வந்தவன் இப்படி அந்த அம்மாவுக்கு "திருடி" பட்டம் கொடுக்கிறானேஎன்று பலவித குழப்பத்தில் இருந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் பொறுமையாக இருந்தேன் "அந்த அம்மாவுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறான்"என்று பார்ப்போம் என்பதற்காக. ஒருநாள் மற்றொரு நண்பன் ஒருவனிடம் டூ வீலர் கடன் வாங்கி கொண்டு வெளியில் சென்றிருந்தேன்.  அப்போ ஜெயின் உராயும் சத்தம் கேட்டதால் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று காண்பித்தேன். ஒரு போல்டு கழண்டு கிடந்தது. ஐந்து நிமிடத்தில் சரி செய்து விட்டார். 100 ரூபாய் பில் போட்டார். அந்த கணக்கை எண்ணி இந்த அம்மாவுக்கு எப்படியும் 400 ரூபாய்க்கு மேல் தான் கொடுப்பான் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன்.

துடைப்பமும், பிளீச்சிங் பவுடரும் வாங்க சென்றவன், வாங்கி கொண்டு வந்து விட்டான். அந்த அம்மாவை அழைத்துக் கொண்டு மேலே செல்லும் போது காலை மணி 11 மணியாகி இருந்தது. எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் கணக்கில் வைத்திருந்தேன். பலத்த காவலுடன் கழிவறை சுத்தம் செய்ய மதியம் 2.00 மணி ஆகிவிட்டது. அவன் மூக்கை பொத்திக் கொண்டே அருகில் நின்றானாம். அந்த அம்மா எவ்வித தயக்கமுமின்றி கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டுக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ததாம். அருகில் காவலுக்கு நின்றவன் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டான். வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த அம்மாவுக்கு ஒரு ரஸ்னா வாங்கி கொடுத்தானுங்க, அவ்ளோதான். வேலை முடிந்து கொண்டு அந்த அம்மா கீழே இறங்கி வந்தது. அந்த அம்மாவை சேலையை மட்டும் தான் அவுத்து காட்ட சொல்லவில்லை, அப்படி ஒரு சந்தேகப் பார்வையை பாய்ச்சினான். கூலி எவ்வளவு கொடுத்தான் என்று என்பதை அறிந்து கொள்ள துடித்தேன். இவனிடம் கேட்க எனக்கு விருப்பமில்லை. எந்த அம்மா டீக்கடையை நோக்கி செல்வதை கவனித்தேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நானும் டீக்கடைக்கு சென்றேன். டீ குடித்து கொண்டிருந்தது. நான் அருகில் சென்று எவ்வளவு கூலி கொடுத்தாங்க என்று கேட்டேன். 150 ரூபாய் தம்பி என்று சொல்லிவிட்டு அவங்க  டீ குடிப்பதிலே நோக்கமாய் இருந்தாங்க. "கூடுதலா கேட்க வேண்டித்தானே" என்றேன். "அதிகமா வாங்கி நான் என்ன செய்யப் போறேன்" என்று அப்பாவியாய் சொல்லி  "தனக்கான கூலியை கூட முறையாக கேட்டு வாங்க தெரியாத தனக்கு "கம்ப்யூட்டர் திருடி" பட்டம் கொடுத்தவன் கன்னத்தில் பொளேர் என்று அறை விட்டது...

- தமிழன் வேலு                     

புதன், 17 ஜூலை, 2013

நாளை நான் ... நாளை மறுநாள் நீ ...

இந்த 
சமூக அமைப்பு
எந்த சிராய்ப்புமின்றி
இப்படியே தொடருமானால்
நாளை நான்
நாளை மறுநாள் நீ

மண்டையில் மட்டும் 
மோதி, மற்ற பாகங்களுக்கு 
எந்த பங்கமும் இல்லாமல் 
நம்மை கொன்றுவிட்டு
செல்லும் ரயில் ...

-தமிழன் வேலு

செவ்வாய், 9 ஜூலை, 2013

அமைதிக்குப் பின்னால் புயல் !

