கூட்டுச்சதி செய்து நம் குடிசைகளை
எரித்தவர்களுக்கும்; கொள்கை முழக்கம்
என்று நம் சிந்தைகளை சிதைத்தவர்களுக்கும்
கொடி பிடித்தோமே, கோஷம் போட்டோமே
நம் தொப்புள் கொடியும் வாழவில்லை; நம்
குரல் குடிசைகளையும் தாண்டவில்லை !
சேரியை கொளுத்த வர்ணம் பேசிய காந்தியம்
இன்று தமிழ் தேசியம் பேசுது; காந்தியம் பேசும்
தமிழ்தேசியம் இனி எதை கொளுத்தப் போகுது
என்பதை சிந்தித்துக் கொள் !
ஈழம் காக்க பாதயாத்திரை என்று பகல்வேஷம்
கட்டுகிறான்; அவன் பின்னால் வருபவனின்
பிள்ளைகள் சேரிக்குள்ளே சிதைக்கப்பட்டாலும்
சொட்டு நீரைக்கூட சிந்த மறுக்கிறான் !
கொளுத்த கட்டளையிட்டு, கொழுந்துவிட்டு
எரியும் சேரியில் கொள்ளையடித்து குளு, குளு
பங்களாவில் வாழ்ந்துகொண்டு ஈழம் எரிகிறது;
என் தொப்புள்க்கொடி சாகிறது ; அதனால் என்
வயிறு எரிகிறது என்று வசனம் பேசுகிறான் !
பளிங்கு மாளிகையில் வாழ்ந்துகொண்டு
பகலிலே வேஷம்கட்டி, பகட்டுக்கு போராட்டம்
பேசி, நான் சீமான் அல்ல என்று ஆவணம்
காட்டுகிறான்; அவிழ்ந்தது ஆவணம் மட்டுமல்ல !
அவனுடைய கோவணமும் தான் !
சேரியில் சிறைபடும் தமிழனுக்காகவும்,
ஆதியில் இருந்தே வதைபடும் தமிழச்சிக்காகவும்
போராட துப்பில்லாத போராளிகள் (?) வன்னியில்
புதையுண்ட ஈழத்தை திருப்பதியில் மீட்டெடுக்க
புறப்பட்டு விட்டார்கள் பருப்பு, புளிகளோடு !!
யோக்கிய வேஷம் கட்டும் இவர்களுக்கு
அதிகார போதை ஏறும் போது நீ வேண்டும்;
உன் வாக்கு வேண்டும்; ஏறிய போதை
இறங்கும் முன் உன் குடிசை வேண்டும் !
உன் குடிசை இவர்கள் வாழ்வதற்கு அல்ல;
கொஞ்சமும் நிம்மதி கொள்ளும் உன்
வாழ்க்கையை பறிப்பதற்கு !
ஆண்ட அவர்களை மட்டும் உமிழ்வதில்
நியாமில்லை; ஆளத் துடிக்கும் இவர்களில்
ஒருவரும் யோக்கியரும் இல்லை !
தொல் தமிழா... நீ சொல் தமிழா...
உங்களில் ஒருவரும் யோக்கியனும்
அல்ல; உங்களுக்கு எங்கள் வாக்கும் அல்ல
என்பதை உரத்த சொல் !
- அங்கனூர் தமிழன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக