பொதுவாகவே நம்மவர்களிடம் ஒரு பழக்கம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. ஒருவரிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் "கடவுள் சாட்சியாக சொல்" என்று சத்தியம் வாங்குவார்கள். அந்த பழக்கம் முக்கியப் பதவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து கொள்பவர்கள் கூட "கடவுள் ஆணையாக உண்மையாக இருப்பேன்" என்று சத்தியம் செய்வார்கள். பின்னாளில் திராவிட இயக்கங்களின் மூலம் பகுத்தறிவு பிராச்சாரத்தின் பயனாக "உளமாற உறுதியளிக்கிறேன்" என்று பதவியேற்றுக் கொள்ளும் வழக்கம் வந்தது. இந்த "கடவுள் சாட்சியாக" என்பது தான் ஒருவரின் உச்சபட்ச நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் சொல்லாக பரவலாக இருந்து வருகிறது. கடவுளின் மீது சத்தியம் செய்துவிட்டு தவறு செய்பவர்களை கடவுள் நேரடியாக தண்டிப்பார் என்றும், கடவுள் மீது சத்தியம் செய்த ஒருவர் தவறு செய்யமாட்டார் என்றும் தப்பபிராயம் கற்பிக்கப்பட்டுள்ளது. சில கடவுள் அபிமானிகள் கூட சொல்வார்கள் கடவுள் நம்பிக்கை என்பது ஒருவனை நேர்வழி படுத்தும் அவன் தவறு செய்யும் போது தயக்கம் உண்டாகும் என்பார்கள்.
ஆனால்
கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி, பட்டபகலில் கடவுளின் சன்னிதானத்தில், "கடவுள் சாட்சியாக" காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர் ராமன் கொலை செய்யப்பட்டார். கடவுள் வரதராஜ பெருமாள் சாட்சியாக நடந்த இக்கொலையை தடுக்க கடவுளும் முன்வரவில்லை, கொலை செய்தவருக்கு எவ்வித கடவுள் பயமோ, குற்ற உணர்ச்சியோ, கடவுள் அபிமானிகள் சொல்வதைப் போல தயக்கமோ கூட ஏற்ப்படவில்லை என்பது தனிக்கதை.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் பெயர் அடிபடத் தொடங்கியது. 2004 நவம்பர் 11ம் தேதி ஆந்திர மாநிலம் மெஹபூப் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரன். அது தீபாவளி நாள். 2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஜயேந்தினும் கைதானார்.9 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக 10 ஆண்டாக நடந்து கொண்டிருந்த வழக்கில் நேற்று (27.11.2013) புதுச்சேரி நீதிமன்றம் "கூட்டுச் சதிக்கான ஆதாரம் இல்லாததால் ஜெயேந்திரன், விஜயேந்திரன் உட்பட 23 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி முருகன் தீர்ப்பளித்திருக்கிறார். பரபரப்பான இந்த வழக்கில் அரசு முன்வைத்த சாட்சிகளில் 83 பேர் அரசுத் தரப்புக்கு ஒத்துழைப்பு தராமல் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர் என்பது தான் வழக்கின் தீர்ப்பையே தீர்மானித்து இருக்கிறது. இத்தனைக்கும் ஜெயேந்திரன் நீதிபதியிடம் பேரம் பேசிய ஆடியோ சிடி வெளியான பிறகுதான் இந்த தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது." 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான்-ஆக்கப்பட்டதுதான். இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சியானது கிடையாது. குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர்" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் எஸ்.வி.சேகர் 'நீதி நிலைநாட்டப்பட்டது' என்கிறார், சுப்ரமணியசாமி ஜெயலலிதா ஜெயேந்திரரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை ஆனது மகிழ்ச்சி என்கிறார் சுஸ்மா ஸ்வராஜ்.
எஸ்.வி.சேகருக்கோ, சுப்ரமணிசாமிக்கோ, சுஷ்மா சுவராஜுக்கோ சங்கர் ராமன் கொலையைப் பற்றி கவலையில்லை. ஏழைப் பார்ப்பானாகிய சங்கர் ராமன் கொலைக்கு நீதி வேண்டும் என்பதிலும் அக்கறையில்லை. ஆனால் சங்கராச்சாரியார் விடுதலை ஆனது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. கொண்டாடுகிறார்கள். இத்தனைக்கும் சங்கர் ராமன் இந்து மத புனிதத்திற்கு எதிராக செயல்பட்டவர் கிடையாது. கடவுள் மறுப்பு கொள்கையை பேசியவர் கிடையாது. இந்து மதத்தின் புனிதத்தை காக்க ஆச்சாரம் பேணும் பார்ப்பன குடியில் பிறந்தவர் தான் அவரும். உள்ளபடியே சங்கர் ராமன் கொலைக்கும் சங்கராச்சாரிக்கும் சம்மந்தம் இல்லை என்றால், சங்கர் ராமனை கொன்றது யார் என்ற கேள்வியை அவர்கள் தான் முதலில் எழுப்பி இருக்க வேண்டும். சங்கர் ராமன் கொலைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி கேட்டு அவர்கள் தான் போராடி இருக்க வேண்டும். அவர்கள் கனத்த மவுனம் காக்கிறார்கள். அதனால் நீதி நிலை நாட்டப்படவேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நாமே அந்த கேள்வியை எழுப்புகிறோம்.
கடவுள் சாட்சியாக
சங்கர் ராமன் கொல்லப்பட்டது
உண்மை...
குற்றவாளிகள் என்று
சொல்லப்பட்ட சங்கராச்சாரிகள்
விடுதலையாகி விட்டார்கள்.
அவர்கள் கொல்லவில்லை
என்றால், கொன்றவர்கள்
எவர்கள்?
நீதிமான்கள் வாய் திறக்க
மறுக்கிறார்கள் ...
இப்போதாவது வாய் திறப்பாரா
வரதராஜ பெருமாள்?
என்ற கேள்வியை நாமே எழுப்புகிறோம்...
சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில், செய்தி தாளில் ஜெயேந்திரன் பற்றிய செய்தியை படித்துவிட்டு சங்கர் ராமன் கொலை வழக்கைப் பற்றி விவாதத்துக்கு இழுத்துவிட்டேன். அப்போது நண்பர் ஒருவர் சொன்னார். கடவுள் இருப்பதால் தான் இந்த வழக்கே இவ்வளவு நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் எப்போதோ ஓத்தி மூடி இருப்பார்கள். இக்கொலையின் நேரடி சாட்சி வரதராஜ பெருமாள். நீதியை அவர் வென்று தருவார்" என்றார. நேற்றிரவு நான் அவருக்கு போன் செய்து தீர்ப்பை பற்றி சொல்லி, வரதராஜ பெருமாள் நீதியை நிலைநாட்டி விட்டாரா? என்றேன். "ஒருவேளை ஜெயேந்திரன் ...."என்று பதில் சொல்ல ஆரம்பித்தார். "டேய்... டேய் திருந்துங்கடா.." என்று போனை துண்டித்துவிட்டேன். அவர் கூற்றுப்படி வரதராஜ பெருமாள் தொடுத்த வழக்கில் ஜெயேந்திரன் வென்றுவிட்டார். வரதராஜ பெருமாள் தோற்றுவிட்டார். தீர்ப்பளித்தவர், பிறழ் சாட்சிகளாக மாறியவர்கள் அனைவரும் கடவுள் வரதராஜ பெருமாளை விட, அவருக்கு பூசை செய்யும் ஜெயேந்திரனுக்கே சாதகமாக நடந்து கொண்டார்கள். இதிலே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் "இந்நாட்டில் சாமியை விட, சாமியார்களே வலுவானவர்களாக இருக்கிறார்கள்.."
இந்த வழக்கில் கொலையாளியும் பிராமிணர், கொலை குற்றம் சாட்டப்பட்டவரும் பிராமிணர், தீர்ப்பை கொண்டாடி வரவேற்கும் சு.சாமி, எஸ்.வி.சேகர் போன்றவர்களும் பிராமிணர்கள். இந்த வழக்கின் தீர்ப்பை சாதி தீர்மானிக்கவில்லை, மதம் தீர்மானிக்கவில்லை, வர்க்கம் தீர்மானித்திருக்கிறது. சொந்த சாதிக்காரனாக இருந்தாலும் ஏழை பிராமிணன் சங்கர் ராமனைப் பற்றி சு.சாமி, எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை...
சங்கரராமனுக்காக பேச கடவுள் வரதராஜ பெருமாள் கூட வரவில்லை. ஒருவேளை சங்கரராமன் சங்கராச்சாரியை கொலை செய்திருந்தால் வரதராஜ பெருமாள் முந்திக் கொண்டு வந்து சாட்சி சொல்லி இருப்பார், நீதி விரைவில் கிடைத்திருக்கும். சங்கரராமனுக்கு தூக்கு தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைத்திருக்கும். சு.சாமியும், எஸ்.வி.சேகரும் சங்கரராமனை தூக்கில் போட வலியுறுத்தி வாதாடி இருப்பார்கள்...
எப்படி என்று கேட்கிறீர்களா?
அதான் கடவுள் எல்லாருக்கும் போதுவானவரே,
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரே...
சங்கரராமனை வரதராஜ பெருமாள் மட்டும் கைவிடவில்லை... நீதிமன்றமும் கைவிட்டு விட்டது...
தீர்ப்பு வெளியான மகிழ்ச்சியில் ஜெயேந்திரன் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, திருப்பதிக்கு சென்று கடவுள் பெருமாளை சந்திக்க இருக்காராம்... பொய் சாட்சி சொன்னதுக்கு கூலி கொடுக்கணும் ல....
தீர்ப்புக்குப் பின் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர ராமனின் மகன் ஆனந்த சர்மா "இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. எங்களால் நம்பமுடியவில்லை. என்னுடைய தந்தையார் தானே வெட்டிக் கொண்டு சாகவில்லை. எங்கள் தந்தையை யார் வெட்டி கொலை செய்தனர் என்பதை அறிய விரும்புகிறோம்" என்று கூறி இருக்கிறார். அரசும் நீதிமன்றமும் என்ன செய்யப் போகிறது? மீண்டும் வழக்கை விசாரிக்கப் போகிறதா? இல்லை வழக்கை ஊத்தி மூடப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
- தமிழன் வேலு