புயலுக்குப் பின்னால் அமைதியென்று
சொல்லுவார்கள் - இன்றைக்கு
சிறுத்தைகளின் அமைதிக்குப் பின்னால்
புயலொன்று காத்திருக்கிறது !

புயல் எச்சரிக்கை விடப்பட்டது
பெரியார் திடலில்...

இந்தப் புயல் உழைக்கும் மக்களின்
உடைமைகளை சூறையாட அல்ல;
உழைக்கும் மக்களின் உடைமைகளுக்கு
தீ வைக்கும் சாதியத்தை சூறையாடிடவே !

எளிய மக்களின் உணர்வுகளை
உசுப்பி வாக்கு வங்கியை வலுப்படுத்திக்
கொள்வதற்கு அல்ல; எளிய மக்களின்
உணர்வுகளை சீராக்கி, சமூக அமைதியை
நிலை நாட்டிடவே !

புளுகுப் புராணங்களை சொல்லி, அப்பாவி
இளைஞர்களை வன்முறையாளர்களாக
உருவாக்க அல்ல; புளுகாண்டிகளின்
வெறுப்பு பிரச்சாரத்தை முறியடித்து
வேற்றுமைகளை களைந்து உழைக்கும்
மக்களின் ஒற்றுமையை நிலை நாட்டிடவே !

சேரிப்புயல் சுற்றி சுழற்றி அடிக்கும் - அதில்
சாதியவாதிகள் சிக்குவார்கள்
சாமானியர்கள் தப்புவார்கள் !

சாதியம் இரையாகும்
சமத்துவம் சாத்தியமாகும் !

தமிழர் விரோதம் பலியாகும்
தமிழர் இறையாண்மை உருவாகும் !

- தமிழன் வேலு

திங்கள், 8 ஜூலை, 2013

தருமபுரி சாதி வெறியாட்டமும் ராமதாசின் சாதிய ஒருங்கிணைப்பும்!

 நவம்பர் 07 தமிழக வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத கருப்பு தினமாக மாறிவிட்டது; எம் தாய்மார்கள் வீட்டைச் சூழும் இருளுக்கு இல்லாத மின்சாரத்தினால், சிமிளி விளக்கைத்தான் ஏற்ற நினைத்திருப்பார்; ஆனால் வீடே பற்றி எரியும் என்று கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள்!

          தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே உள்ளது நத்தம் காலனி இளவரசனுக்கும், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் மகள் திவ்யாவுக்கு நடந்த காதல் திருமணத்தை அடுத்து, தலித் மக்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டது.

சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், இந்த சமூகம், நாளைய தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் எல்லோரும் இந்தக் கலவரமே கடைசியாக இருக்கட்டும் என்றுதான் விரும்பினார்கள். ஆனால் ராமதாசின் அடாவடி சாதியப் பேச்சுக்கள் தமிழகத்தில் தணியாத சூட்டையும், சாதியக் கலவரம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ராமதாசின் சாதிய ஒருங்கிணைப்பு:-

தருமபுரி சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு தம் சாதிய வன்மத்தை வெளிப்படுத்தி தமிழகத்தில் சாதிக் கலவரத்தை தூண்டிவிட ராமதாஸ் தூபமிட்டுருக்கிறார். இது குறித்து அவர் சொல்லியுள்ள கருத்துக்கள் மிகவும் அபாயகரமானவை. வன்முறையைத் தூண்டும் அவருடைய கருத்துக்கள்:-

* இது இருஜாதி மோதல் இல்லை. அதேபோல் அரசியல் அடிப்படையில் பார்த்தாலும் திருமாவளவன் கூறுவதைப்போல, இது பாமகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான மோதல் இல்லை. இந்த காதல் திருமணத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட நாகராஜ் தேமுதிகவைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் அதிமுகவைச் சேர்ந்த தர்மபுரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்தியினுடைய கணவர் முருகேசன், திமுகவைச் சேர்ந்த தர்மபுரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் பச்சையப்பன் ஆகியோரும் அடக்கம். நத்தம் காலனி நாயக்கன் கொட்டாய் ஆகிய இடங்களில் நடந்த மோதல்களில் ஒரு சில வீடுகளுக்கு மட்டுமே தீ வைக்கப்பட்டதாகவும், மாவட்ட திட்ட அலுவல‌ராக உள்ள வீரண்ணன்தான் அங்குள்ள சிலரைத் தொடர்பு கொண்டு எல்லா வீடுகளையும் எரித்து விடுங்கள்; புதிய வீடுகளை கட்டித் தர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாகவும், அதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உள்ள வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



* 95 சதவிகிதம் காதல் திருமணங்கள் மோசடித் திருமணங்கள்; பணத்திற்காக காதல் நாடகத்தை தலித் வாலிபர்கள் செய்கிறார்கள். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஊக்குவிக்கிறது.

* தலித்துகள் அதிகமாக வாழும் பகுதியில் மற்ற சாதிக்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மற்ற சாதிப் பெண்கள் தலித்துகள் வசிக்கும் பகுதி வழியாக செல்லும்போது கிண்டல் செய்கிறார்கள். தவறாக நடந்து கொள்ள முயலுகிறார்கள்.

* வன்கொடுமைச் சட்டம் - 1989 முழுக்க முழுக்க தவறாகப் பயன்படுத்தப்படுகிறது இதனை தலித்துகள் மற்ற சாதியினரை பழிவாங்குவதற்கே பயன்படுத்துகின்றனர். இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வரமுடியாத நிலை இருக்கிறது. அதை மாற்றி பிணையில் வரக்கூடியதாக ஆக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதாக இருந்தால் அதை மாவட்ட நீதிபதி தலைமையின் கீழ் ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும்.

* தருமபுரியில் நடந்த கலவரத்திற்கும் வன்னியர் சங்கம மற்றும் பா.ம.க.விற்கும் சம்பந்தம் இல்லை, அங்கே இருந்த சாதிய முரண்பாடுகளே காரணம்.

* தமிழகத்தில் அரங்கேறும் சாதிக்கலவரங்களுக்குப் பின்னால் திராவிடத் தலைவர் ஒருவர் தான் துணையாக இருக்கிறார்.

* தலித் வாலிபர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு மற்ற சாதிப் பெண்களை மயக்குகிறார்கள்.

* காதல் திருமணங்கள் என்ற பேரில் காதல் நாடகங்கள் அரங்கேறுகின்றன; பணத்திற்காகவே காதல் நாடகம் நடத்துகின்றனர். காதலித்து பின்பு பேரம் பேசி பணம் பறித்துக் கொண்டு பெண்களைத் துரத்தி விடுகின்றனர்.

* காதல் திருமணங்களே வேண்டாம்; இனி யாரும் காதலிக்கக் கூடாது

* 'காதல் நாடகத் திருமணங்கள்' என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளையும், வன்கொடுமை சட்டத்தைப் பயன்படுத்தி பழி வாங்குகின்றனர்.

* நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

* தர்மபுரி மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி முடித்துத் திரும்பும் மாணவிகளை, தலித் சமுதாயத்தை சேர்ந்த சிலர் அருவருக்கத்தக்க வகையில் ஈவ்டீசிங் செய்கின்றனர்.

* தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.

* கடலூர்  மாவட்டத்தில் மட்டும் காதலித்து பின்பு பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் விதவையாக 2000 பெண்கள் உள்ளனர்.

* தலித் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சில சட்ட உரிமைகளை அச்சமுதாயத்தில் உள்ள சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்.

* ஒரு தலைவன் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்று தரவேண்டும். அதைவிடுத்து அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் ஒழுக்கமா? வன்முறையைத் தூண்டும் வசனம் கட்சிக் கொள்கையா? இங்க பாருங்க எப்படி எல்லாம் வசனம் எழுதப்பட்டுள்ளது, பாருங்கள். இனி திருமாவளவனுடன் கூட்டனி கிடையாது

* தலித்துகளிடம் இருந்து தலித் அல்லாதோரைப் பாதுகாக்க அனைத்து சமுதாய சங்கங்களை ஒருங்கிணைப்போம். (அதன்படி டிசம்பர் 2 ஆம் தேதி 48 சாதி அமைப்புகளை கூட்டி அனைத்து சாதி கூட்டத்தை கூடியுள்ளார்.)

* கலப்புத் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது; அதனால் தமிழ்த் தேசியத்தை அமைக்க முடியாது.

* 17, 18 வயதுகளில், டீன் ஏஜ் எனப்படும் அந்த வயது பெண்களுக்கு எதுவும் தெரியாது. 25-வயதுக்கு மேற்பட்டு காதலித்து திருமணம் செய்யும் திருமணங்களே 95 சதவீதம் விவாகரத்தில் முடிகிறது. பெண்ணின் திருமணம் வயது 21 என நிர்ணயிக்க வேண்டும். படிக்கும்போதே இளம்பெண்களை காதல் என்ற நோயை ஏற்படுத்தி சீரழிக்கும் சமுதாயக் குற்றத்தை தடுத்திட வேண்டும்.

* திருமணத்திற்கு இருவீட்டு பெற்றோரின் சம்மதம் கட்டாயம் வாங்க வேண்டும்.

* (06.12.2012) நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான்.

* நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணைக் கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

* ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி பறக்க வேண்டும்.

* தலித் இளைஞர்கள் டி.ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு வன்னியப் பெண்களைக் கவர்ந்து தம் வலையில் விழவைத்து ஏமாற்றுகின்றனர். நமது பெண்களைக் காக்க வன்னியர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

    இன்னும் ஏராளமான வன்மம் நிறைந்த கருத்துக்களை மருத்துவர் அள்ளி வீசியுள்ளார். காதல் திருமணங்கள் என்ற பேரில் சமூக சீர்கேடுகள் அரங்கேறுவது  உண்மையாக இருக்குமானால், பெண்களை பணத்திற்காக வாலிபர்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்றால், ஒரு பொறுப்புள்ள  சமூகவாதியாக ராமதாஸ் என்ன செய்திருக்க வேண்டும்? சனநாயக சக்திகள் உட்பட அனைத்து சமூக விரும்பிகளையும் அழைத்துப் போராடி இருக்கவேண்டும். அனைத்து சாதிப் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை என்றால், அனைத்துத் தமிழர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் என்றல்லவா அழைத்திருக்க வேண்டும்? ஏன் 'வன்னியர்களே வாருங்கள் ஒன்றிணைவோம்' என்று அழைத்தார்? அதுமட்டுமில்லாமல் 19 சதவீதம் மட்டுமே உள்ள தலித்துகளுக்கு எதிராக 81 சதவீத  ஒட்டுமொத்த சாதி இந்துக்களை திருப்பிவிடுவது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை மருத்துவர் உணர்ந்துதான் சொன்னாரா?

இதுநாள் வரை தமிழ், தமிழினம் என்று பேசிவந்த மருத்துவரின் திருவாயில் இப்போது சாதி, வன்னியர் என்ற சொற்களே மிஞ்சி உள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு உள்ள தலித் மக்கள் தான், பிற சாதி மக்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்கள் தான் மற்ற சாதிக்காரர்களை  அடிமைப்படுத்துவதாகவும் கூறுவது எவ்வளவு பெரிய அப்பட்டமான பொய். இதனால் என்ன மாதிரியான விளைவுகள் நிகழும்? ராமதாசின் வன்மம் நிறைந்த பேச்சுக்கள் மூலம் அவர் எதிர்பார்த்த வன்முறைகள் துவங்கிவிட்டன.

ஆம்! கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாக்கம் கிராமத்தில் தருமபுரி கலவரத்தைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக 8 வீடுகள் உட்பட டாட்டா வாகனம், மோட்டார் பைக் உட்படவற்றை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இது தமிழகம் முழுவதும் தொடர்ந்தால்  இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம்தான் மிச்சம் உள்ளது. மருத்துவரின் பேச்சுக்கள் எப்படிப்பட்ட அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்  (19.11.2012) இரவு 12 மணிக்கு என் நண்பன் துபாயில் இருந்து போன் பண்ணி "மச்சான் நம்ம வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வராதுல்ல? ஆம்பிள்ளை இல்லாத வீடுடா.. எங்க அம்மாவ அடிக்கடி போய் பார்த்துக்கடா" என்று பதற்றத்தோடு பேசுகிறான். அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இத்தனைக்கும் தருமபுரிக்கும், அரியலூருக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் சேரிகள் என்பதால் ஏற்பட்ட பயம்; ராமதாசின் பேச்சினால் உண்டான பயம். இதுதான் இன்றைய‌ தேதியில் தமிழகம் முழுவதும் உள்ள சேரிகளின் நிலையாக‌ இருக்கிறது.

சனநாயக சக்திகளின் ஒருங்கிணைவு



ஆதிக்க சாதிகளின் ஒன்றிணைவுக்கு எதிர்வினையாக, தலித் மக்களுக்கு ஆதரவாக‌ தமிழ்த் தேசியவாதிகள், பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள் கைகோர்த்திருக்கிறார்கள். சென்னையில் சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து திருமாவளவன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தா.பாண்டியன், நல்லகண்ணு,  ஜி.ராமகிருஷ்ணன், தமிமுன் அன்சாரி, கொளத்தூர் மணி, தெஹ்லான் பார்கவி ஆகியோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டார். தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சொன்னதைப் போல, தருமபுரியில் தலித் மக்கள் மீது வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் முன்னின்று நடத்திய தாக்குதல்களைக்  கண்டித்து வெறுமனே அறிக்கையோடும் ஆறுதலோடும் நின்றுவிடாமல் உடனடியாக களத்திற்குச் சென்று தமது ஜனநாயகக் கடமையை ஆற்றிய முதல் தலித் அல்லாத சமூகத்தினர் இஸ்லாமியர்கள்தான் என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். சாதி வெறியாட்டம் தலித் மக்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல; அது தமிழர் பிரச்சனைதான்; அதுவும்தாம் தமிழ்தேசியத்திற்கு முட்டுக்கட்டை; சாதியம் தான் சனநாயகத்தின் நேரடி எதிரி.

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆசிரியர் அவர்கள், "தி.க.வும்  தி.மு.க.வும் சேர்த்து இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இனி விடுதலைச் சிறுத்தைகளும் இத்துடன் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்படும்" என்றார். அதே விழாவில் பேசிய சுப.வீ. அவர்கள் "திருமாவளவன் தனிமைபடுத்தப்பட்டதாக பயப்படவேண்டாம்; உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்" என்றார். இறுதியாக பேசிய கலைஞர் அவர்கள், இனி சாதியை வைத்து வன்முறையைத் தூண்டுபவர்களை தண்டிக்கவேண்டும் என்றும்; கலப்பு மணங்களுக்கு எதிராக யார் முயற்சி எடுத்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்திருக்கிறார்.   

இந்த இடத்திலே தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். (09-12-2012) தருமபுரியில் திராவிடர் கழகம் நடத்திய சாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய அ.மார்க்ஸ் அவர்கள் கருஞ்சட்டையினர், தலித் தோழர்கள், எல்லா இயக்கங்களிலும் இருந்து வந்துள்ள 'சாதிக் கூட்டணி'யை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் எனத் திரண்டுள்ள  இதுதான் இயற்கைக் கூட்டணி. இடையில் சிலகாலம் ஏதோ பெரியாரும், திராவிட இயக்கமும் தலித்களுக்கு எதிர் என்பதுபோலச் சிலர் சுய லாபங்களுக்காகப் பரப்பி வந்த கருத்தை தருமபுரிக் கலவரம் உடைத்துள்ளது. இக்கூட்டணி தொடர வேண்டும்" என்று பேசி இருக்கிறார். படைப்பாளிகளும் வன்முறைக்கு எதிராக படை எடுத்து இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வன்கொடுமைக்கு எதிராக சனநாயக‌ சக்திகள் ஓர் அணியில் திரள்வது இதுவே முதல் முறையாகும்.

சனநாயக சக்திகளை ஒன்றுபடுத்தி அல்லது அவர்களோடு ஒன்றிணைந்து திருமாவளவன் போராடி வருவது நல்ல பலனைத் தரும். கருத்தியல் போராளிகளும், களப் போராளிகளும் இணைந்த இந்தக் கூட்டணி தான் தமிழர் விடுதலைக்கான கூட்டணி; ராமதாஸ் கூட்டி இருக்கும் சாதிக் கூட்டணி சனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் கூட்டணி!!

 - அங்கனூர் தமிழன் வேலு

(2012, டிசம்பர் 11, அன்று கீற்று இணையதளத்தில் வெளியானது)

கூடன்குளமும்...கொலவெறியும்....

சர்வபலமிக்க மத்திய அரசையும், தாயுள்ளம் கொண்டவர் என்று சிலரால் போற்றப்படும்  தாயா? அல்லாத எம் மக்களை கொள்ளும் தீயா? என்று கூட வர்ணிக்க முடியாதவரால் நடத்தப்படும்  பாசிச தமிழக அரசையும் எதிர்த்து சாதாரண அன்றாடங்காய்ச்சி மக்களால் நடத்தப்படும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒரு வருடத்தையும் கடந்து, இன்னமும் ஓயவில்லை . இப்படி ஒரு மக்கள் போராட்டத்தை நான் இதுவரை பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை. ஆரம்ப கட்டங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி அவர்களின் அச்சத்தைப் போக்கி மக்கள் ஆதரவுடன் அணு உலையை திறப்போம் என்றவர்கள், இன்று குழைந்தைகள், சிறுவர்கள் என்றுகூட பாராமல்  கொலவெறித்தனமாக அடக்கி ஒடுக்கி வருகிறார்கள். முதலில் போராட்டத்தை வழிநடத்தி வரும் தோழர் சுப.உதயக்குமார் அவர்களுக்கு எம் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

பெரிதாக எந்த ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கும் இன்றி, பொருளாதார பின்புலமுமின்றி இப்படி ஒருப் போராட்டத்தை இவ்வளவு தூரம் நடத்தி வருகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு கொள்கை வெறிப் பிடித்தவராக இருப்பார் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனாலும் அவர் ஒரு தவறை செய்திருக்கிறார் என்பதையும் சொல்ல விரும்புகிறேன். பாசிச ஜெ. வை நம்பியதுதான் அது. கருணாநிதி கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கிறார். ஆக ஜெயலலிதா எதிர்ப்பார் என்று தவறாக எண்ணிவிட்டார். தோழரே மக்களை ஒடுக்குவதில் அவர்கள் இருவருமே ஒரே கட்சிதான்.

கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்று அணு விஞ்ஞானி அப்துல் கலாம் சொல்லிவிட்டார். அதைப் பற்றி எல்லாம் எமக்கு கவலை இல்லை, அங்கே வாழும் மக்கள் இத்தனை வலிமையாக எதிர்க்கிறார்கள் என்றால், மக்கள் அந்த திட்டத்தையே வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றால் யாருக்காக அந்த திட்டம்? ரஷ்யாவுக்கா? பெரும் பண முதலாளிகளுக்கா? மக்களுக்காக நிறைவேற்றப்படும் திட்டம் எதுவாக இருந்தாலும் மக்கள் ஆதரவு இல்லை என்றால் இழுத்து மூடுவதுதானே ஒரு மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் செயலாக இருக்க முடியும். ஆனால் இங்கே அதுவா நடக்கிறது. உலகம் கைகொட்டி சிரிக்கிறது.  அய்யா அப்துல் கலாம் அவர்களே உங்களை ஒரே ஒருக் கேள்வி கேட்கிறேன். உங்களை கேள்விக் கேட்கும் தகுதி எமக்கு இல்லாமல் கூட இருக்கலாம்,ஆனாலும் அடித்தட்டு மக்களோடு வாழக்கூடியவன் என்ற ரீதியில் கேட்கிறேன். பெரும் வல்லரசான அமெரிக்காவே அணு உலைக் கழிவுகளில் உள்ள நச்சுத் தன்மையை செயல் இழக்க வைக்க திணறிக் கொண்டு, பசுபிக் பெருங்கடலிலும், குட்டி நாடுகளும் கொட்டி வருகிறது. ஆனால் பெரும் ஊழல் பெருச்சாளிகள் கையில் இருக்கும் இந்தியா எப்படி அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வெளியேறுவார்கள் என்று நம்புகிறீர்கள்? மனித இதயத்தில் இருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று வாய்ப்பு இருந்தால் பல்லாயிரக் கணக்கான மக்களின் இதயத்தையும் எடுத்து மின்சாரம் தயாரிப்பீர்களோ? அப்படி தயாரிக்கும் மின்சாரத்தை யாருக்கு வழங்கப் போகிறீர்கள்? மக்களுக்கு பயனுள்ள திட்டம்தான் அணு உலை திட்டம் என்றால் கேரளாவில் வாழும் மக்கள் முட்டாள்களா? ஆந்திராவில் வாழும் மக்கள் எல்லாம் கேனையர்களா? ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்பதை கொஞ்சம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டு அணு உலையைத் திறந்து கொள்ளுங்கள். இவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றமும் தீர்ப்பு அளித்திருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் உண்டாக்குகிறது.

மக்களை ஒடுக்கி நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின் சூத்திரதாரியே ஜெயலலிதா தான். இரண்டு மணிநேரம் இருந்த மின்வெட்டை பத்து மணிநேரமாக்கி போலியான மின் தட்டுப்பாட்டை உண்டாக்கி மக்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டவரே இந்த புண்ணியவதி தானே. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவுக்கு முதல் நாள் வரை மக்களோடு நானும் களத்தில் நிற்ப்பேன் என்று வாய் அடித்த அம்மையார் வாக்குப் பதிவுக்கு மறுநாளே கூடங்குளம் அணுஉலையை திறக்க தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்கும் என்று அறிக்கை விட்டு நாராயண சாமி வயிற்றி பாலை வார்த்து இடிந்தகரை மக்களின் வயிற்றில் தீயை கொட்டி விட்டார்.  பரமக்குடியில் எழுப் பேர் கொல்லப்பட்டார்கள், அடித்தட்டு மக்களை நசுக்கும் விதமாக பால் விலையை உயர்த்தினார்கள், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போகிறேன் என்றார்கள், போதாக்குறைக்கு பேருந்து கட்டணத்தையும் உயர்த்தி மக்களை கொதிநிலையின் உச்சிக்கே கொண்டு சென்றார். அனாலும் எம் மக்கள், அம்மா இனி வரும் சந்ததியை காப்பார்கள் என்று அம்மையார் சொன்ன ஒற்றை வார்த்தையை நம்பி இடைத்தேர்தலில் வாரி வாரி இறைத்தார்களே வாக்குகளை. என்ன  பிரயோஜனம்? நானும் கருணாநிதியும் ஒண்ணு தான். அது தெரியாத உங்கள் வாயில் இனி மண்ணுதான் என்று சொல்லிவிட்டாரே...

சர்வபலமிக்கவர்கள் எப்படி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்? கூடங்குளத்தை சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு. கூடங்குளம் அணு உலைக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்ட போலீசார், தமிழ்நாட்டு சிறப்பு காவல்ப்படை 26 கம்பெனி, அதிவேக அதிரடிப் படை 4 கம்பெனி, சிறப்பு அதிரடிப் படை 1 கம்பெனி, மத்திய அதிரடிப் படை 6 கம்பெனி, கேரளா,  கர்நாடகா, புதுவை, தமிழகம் ஆகிய நான்கு மாநில மத்திய ரிசர்வ் போலிஸ் படை ஆகிய 7000  போலிஸ் வீரர்களை கொண்டுதான் நிறைவேற்றுகிறது. தூ.... வெட்கமாக இல்லையா மக்களுக்காக என்று சொல்லும் திட்டத்திற்கு இவ்வளவு பாதுகாப்பா? அறவழியில் போராடும் மக்கள் மீது பொய் வழக்குகள், வழி நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு, 144 தடை உத்தரவு. அறவழியில் போராடியவர்களை நக்சலைட்டுகள் என்று கைது செய்தார்கள். வன்னி அரசு, சதீஷ், முகிலன் போன்ற தோழர்களை குண்டு வைத்து தாக்க திட்டம் தீட்டினார்கள் என்று கைது செய்தவர்கள், இதற்க்கு முன்பு என்ன சொன்னார்கள், ராக்கெட்டே மோதினாலும் அணு உலை ஒன்றும் ஆகாது என்றவர்கள், இவர்களை ஏன் கைது செய்தார்கள்? இப்படி மக்களை ஓடிக்கித்தான் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? சொந்த நாட்டு மக்களையே ஒடுக்கி இந்த நிறைவேற்றும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? இந்த நாட்டின் தேசப்பிதா காந்தியாம் ! இந்த பூமிக்கு பெயர் காந்திப் பூமியாம் !! இந்த நாட்டில் உண்ணாவிரதத்துக்கு  காந்தியப் போராட்டம் என்றும் ஒரு  பெயர் இருக்கிறதாம் - ஆனால் இங்கே மக்கள்  அவர் வழியில் தன்  உரிமைக்காக போராடினால் கூட கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் என்றால் காந்திக்கு இங்கே என்ன மதிப்பு? பின் எதற்கு அவரை தேசப்பிதா என்று  சொல்லவேண்டும்?  எதற்கு காந்தி தேசம் என்று சொல்லவேண்டும்? என்று தான் கேள்விக் கேட்க தோன்றுகிறது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்து வருவது அப்பட்டமாக தெரிந்த உண்மை, அதையே கூறி அரசியல் செய்யும் ஜெயலலிதாவும் வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழர்களுக்கு நான் என்றைக்கும் ஆதரவாக நிற்ப்பேன் என்று சொன்னவர் தம் ஆதரவை வெளிப்படுத்தி இருப்பது எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்தியாவின் மான்செஸ்டர் கொயம்போத்தூர் நகரத்தையே இருளில் மூழ்கடித்து, மக்களை வாட்டி வதைத்து, முதலில் கூடங்குளம் வேண்டாம் என்று சொன்ன மக்களில் சிலரை கூடங்குளத்தை உடனே திறக்க வேண்டும் என்று கூச்சல் போட வைத்து வெற்றியும் அடைந்துள்ள ஜெயலலிதா அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தமிழக முதல்வர் தானே ஒழிய ரஷ்ய முதல்வர் அல்ல. எப்படியோ கூடங்குளத்தில் மக்களை ஒடுக்கி வெற்றி பெரும் தருவாயில் உள்ளவர்களுக்கு ஒன்றை உணர்த்தி உள்ளார்கள் இனி தமிழகத்தில் எந்த மூலையிலும் அணு உலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாது. அந்த அளவுக்கு திருப்பி அடித்து உள்ளார்கள் மக்கள். ராஜபக்ஷே நடத்தியது நிகழ்கால முள்ளிவாய்க்கால் பேரவலம்... மத்திய அரசுடன் இணைத்து ஜெயலலிதா நடத்துவது வரும்கால கூடன்குள பேரவலம் என்பதை யாராலும் மறுக்க முடியாது....

மக்களை ஒடுக்கி பின்னாளில் மக்களிடம் மண்டியிட்டு தோற்றுப்போனவர்கள் அதிகம்....
அந்த வரிசையில் இன்று இவர்களும், நாளை மண்டியிடுவார்கள்.....

(2012, செப்டம்பர் 9, அன்று கீற்று இணையதளத்தில் வெளியானது) 

முதலில் ...

இன்றுதான் புதிதாக அல்ல
நேற்றைக்கும் நடந்தது

இன்றோடு நின்றுவிடப் போவதுமல்ல
நாளைக்கும் நடக்கும்

இது உள்நாட்டுப் போர் தான்
நம் எதிராளி
சாதியவாதிகள் மட்டுமல்ல
அரசு எந்திரங்களும் தான் ...

தொடர் வன்கொடுமை
தாக்குதலிகளில் சிக்கி
சிதறுண்டுப் போகும் மக்களுக்கு
கண்டன அறிக்கைகளும்
கண்டன கூட்டங்களும் தான்
தீர்வாகுமா? என்பதை
தீர்மானித்துக் கொள்ளுங்கள் !

- தமிழன் வேலு