சனி, 21 ஜூலை, 2012

சமகால திராவிடம் இந்துமயமாகிவிட்டதா?


திராவிடம் - தீண்டாமைக்கு எதிரான தீச்சட்டி !
திராவிடம் - சாதியக் கொடுமைகளுக்கு எதிரான சம்மட்டி !!
திராவிடம் - பெண்ணுரிமையை பேணிக்காக்கும் பேராயுதம்  !!!
திராவிடம் -  சுயமரியாதையின் சுடர் ஒளி
திராவிடம் - தமிழ்த் தேசியத்தின் தாயகம்

என்ற வீரிய மூர்க்கத்தனமான முழக்கத்துடன் பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு வேர்விட்ட திராவிடத்தை, இன்று தன் விழுதுகளை விடலைப்  பிஞ்சுகள் எல்லாம் கேள்விக்கேட்கும் அளவில் 'திராவிடக் கட்சிகள்' என்று சொல்லிக் கொண்டு ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகள் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களா?

ஆரியத்துக்கு எதிர்க்கருத்து பவுத்தம் என்று அயோத்திதாசர் முழங்கியதாக திருமாவளவன் குறிப்பிடுகிறார். அந்த ஆதிபவுத்தத்தின் நீட்சியாகத்தான் நாம் திராவிடத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்துத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்ததால் தான் பவுத்தம் இந்துமயமாக்கப்பட்டது. இந்துத்துவத்தை வேரறுக்க நினைத்ததால் தான் சமணம் சாய்க்கப்பட்டது. அந்த இந்துத்துவத்தை ஏற்க மறுத்ததால் தான் ஆதித்தமிழர்கள் இன்று சேரி என்ற சிறைச்சாலையில் வாடுகிறார்கள். அந்த இந்துத்துவத்தை வீழ்த்த நினைப்பதால் தான் இன்று இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். இதற்கெல்லாம் இந்த ஓட்டு பொறுக்கி கட்சித் தலைவர்கள் என்ன மாதிரியான எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்?

இதற்க்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆரியத்தின் நேர் எதிரியான திராவிடத்தலைமையை ஆரியத் தலைமை எப்படி கைப்பற்றியது? ஆரிய எதிர்ப்பு என்பது எதிலிருந்து பார்க்க வேண்டும்? ஜெயலலிதா எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு ஆகுமா? சமகாலத்தில் இந்தக் கட்சிகள் எதை நோக்கி நகர்கின்றன? இவை உண்மையில் திராவிடக் கட்சிகள்தானா? இந்துத்துவத்தை வேரறுக்க நாம் எப்படிப்பட்ட ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை காணாமல் திராவிடத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு எப்படி கொடையாக அளிக்க முடியும்?

1. மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வரும் அளவுக்கு தீவிர இந்து பற்றாளரான  எம்.ஜி.ஆர் ஒருமுறை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது இந்து என்று குறிப்பிடாமல் திராவிடன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே எம்.ஜி.ஆர் தான் மவுண்ட் ரோடு பொதுக்கூட்டத்தில் பேசும்போது முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும் வரை, இந்துக்களுக்கு இந்து முன்னணி இருக்கும் என்று பேசி இருக்கிறார். முஸ்லிம் லீகின் நோக்கமும், இந்து முன்னணியின் நோக்கமும் ஒன்றா? இந்து முன்னணியைச் சேர்ந்த ராமகோபாலான் எந்த சேரிக்காவது சென்று ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளாரா? ஆக எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிடன் என்று குறிப்பிட்டதை அவர் மற்ற மதத்தவரின் ஓட்டுக்களை குறிவைத்தே குறிப்பிட்டுள்ளார் என்று ச‌ந்தேகிக்க‌த் தோன்றுகிற‌து.

