மன்னராட்சி காலத்தில் இலவரசரக்கு பட்டாபிஷேகம் செய்யும்போதோ அல்லது இன்னபிற நல்ல காரியங்கள் செய்யும் போதோ நரபலி கொடுப்பது வழக்கம். ஆடு, மாடு ஏன் மனிதர்களை கூட கொடுப்பார்கள். இன்றைக்கு காங்கிரஸ் கட்சி அப்படிப்பட்ட செயல்பாட்டைத் தான் செய்கிறதோ என்ற சந்தேகத்தை தவிர்க்க இயலவில்லை...!
இந்திராகாந்தி இறந்து, ராஜிவ்காந்திக்கு மகுடம் சூட்ட , பல்லாயிரத்துக்கும் மேலான சீக்கியர்களையும், ராஜிவ்காந்தி இறந்து சோனியா பதவி ஏற்பதற்காக ஒன்னரை லட்சம் தமிழர்களையும், இப்போது சோனியாவிற்குப் பிறகு ராகுலுக்கு பட்டாபிஷேகம் செய்ய தற்போது வரை இரண்டு இசுலாமியர்களை காவு கொடுத்து விட்டு, போதாக்குறைக்கு 7 தமிழர்களை நரபலிக் கொடுக்க இருக்கிறார்கள் (?) காந்தி எனும் உயர்ந்த மனிதனின் (?) கொள்கையை பெருமை பேசும் இந்தியாவில் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்று பழி தீர்க்கும் நோக்குடன் அரசு ரத்த வெறி பிடித்த ஓநாயைப் போல் அலைகிறது. காந்தி உயர்ந்த மனிதனா? என்பதை இன்னொரு பதிவில் விரிவாகப் பேசுவோம். காந்தியின் அஹிம்சைக் கொள்கையே எம்மக்களை இம்சிக்கத்தான் என்பது ஒருபுறமிருக்கட்டும். அந்த பெரிய மனுஷனின் யோக்கிதையைப் நமக்குத் தெரியும் ஆனால் அவர்தான் உலகமகா யோக்கியன் என்று சொல்லும் காங்கிரஸ், பி.ஜே.பி களின் காவி வெறிமுன்பாக நாங்கள் மட்டும் சளைத்தவர்கள் இல்லை என்று மார்தட்டிக் கொள்ளவே மரணதண்டனைக்கு மறு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்போதெல்லாம் பி.ஜே.பி. இந்துத்துவா அரசியலை கையில் எடுக்கிறதோ, அப்போதெல்லாம் பி.ஜே.பி.யின் மூலம் உருவான இந்து உணர்வை காங்கிரசு அறுவடை செய்தே வந்திருக்கிறது. அதை கடந்த கால வரலாற்றின் மூலம் நாம் கண்டிருக்கிறோம். பி.ஜே.பி. காவி உடையை தரித்துக் கொண்டால், காங்கிரஸ் மனித ரத்தத்தை குடிக்கும் காட்டேறிப் போல் வேடம் தரிக்கும். கடந்த 8ஆண்டுகாலமாக மரண தண்டனையைப் பற்றி சிந்திக்காத காங்கிரசு இப்போது கடந்த ஒரு மாத இடைவெளியில் இருவரையும், அந்த ரத்தக்கறை காய்வதற்குள் மேலும் நான்குப் பேரின் ரத்தம் குடிக்க துடிக்கிறது.குற்றங்களை குறைப்பதற்கோ, வன்முறையாளர்களை ஒழிப்பதற்கோ எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று நாம் நம்பினால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அஜ்மல் கசாப், கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தூக்கில் இடப்பட்டு அவரது இறந்த உடலைக் கூட உறவினர்களிடம் கொடுக்காமல் கொன்று புதைத்தனர். அதையும் சேர்த்து கடந்த பதினெட்டு ஆண்டுகளில் 3 பேர் தான் தூக்கில் இடப்பட்டனர். இவ்வளவு அவசரமாக தூக்கில் இடப்பட்டதற்கு என்ன காரணம்? காரணம் இல்லாமல் இல்லை...
சமீப காலமாக இந்து அமைப்புகள் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்றும், இந்துத்துவ உணர்வை தூண்டும் விதமாகவும், இந்தியா, இந்து என்ற அடிப்படையில் தங்களுடைய செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்டுள்ளனர். அதே வேளையில் இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு எல்லா வகையிலும் மக்களிடம் தோற்று விட்டது. மக்கள் விரோத செயல்பாட்டில் இதர கட்சிகளை எல்லாம் விஞ்சி நிற்கிறது. இரவு படுத்து காலை எழுந்திருக்கும் போதே இன்றைக்கு எந்த ஊழல் வெளிவருமோ என்ற அச்சத்தோடே சோனியாகாந்தி எழுகிறார். காமன்வெல்த் ஊழல், 2G அலைக்கற்றை ஊழல், விண்வெளி அலைகற்றை வாங்குவதில் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என்று அவர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சி என்று வரையப்பட்டிருந்த பிம்பங்கள் கிழிந்து, காங்கிரசின் முகத்திரை கிழிந்து மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் தினம் தினம் திணறி வருகிறது. அதோடு மட்டுமின்றி பொருளாதார சீர்திருத்தம் என்ற பேரில் அவர்கள் வைத்திருக்கும் தவறான பொருளாதார திட்டத்தினால் ஏழை மேலும் மேலும் ஏழையாகவும், பணக்காரன் மேலும் மேலும் கோடீஸ்வரனாகவும் மாறுகிறான். ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திட்டங்களும், நேரடி அந்நிய முதலீடு, தவறான வெளியுறவுக் கொள்கை வல்லரசுக்கு வால்ப் பிடிக்கும் வால்மார்ட்டிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு என்ற அத்துனை அநியாங்களை அரங்கேற்றிக் கொண்டு, இன்றைக்கு ஆட்சி பறிபோகுமோ? நாளைக்குப் போகுமோ என்ற மரண பீதியில் உறைந்துக் கிடக்கிறது காங்கிரஸ். அந்த அசிங்கத்தை மறைப்பதற்கு வேறு ஒரு பிம்பத்தை நிறுவ முயலும் முயற்சிதான் தூக்குதண்டனை கொலைத்திட்டம்..!
சரி தூக்கு தண்டனை விவகாரத்திற்கு வருவோம்...! சென்ற ஆண்டு மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க நாம் போராடினோம். இந்த ஆண்டு மூன்றல்ல... நான்கல்ல...ஏழுத் தமிழர்கள்...
ஆம்... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிமை சிறையில் வாடிவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களை காக்கப் போராடினோம்; இந்த ஆண்டு, கடந்த 1993–ம் ஆண்டு தமிழக–கர்நாடக அதிரடிப்படையினர் சென்ற பஸ்சை சந்தன கடத்தல் வீரப்பன் கோஷ்டியினர் கண்ணிவெடி தாக்குதல் மூலம் தகர்த்தனர். அதனால் வனத்துறை அதிகாரி, போலீசார் உள்பட 22 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கு மைசூர் தடா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கில், அவர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு தமிழர்களும் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிராகிரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மனு செய்தனர். பல வருடங்களாக இவைகள் நிலுவையிலே இருந்தன. புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முன்னாள் காங்கிரஸ் புதல்வர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார்.
இந்த ஏழுத் தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் பிரணாப் மு கர்ஜி நேரடியாக செய்த கொலைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் காங்கிரஸ், தம் ஆட்சிகாலத்தில் சந்திக்கும் மூன்றாவது ஜனாதிபதி தான் பிரணாப் முகர்ஜி. திருவாளர் பிரணாப் முகர்ஜி இதற்கு முன்பு காங்கிரசின் போர் வாளாக இருந்தார். அதனால் தானோ என்னவோ வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் கண்ணுக்கு எதிரிலே, அவரது ஒத்துழைப்பிலே ஒன்னரை லட்சம் தமிழர்கள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்கள். இதற்கு முன்பு ஜனாதிபதிகளாக இருந்த அப்துல் கலாம் யாருடைய கருணை மனுக்களையும் நிராகரிக்கவில்லை. பிரதீபா பாட்டில் குடியரசு தலைவராக இருந்த காலத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர்களின் கருணை மனுக்களையும் நிராகரித்தார். அப்துல்கலாமும், பிரதீபா பாட்டிலும் காங்கிரஸ் சொல்வதை செய்த குடியரசு தலைவர்கள். ஆனால் பிரணாப் முகர்ஜி காங்கிரசுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்தவர், எதையும் செய்யும் குடியரசு தலைவர். அதனால் தான் நவம்பர் 21 ஆம் தேதி அஜ்மல் கசாப்பை யாருக்குமே தெரியாமல் கொன்று சிறை வளாகத்திலே புதைத்தார். பிறகு 2001 டிசம்பர் 13 அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவை 2013 பிப்ரவரி 13 ஆம் தேதி மர்மான முறையில் கொன்றனர். இவரையும் கொன்று சிறை வளாகத்திலே புதைத்தார்கள். அஜ்மல் கசாப்புக்கும், அப்சல் குருவுக்கும் உறவினர்கள் இருக்கிறார்கள். அப்சல் குருவுக்கு மனைவியும் மகனும் இருக்கிறார்கள். யாருமற்ற அனாதைகள் போல சிறை வளாகத்திலே புதைத்தார்கள்.இறந்து போன தன் தந்தையின் முகத்தைக் கூட காணமுடியவில்லையே என்று அப்சல் குருவின் மகன் கண்ணீர் விட்டது இந்தியாவின் கூட்டு மனசாட்சியையே கேள்விக்குள்ளாக்கியது.
காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக அமர வைத்ததே வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துதான். எல்லாவிதத்திலும் தோற்றுவிட்ட காங்கிரஸ் இப்போது இந்து, இந்தியா என்ற கூட்டு உணர்வை உறவாக்கி அதன் மூலம் தம்முடைய அரசியலை எதிர்கொள்ளத்தான். மேலும் குஜராத், உ.பி. போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் தோல்வி அதோடு ராகுல்காந்தியின் தலைமையில் குஜராத் தேர்தலை சந்தித்த காங்கிரசுக்கு நரேந்திரமோடி மரண அடி கொடுத்துள்ளார். பி.ஜே.பி யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி நிற்கும் பட்சத்தில் காங்கிரசின் அடுத்த ஆட்சி கனவு என்பது பகல் கனவே. மோடியின் தலைமையில் குஜராத் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாக ஒரு பிம்பத்தை நிறுத்தி இருக்கிறார்கள். அதன்மூலம் தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் காங்கிரசுக்கு பி.ஜே.பி. பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக தோற்றாலும் கவுரமாக தோற்க வேண்டுமல்லவா? அதனால் தான் பயங்கரவாத சக்திகளை ஒடுக்குகிறோம் என்று நாக்கூசாமல் பொய் சொல்லி இந்து உணர்வை தூண்டி, நம்மை எல்லாம் முட்டாளாக்க துடிக்கிறது காங்கிரசு. அரசு நிறைவேற்றும் தூக்கு தண்டனை அரசு செய்யும் கொலைக்கு சமம். என் கண்ணை குத்தியவனுக்கு தண்டனையாக அவனது கண்ணைத்தான் அரசு குத்தும் என்றால் அதற்க்கு நானே அவன் கண்ணை குத்தி விடுவேனே? எதற்கு அரசு? எதற்கு நீதித்துறை?
ஆகவே சனநாயக நாட்டில் சாவுத்தண்டனைக்கு இடமில்லை. உலகில் பல்வேறு நாடுகள் மரண தண்டனையை மறு பரிசீலனை செய்து வரும் வேளையில் இந்தியா மட்டும், குறிப்பாக காங்கிரஸ் அரசு தம்முடைய அரசியல் லாபத்திற்கு தூக்கு தண்டனையை ஊக்குவிக்க கூடாது. ராகுல் காந்தியை காங்கிரசின் துணைத்தலைவராக நியமித்துள்ள நிலையில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே பி.ஜே.பி.யில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க உள்ள நரேந்திர மோடியை சமாளிக்க, மாநிலத் தேர்தல்களில் தோற்றது போல நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்றுவிடக்கூடாது என்று காங்கிரஸ் போராடுகிறது. இந்து, இந்தியன் என்ற கூட்டு உணர்வை உருவாக்கி தம் மகனை இந்தியாவின் மன்னராக பட்டாபிஷேகம் செய்ய துடிக்கும் நாடகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு "எம தர்ம ராஜா" வேடம் கொடுத்திருக்கிறார் சோனியா..!
- அங்கனூர் தமிழன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக