திங்கள், 25 பிப்ரவரி, 2013

கேள்வி - பதில் !



வெங்கட் : கடந்த முறை தமிழருவி மணியன் அவர்களை நீங்கள் விமர்சித்தீர்கள். ஆனால் தற்போது திருச்சியில் சாதி, மத நல்லிணக்க மாநாடு நடத்தியிருக்கிறாரே இதை வரவேற்கலாமே? ஏன் வரவேற்கவில்லை?

பதில் : தமிழருவி மணியன் அவர்களோடு எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வித முரண்பாடும் இல்லை. அவர் செய்யும் நல்ல காரியங்களை நிச்சயமாக வரவேற்பேன். ஆனால் காந்தியின் அஹிம்சை எப்படி எம்மக்களை இம்சித்ததோ, அப்படித்தான் தமிழருவி மணியன் பேசும் தமிழ்தேசியமும். தலித் தலைவர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு ஆடை அணிவதாக அவர் கூறியதை கடுமையாக விமர்சித்தேன். தற்போது அவர் திருச்சியில் சாதி, மத நல்லிணக்க மாநாடு நடத்தி இருப்பதாக அறிகிறேன்.  மேலும் மாநாட்டில் அவர் பேசும் போது "சாதிகள் இல்லையடா தமிழா!" எனும் தலைப்பில் பேசி இருக்கிறார். அப்படி அவர் பேசும் போது " சாதிகள் சாகாத வரை "தமிழ்ச்சாதி" மேன்மையுறாது. அதனால், முதலில் சாதியை சாகடிக்க வேண்டும். அதற்காக ஆயுதம் தூக்க வேண்டாம். காதல் கலப்புத் திருமணத்தை ஆதரியுங்கள். என்று பேசி இருக்கிறார். இந்த சொல்லாடலிலே தமிழருவி மணியன் அவர்களின் சாதி ஒழிப்பு (?) மனப்பான்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது தமிழர்களுக்கு தமிழ் என்பது "இன அடையாளமே ஒழிய சாதி அல்ல". சாதியை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிற (?) மணியன் அவர்கள் ஏன் புதிதாக தமிழ்ச்சாதியை உருவாக்க விரும்புகிறார்? மேலும் "சாதி மறுப்பு திருமணம்" என்று கூட சொல்ல மனமில்லாத மணியன் அவர்கள் "காதல் கலப்பு திருமணம்" என்று சொல்கிறார். பொது பண்புகளில் வேறுபாடு கொண்ட இரு இனங்கள் ஒன்றோடு ஒன்று உறவை ஏற்ப்படுத்திக் கொள்ளும் போதுதான் கலப்பு ஏற்படுகிறது. மணியன் அவர்களின் பார்வையில் சாதி என்பது இனமாகவும், மொழி என்பது சாதியாகவும் தெரிகிறது போலும். இந்த மாநாடு அந்த கால "சின்னகவுண்டர்" "தேவர் மகன்" திரைப்படங்களை போன்றதே ஒழிய, வேறேதும் அல்ல ..!

வியாழன், 21 பிப்ரவரி, 2013

காங்கிரசின் கொலைத்திட்டம் :- ராகுலுக்கு பட்டாபிஷேகம்..! நரபலிக்கு ஏழுத் தமிழர்கள் ???


            மன்னராட்சி காலத்தில் இலவரசரக்கு பட்டாபிஷேகம் செய்யும்போதோ அல்லது இன்னபிற நல்ல காரியங்கள் செய்யும் போதோ நரபலி கொடுப்பது வழக்கம். ஆடு, மாடு ஏன் மனிதர்களை கூட கொடுப்பார்கள். இன்றைக்கு காங்கிரஸ் கட்சி அப்படிப்பட்ட  செயல்பாட்டைத் தான் செய்கிறதோ என்ற சந்தேகத்தை தவிர்க்க இயலவில்லை...!

             இந்திராகாந்தி இறந்து, ராஜிவ்காந்திக்கு மகுடம் சூட்ட , பல்லாயிரத்துக்கும் மேலான  சீக்கியர்களையும், ராஜிவ்காந்தி இறந்து சோனியா பதவி ஏற்பதற்காக ஒன்னரை லட்சம் தமிழர்களையும், இப்போது சோனியாவிற்குப் பிறகு ராகுலுக்கு பட்டாபிஷேகம் செய்ய தற்போது வரை இரண்டு இசுலாமியர்களை காவு கொடுத்து விட்டு, போதாக்குறைக்கு 7 தமிழர்களை நரபலிக் கொடுக்க இருக்கிறார்கள் (?) காந்தி எனும் உயர்ந்த மனிதனின் (?) கொள்கையை பெருமை பேசும் இந்தியாவில் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்று பழி தீர்க்கும் நோக்குடன் அரசு ரத்த வெறி பிடித்த ஓநாயைப் போல் அலைகிறது. காந்தி உயர்ந்த மனிதனா? என்பதை இன்னொரு பதிவில் விரிவாகப் பேசுவோம். காந்தியின் அஹிம்சைக் கொள்கையே எம்மக்களை இம்சிக்கத்தான் என்பது ஒருபுறமிருக்கட்டும். அந்த பெரிய மனுஷனின் யோக்கிதையைப் நமக்குத் தெரியும் ஆனால் அவர்தான் உலகமகா யோக்கியன் என்று சொல்லும் காங்கிரஸ், பி.ஜே.பி களின் காவி வெறிமுன்பாக நாங்கள் மட்டும் சளைத்தவர்கள் இல்லை என்று மார்தட்டிக் கொள்ளவே மரணதண்டனைக்கு மறு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.

   எப்போதெல்லாம் பி.ஜே.பி. இந்துத்துவா அரசியலை கையில் எடுக்கிறதோ, அப்போதெல்லாம் பி.ஜே.பி.யின் மூலம் உருவான இந்து உணர்வை காங்கிரசு அறுவடை செய்தே வந்திருக்கிறது. அதை கடந்த கால வரலாற்றின் மூலம் நாம் கண்டிருக்கிறோம். பி.ஜே.பி. காவி உடையை தரித்துக் கொண்டால், காங்கிரஸ் மனித ரத்தத்தை குடிக்கும் காட்டேறிப் போல் வேடம் தரிக்கும். கடந்த 8ஆண்டுகாலமாக மரண தண்டனையைப் பற்றி சிந்திக்காத காங்கிரசு இப்போது கடந்த ஒரு மாத இடைவெளியில் இருவரையும், அந்த ரத்தக்கறை காய்வதற்குள் மேலும் நான்குப் பேரின் ரத்தம் குடிக்க துடிக்கிறது.குற்றங்களை குறைப்பதற்கோ, வன்முறையாளர்களை ஒழிப்பதற்கோ எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று நாம் நம்பினால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அஜ்மல் கசாப், கடந்த  நவம்பர் 21 ஆம் தேதி தூக்கில் இடப்பட்டு அவரது இறந்த உடலைக் கூட உறவினர்களிடம் கொடுக்காமல் கொன்று புதைத்தனர். அதையும் சேர்த்து கடந்த பதினெட்டு ஆண்டுகளில் 3 பேர் தான் தூக்கில் இடப்பட்டனர். இவ்வளவு அவசரமாக தூக்கில் இடப்பட்டதற்கு என்ன காரணம்? காரணம் இல்லாமல் இல்லை...

        சமீப காலமாக இந்து அமைப்புகள் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்றும், இந்துத்துவ உணர்வை தூண்டும் விதமாகவும், இந்தியா, இந்து என்ற அடிப்படையில் தங்களுடைய செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்டுள்ளனர். அதே வேளையில் இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு எல்லா வகையிலும் மக்களிடம் தோற்று விட்டது. மக்கள் விரோத செயல்பாட்டில் இதர கட்சிகளை எல்லாம் விஞ்சி நிற்கிறது. இரவு படுத்து காலை எழுந்திருக்கும் போதே இன்றைக்கு எந்த ஊழல் வெளிவருமோ என்ற அச்சத்தோடே சோனியாகாந்தி எழுகிறார். காமன்வெல்த் ஊழல், 2G அலைக்கற்றை ஊழல், விண்வெளி அலைகற்றை வாங்குவதில் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என்று அவர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சி என்று வரையப்பட்டிருந்த பிம்பங்கள் கிழிந்து, காங்கிரசின் முகத்திரை கிழிந்து மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் தினம் தினம் திணறி வருகிறது. அதோடு மட்டுமின்றி பொருளாதார சீர்திருத்தம் என்ற பேரில் அவர்கள் வைத்திருக்கும் தவறான பொருளாதார திட்டத்தினால் ஏழை மேலும் மேலும் ஏழையாகவும், பணக்காரன் மேலும் மேலும் கோடீஸ்வரனாகவும் மாறுகிறான். ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திட்டங்களும், நேரடி அந்நிய முதலீடு, தவறான வெளியுறவுக் கொள்கை வல்லரசுக்கு வால்ப் பிடிக்கும் வால்மார்ட்டிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு என்ற அத்துனை அநியாங்களை அரங்கேற்றிக் கொண்டு, இன்றைக்கு ஆட்சி பறிபோகுமோ? நாளைக்குப் போகுமோ என்ற மரண பீதியில் உறைந்துக் கிடக்கிறது காங்கிரஸ். அந்த அசிங்கத்தை மறைப்பதற்கு வேறு ஒரு பிம்பத்தை நிறுவ முயலும் முயற்சிதான் தூக்குதண்டனை கொலைத்திட்டம்..!

              சரி தூக்கு தண்டனை விவகாரத்திற்கு வருவோம்...! சென்ற ஆண்டு மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க நாம் போராடினோம். இந்த ஆண்டு மூன்றல்ல... நான்கல்ல...ஏழுத் தமிழர்கள்...

           ஆம்... ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிமை சிறையில் வாடிவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களை காக்கப் போராடினோம்; இந்த ஆண்டு, கடந்த 1993–ம் ஆண்டு தமிழக–கர்நாடக அதிரடிப்படையினர் சென்ற பஸ்சை சந்தன கடத்தல் வீரப்பன் கோஷ்டியினர் கண்ணிவெடி தாக்குதல் மூலம் தகர்த்தனர். அதனால் வனத்துறை அதிகாரி, போலீசார் உள்பட 22 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கு மைசூர் தடா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கில், அவர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு தமிழர்களும் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிராகிரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மனு செய்தனர். பல வருடங்களாக இவைகள் நிலுவையிலே இருந்தன. புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முன்னாள் காங்கிரஸ் புதல்வர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார்.

                      இந்த ஏழுத்  தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால்  பிரணாப் முகர்ஜி நேரடியாக செய்த கொலைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் காங்கிரஸ், தம் ஆட்சிகாலத்தில் சந்திக்கும் மூன்றாவது ஜனாதிபதி தான் பிரணாப் முகர்ஜி. திருவாளர் பிரணாப் முகர்ஜி இதற்கு முன்பு காங்கிரசின் போர் வாளாக இருந்தார். அதனால் தானோ என்னவோ வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் கண்ணுக்கு எதிரிலே, அவரது ஒத்துழைப்பிலே  ஒன்னரை லட்சம் தமிழர்கள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்கள். இதற்கு முன்பு ஜனாதிபதிகளாக  இருந்த அப்துல்கலாம் யாருடைய கருணை மனுக்களையும் நிராகரிக்கவில்லை. பிரதீபா பாட்டில் குடியரசு தலைவராக இருந்த காலத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர்களின் கருணை மனுக்களையும் நிராகரித்தார். அப்துல்கலாமும், பிரதீபா பாட்டிலும் காங்கிரஸ் சொல்வதை செய்த குடியரசு தலைவர்கள். ஆனால் பிரணாப் முகர்ஜி காங்கிரசுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்தவர், எதையும் செய்யும் குடியரசு தலைவர். அதனால் தான் நவம்பர் 21 ஆம் தேதி அஜ்மல் கசாப்பை யாருக்குமே தெரியாமல் கொன்று சிறை வளாகத்திலே புதைத்தார். பிறகு 2001 டிசம்பர் 13 அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவை 2013 பிப்ரவரி 13 ஆம் தேதி மர்மான முறையில் கொன்றனர். இவரையும் கொன்று சிறை வளாகத்திலே புதைத்தார்கள். அஜ்மல் கசாப்புக்கும், அப்சல் குருவுக்கும் உறவினர்கள் இருக்கிறார்கள். அப்சல் குருவுக்கு மனைவியும் மகனும் இருக்கிறார்கள். யாருமற்ற அனாதைகள் போல சிறை வளாகத்திலே புதைத்தார்கள்.இறந்து போன தன் தந்தையின் முகத்தைக் கூட காணமுடியவில்லையே என்று அப்சல் குருவின் மகன் கண்ணீர் விட்டது இந்தியாவின் கூட்டு மனசாட்சியையே கேள்விக்குள்ளாக்கியது.

                காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக அமர வைத்ததே வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துதான். எல்லாவிதத்திலும் தோற்றுவிட்ட காங்கிரஸ் இப்போது இந்து, இந்தியா என்ற கூட்டு உணர்வை உறவாக்கி அதன் மூலம் தம்முடைய அரசியலை எதிர்கொள்ளத்தான். மேலும் குஜராத், உ.பி. போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் தோல்வி அதோடு ராகுல்காந்தியின் தலைமையில் குஜராத் தேர்தலை சந்தித்த காங்கிரசுக்கு நரேந்திரமோடி மரண அடி கொடுத்துள்ளார். பி.ஜே.பி யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி நிற்கும் பட்சத்தில் காங்கிரசின் அடுத்த ஆட்சி கனவு என்பது பகல் கனவே. மோடியின் தலைமையில் குஜராத் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாக ஒரு பிம்பத்தை நிறுத்தி இருக்கிறார்கள். அதன்மூலம் தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் காங்கிரசுக்கு பி.ஜே.பி. பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக தோற்றாலும் கவுரமாக தோற்க வேண்டுமல்லவா? அதனால் தான் பயங்கரவாத சக்திகளை ஒடுக்குகிறோம் என்று நாக்கூசாமல் பொய் சொல்லி இந்து உணர்வை தூண்டி, நம்மை எல்லாம் முட்டாளாக்க துடிக்கிறது காங்கிரசு. அரசு நிறைவேற்றும் தூக்கு தண்டனை அரசு செய்யும் கொலைக்கு சமம். என் கண்ணை குத்தியவனுக்கு தண்டனையாக அவனது கண்ணைத்தான் அரசு குத்தும் என்றால் அதற்க்கு நானே அவன் கண்ணை குத்தி விடுவேனே? எதற்கு அரசு? எதற்கு நீதித்துறை?

            ஆகவே சனநாயக நாட்டில் சாவுத்தண்டனைக்கு இடமில்லை. உலகில் பல்வேறு நாடுகள் மரண தண்டனையை மறு பரிசீலனை செய்து வரும் வேளையில் இந்தியா மட்டும், குறிப்பாக காங்கிரஸ் அரசு தம்முடைய அரசியல் லாபத்திற்கு தூக்கு தண்டனையை ஊக்குவிக்க கூடாது. ராகுல் காந்தியை காங்கிரசின் துணைத்தலைவராக நியமித்துள்ள நிலையில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே பி.ஜே.பி.யில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க உள்ள  நரேந்திர மோடியை சமாளிக்க, மாநிலத் தேர்தல்களில் தோற்றது போல நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்றுவிடக்கூடாது என்று காங்கிரஸ் போராடுகிறது. இந்து, இந்தியன் என்ற கூட்டு உணர்வை உருவாக்கி  தம் மகனை இந்தியாவின் மன்னராக பட்டாபிஷேகம் செய்ய துடிக்கும் நாடகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு  "எம தர்ம ராஜா" வேடம் கொடுத்திருக்கிறார் சோனியா..!

- அங்கனூர் தமிழன் வேலு

சனி, 16 பிப்ரவரி, 2013

புரியாதவர்களுக்கு...!

கூட்டுச்சதி செய்து நம் குடிசைகளை
எரித்தவர்களுக்கும்; கொள்கை முழக்கம் 
என்று நம் சிந்தைகளை சிதைத்தவர்களுக்கும் 
கொடி பிடித்தோமே, கோஷம் போட்டோமே  
நம் தொப்புள் கொடியும் வாழவில்லை; நம் 
குரல் குடிசைகளையும் தாண்டவில்லை !

சேரியை கொளுத்த வர்ணம் பேசிய  காந்தியம் 
இன்று தமிழ் தேசியம் பேசுது; காந்தியம் பேசும் 
தமிழ்தேசியம் இனி எதை கொளுத்தப் போகுது 
என்பதை சிந்தித்துக் கொள் !

ஈழம் காக்க பாதயாத்திரை என்று பகல்வேஷம் 
கட்டுகிறான்; அவன் பின்னால் வருபவனின்
பிள்ளைகள் சேரிக்குள்ளே சிதைக்கப்பட்டாலும்  
சொட்டு நீரைக்கூட சிந்த மறுக்கிறான் !

கொளுத்த கட்டளையிட்டு, கொழுந்துவிட்டு 
எரியும் சேரியில் கொள்ளையடித்து குளு, குளு
பங்களாவில் வாழ்ந்துகொண்டு ஈழம் எரிகிறது;
என் தொப்புள்க்கொடி சாகிறது ; அதனால் என் 
வயிறு எரிகிறது என்று வசனம் பேசுகிறான் !

பளிங்கு மாளிகையில் வாழ்ந்துகொண்டு 
பகலிலே வேஷம்கட்டி, பகட்டுக்கு போராட்டம் 
பேசி, நான் சீமான் அல்ல என்று ஆவணம் 
காட்டுகிறான்; அவிழ்ந்தது ஆவணம் மட்டுமல்ல !
அவனுடைய கோவணமும் தான் ! 

சேரியில் சிறைபடும் தமிழனுக்காகவும், 
ஆதியில் இருந்தே வதைபடும் தமிழச்சிக்காகவும் 
போராட துப்பில்லாத போராளிகள் (?) வன்னியில் 
புதையுண்ட ஈழத்தை திருப்பதியில் மீட்டெடுக்க  
புறப்பட்டு விட்டார்கள் பருப்பு, புளிகளோடு !!   

யோக்கிய வேஷம் கட்டும் இவர்களுக்கு 
அதிகார போதை ஏறும் போது நீ வேண்டும்; 
உன் வாக்கு வேண்டும்; ஏறிய போதை 
இறங்கும் முன் உன் குடிசை வேண்டும் !
உன் குடிசை இவர்கள் வாழ்வதற்கு அல்ல;
கொஞ்சமும் நிம்மதி கொள்ளும் உன் 
வாழ்க்கையை பறிப்பதற்கு ! 

ஆண்ட அவர்களை மட்டும் உமிழ்வதில் 
நியாமில்லை; ஆளத் துடிக்கும் இவர்களில் 
ஒருவரும் யோக்கியரும் இல்லை !

தொல் தமிழா... நீ சொல் தமிழா...
உங்களில் ஒருவரும் யோக்கியனும் 
அல்ல; உங்களுக்கு எங்கள் வாக்கும் அல்ல 
என்பதை உரத்த சொல் !

- அங்கனூர் தமிழன் வேலு  

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

அரசியல் பித்து விளையாட்டும் ... வார்த்தை சித்துவிளையாட்டும் ...

காதல்...!
காதலை இதைவிட 
அழகாக எவனால் சொல்லிவிட 
முடியும்? கவிப்பேரரசாலும்
முடியாது; கம்பனின் பேரனாலும்
முடியாது !

பிறந்த குழந்தையின் மீதும்
அரசியல் செய்தீர்; செத்தப் 
பிணத்தின் மீதும் செய்தீர்;
உங்களின் அரசியல் பித்துக்கு
காதலும் தப்பவில்லையோ?

சிலர் காதலை எதிர்ப்போம் என்று
வதை செய்ய முயல்கிறார்கள்;
சிலர் காதலை ஆதரிப்போம் என்று
வகை செய்ய முயல்கிறார்கள்;
காதலை வதை செய்யவும் முடியாது;
வகை செய்யவும் முடியாது !

கண்ணகி - முருகேசன் காதலை
திராவகம் ஊற்றி வதை செய்தார்கள்..!
அதன் பிறகு காதல் வதைந்து விட்டதா?
எத்தனை எத்தனை காதல்கள்
வளர்ந்து கொண்டும்,
வாழ்ந்து கொண்டும்...!

ஒப்பனைக் காதலாம்
விற்பனைக் காதலாம்
கற்பனைக் காதலாம்
காதலின் வகை !

ஒப்பனை என்றும்; விற்பனை
என்றும்; கற்பனை என்றும்
ஆனபின் அங்கெ காதல்
எப்படி வரும்? காதலில்
நிசக்காதல், பொய் காதல்
என்றெல்லாம் கிடையாது,
காதலில் ஒரே வகைதான்
அது தான் காதல்...!

காதல் என்ன, கனரக ஆயுதமா?
நன்மை, தீமை என்று ஆராய்ந்து
அறிவுரை சொல்ல ...!
காதல் என்ன, பருத்தியில் நெய்த
ஆடையா? பயன்படுத்தி பார்த்து நல்லது
என்று பரிந்துரை செய்ய...!

என் தாய், என் மீது கொண்டுள்ள
காதலில் விஷம் இருக்கு என்று
உன்னால் எப்படி சொல்ல முடியும்?

என் தாய், என் மீது கொண்டுள்ள
காதல் மிகவும் இனிமையானது
என்று உன்னால் எப்படி சொல்ல முடியும்?

காதலை ஆய்வு செய்வது;
தம் பிறப்பை ஆய்வு
செய்வதற்கு சமம்..!
காதலுக்கு அறிவுரையோ,
பரிந்துரையோ அவசியம் இல்லை !

காதல் தீயைப் போல
பிடித்திருந்தால் அணைத்துக்
கொள்ளும் - எதிர்த்து நின்றால்
அணைத்து விடும்; இடையில்
நமக்கு தரகு வேலை வேண்டாம் !

என்னைப் போல, உன்னைப் போல
இவளைப் போல, அவளைப் போல
அவனும் காதலிக்கிறான்; அவளும்
காதலிக்கிறாள்; சிலர் சாதியை,
சிலர் மதத்தை, சிலர் பிறர் மனதை...!

காதல் விதிகளுக்கு முரணானது
இதற்குத்தான், இங்குதான், இப்படித்தான்
இவர்மீது தான் என்ற விதிகளுக்கு முரணானது..!
அப்படித்தான் வர வேண்டுமானால் அது
கட்டாய விவாகத்தை விட கொடுமையானது ...!

என் மீது அவள் கொண்டுள்ள காதலை
கூடாது என்று சொல்லவே எனக்கு
உரிமையில்லை - இதில் பிறர் காதலை
எதிர்க்கவோ, ஆதரிக்கவோ எனக்கேது
உரிமை?

உயிரணுவில் பிறந்தேன் நான்;
அந்த உயிரணுவுக்கு உயிர் கொடுத்தது
என் தாய் - தந்தையரின் காதல் !
ஆகவே எல்லோருக்கும் காதல் வரும்;
எல்லோரும் காதலிப்பார்கள் !!

காதல் கூடாது என்பதும் வன்முறை
ஆதலில் காதல் செய்வீர் என்பதும்
வன்முறை - காதலில் வன்முறைக்கு
இடமில்லை - உங்கள்
அரசியல் பித்து விளையாட்டும்
வார்த்தை சித்துவிளையாட்டும்
காதலில் வேண்டாமே...!

- அங்கனூர் தமிழன் வேலு

புதன், 13 பிப்ரவரி, 2013

தமிழர் உரிமைக் களங்களில் நிற்பவர்கள், தலித் உரிமைக் களங்களில் நிற்பதில்லை ! - கசப்பான உண்மை



                   தமிழீழம் என்றாலோ, விடுதலைப் புலிகள் என்றாலோ தடா, பொடா என்ற ஆள்தூக்கி சட்டங்களின் மூலம் அச்சுறுத்தல் இருந்ததெல்லாம் ஒருகாலம்; இன்றைக்கு அதுபோன்ற நிலை கிடையாது. தமிழகத்தில் இன்றைக்கு தேதியில் ஈழத்தமிழனுக்காக யார்  வேண்டுமானாலும்  கூட்டத்தை கூட்டலாம்; கூடிப் பேசலாம்; கொள்கை என்று முழங்கலாம்;  ஈழத்தமிழர்களுக்காக யாரெல்லாம் பேசுகிறார்கள், போராடுகிறார்கள்  என்று தேடி தெரிந்து கொள்ளவேண்டி இருந்த நிலை மாறி, ஈழத்தமிழர்களுக்காக யாரெல்லாம் பேசவில்லை என்று தேடவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது; மகிழ்ச்சியான, வரவேற்க்ககூடிய முன்னேற்றம். அந்தக் களத்தில் நானும் நிற்கிறேன் என்பதில் பெருமை தான் கொள்கிறேன். விடுதலைப் புலிகள் அமைத்த போராட்டக் களம்  ஈழத்தமிழர்களுக்கு நன்மையை அளித்தமையை விட தமிழகத் தமிழர்களின் உரிமையை நோக்கிய தெளிவானப் பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

                திராவிடமும், தமிழியமும் அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. தமிழர், தமிழர் உரிமை சார்ந்த களங்களில் திராவிட இயக்கங்களே போராடிக் கொண்டிருந்த நிலை மாறி தமிழர் உரிமையை கொள்கையாய் கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் செயல்படுகின்றன; ஈழத்தமிழர் பிரச்சனை, காவிரி நீர் பங்கீட்டு விவகாரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், மூன்று தமிழர் உயிர்காக்கும் போராட்டம், இன்னபிற தமிழர் உரிமை சார்ந்த பிரச்சனைகளில் ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், விவசாயிகள் கூட்டமைப்புகள் என ஏகத்துக்கும் அனைவரும் போராடுகிறார்கள்; ஆனால் இரண்டாயிர்ரம் ஆண்டுகளாக நசுக்கப் பட்டுவரும் தலித்களின் பிரச்சனைகளில் மட்டும் ஒரு சிலரே, அதிலும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களே போராட முன்வருகிறார்கள்; போராடுகிறார்கள். இது ஏன்? தலித்கள் தமிழர்கள் இல்லையா? என்ற கேள்வி எமக்கு மட்டுமின்று ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளாகும் தலித்கள் அனைவருக்கும் எழும் என்பதில் ஐயமில்லை...! இதைப் பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்போம்...!

               தமிழர் சார்ந்தப் பிரச்சனைகளில் போராடும் போராளிகள் (?), தலித்களின் வாழ்வாதாரப் பிரச்சனைப் பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வி பல நூறு ஆண்டுகளாக இருக்கிறது. இதற்கு போராடுபவர்களின் சாதி மனநிலை மட்டும் காரணம் என்று நான் நம்பவில்லை; அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய, அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இதை எப்படி உறுதி செய்ய முடியும் என்றால், சில நேரங்களில் தலித்களின் பிரச்சனைக்கு தலித் அமைப்புகளே போராட முன்வருவதில்லையே; உதாரணமாக சமீபத்தில் அரங்கேறிய தருமபுரி சாதி வெறியாட்டத்தில் எத்தனை தலித் அமைப்புகள் போராடின? வலுவான அமைப்பாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மட்டும் போராடியது; மற்றபடி சிறுசிறு புதிய அமைப்புகள் போராடினார்கள். தற்போது சட்டமன்றத்திலே அங்கமாக இருக்கும் தலித் அமைப்புகள் என்ன செய்தார்கள்? தலித்களின் உரிமையான தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலித் பிரிதிநிதிகளாக உள்ள 40 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? ஏன் அவர்களால் போராட முடியவில்லை? இவர்கள் போராட ஏன் வரவில்லையோ, இவர்களுக்கு என்ன காரணமோ அதே காரணம் தான் மற்ற தமிழர் அமைப்புகளுக்கும்; தமிழர் அமைப்புகளின் மவுனத்தை நான் நியாயப் படுத்தவில்லை; சுயவிமர்சனத்தோடு கண்டிக்கத்தான் செய்கிறேன்...!

                   தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தலித்கள் 19% மற்ற தலித் அல்லாத சாதி இந்துக்கள் 81% ஆகும். சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கெடுத்த தலித் அல்லாத 15 பேர்கள் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களுடன் திருமண உறவுக் கொள்ளமாட்டோம்; மற்ற சாதியினர் என்றால் அனுசரித்து செல்வோம் என்று அனைவரும் சொன்னார்கள். அதன்படி பார்த்தால்  81% தலித் அல்லாத சாதி இந்துக்களில் குறைந்தபட்சம் 90 சதவிதம் பேர் தாழ்த்தப்பட்டவர்களை வெறுக்கிறார்கள் என்பது புலனாகிறது. ஒரு அரசியல் கட்சியோ  அல்லது இயக்கமோ வெகுமக்கள் அரசியல் கட்சியாகவோ அல்லது  வெகுமக்கள் இயக்கமாகவோ வளரவேண்டுமானால் நிச்சயமாக இந்த 90% சாதி இந்துக்களின் ஆதரவை தவிர்க்க இயலாது. தாழ்த்தப்பட்டவர்களின் உறவையே வெறுக்கும் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்குப் போராடுபவர்களை ஆதரிப்பார்களா? என்பது கேள்விக் குறியே...!

                  இந்தப் பிரச்சனை தேர்தல் அரசியலில் மட்டும் இல்லை; மக்கள் இயக்கங்களில் கூட இருக்கிறது; ஏன் நண்பர்கள் வட்டங்களில் கூட இருக்கிறது. இன்னொரு பிரச்சனை சாதி ஒழிப்புக் களத்திலே ஒத்தக் கோரிக்கைகளுடன் கிஞ்சிற்றும் சமரசம் இல்லாமல் போராடியவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும். ஆனால் நடைமுறையில் தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள், புரட்சியாளர் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள். தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்பவர்களை  சாதி ஒழிப்புபோராளியாகவும், பிரபாகரனை ஏற்றுக் கொள்பவர்களை தமிழினப் போராளியாகவும், சேகுவேராவை ஏற்றுக் கொள்பவர்களை சுதந்திரப் போராளியாகவும் பார்க்கும் இந்த சமுதாயம், புரட்சியாளர் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்டால் மட்டும் அவனை தாழ்த்தப்பட்டவனாகப் பார்க்கிறது. தமிழர் உரிமை என்று பேசுகிறவர்கள் தலித்களின் வாழ்வாதாரப் பிரச்சனையை பேச மறுப்பதற்கு இதுவும் ஒரு  காரணம்.

                 பல்லாயிரம் ஆண்டுகளாக அத்துனை அதிகாரங்களையும் அனுபவித்து வலிமையாக உள்ள சாதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, பல்லாயிரம் ஆண்டுகளாக அத்துனை அதிகாரங்களையும் இழந்து நிற்கும் பலமற்ற  சாதியினரை அடக்கி ஆள நினைக்கிறார்கள்; இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடி சாதிகளில் சிக்கி பிளவுபட்டு நிற்கும் மக்களிடம் நல்லிணக்கத்தை உருவாக்குவதே சாதி ஒழிப்பு என்பதாகும். அந்த அடிப்படையில் சாதியத்திற்கு எதிராகப் போராட வேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நின்று அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களையும் முன்னேற செய்தால் தான் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இதிலே தமிழர் அமைப்புகளுக்கு இரண்டு சிக்கல் இருக்கிறது ஒன்று தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பற்றி பேச வேண்டுமானால் முதலில் அவர்கள் இருக்கும் சேரிக்கு செல்லவேண்டும். இதற்க்கு தமிழர் அமைப்புகளை சார்ந்த தலித் அல்லாத போராளிகள் (?) மனம் ஒப்புமா? என்பது ஒன்று. மற்றொன்று சாதிக்கு எதிராகப் போராட வேண்டுமானால்  சாதி அமைப்பில் நின்றுதான் போராட முடியும்; அந்த அடிப்படையில் தம்மீதும் சாதி முத்திரை பதிந்து விடும் என்றும், நானும் என் இயக்கமும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர்களால் தம்பட்டம் அடிக்க முடியாதோ? என்றும் அஞ்சுகிறார்கள். நானும் என் இயக்கமும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள துடிக்கிறார்களே ஒழிய, தம் மக்களும் சாதிக்கு பலியாகக் கூடாது, அவர்களும் சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதாக தெரியவில்லை...!

                    எது எப்படியோ தமிழர் அமைப்புகளின் இந்த மவுனத்திற்கு ஓட்டு அரசியலே முக்கிய காரணியாக இருக்கிறது; பிறகு தான் மற்ற காரணங்கள் எல்லாமே. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் எப்படி அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டமோ, அப்படியே சாதி வெறியர்களின் சாதி வெறிக்கு எதிராகப் போராடுவதும், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடுவதும்  அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டம் தான். இதை புரிந்து தமிழர் அமைப்புகள் கொள்ளவேண்டும்; மக்களிடமும் தமிழர் அமைப்புகளிடமும் மனமாற்றம் நிகழவேண்டும். அது சாதிய ஆதரவு  எது? சாதி ஒழிப்பு எது? என்று பகுத்து ஆராய வேண்டும்...!  சாதியை ஆதரித்து யார் அரசியல் செய்கிறார்கள்? சாதியை எதிர்த்து யாரப் போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டுமானால் சாக்கடையில் இறங்கித் தான் ஆகவேண்டும்; சாக்கடை நம்மீது பட்டு நம் உடை அசிங்கமாகிவிடும் என்று அஞ்சினால் காலத்திற்கும் சாக்கடையின் நாற்றத்திலே தான் வாழவேண்டும் என்பதை தமிழர் உரிமைக் களங்களில் நிற்ப்பவர்களும், வெகுஜன மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்...!

- அங்கனூர் தமிழன் வேலு   

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

தீண்டப்படாதவர்களும், கடவுள் மறுப்பும் ...!


 மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்வின் பெரும்பகுதியை தேடலுக்காகவே செலவு செய்கின்றான். அதிலே பெரும்பான்யோரின்  தேடலாக பக்தியும், பணமுமே நிறைந்து இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக விடை காணப்படாத விவாதமாக நீண்டுகொண்டிருப்பது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? மனிதனை படைத்தது யார்? என்ற விவாதங்களே. கடவுள் மனிதனை படைத்தானா? மனிதன் கடவுளை படைத்தானா? என்ற கேள்விக்கு எந்த காலத்திலும் தீர்வு கிடைக்காது; அதற்க்கு காரணம் பெரும்பான்மை மக்கள் மனமாற்றத்தை விரும்பாதது அல்லது தமக்கிருக்கும் பகுத்தறிவை பயன்படுத்தாதுமே காரணம். இவ்வுலகை படைத்தது கடவுள். அவனுக்கே முழு சக்தியும் இருக்கிறது என்று பெரும்பான்மை மக்கள் நினைக்கிறார்கள். கடவுள் இன்றி அணுவும் அசையாது என்று தீர்க்கமாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் தம் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கும், தம் மீது பிறர் செலுத்தும் ஆதிக்கத்திற்கும் கடவுளே காரணம். எல்லோருக்கும் பொதுவான, எல்லாம் அறிந்த அவன் செய்தால் அது சரியாகவே இருக்கும் என்று கருத்து நிலவி வந்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த கருத்து நிலவி வந்ததை என் சொந்த அனுபவத்தின் மூலமே உணர்ந்திருக்கிறேன்; நான் எட்டாவது படித்து கொண்டிருந்த போது என் தந்தை உயர்சாதிக்காரர் என்று சொல்லப்படும் பணவசதி மிக்க ஒருவருக்கு கூலி வேலை செய்து வந்தார்.அப்படி ஒரு சூழலில் ஒருநாள் அவசர செய்தியை சொல்ல  என் அப்பாவை தேடி அவர் வேலை செய்த இடத்திற்கு சென்றேன். அங்கெ அந்த பணக்காரரின் 18 வயது  மகன் என் அப்பாவை பெயரை சொல்லி ஒருமையில் அழைத்தது என்னை வெகுவாக சங்கடத்தில் ஆழ்த்தியது. வீட்டிருக்கு வந்த பின்பு என் அப்பாவிடம் இதைப்பற்றி கேட்டபோது. " எல்லாம் என் தலையில் எழுதி வாங்கி வந்த விதி" என்று நொந்து கொண்டார். என் அப்பாவின் அந்த தலை எழுத்தை கேட்ட அந்த நாள் முதல் நான் கடவுளை நம்புவதும் இல்லை; வணங்கியதும் இல்லை. இப்படி எத்தனையோ பேர் மனம் முழுதும் வடுக்களுடன் உழன்று கொண்டே "எல்லாம் கடவுளின் செயல் என்று நம்பிக் கொடிருப்பார்கள்". அவர்களை ஓரளவு சிந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை தான் இக்கட்டுரையின் நோக்கம்...!

                    "கடவுள் கற்பனையே" என்பதை பல்வேறு அறிஞர் பெருமக்களும், புத்தர் முதல் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வரை பலரும் வலியுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்த வெளியிட்ட சார்லஸ் டார்வின் அவர்கள்  " எல்லா ஜீவராசிகளும் சிருஷ்டிக்கப்பட்டவை அல்ல; ஒரு சில ஜீவராசிகளின் வம்சம் தான்" என்று மனிதனின் பிறப்புக்கும் கடவுளுக்கும் எல் முனையளவும் சம்மந்தமில்லை என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கிறார். ஆய்வாளர்களின் முடிவுப்படி மனித இனத்தின் வளர்ச்சிக்கு கரணம் " முதலில் உழைப்பும், பிறகு வார்த்தைகளுமே குரங்கு மனிதனை மனிதனாக்கிறது; இவைகளின் விளைவாக மூளையும் வளர்ந்தது; மூளை வளர, வளர ஐம்புலன்களும் பரிணாம வளர்ச்சி பெற்றது" என்பது தெளிவாகிறது. மனிதனை கடவுள் தான் படைத்தான் என்பதே கடவுள் நம்பிக்கையின் முதல் கூற்றாக இருக்கிறது . மனிதனை கடவுள் படைக்கவில்லை, ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சியே மனித குல விருச்சிக்கு காரணம் என்பதை ஆய்வாளர்கள் தெளிவுப்படுத்தி இருப்பது ஒருபுறமிருந்தாலும் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் அல்லது கடவுளின் இருப்பை உறுதி செய்வதற்காகவே மதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதால் கடவுளின் பெயரால் மனிதனுக்கு மனிதன் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கண்டிக்க அல்லது களைவதற்கு கடவுள் இல்லை என்ற ஆயுதம் தேவைப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்றத்தாழ்வுகள் மலிந்து கிடக்கும் இந்தியாவில் பெரும்பான்மை மதம் இந்து மதமே. இந்துமதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கண்டும், அனுபவித்தும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் இசுலாமியர்கலாகவும், கிறித்துவர்களாகவும் மாறினார்கள். சூத்திரர்கள் என்று வர்ணாசிரமத்தால் அடையாளம் காட்டப்படும் தாழ்த்தப்பட்டவர்களை பொருத்தமட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் கடவுள் இருப்பதாக கூறிக்கொள்ளும் கருவறைக்குள் நிழைந்துவிட்டாலோ, கடவுள் சிலையை தொட்டுவிட்டாலோ அல்லது கண்ணால் கண்டுவிட்டாலோ கடவுளே தீட்டாகிவிடுவார் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளே நிழைய அனுமதிப்பதில்லை.

              தாழ்த்தப்பட்டவர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி மிகத் தெளிவாக "திருநாளைப்போவாரில் உள்ள நந்தன்" கதை மிகத்தெளிவாக உணர்த்தும். ஆதனூர் சேரியில் வசித்து வந்த நந்தன். வருணாசிரமப்படி நால் வருணத்திற்கு அப்பார்ப்பட்டவன். அதாவது தீண்டத்தகாதவன் (புலையர்கள்). இவர்கள் சிறுதெய்வ வழிபாட்டுக்குரியவர்கள். முழுமுதற் கடவுளை காணவோ, தரிசிக்கவோ மறுக்கப்பட்டவர்கள். நந்தன் பண்பாட்டு வழியிலும், தொழில் அடிப்படையிலும் அடிமைப்படுத்த பட்டவன். அப்படிப்பட்ட நந்தனுக்கு முழுமுதற் கடவுளை தரிசிக்க ஆசை அல்லது பக்தி ஏற்ப்பட்டுள்ளது. தீண்டாமையின் காரணமாக மறுக்கப்படவே அந்தணர் ஒருவரின் கனவிலே கடவுள் வந்து சொன்னாராம் " நந்தன் தீயினில் மூழ்கி முப்புரி நூலோடு என் முன் தோன்றினால் அவன் மீதுள்ள தாழ்ந்த சாதி எனும் இழிவு நீங்கி, என்னை தரிசிக்கவும், பூசிக்கவும் முடியும் என்றாராம். தீயினில் மூழ்கிய ஒருவன் மீண்டும் எப்படி எழுவான் என்பது ஒருபுறமிருந்தாலும், தாழ்த்தப்படவன் கனவில் வருவதைக்கூட கடவுள் விரும்பவில்லையாம்; அதனால் தான் அந்தணரின் கனவில் வந்து சொன்னாராம்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீது சாதி ரீதியான தாக்குதலும், கடவுளை பூசிக்கக் கூடாது என்ற தடுப்பும் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது புத்தமே. இந்தியா முழுமைக்கும் புத்தமதம் பரவி இருந்ததை வரலாறு கூறுகிறது. கி.மு. 450 காலகட்டங்களின் புத்தமதமே பெரும்பான்மை மதமாக இருந்திருக்கிறது. அதற்க்கு காரணம் இந்து மதத்தில் வர்ணாசிரம அடிப்படையில் தீண்டப்படாதோர் என்று ஒரு சாராரை ஒதுக்கி வைத்து இழிதொழிலை செய்ய வைத்திருந்த சூழலில்  புத்தரும் அவரது சீடர்களும் தினசரி வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து உண்டு வந்திருக்கின்றனர். தம்மை கண்டாலே தீட்டு என்று பிறர் ஒதுக்கி வைக்கும் பொது தம் கைப்பட சமைத்த உணவை வாங்கி உண்கிறார்களே என்று தீண்டப்படாதோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி அதுவே தீண்டப்படாதோர் புத்தமதத்தை தழுவ காரணமாக இருந்திருக்கிறது. அவ்வாறு ஒருமுறை ஆனந்தா என்ற புத்த பிட்சு வழிநடத்திக் கொண்டிருக்கையில் அவருக்கு தாகம் ஏற்ப்பட்டு அருகில் இருந்த கிணற்றை நோக்கி சென்றாராம். அங்கெ சண்டாலிகா என்ற பெண் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தாளாம்; அவளிடம் எனக்கு தாகமாக இருக்கிறது அருந்த நீர் கொடுங்கள் என்று கேட்டதும் அந்தப் பெண் "அய்யா மன்னிக்கவும் நான் தீண்டப்படாதவள்" என்றாளாம். அதற்க்கு அந்த புத்த பிட்சு நான் தண்ணீர் தான் கேட்டேன்; நீ எந்த சாதி என்று கேட்கவில்லை என்றாராம். உடனே அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக நீர் தலும்பியதாம்.அன்றைக்கு கடவுளையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் கடுமையாக எதிர்த்து வந்த புத்தரின் பிரசங்கத்தினால் பெரும்பாலான தீண்டப்படாத சாதியினர் புத்த மதத்தை தழுவினர். பார்ப்பனர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டதில் புத்தரின் பங்களிப்பு அபிரிமிதமானது.

கடவுளை சாங்கிய தத்துவமும் கடவுளை எதிர்த்தது. அது அவசியமற்ற கற்பனை என்றது. புத்தர் கடவுள் கோட்ப்பாட்டை  எதிர்த்து பேசியதாக அஷ்வகோஷர் என்ற பவுத்தஞானி அவரது நூலில் குறிப்பிட்டு இருப்பது இதோ...

(1) ஈஸ்வரன் இந்த உலகத்தை படைத்திருந்தால்  மாற்றமும், அழிவும் துன்பமும், இடுக்கண்களும், நல்லதும், கேட்டதும், எதுவுமே இருக்கலாகாது; ஏனெனில் அவன்தான் அனைத்தையும் படைத்திருக்க வேண்டும்.

(2) இன்பமும், துன்பமும், விருப்பும், வெறுப்பும் உணர்வுள்ள  அனைவருக்கும் எர்ப்படுவதால் கடவுளுக்கும் இன்பமும், துன்பமும், விருப்பும், வெறுப்பும் இருக்க வேண்டும். இவை இருந்தால் அவர் எப்படி குற்றமற்றவராய் இருக்கமுடியும்.  எப்படி எல்லோருக்கும் பொதுவான நீதிமானாக இருக்க முடியும்?

(3) ஈஸ்வரன் நம்மை படைத்தவனாக் இருந்தால், அவன் இன்றி அணுவும் அசையாது அல்லவா, அப்படி இருக்க நாம் நல்லொழுக்கத்தை நாடி சென்றாலும் என்ன பயன்? நல்லது கேட்டதும் அவன் படைத்தததால் அனைத்து நிகழ்வுகளுமே அவனுக்கு ஒன்றே.
(4) துன்பமும், துயரமும் வேறு காரணத்தால் ஏற்படுகிறது என்றால், அவனுக்கு அப்பால் உள்ளது இவை ஏற்ப்படுத்துகிறது என்றால் அனைத்தையும் அது ஏன் ஏற்ப்படுத்தக் கூடாது?     

(5) கடவுள் அனைத்தையும் படைத்தார் என்றால் ஏதோ நோக்கத்துடன் அல்லது எவ்வித நோக்கமும் இன்றி படைத்திருக்க வேண்டும். நோக்கத்துடன் இவ்வுலகைப் படைத்திருந்தால்  குறைபாடு அற்றவர் என்று கூற முடியாது; என்னில் நோக்கம் என்பதே ஒருவித தேவையை பூர்த்தியடைய செய்வதே. நோக்கம் இல்லாமல் படைத்தார் என்றால் ஒன்று அவர் பைத்தியக்காரனாக இருக்க வேண்டும்; இல்லை பால்மணம் மாறாத குழைந்தையாக இருக்க வேண்டும்.

(6) கடவுள் உலகைப் படைத்தார் என்றால் வினயப்பூர்வமாகா அவன் கட்டளைக்கு இணங்கி ஏன் நடக்கவில்லை? துன்பத்தின் போது ஏன் கடவுளை தொழ  வேண்டும்?

(7) ஒரு கடவுளுக்கு மாறாக ஏன் பல கடவுள்களை தொழ  வேண்டும்?
 


இக்கூற்றின் மூலம் புத்தர் கடவுளை கடுமையாக எதிர்த்ததும், கடவுள் நம்பிக்கை பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல என்று பிரசங்கம் செய்திருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
 


               
சமகால நிகழ்வுகளின் மூலமாக கூட கடவுள் கற்பனையே என்பதை நம்மால் நிரூபிக்க முடியும். சமீபத்தில் சாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளான தருமபுரி ( நத்தம், அண்ணா நகர் கொண்டாம்பட்டி) தாழ்த்தப்பட்டவர்களின்  300 குடியிருப்புகள் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கு இறையாயின. "அந்த சேரிக்குடிகளிலே தம் புகைப்படமோ, அல்லது தம்மை பெற்றவர்களின் புகைப்படமோ இருந்ததோ இல்லையோ, ஆனால் நிச்சயம், ஈஸ்வரன் படமோ  முருகன் படமோ  பிள்ளையார் படமோ நிச்சயம் இருந்திருக்கும்; சாதி வெறியர்களை விட அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமானால் அந்த கொடும் நிகழ்வை தடுத்திருக்க முடியும் அல்லவா? ஏன் தடுக்க முடியவில்லை?" தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை விட கடவுளுக்கு எதிரிலே கடவுளுக்கு எதிரான கொடும் செயல்கள் அதிர்கரித்து விட்டன; அதையெல்லாம் கூட தடுக்க சக்தியில்லாத கடவுளா நாட்டில் நிகழும் வன்முறைகளை தடுக்கப் போகிறார்?

கடவுள் அபிமானிகளிடம் சில கேள்விகளை மட்டுமே கேட்க விரும்புகிறேன்....

(1) கடவுள் இன்றி அணுவும் அசையாது என்பது உண்மையாக இருக்குமானால், நாட்டில் நடக்கும் மதக்கலவரம், சாதிக்கலவரம், வன்புணர்வுக் கொடுமைகள், பசி, பட்டினி, ஊழல், எளியவர்களை வலியவர்கள் தாக்கும் வன்கொடுமை இதுவும் கடவுளின் செயல்தானா?

(2) உங்களுக்குப் பிறந்த பிள்ளை கடவுளின் கிருபையால் தான் பிறந்தது என்றால், உங்களுக்கு பிள்ளைக் கொடுக்கவே சக்தி உள்ள கடவுளால் என் மீது, என் அனுமதியே இல்லாமல் திணிக்கப்பட்ட தீண்டாமை எனும் கொடுமையை நீக்க முடியாதா?


(3)
கடவுள் இன்றி அணுவும் அசையாது என்று நம்புகிறவர்கள், அவர்களுக்கு நேரும் கொடுமைக்கு மட்டும் ஏன் பொங்கி எழ வேண்டும்? அதுவும் கடவுளின் கிருபை என்று நம்பிக் கொள்ள வேண்டியது தானே?

(4) நாடாளுமன்றத்தை தகர்க்க முயன்றதாக கூறி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை
ஏன் நிறைவேற்றினீர்கள்? அதுவும் கடவுளின் கிருபை தானே? சங்கரமடத்து குடுமிகள் அரசுக்கு எதிராக ஏன் போராடவில்லை?

(5) தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் சென்றால் கடவுளே தீட்டாகி விடுவார் என்றால், கடவுளின் கட்டளைப்படி தான் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் கடவுளும் சாதிப் பிரியரா? அப்படியானால் அவர் எந்த சாதி?

(6) கடவுளால் தான் நான் பிறந்தேன் என்றால் என்னை  ஏன் கருவறைக்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? நானும் கடவுளின் பிள்ளைதானே?


இப்படி பல கேள்விகளை எம்மால் கேட்க முடியும். எவனுக்கும் பதிலளிக்க திராணி இருக்காது; ஏனெனில் இதுபோன்ற பல ஆயிரம் கேள்விகளை புத்தரும், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும் கேட்டுவிட்டார்கள். ஆனால் எந்த தீவிர கடவுளப் பிரியர்களும் பதில் சொல்லமுடியவில்லை; மாறாக இசுலாமியர்கள் வந்து சொல்வார்கள். அது இந்து மதத்தின் தவறான கோட்பாடு; சாதிக் கொடுமை தான் உங்களின் கடவுள் மறுப்புக்கு காரணம் என்றால் நீங்கள் இசுலாமியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அப்போது நிச்சயம் கடவுளை உணருவீர்கள் என்பார்கள். அவர்களிடம் கேட்கிறேன் கடவுளின் பெயரால் சக மக்களை வேறுபடுத்தும் அந்த காவாளிகளைக் கூட இத்தனை ஆண்டுகளாக தண்டிக்க முடியாத கடவுளால் என்னை மனமாற்றம் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. மேலும் கடவுள் கற்பனையே என்று சொல்கிற நாத்திகர்களாகிய நாங்கள் ஒரே அணியில் தான் இருக்கிறோம்; ஒரேக் கோட்ப்பாட்டில் தான் இருக்கிறாம்; ஆனால் கடவுளை தீவிரமாக நம்புகிற நீங்கள் மட்டும் ஏன் ஒரே கடவுள்தான் என்று ஒரே அணியில் சேரவில்லை? உங்களை ஒன்று சேர்க்கும் சக்திக் கூடவா உங்கள் கடவுளுக்கு இல்லை!
இசுலாமிய சகோதரர்களே ! சிந்தித்து பாருங்கள்.... "இம்மையில் செய்யும் குற்றங்களுக்கு மறுமையில் நிச்சயம் கடவுள் தண்டிப்பார் என்று முழுமையாக நம்புகிறவர்கள் நீங்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில், சகோதரி ரிஹானா உண்மையில் குற்றமே செய்திருந்தால், கடவுள் என்பவர் நிச்சயமாக இருப்பாரேயானால், மறுமை என்பதும் இருக்குமானால் அவளை மறுமையில் நிச்சயம் கடவுள் தண்டிப்பார் ! பிறகு ஏன் இப்பொழுது அவளுக்கு தண்டனை  கொடுத்தீர்கள்? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனையா?" அப்படியானால் நீங்கள் கடவுளை நம்பவில்லை என்றுதானே பொருளாகிறது !

மீண்டும் இந்துக் கடவுளப் பிரியர்கள் கேட்ப்பார்கள் கடவுள் தான் இல்லையே பிறகு ஏன் கருவறை நிழைவுப் போராட்டம் செய்கிறீர்கள் என்று. அவர்களுக்கு " இந்த நாட்டிலே நீதிமன்றங்களை விட சங்கரமடங்களே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது; மதங்களை காப்பதே சங்கர மடங்களின் தலையாய கடமையாக இருக்கிறது. மதங்கள் கடவுளை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. சாதிகளின் அடிப்படையிலே கடவுளை வழிபடும் உரிமைகளும் இருக்கின்றன. ஆகவே கருவறை நுழைவுப் போராட்டம் என்பது கடவுளின் மீதுள்ள அபிரிமிதமான நம்பிக்கையினால் அல்ல; எண்களின் அடிப்படை உரிமையினால்; கடவுளை வணங்கவேண்டுமா? கூடாதா? என்பதையும், நான் கோவிலுக்குள் நிழைய வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் நான் தான் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய சங்கரமடத்து குடுமிகள் அல்ல...!

எது எப்படியோ
கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவன் "எல்லாம் கடவுள் செயல்" என்ற அபத்தமான நம்பிக்கையின் மூலம் போராட்டக் குணத்தை இழந்து, வாழ்வின் எதார்த்தை உணர மறுத்து, வாழ்வியல் தத்துவங்களையும் இழந்து வாழ்வில் தோற்றுப் போகிறார்கள்; அவர்களோடு சேர்த்து அவர்களின் சந்ததிகளையும் தோற்கடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதே எதார்த்தமான உண்மை...! அதை கடவுள் அபிமானிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எம் நோக்கம்...!

( உதவிய நூல் : ஏ. எஸ்.கே. அவர்களின் சமூகப் போராளி அம்பேத்கரின் வாழ்வும், தத்துவங்களும் )

- அங்கனூர் தமிழன் வேலு