2. இந்தியா என்ற பல்வேறு இன‌ மக்களைக் கொண்ட நாட்டின் நலனுக்கு நிச்சயம் ஊறு விளைவிக்கும் கொள்கைகளைக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு தான் பி.ஜே.பி . அந்த பி.ஜே.பி யுடன் 2001ஆம் ஆண்டில் தி.மு.க கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்தித்தது. தி.க, ஆரியத்தின் புதிய கிளையாக உருமாற்றம் பெற்றிருக்கும் அ.தி.மு.க. வை ஆதரித்தது. இந்த நிலை எப்படி வந்தது? நிச்சயம் பெரியார் இருந்திருப்பாரேயானால் இருவரையும் தன் தடியாலே அடித்து இருப்பார். தேர்தல் அரசியலில் சமரசம் என்பது தேவையான ஆயுதமாக இருந்தாலும் தன் உயிர்மூச்சுக் கொள்கையை கொல்லைப்புறத்தில் வைத்துவிட்டு கூட்டணி காண்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதால் தான் கட்டாய மதமாற்ற தடை சட்டம் எனும் கட்டாய இந்துமயமாக்கல் சட்டத்தை அறிமுகம் செய்தார் ஜெயலலிதா. பசுவதை தடைச் சட்டம் எனும் பெயரில் வழிபாட்டு உரிமைகளை வதை செய்தார். பி.ஜே.பி ஆளும் குஜராத்தில் கூட கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இல்லையே? தமிழ்நாட்டில் அதற்கு என்ன அவசியம் வந்தது? பூரண இந்துத்துவ கட்சியாகவே தன் செயல்பாட்டின் மூலம் அறிவித்துக் கொண்டார் ஜெயலலிதா. சங்கராச்சாரியாரின் ஆலோசனைப்படி ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திமுக இந்துத்துவ தலைமையை தாங்கிப் பிடித்தன. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தின் தான் திண்ணியம் கொடுமை அரங்கேறியது. தாழ்த்தப்பட்ட கருப்பையா என்ற விவசாயி ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும் அவரது கணவர் வாத்தியார் சுப்பிரமணினையும்  ஊரார் முன் அந்த விவசாயி அம்பலப்படுத்தியதால் அவர் வாயில் மலத்தை திணித்து ஆதிக்கசாதிகள் கொடுமை செய்தன. ஒருவாரகாலம் அந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருந்தது. விடுதலை சிறுத்தைகள் தலையிட்டு அதை வெளிச்சம் போட்டுக் காட்டினர். அதன் பிறகு அந்த வாத்தியார் கைது செய்யப்பட்டார். பின் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். அதைப் பற்றி ஒரு வரி கூட சட்டமன்றத்தில் பேசவில்லை என்று திருமாவளவன் தன்னுடைய அத்துமீறு நூலில் பதிவு செய்துள்ளார். சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று அழைக்கவா? இல்லை இதய தெய்வம் என்று அழைக்க வேண்டுமா என்று விவாதம் நடந்ததாகவும், அதனால் அந்த அவையில் என்னால் குந்தியிருக்க முடியாமல் வெளிநடப்பு செய்தேன் என்று மனம் நொந்து எழுதி இருந்தார். ஆனால் கருணாநிதிக்கு  அதைக்கண்டித்து அரசியல் செய்யக்கூட மனம் வரவில்லை. ஏன் அதைக் கண்டிக்கக்கூட‌ அவர் முன்வரவில்லை?

3. பாப்பாபட்டி, கீரிப்பட்டி இந்திய ஜனநாயகத்துக்கே சவால் விடப்பட்ட ஒரு கேவலமான வரலாறு. அந்த சாதி வெறியாட்டத்தில் களப்பலியான சாதி ஒழிப்பு போராளி மேலவளவு முருகேசனை திமுக, அதிமுக, மதிமுக இவை எவையாவது நினைவு கூறுகின்றனவா? வாச்சாத்தி பெண்கள் பாலியல் கொடுமை, கோயம்புத்தூரில் தலித் ஒருவர் வாயில் ஆதிக்க சாதியினர் சிறுநீர் கழித்தது. பரமக்குடி கலவரம், விழுப்புரம் வானூரில் தொழிலாளியின் வாயில் மலம் திணித்தது, விழுப்புரம் அரசு அதிகாரிகள் பழங்குடியின பெண்கள் பாலியல் கொடுமை, காவல் துறை படுகொலைகள் என்று ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் எண்ணிலடங்கா இந்துத்துவ வெறியாட்டங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால் அதை எதிர்த்து கருணாநிதி, "நான் நாடாண்டபோது இப்படிபட்ட கேவலங்கள் நடக்கவில்லை. இதோ பாரீர் ஜெயலலித்தா ஆட்சிக்காலத்தில் அவலங்கள் அரங்கேறுகின்றன" என்று கேவலம் அரசியல் கூட செய்ய மறுப்பதேன்? தம் கட்சிக்காரர்களின் கைதை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் கருணாநிதி, பரமக்குடி கலவரத்தை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கலாமே?

4. காவல்துறையின் தலித் விரோதப் போக்குக்கு அளவே இல்லை. தலித் வாலிபர்களை நள்ளிரவில் புகுந்து கைது செய்து சித்திரவதை செய்வது, தலித் பெண்களை நான்கு பேர் ஐந்து பேர் சேர்ந்து கற்பழிப்பது என்ற கொடுமைகள் அரங்கேறின. வந்தவாசி அருகே பொன்னூர், பெரம்பலூர் அருகே ஒகலூர், மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம், கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் குடியன்குடி இவை அனைத்துமே சேரிகள். ஒரு பாப்பனர் வீட்டிலோ, கவுண்டர் வீட்டிலோ, தேவர் வீட்டிலோ, காவல் துறை அத்துமீறி நுழைந்துவிடுமா? திண்ணியத்தில் நடந்த கொடுமையைக் கண்டித்திருந்தால் அடுத்து அடுத்து நடந்திருக்குமா? ஏன் கருணாநிதிக்கு மனம் வரவில்லை? ஏன் வைகோவுக்கு மனம் வரவில்லை? சேரிக்கு ஆதரவாக ஒருதுளி பேனா மையைக்கூட சிந்த மனம் இல்லையே?

இன்று மேடை தோறும் முழங்குகிறார்கள், மெட்டுக்கட்டிப் பாடுகிறார்கள் 'திராவிட வரலாறு நூற்றாண்டை கடந்து விட்டது என்று. இப்படி பழங்கால வரலாறுகளை பேசிப் பேசியே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே துடிக்கிறார்களே? ஏன் இதற்கு மேலும் வரலாறுகள் படைக்கப் போவதில்லையா? இன்று நாம் திராவிட வரலாறுகளை திரும்பி பார்ப்போமானால் அதில் அளப்பரிய தியாகமும், களப் பலியும், ரத்தக்கறையும் படிந்து நிற்கும்; நெஞ்சம் பூரித்துப் போகும். ஆனால் இன்னும் நூறாண்டுகள் கழித்து திரும்பிப் பார்ப்போமானால் அதில் துரோகமும், சூழ்ச்சியும், சூதும், பதவி மோகமுமே நிறைந்து அவ லட்சணமாக நிற்கும். பெரியாரின் மறைவுக்குப் பின்னர் திராவிடத்தின் சாதி ஒழிப்பு, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான‌ களப்பணி என்ன என்று பார்த்தால்  பூதக்கண்ணாடியை  வைத்துதான் தேடவேண்டும். இப்படி எல்லாம் திராவிடத்தை சரித்து விடவா மூத்திரப் பையுடன் சூத்திர வேதங்களைக் கண்டித்தார் தந்தை பெரியார். நெஞ்சம் உறுத்தவில்லையா? கருணாநிதியைப் பொருத்தமட்டில் ஜெயலலிதா எதிர்ப்பே ஆரிய எதிர்ப்பாகி விட்டது. கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகமோ தி.மு.க வின் அறிவிக்கப்படாத தேர்தல் பணிக்குழுவாகவே செயல்படுகிறது.வைகோவுக்கே ஜெயலலிதா, இல்லை கருணாநிதி. அதுவும் இல்லை என்றால் பா.ஜா.க செல்லும் இடத்திற்கு சென்றுவிடுவார். தற்போது கூட பா.ஜ.கா.வோடு கூட்டணி காய் நகர்த்துவதாகத்தான் தெரிகிறது. 

3. கருணாநிதி, நான் தாழ்த்தப்பட்ட மக்களின் சம்ம‌ந்தி என்று சொல்வார். அதை அவர் எந்த அர்த்தத்தில் சொல்கிறாரோ தெரியாது. ஆனால் அவர் கூற்றின் நோக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் கேவலமானவர்கள், அவர்களுக்கே நான் சம்மந்தி என்று சொல்லி தான் பெருந்தன்மையைக் காட்ட முன்வருகிராரோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. 1937 என்று நினைக்கிறேன் ஆண்டு சரியாக‌ நினைவில்லை, திராவிடர் கழகத்திற்கு இலட்சினை உருவாக்கப்பட்டபோது வட்டவடிவில் கருமை நிற வண்ணம் பூசி விட்டு சிகப்பு வண்ணம் பூச இருந்த வேளையில் யாரும் எதிர்பாராத வேளையில் தன் கையைக் கிழித்து ரத்தத்தைக் கொடுத்த கருணாநிதியின் கொள்கை வெறி என்னவானது?


சமகால திராவிடத்தை பொருத்தமட்டில் எனக்கு ஒரு ஐயம் உண்டு. ஆரிய எதிர்ப்பு என்பது வெறும் பார்ப்பன‌ எதிர்ப்பு மட்டும் தானா? இதை திருமாவளவன் தன்னுடைய இந்துத்துவத்தை வேரறுப்போம் என்ற நூலில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பார்ப்பானியம் என்பது பார்ப்பனர்கள் வசிக்கும் அல்லது அவர்கள் ஆளுமை செலுத்தும் வட்டாரங்களில் மட்டுமே உள்ளது. ஆனால் இந்துத்துவம் என்பது பார்ப்பனர்க‌ள் அல்லாத ஒவ்வொரு சாதி இந்துக்கள் வீட்டிலும் இருக்கிறது. எனவே பார்ப்பனியத்தையும், இந்துத்துவத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனியம் கொடுமையானது ! இந்துத்துவம் பயங்கரமானது!!. தமிழ் பேசும் வன்னியர் எப்படி சாதி இந்துப் பட்டியலில் வந்தான்? தமிழ் பேசக்கூடிய பறையன் எப்படி சாதி இந்துப் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப் பட்டான்? பதவி பரிசுகளுக்காக இந்துத்துவத்தை ஆதரித்த அல்லது ஏற்றுக் கொண்ட வன்னியர்கள், கவுண்டர்கள், முதலியார்கள், தேவர்கள் போன்றவர்கள் சாதி இந்துப் பட்டியலில் வந்தார்கள். எந்த காலத்திலும் இந்துத்துவத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம், இந்துத்துவத்தை வேரறுப்போம் என்று முழங்கிய பறையர், சக்கிலியர், அருந்ததியர் போன்றவர்கள்  சேரிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடம் என்பதைப் பேசிப் பேசி, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் வந்துவிட்டன‌. இன்னமும் தலித் பொது சாலையில் நடக்க முடியவில்லை. இன்னமும் இரட்டைக் குவளை முறை இருக்கிறது. இன்னமும் தலித் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இன்னமும் தீண்டாமைக் கொடுமை இருக்கிறது. இன்னமும் ஆதிக்கசாதிகள் தலித்துகள் வாயில் சிறுநீரையும், மலத்தையும் கழிக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய அல்லது கண்டிக்க வேண்டிய கடமை இந்த கட்சிகளுக்கு இல்லையா? தலித் விவகாரத்தில் மட்டும் ஏன் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரு கோட்டில் நிற்கிறார்கள்? இதற்கெல்லாம் ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள் ஜெயலலிதா திராவிடரே கிடையாது என்று. பின் ஏன் இந்தக் கட்சிகளை திராவிடக் கட்சிகள் என்கிறோம்? இந்தக் கட்சிகள் இந்துமயமாகிவிட்டன. இவை திராவிடக் கட்சிகள் கிடையாது.

திராவிடப் போர்வையில் உள்ள ஆரியக் கட்சிகளை விரட்டுவோம்!! இல்லையென்றால் சாதித் தமிழர்களுக்கு எதிராக போராடும்  தலித் வாலிபர்கள், தலித் மக்கள் இந்த போலிகளை எதிர்த்துப் போராடவும் தயங்கமாட்டார்கள் !!!


(உதவிய நூல்கள்: திருமாவளவனின் அத்துமீறு, இந்துத்துவத்தை வேரறுப்போம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக