புதன், 13 பிப்ரவரி, 2013

தமிழர் உரிமைக் களங்களில் நிற்பவர்கள், தலித் உரிமைக் களங்களில் நிற்பதில்லை ! - கசப்பான உண்மை



                   தமிழீழம் என்றாலோ, விடுதலைப் புலிகள் என்றாலோ தடா, பொடா என்ற ஆள்தூக்கி சட்டங்களின் மூலம் அச்சுறுத்தல் இருந்ததெல்லாம் ஒருகாலம்; இன்றைக்கு அதுபோன்ற நிலை கிடையாது. தமிழகத்தில் இன்றைக்கு தேதியில் ஈழத்தமிழனுக்காக யார்  வேண்டுமானாலும்  கூட்டத்தை கூட்டலாம்; கூடிப் பேசலாம்; கொள்கை என்று முழங்கலாம்;  ஈழத்தமிழர்களுக்காக யாரெல்லாம் பேசுகிறார்கள், போராடுகிறார்கள்  என்று தேடி தெரிந்து கொள்ளவேண்டி இருந்த நிலை மாறி, ஈழத்தமிழர்களுக்காக யாரெல்லாம் பேசவில்லை என்று தேடவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது; மகிழ்ச்சியான, வரவேற்க்ககூடிய முன்னேற்றம். அந்தக் களத்தில் நானும் நிற்கிறேன் என்பதில் பெருமை தான் கொள்கிறேன். விடுதலைப் புலிகள் அமைத்த போராட்டக் களம்  ஈழத்தமிழர்களுக்கு நன்மையை அளித்தமையை விட தமிழகத் தமிழர்களின் உரிமையை நோக்கிய தெளிவானப் பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

                திராவிடமும், தமிழியமும் அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. தமிழர், தமிழர் உரிமை சார்ந்த களங்களில் திராவிட இயக்கங்களே போராடிக் கொண்டிருந்த நிலை மாறி தமிழர் உரிமையை கொள்கையாய் கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் செயல்படுகின்றன; ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி நீர் பங்கீட்டு விவகாரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், மூன்று தமிழர் உயிர்காக்கும் போராட்டம், இன்னபிற தமிழர் உரிமை சார்ந்த பிரச்சனைகளில் ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், விவசாயிகள் கூட்டமைப்புகள் என ஏகத்துக்கும் அனைவரும் போராடுகிறார்கள்; ஆனால் இரண்டாயிர்ரம் ஆண்டுகளாக நசுக்கப் பட்டுவரும் தலித்களின் பிரச்சனைகளில் மட்டும் ஒரு சிலரே, அதிலும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களே போராட முன்வருகிறார்கள்; போராடுகிறார்கள். இது ஏன்? தலித்கள் தமிழர்கள் இல்லையா? என்ற கேள்வி எமக்கு மட்டுமின்று ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளாகும் தலித்கள் அனைவருக்கும் எழும் என்பதில் ஐயமில்லை...! இதைப் பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்போம்...!

               தமிழர் சார்ந்தப் பிரச்சனைகளில் போராடும் போராளிகள் (?), தலித்களின் வாழ்வாதாரப் பிரச்சனைப் பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வி பல நூறு ஆண்டுகளாக இருக்கிறது. இதற்கு போராடுபவர்களின் சாதி மனநிலை மட்டும் காரணம் என்று நான் நம்பவில்லை; அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய, அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இதை எப்படி உறுதி செய்ய முடியும் என்றால், சில நேரங்களில் தலித்களின் பிரச்சனைக்கு தலித் அமைப்புகளே போராட முன்வருவதில்லையே; உதாரணமாக சமீபத்தில் அரங்கேறிய தருமபுரி சாதி வெறியாட்டத்தில் எத்தனை தலித் அமைப்புகள் போராடின? வலுவான அமைப்பாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மட்டும் போராடியது; மற்றபடி சிறுசிறு புதிய அமைப்புகள் போராடினார்கள். தற்போது சட்டமன்றத்திலே அங்கமாக இருக்கும் தலித் அமைப்புகள் என்ன செய்தார்கள்? தலித்களின் உரிமையான தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலித் பிரிதிநிதிகளாக உள்ள 40 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? ஏன் அவர்களால் போராட முடியவில்லை? இவர்கள் போராட ஏன் வரவில்லையோ, இவர்களுக்கு என்ன காரணமோ அதே காரணம் தான் மற்ற தமிழர் அமைப்புகளுக்கும்; தமிழர் அமைப்புகளின் மவுனத்தை நான் நியாயப் படுத்தவில்லை; சுயவிமர்சனத்தோடு கண்டிக்கத்தான் செய்கிறேன்...!

                   தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தலித்கள் 19% மற்ற தலித் அல்லாத சாதி இந்துக்கள் 81% ஆகும். சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கெடுத்த தலித் அல்லாத 15 பேர்கள் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமண உறவுக் கொள்ளமாட்டோம்; மற்ற சாதியினர் என்றால் அனுசரித்து செல்வோம் என்று அனைவரும் சொன்னார்கள். அதன்படி பார்த்தால்  81% தலித் அல்லாத சாதி இந்துக்களில் குறைந்தபட்சம் 90 சதவிதம் பேர் தாழ்த்தப்பட்டவர்களை வெறுக்கிறார்கள் என்பது புலனாகிறது. ஒரு அரசியல் கட்சியோ  அல்லது இயக்கமோ வெகுமக்கள் அரசியல் கட்சியாகவோ அல்லது  வெகுமக்கள் இயக்கமாகவோ வளரவேண்டுமானால் நிச்சயமாக இந்த 90% சாதி இந்துக்களின் ஆதரவை தவிர்க்க இயலாது. தாழ்த்தப்பட்டவர்களின் உறவையே வெறுக்கும் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்குப் போராடுபவர்களை ஆதரிப்பார்களா? என்பது கேள்விக் குறியே...!

                  இந்தப் பிரச்சனை தேர்தல் அரசியலில் மட்டும் இல்லை; மக்கள் இயக்கங்களில் கூட இருக்கிறது; ஏன் நண்பர்கள் வட்டங்களில் கூட இருக்கிறது. இன்னொரு பிரச்சனை சாதி ஒழிப்புக் களத்திலே ஒத்தக் கோரிக்கைகளுடன் கிஞ்சிற்றும் சமரசம் இல்லாமல் போராடியவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும். ஆனால் நடைமுறையில் தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள், புரட்சியாளர் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள். தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்பவர்களை  சாதி ஒழிப்புபோராளியாகவும், பிரபாகரனை ஏற்றுக் கொள்பவர்களை தமிழினப் போராளியாகவும், சேகுவேராவை ஏற்றுக் கொள்பவர்களை சுதந்திரப் போராளியாகவும் பார்க்கும் இந்த சமுதாயம், புரட்சியாளர் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்டால் மட்டும் அவனை தாழ்த்தப்பட்டவனாகப் பார்க்கிறது. தமிழர் உரிமை என்று பேசுகிறவர்கள் தலித்களின் வாழ்வாதாரப் பிரச்சனையை பேச மறுப்பதற்கு இதுவும் ஒரு  காரணம்.

                 பல்லாயிரம் ஆண்டுகளாக அத்துனை அதிகாரங்களையும் அனுபவித்து வலிமையாக உள்ள சாதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, பல்லாயிரம் ஆண்டுகளாக அத்துனை அதிகாரங்களையும் இழந்து நிற்கும் பலமற்ற  சாதியினரை அடக்கி ஆள நினைக்கிறார்கள்; இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடி சாதிகளில் சிக்கி பிளவுபட்டு நிற்கும் மக்களிடம் நல்லிணக்கத்தை உருவாக்குவதே சாதி ஒழிப்பு என்பதாகும். அந்த அடிப்படையில் சாதியத்திற்கு எதிராகப் போராட வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நின்று அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களையும் முன்னேற செய்தால் தான் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இதிலே தமிழர் அமைப்புகளுக்கு இரண்டு சிக்கல் இருக்கிறது ஒன்று தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பற்றி பேச வேண்டுமானால் முதலில் அவர்கள் இருக்கும் சேரிக்கு செல்லவேண்டும். இதற்க்கு தமிழர் அமைப்புகளை சார்ந்த தலித் அல்லாத போராளிகள் (?) மனம் ஒப்புமா? என்பது ஒன்று. மற்றொன்று சாதிக்கு எதிராகப் போராட வேண்டுமானால்  சாதி அமைப்பில் நின்றுதான் போராட முடியும்; அந்த அடிப்படையில் தம்மீதும் சாதி முத்திரை பதிந்து விடும் என்றும், நானும் என் இயக்கமும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர்களால் தம்பட்டம் அடிக்க முடியாதோ? என்றும் அஞ்சுகிறார்கள். நானும் என் இயக்கமும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள துடிக்கிறார்களே ஒழிய, தம் மக்களும் சாதிக்கு பலியாகக் கூடாது, அவர்களும் சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதாக தெரியவில்லை...!

                    எது எப்படியோ தமிழர் அமைப்புகளின் இந்த மவுனத்திற்கு ஓட்டு அரசியலே முக்கிய காரணியாக இருக்கிறது; பிறகு தான் மற்ற காரணங்கள் எல்லாமே. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் எப்படி அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டமோ, அப்படியே சாதி வெறியர்களின் சாதி வெறிக்கு எதிராகப் போராடுவதும், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடுவதும்  அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டம் தான். இதை புரிந்து தமிழர் அமைப்புகள் கொள்ளவேண்டும்; மக்களிடமும் தமிழர் அமைப்புகளிடமும் மனமாற்றம் நிகழவேண்டும். அது சாதிய ஆதரவு  எது? சாதி ஒழிப்பு எது? என்று பகுத்து ஆராய வேண்டும்...!  சாதியை ஆதரித்து யார் அரசியல் செய்கிறார்கள்? சாதியை எதிர்த்து யாரப் போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டுமானால் சாக்கடையில் இறங்கித் தான் ஆகவேண்டும்; சாக்கடை நம்மீது பட்டு நம் உடை அசிங்கமாகிவிடும் என்று அஞ்சினால் காலத்திற்கும் சாக்கடையின் நாற்றத்திலே தான் வாழவேண்டும் என்பதை தமிழர் உரிமைக் களங்களில் நிற்ப்பவர்களும், வெகுஜன மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்...!

- அங்கனூர் தமிழன் வேலு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக