திங்கள், 24 டிசம்பர், 2012
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
டெல்லி வன்புணர்வு - இந்தியாவின் கவுரவத்தை காப்பதற்கா தூக்கு?
முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி!
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல்லாம் எழுந்திருக்கிறது. இப்பிரச்சனை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் முக்கியப் பிரச்சனையாக எடுத்து விவாதிக்கப்பட்டது. மனித உரிமைகள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்; பெரும்பாலானோர் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். குறிப்பாக பி.ஜே.பி.யின் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசுகையில் 'தலைநகரில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களை தடுக்காமல் அரசு என்ன செய்கிறது? இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என்று பேசி இருக்கிறார். மேலும் சமாஜ்வாடி உறுப்பினர் ஜெயா பச்சன், 'பாலியல் பலாத்கார குற்றத்தை கொலை குற்றத்துக்கு சமமாகக் கருத வேண்டும். இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கான சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். இந்த சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்' என்று கூறி உள்ளார். மற்ற பல உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசி உள்ளனர். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட பரிந்துரைத்துள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு இத்தனைப் பேரும் கண்டனங்களை தெரிவிப்பது என்னவோ நியாயம் தான்; கண்டிக்கக் கூடியது தான்! ஆனால்....... இந்தியாவில் யாருக்கெல்லாம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? யாரெல்லாம் அதில் இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார்கள்? என்றால் நமக்கு தலையே சுத்தும்; இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 1995ல் ஏப்ரல் 27, ஆட்டோ ஷங்கர், 2004ல் தனன்ஜய் சாட்டர்ஜி, 2012ல் கசாப். ஆட்டோ சங்கர் 6 பேரை கொலை செய்த குற்றத்திலும், தனன்ஜய் சாட்டர்ஜி, 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கிலும், அஜ்மல் கசாப் 167 பேரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்கள்; அதன் பிறகு டெல்லியில் நடந்த தற்போதைய கற்பழிப்பு சம்பவத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன; பலர் குற்றவாளிகளை தூக்கில் போட சொல்கிறார்கள்; குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான், ஆகவே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியாவையே வெட்கி தலைகுனியச் செய்த கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அதிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டவர்களும் ஏராளம். விவசாயப் பெருமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர்களை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து விட்டு இன்று ஏகபோக சுக வாழ்க்கையை வாழ்பவர்களும் ஏராளம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநில முதல்வர் சவானின் சொந்த கிராமமான கராட்டில் தலித் பெண் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி அடித்து விரட்டினார்கள். சில நாட்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ஒருவர் வீட்டிலே 16 வயது சிறுமியை கற்பழித்து, கொன்றுள்ளனர். 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் 44 விவசாயிகளை துடிக்கத் துடிக்க உயிரோடு ஒரு குடிசையில் வைத்து தீவைத்து கொளுத்தினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமமான வாச்சாத்தி கிராமத்தில் 1992 சூன் 20ம் தேதி 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாகப் புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். (Wikipedia) ஆனால் வாச்சாத்திக் கொடுமைக்கு தீர்ப்போ 19 ஆண்டுகள் கழித்துதான் வெளி வந்தது. 269 பேர்களுமே குற்றவாளிகள் , இந்த 269 பேர்களில் 54 பேர்கள் இந்தப் பத்தொன்பது ஆண்டு இடைவெளியில் இறந்து போயுள்ளனர். இறந்து போய்த் தப்பித்துக் கொண்டவர்களில் ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியும் அடக்கம். மீதமுள்ள 215 பேர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை வழங்கி உள்ளது நீதி மன்றம். தண்டனை பெற்றவர்களை விட தப்பித்தவர்களே அதிகம். கடந்த ஆண்டு 2011, நவம்பர் 22ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா, மாதேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை காவல்துறையினர் விசாரணைக்கு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
இந்தியாவில் 2009 ஆம் ஆண்டைய புள்ளி விவரப்படி 2007யில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3010, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2106, உத்தரப்பிரதேசத்தில் 1648, பீகாரில் 1555, டெல்லியில் 598, அஸ்ஸாம் தவிர வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 1555, நாகாலாந்தில் 13, மணிப்பூரில் 20, சிக்கிமில் 24, அருணாச்சலப்பிரதேசத்தில் 48, மேகாலயாவில் 82, தென் மாநிலங்களைப் பொருத்தமட்டில் ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக 1070, தமிழகத்தில் 523 வழக்குகளும், கேரளாவில் 512 வழக்குகளும், கர்நாடகத்தில் 436 கற்பழிப்புகளும் நடந்துள்ளன. இவை வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டும்தான். வழக்குப் பதிவு செய்யப்படாதவை எத்தனையோ? அதிலும் தண்டனை வழங்கப்பட்டது எத்தனைப் பேருக்குத் தெரியுமா? 2007யில் மொத்தம் 20 ஆயிரத்து 737 வழக்குகள் பதிவானதில் 25 ஆயிரத்து 363 பேர் கைது செய்யப்பட்டு, வெறும் 5 ஆயிரத்து 22 பேருக்கு மட்டும் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டைப் பொருத்தவரை மொத்தம் 19 ஆயிரத்து 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 23 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு,வெறும் 5 ஆயிரத்து 310 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. (தகவல் : நக்கீரன் : ஜூலை, 29, 2009).
அடுத்தபடியாக கொலைக் குற்றங்கள் என்று எடுத்துக் கொண்டால் அயோத்தி சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். குஜராத்தில் வாழும் இசுலாமியர்களை குறிவைத்து அவர்களைத் திட்டமிட்டு பழி வாங்குவதற்காகவே இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் 1,200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 600 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், 400 குழந்தைகள் காணவில்லை, 500க்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய நரேந்திர மோடி இன்று வரை தண்டிக்கப்படவில்லை, மாறாக மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் அஜ்மல் கசாப்புக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற கடந்த கால சம்பவங்களைப் பார்க்கும் போது இந்தியாவின் தற்பெருமையைக் காத்துக்கொள்ளவே கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரிதும் அறியப்படாத ஒரு குக்கிராமத்திலோ, அல்லது உலகின் பார்வைக்குப் புலப்படாத இடத்தில் எவ்வளவு பெரிய மனித உரிமைகள் மீறல் நடந்தாலும் அல்லது மனிதன் வாயில் மனிதனே மலத்தைத் திணித்து கொடுமை நடந்ததாலும், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானாலும் எந்த மனித நேயவாதியும் வாய் திறப்பதில்லை என்பது தான் வேதனையின் உச்சம். இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்கூட இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் யாராலும் அறியப்படாத மலைவாழ் கிராமத்தில் ஏதோ ஒரு காம மிருகத்தால் யாரோ ஒரு இளம்பெண் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம்; நரிக்குறவர் சமூகப் பெண்களை சர்வசாதாரணமாக பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். இதுவரை ஒரு வழக்காவது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக நான் அறிந்ததில்லை. அவர்களை காவல் நிலையத்துக்குள்ளே அனுமதிப்பதில்லையே பிறகு எப்படி புகார் கொடுப்பார்கள், வழக்கு பதிவார்கள்? நரிக்குறவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்காக உங்கள் மனித நேயம் பொங்கி புரையோடாதா? டெல்லியில் நடந்தால் அது கொலை, அது மனித உரிமை மீறல், அதுவே இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் குக்கிராமத்தில் நடந்தால் நியாயமா? தமிழக சேரிகளில் காவல் துரையின் அட்டகாசங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை; அத்துமீறி உள்ளே நுழைந்து சேரிப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை; தலித் இயக்கங்கள் போராடி, வழக்குப் பதிவு செய்யத் தூண்டினால் சாதாரண வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களிலே பிணையில் வெளி வந்துவிடுகிறார்கள்.
டெல்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான்; பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள் இச்சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை தூக்கில் இட வலியுறுத்தும் நிலையில், பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
"டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஆனால் அதுமட்டுமே நாட்டின் ஒரே பிரச்சனையைப்போல் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் விதர்பா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை சராசரியாகப் பார்த்தால் ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் ஆகும். இந்தக்கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் தற்கொலையில் இது உலக சாதனை ஆகும். இதற்காக யாராவது வெடித்துக் கிளம்பிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? கண்ணீர் விட்டிருக்கிறார்களா? இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 48 சதவீதம். இது ஆப்பிரிக்கவின் மிகவும் பின்தங்கிய நாடுகளான எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை விட மிக அதிகம். அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் 33 சதவீதம் தான். நம் நாட்டில் இதற்காகக் குரல் கொடுப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. மாபெரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழை மக்களுக்குப் போதிய மருத்துவ வசதியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு யாரும் குரல் எழுப்புவதில்லை.
இந்தியாவில் கல்வி, கசாப்புக்கடையைப் போல் உள்ளது. அரசின் பெரும்பாலான பணம் ஐஐடி-களுக்கும், ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமே செலவிடப்படுகின்றது. அறிவுக்கு அடித்தளமிடும் தொடக்கப்பள்ளிகளுக்கு குறிப்பாக கிராமப்புறப் பள்ளிகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படுவதே இல்லை. விலைவாசியின் ராக்கெட் வேக உயர்வு. இன்னும் மிகப்பெரிய சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இவைகளைப் பற்றிப் பேச, கேள்வியெழுப்ப, போராட, கண்ணீர் விட மக்களோ, ஊடகங்களோ ஏன் பாராளுமன்றமோ கூட தயாராக இல்லை நடந்த கற்பழிப்பு சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் இந்த டெல்லி சம்பவம் தான் நாட்டின் ஒரே பிரச்சனை என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள். மேலும் இந்தக் குற்றத்திற்கு இந்திய தண்டனைச் சட்டம் 376 இன் படி அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தக் குற்றத்திற்கு சட்டத்தில் இல்லாத மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூச்சலிடுவது எதற்காக என்று புரியவில்லை" என கட்ஜூ கருத்துத் தெரிவுத்துள்ளார்.
மரண தண்டனையே கூடாது என்பது தான் நம் நோக்கம், முழக்கம் எல்லாமே. ஆனால் மரண தண்டனை என்ற பேரில் மனிதநேயம் சாகடிக்கப்பட்டு, காவி வெறி கொண்ட இந்தியாவின் போலி கவுரவம் தான் நிலை நாட்டப்படுகிறது என்பதே கசப்பான, பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. டெல்லியில் நடந்த கொடூர செயலுக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு நின்றுவிடாமல், மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க குற்றங்கள் செய்யத்தூண்டும் காரணிகள் எவை என்பதை அறிந்து அரசு அதை களைய முன்வரவேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்காக அரசுக்கும் நீதித்துறைக்கும் காந்தியடிகள் பொன்மொழி ஒன்றை நினைவுப் படுத்துகிறேன், கண்ணுக்குக் கண் என்றால் கடைசியில் நமக்கு எஞ்சுவது குருடர்களின் உலகமாகத்தான் இருக்கும்.
- அங்கனூர் தமிழன் வேலு
புதன், 19 டிசம்பர், 2012
நடிகை குஷ்புக்கு எதிரான போராட்டம் ! இந்துக்கடவுள்கள் மீதான பக்தியா? ஆணாதிக்க திமிரா?
ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து கொண்டு நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவரது சேலையில் ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் உருவம் பொரித்து இருந்துள்ளது; ஆகவே நடிகை குஷ்பு இந்துக் கடவுள்களை அவமதித்து விட்டார் என்று இந்து மக்கள் கட்சியினர்குஷ்பு வீட்டை முற்றுகை இட்டுள்ளனர். இது உண்மையிலே எந்த விதத்தில் நடந்தது என்பது தான் தற்போதைய கேள்வி; இந்துக் கடவுள்களின் மீதான பக்தியா? இல்லை ஆணாதிக்க திமிரா?
அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறேன்;-
1. ராமர் ஏகபத்தினி விரதன்; அவர் சீதையை தவிர வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட நினைக்கமாட்டார்; வேறு எந்த பெண்ணும் அவரை நினைக்கக் கூடாது என்றால் ராமர் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்கிறீர்கள்? அனுமன் பிரமச்சாரி என்றால், அனுமன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் தட்சணையாக உண்டியலில் போடுவதை ஏன் எடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்?
2. இந்துக் கடவுள்கள் படம் பொரித்து சேலை தயாரித்து அது சந்தைக்கு வந்தப் பிறகே நடிகை குஷ்பூ பயன்படுத்தி உள்ளார்; அப்படியானால் அந்த சேலையை தயாரித்த கம்பெனிக்கு எதிராகத் தானே போராட வேண்டும்? ஏன் ஒருப் பெண்ணிற்கு எதிராக போராடுகிறீர்கள்?
3. இந்துக் கடவுள்களின் அவமதிப்புக்குவதால் தான் போராட்டம் செய்தோம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால் தினமும் பத்திரிக்கைகளில் வெளியாகும் கடவுள்களின் படங்கள் பயன்பாட்டிற்குப் பிறகு எங்கே செல்கிறது தெரியுமா? சாக்கடை, குப்பைத் தொட்டி, ரோட்டோரம் என்று காலில் மிதிபட்டு அவமதிப்பது உங்களுக்கு தெரியாதா? இன்னும் சொல்வோமானால் நீர் கிடைக்காதப் பட்சத்தில் மலம் துடைக்கவும் அது பயன்படத்தானே செய்கிறது? பத்திரிக்கைகளில் கடவுள்களின் படங்களை போடவேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே?
4. ஒரு குடிகாரன், விலை மாதுக்கள் வீட்டிற்கு செல்பவன் ராமர் படமோ, அனுமன் படமோ பொரித்த சட்டையை போடும்போது மட்டும் அந்தக் கடவுள்களுக்கு அவமதிப்பு இல்லையா?
5. ஆண்கள் லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற பெண் கடவுள்களின் படங்கள் கொண்ட உடையை பயன்படுத்தினால் அது பக்தி; அதுவே ஒருப் பெண் ராமர், கிருஷ்ணர், அனுமன் போன்றோர் படங்கள் பொறித்த உடையை பயன்படுத்தினால் அது அவமதிப்பா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் போராட்டம் செய்தவர்கள் உளசுதியோடு பதில் சொல்வார்களா?
- அங்கனூர் தமிழன் வேலு
செவ்வாய், 18 டிசம்பர், 2012
சுயமரியாதைப் பாதைக்கு திரும்பிய கதை - அங்கனூர் தமிழன் வேலு
என் 18 ஆவது வயதில் தான் சாதியத்தின் கொடுமையை உணர்ந்தேன். பெரும்பாலான அறிவுஜீவிகள் கிராமங்கள் தான் இன்னமும் சாதியத்தை கெட்டியாகப் பிடுத்து தொங்குகின்றன; சென்னை போன்ற வளர்ந்த நகரங்களில் சாதியெல்லாம் யாரும் பார்ப்பதில்லை; எல்லோரும் சமமாகத்தான் வாழ்கிறார்கள் என்று சொல்கின்றனர், எழுதுகின்றனர். ஆனால் நான் சாதியத்தின் கோரமுகத்தை கண்டது அறிஜீவிகள் சொல்லும் நாகரிகம் வளர்ந்த சென்னையில் தான் ! ஒரு வகையில் நான் சென்னைக்கு நன்றிதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட கொடுமையை எனக்கு சென்னை அறிமுகபடுத்தாமல் இருந்திருந்தால் நானும் ஒரு சுயசாதி பற்றாளனாகவே இருந்திருப்பேன். அதனால் நானும் இச்சமூகத்திற்கு பரிகாரமில்லா பாவத்தை அல்லது தீங்கை செய்தவனாகவே இருந்திருப்பேன்.
பள்ளி இறுதி ஆண்டு படிப்பு முடிந்தது ! மேற்கொண்டு கல்லூரி படிக்க வசதி இல்லாத சூழல், அதனால் சென்னைக்கு ஓடி வரவேண்டிய நிலை, டீக்கடையில் க்ளாஸ் கழுவுவது, ஹோட்டலில் பென்ச் துடைப்பது, தட்டு கழுவது இப்படித்தான் சென்னையில் என் அறிமுகம் ! பிறகு தெரிந்தவர் மூலம் ஒரு எலெக்ட்ரிகல் கடையில் வேலைக்கு சேர்ந்து, அவங்க வீட்டிலே தங்கி வேலை செய்தேன்; அங்கயே தங்குவதால் சாப்பாடும் அங்கேதான். முதல்நாள் சாப்பிட அமர்ந்தேன்; அந்த வீட்டு சிறுவன் ஒரு சில்வர் தட்டை கொண்டுவந்து வைத்தான். நான் அந்த வீட்டுக்கு புதியவன் என்பதால் அமர்ந்தபடியே வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். "க்ரீச் என்ற சத்தம் கேட்டு திரும்பி தட்டை பார்க்கும் போது ஒரு அலுமினிய தட்டு இருந்தது !" எனக்குள் பெரிய குழப்பம். ஏன் என்றால் எனக்கு இதுவரை அப்படி எந்த அவமதிப்பும் நிகழ்ந்ததில்லை; சரி போகட்டும் என்று சாப்பிட்டு, கடைக்கு சென்றுவிட்டேன், இரவு திரும்பியவுடன் என்னிடம் தம்பி அந்த அறையில் தங்கி கொள் என்றார்கள். எனக்கு மிகுந்த சந்தோசம் ! இதுநாள்வரை ஓலைகுடிசையில் அம்மா, அப்பா, அக்கா என்று எல்லோரும் ஒரே இடத்தில் படுத்திருந்தவனுக்கு தனி அறை என்றால் சந்தோசம் வரத்தானே செய்யும், ஆர்வத்தோடு ஓடினேன். ஓடிய வேகத்தில் திரும்பவும் மொட்டைமாடிக்கு ஓடிவிட்டேன். ஒரே அழுகை; அழுது தீர்த்தேன் ! வீட்டில் சிலகாலம் சாப்பாட்டுக்கு வழியில்லாத நாளில் கூட நான் அழுததில்லை அன்று அழுதேன். அந்த அரை வாழிங்மெஷின் ரூம் . கழிவறையை விட கொஞ்சம் பெருசு. அங்கேதான் கிழிந்த துணிகள் எல்லாம் கிடந்தன.மறுநாள் அனைத்தையும் நானே சுத்தம் செய்தேன். அந்த வாழிங்மெஷினை வெளியே எடுத்து வைத்துவிடலாம் என்று நினைத்தால் மழையில் நனைந்தால் அது கெட்டுவிடுமாம் ! அதனால் உள்ளேயே இருக்கட்டும் பா... என்றார்கள்... 1 அடிக்கு 6 அடி அளவில் இரண்டு பென்ச் கொடுத்தார்கள். படுத்துக் கொள்ள; காலையில் நான் 9 மணிக்கு கடைக்கு சென்றுவிடுவேன் அப்போதெல்லாம் துணியை மெஷினில் போடலாம், ஆனால் அவர்கள் காலை 6 மணிக்கே வந்து போடுவார்கள்; இரவு 10 மணிவரை வேலை செய்த களைப்பில் அசந்து தூங்க நினைத்தால் முடியாது; இரவில் கொசுக் கடி தாங்காது; ஆகவே மொட்டை மாடிதான் என் படுக்கை அறையாக இருக்கும்; மழை நாள் என்றால் எம் பாடு திண்டாட்டமே; எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அங்கெ வேலை செய்ய எனக்கு என்ன தலைவிதியா? ஆம் ! தலைவிதி தான். வீட்டில் வறுமை என்ன செய்ய? என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன். சமாதனம் சொல்லிக்கொண்டேன் என்பதை விட எதிர்ப்பு மனநிலை இல்லை; அடிமைபுத்தி என்றுகூட சொல்லலாம். அங்கெ வேலை செய்த இரண்டு வருடம் கழித்து தான் வந்தது எனக்கு தன்மானம், சுயமரியாதை எல்லாம். அதுவும் கடைக்கு வரும் ஒரு கஸ்டமர் ஒருத்தர் அம்பேத்கர் புத்தகத்தை மறந்து விட்டுட்டு போய்ட்டார். போன் பண்ணி சொன்னேன்; அதற்க்கு அவர் நான் அடுத்த வாரம் தான் வருவேன் அப்போது வாங்கி கொள்கிறேன் என்று சொன்னதால் இரவில் அதை படித்தேன். அந்த வாஷிங்மெஷின் ரூம்ல தான் எனக்கு அம்பேத்கர் அறிமுகம். அடுத்த ஒருவாரத்தில் வீட்டிற்கு கேஸ் புக் பண்ண மறந்து விட்டேன் என்பதால் கடையில் வைத்து கஸ்டமர் இருக்கும் போதே திட்டினார்கள்; கோவம் பொத்துக்கொண்டு வந்தது; இனி என்னால் வேலைசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டு மறுநாள் காலையிலே வெளியேறினேன்.
.........இன்னமும் இருக்கு காத்திருங்கள்....
திங்கள், 17 டிசம்பர், 2012
புதிய தலைமுறையில் தவறிய கடிதம் !
புதிய தலைமுறை ஆசிரியர் அவர்களே வணக்கம் ! நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், விரும்புகிறேன். என் கடந்த கடித சந்திப்பில் கூறியது போல தங்களின் சமூக விழிப்புணர்வு பணியை பெரிதும் மதிக்கிறேன். அது மேலும் மேலும் செழுமையடைய வேண்டும் என்று விரும்புகிறேன். பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் வார இதழோ, அல்லது புலனாய்வு இதழோ வாங்கி பிரித்தவுடன் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண காட்சிகளும், சினிமா கிசுகிசுக்களும் நிறைந்து இருக்கும்; அதை எங்களின் அனுமதியே இல்லாமல் எங்கள் மூலையில் செலுத்தி ஆதிக்கம் செய்து கொண்டு இருந்தார்கள். அந்த ஆதிக்கத்தை உடைத்து, நடுப்பக்கம் என்பது நிர்வாணத்திற்கு அல்ல, நம்பிக்கையின் அஸ்திவாரம் என்று எங்களுக்கு நம்பிக்கை செலுத்தியவர் நீங்கள்; அந்த நடுப்பக்கத்தை ஆதரித்து தான் உங்களின் நடுநிலைக்கு நற்சான்றிதழ் கொடுத்தோம். அந்த நடுநிலை இவ்வளவு சீக்கிரம் சரிந்துவிடும் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.
டெங்கு காய்ச்சலைப் பற்றி பல்வேறு தரப்பு நாளிதழ், வார இதழ்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் மட்டும்தான் அச்சம் தவிர் என்றீர்; ஆனால் எங்கள் அச்சம் எல்லாம் உங்கள் குரல் யாருக்கானது என்பது தான் ! என்ன அச்சம் என்று குழம்புகிறீர்களா? " எங்களது பார்க்கவ குல (உடையார்) பெண்களுக்கு திருமாவளவன் தலைமையிலான பறையர் இன இளைஞர்களால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. அரியலூர், பெரம்பலூர்,கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் உடையார் இனப் பெண்களை பறையர் ஆண்கள் திட்டமிட்டு நாடகத் திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர். இவர்கள் அருந்ததியர் இனப் பெண்களை திருமணம் முடிப்பதில்லை !" இப்படிப்பட்ட சாதிய வன்மம் நிறைந்த, பிற்போக்குத்தனமான கருத்தை வெளியிட்டு இருப்பது யார் என்பது உங்களுக்கே தெரியும் இருந்தாலும் சொல்கிறேன், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன முதலாளியும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதிய தலைமுறை, தொலைகாட்சி, புதிய தலைமுறை வார இதழ், புதிய தலைமுறை கல்வி வார இதழ் முதலாளியுமான பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்கள் தான்.
தருமபுரி கலவரத்தை விமர்சித்து காதல் திருமணம் மட்டும் தான் பிரச்சனையா? என்று தலைப்பிட்டு பல்வேறு தரப்பினரின் கருத்தை பதிவு செய்த, புதிய தலைமுறை நடுநிலை நாளேட்டுக்கு நன்றி !. ஆனால் அதேவேளையில் டிசம்பர் 2 ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் 48 லெட்டர் பேட் சாதி சங்கங்களின் கூட்டத்தை கண்டிக்க மனமில்லையோ என்றுதான் தோன்றுகிறது. தருமபுரி கலவரம் கண்டிக்க கூடியது தான், ஆனால் அதேவேளையில் இந்த தலித்துகளுக்கு எதிரான அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களின் ஒருங்கிணைப்பு இன்னும் ஆயிரம் தருபுரிகளை உருவாக்க காத்திருக்கிறது என்பதை உணரவில்லையா? உணர்ந்து நமக்கென்ன என்று இருந்து விட்டீர்களா? இது சாதிப் பாசமா? இல்லை முதலாளி விசுவாசமா? என்பதை புதிய தலைமுறை விளக்கும் என்று நம்புகிறேன். இதற்க்கு ஆசிரியர் அவர்கள் பதில் வைத்திருப்பார், புதிய தலைமுறை அரசியல் விமர்சன இதழ் அல்ல; சமூக விழிப்புணர்வு இதழ் என்று!
சாதிய வன்முறைகளை கண்டிக்காமல், சாதியத்தை எதிர்க்காமல், சாதியத்தை வேரறுக்காமல் வேறு எந்த சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதை தாங்களே அறிவீர்கள். வெறும் 19 சதவிகிதம் மட்டுமே உள்ள தலித்துகளுக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள 81 சதவிகிதம் சாதி இந்துக்களை ஏவி விடுவது என்பது எவ்வளவுப் பெரிய கொடூரம்! எவ்வளவுப் பெரிய ஆபத்து!! எவ்வளவுப் பெரிய அநியாயம் !! என்பதும் தாங்கள் அறிந்ததே ! ஒருவேளை அந்த கூட்டத்திலே திரு.பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் புதிய தலைமுறை தம் வாளை சுழற்றி இருக்குமோ என்னவோ?
ஒரு தனி நபரின் அல்லது ஒரு இயக்கத்தின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை தாங்கி பிடிக்க இரண்டு யுக்திகளை கையாளலாம்; ஒன்று அவர்களின் செயல்பாடுகளை ஆதரித்துப் பேசுவது, அதைதான் சன் நியூஸ், கலைஞர் நியூஸ், ஜெயா டிவி, கேப்டன் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்கள் செய்கின்றன. மற்றொன்று அவர்களின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் அமைதி காத்துகொண்டே, அவர்களை தவிர மற்ற அனைவரையும் விமர்சித்து பிரச்சாரம் செய்வது இரண்டாமாவதை தான் புதிய தலைமுறை செய்கிறது. முதலாமாவது எல்லோரையும் முகம் சுளிக்க வைக்கும்; இரண்டாமாவது செயல் தந்திரம் என்று சொல்லலாம்.முதலாமாவது முகம் சுளிக்க வைத்தாலும் மக்களை அது எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை; நம்புகிறவர்கள் நம்பலாம்; இல்லை என்றால் தவிர்த்து விடலாம்! ஆனால் இரண்டாமாவது நம்பிக்கை துரோகம்!
பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் என்கிற அவர்கள் இதற்க்கு முன்பு கூட, அதாவது புதுக்கோட்டை இடைத்தேர்தல் நேரத்தில் விருத்தாசலத்தில் பார்க்கவ குலத்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டையில் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பாரிவேந்தர் என்று பெயர் வைத்ததற்காக கொதித்தெழுந்த புதிய தலைமுறைக்கு இதை கண்டிக்க மனமில்லை ஏனோ? அம்பேத்கர் கார்டூன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பியதற்கு அய்யய்யோ கருத்துரிமையின் குரல்வளையை திருகுகிரார்களே என்று கோபம் கொந்தளிக்க தலையங்கம் தீட்டிய புதியதலைமுறைக்கு தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டித்து தலையங்கம் தீட்ட மனமில்லை? அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதித்தவுடன் ஆஹா மகிழ்ச்சி! என்று வரவேற்று தலையங்கம் தீட்டிய புதிய தலைமுறைக்கு, தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டித்து தலையங்கம் தீட்ட மனமில்லை? 1.5 லட்சம் தமிழர்களை கன்று குவித்த இனக்குற்றவாளி ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து லயோலா அருகே அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்க முடிந்த புதிய தலைமுறைக்கு, தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டிக்க மனம் வரவில்லை?
என் நண்பன் என்னிடம் அடிக்கடி சொல்வார் " நீ வெளி உலகத்தை பார்க்க ஆசைபட்டால் முதலில் உன் வீட்டு அறையை முழுதும் சுற்றி பார்த்துவிட்டு பிறகு ஜன்னல், கதவுகளை திற" என்று. அதையே இன்று நான் புதிய தலைமுறைக்கும் சொல்கிறேன். கடைசியாக தோழர் இளந்தமிழன் அவர்கள், கொள்கைவீரர் கலைஞர் அவர்களுக்கு என்று தலைப்பிட்டு தபாலில் தவறிய கடிதம் எழுதி "காகித பூ நாடகமா? இல்லை இதுதான் உண்மையா?" என்று கேள்வியை எழுப்பி இருந்தார். அதையே இன்று உங்களிடம் நானும் கேட்கிறேன், உங்களின் நடுப்பக்கம் தான் உண்மையா? இல்ல இந்த மௌனம் தான் உண்மையா? உங்களின் நடுப்பக்கம் யாருக்கானது? இளைய தலைமுறையான நாளைய தமிழகத்திற்கா? இல்லை புதிய தலைமுறையின் உரிமையாளர் திரு. பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்களுக்கா? பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்களை ஏன் விமர்சிக்கவில்லை என்று மற்ற பத்திரிக்கைகளை நான் கேட்கவில்லை; உங்களை மட்டும் தான் கேட்கிறேன் ! ஏன்னா நீங்கதான் நடுநிலை சமூக விழிப்புணர்வு வார இதழாச்சே !!!
அன்புடன்...
அங்கனூர் தமிழன்வேலு
வெள்ளி, 14 டிசம்பர், 2012
திருந்தி வாருங்கள் ! திரும்பி வாருங்கள் !
நாற்ப்பத்தெட்டு சாதியினர்
மருத்துவர் அய்யா
தலைமையேற்று ஓரணியில்!
அய்யா ...நாற்ப்பதொன்பதாய்
நாங்களும் வருகிறோம் !
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்
மீனவனின் உயிருக்கு உத்திரவாதம்
இல்லையாம்; பாதுகாக்க வேண்டிய
இந்திய அரசுக்கு, அவர்கள் மீது
அக்கறை இல்லை; பாதுகாப்புக்கு
செல்வோம் வருவீர்களா?
காந்தல் மலராய் கருகிப்
போன நம் ஈழ சொந்தங்களின்
கண்ணீரைத் துடைக்க, ஐ.நா.
வின் மௌன கதவை தட்ட
மத்திய அரசுக்கு நெருக்குதல்
கொடுப்போம் வருவீர்களா?
முல்லைப் பெரியாரை
உடைக்கப் போகிறார்களாம்;
பாதுகாக்க வேண்டிய மத்திய
அரசோ, ராணுவப்
பாதுகாப்பு தாராதாம்;
வாருங்கள் பாதுகாக்க
படை எடுப்போம் வருவீர்களா?
பாலாற்றின் குறுக்கே அணை
கட்டப் போகிறார்களாம்;
அணை கட்டிவிட்டால் அழிவு
நமக்குத்தானே ! வாருங்கள்
அணை கட்ட கூடாது என்று
ஒன்றிணைவோம் வருவீர்களா?
காவிரியை எதிர்பார்த்து
கண்ணீர் மட்டுமே மிச்சமாய்
இருக்கும் நம் விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்க,
காவிரியில் இருந்து நீர் எடுக்க
நடைபயணம் செல்வோம்
வருவீர்களா?
இப்படி ஒவ்வோர் நாளும்
உத்திரவாதமற்ற வாழ்வை
தமிழர்கள் வாழும் வேளையில்
எங்களுக்கு எதிராய் முண்டாசு
கட்டுகிறீரே நியாயமா?
எங்களை தனிமைப் படுத்துவது
உங்களைத் தனிமைப்படுத்துவதற்கு
சமமய்யா ! திருந்தி வாருங்கள் !
திரும்பி வாருங்கள் !
நாம் காண வேண்டிய களம்
நூறாயிரம் !
- அங்கனூர் தமிழன்வேலு
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்
மீனவனின் உயிருக்கு உத்திரவாதம்
இல்லையாம்; பாதுகாக்க வேண்டிய
இந்திய அரசுக்கு, அவர்கள் மீது
அக்கறை இல்லை; பாதுகாப்புக்கு
செல்வோம் வருவீர்களா?
காந்தல் மலராய் கருகிப்
போன நம் ஈழ சொந்தங்களின்
கண்ணீரைத் துடைக்க, ஐ.நா.
வின் மௌன கதவை தட்ட
மத்திய அரசுக்கு நெருக்குதல்
கொடுப்போம் வருவீர்களா?
முல்லைப் பெரியாரை
உடைக்கப் போகிறார்களாம்;
பாதுகாக்க வேண்டிய மத்திய
அரசோ, ராணுவப்
பாதுகாப்பு தாராதாம்;
வாருங்கள் பாதுகாக்க
படை எடுப்போம் வருவீர்களா?
பாலாற்றின் குறுக்கே அணை
கட்டப் போகிறார்களாம்;
அணை கட்டிவிட்டால் அழிவு
நமக்குத்தானே ! வாருங்கள்
அணை கட்ட கூடாது என்று
ஒன்றிணைவோம் வருவீர்களா?
காவிரியை எதிர்பார்த்து
கண்ணீர் மட்டுமே மிச்சமாய்
இருக்கும் நம் விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்க,
காவிரியில் இருந்து நீர் எடுக்க
நடைபயணம் செல்வோம்
வருவீர்களா?
இப்படி ஒவ்வோர் நாளும்
உத்திரவாதமற்ற வாழ்வை
தமிழர்கள் வாழும் வேளையில்
எங்களுக்கு எதிராய் முண்டாசு
கட்டுகிறீரே நியாயமா?
எங்களை தனிமைப் படுத்துவது
உங்களைத் தனிமைப்படுத்துவதற்கு
சமமய்யா ! திருந்தி வாருங்கள் !
திரும்பி வாருங்கள் !
நாம் காண வேண்டிய களம்
நூறாயிரம் !
- அங்கனூர் தமிழன்வேலு
வியாழன், 13 டிசம்பர், 2012
சமூகத்தின் குரலாய் வீரமங்கை !
குரலற்றவள் தான்
மங்கம்மாள்; ஒட்டுமொத்த
எம் சமூகத்தின் குரலாய்
ஓங்கி ஒலித்திருக்கிறாள் !
தான் விரும்பியதை
விரும்பியபடியே
வினவ முடியாதவள்
தான் மங்கம்மாள்;
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
கொஞ்சம் கூட கூச்சமின்றி
கொளுத்தப்படும் சேரிகளுக்காக
கொதித்து எழுந்திருக்கிறாள் !
வாய்ப் பேச முடியா
மாற்றுத் திறனாளி தான்
மங்கம்மாள்; ஆனால்
மாற்றமே நிலையான
இப்பூவுலகில், மாறாத
கொடுமையாய் எரியும்
ஏழைக் குடிசைககளை
கண்டு கோபம் கொண்டிருக்கிறாள் !
ஊமையின் குரலாய்
ஓங்கி ஒலிக்கிறாள்
மங்கம்மாள்; செவுட்டுத்
தமிழகம் நட்சத்திர
கொண்டாட்டத்தில்
மிதக்குது ; நாயக
பிறந்தநாளை போட்டிப்
போட்டு கொண்டாடுது;
அரிதாரம் பூசியவருக்கு
இன்று தலைப்பு செய்தி;
அநியாயம் கண்டு துடித்த
போராளி மங்கம்மாவுக்கு
கடைசிப்பக்கத்தில் பெட்டி செய்தி !
இதை விட வெட்கம்
உண்டா? இதை விட
கேடு உண்டா?
வீரமங்கை மங்கம்மாவே...
மன்னித்துக் கொள்வாயாக !
அநியாயம் கண்டும் வாய்
பேசா மடந்தைகளும்,
அலறித் துடித்தாலும் காதில்
வாங்கா செவிடர்களும்
நிறைந்த ஊனமுற்றவர்கள்
இங்கே பலர்; அவர்களை
விடுத்து ஊமையின்
குரலாய் ஓங்கி ஒலித்த
உம்மை ஊனமுற்றவள்
என்று அழைத்தமைக்கு !
வீரவணக்கம் சொல்லுகிறேன்
உந்தன் விழித்திரையில்
விழித்துக் கொள்ளட்டும்
எம் சமூகம்; மௌன
குரலாய் ஓங்கி ஒலித்த
உம் பறை முழக்கம்
இந்த மௌன தமிழகத்தை
தட்டி எழுப்பட்டும்!
------------------------
வீரவணக்கத்துடன்
அங்கனூர் தமிழன் வேலு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






