வெள்ளி, 20 ஜூலை, 2012

சிறுத்தைகள் நடத்தும் "தக" "தக" தங்க வேட்டை !



சூலை 11 மடிப்பாக்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது ! ஆங்காங்கே விளம்பர பேனர்கள், விடுதலை சிறுத்தைகளின் கட்சிக்கொடி, வாழைமரம், என்று அமக்கலப்பட்டிருந்தது, கட்சிக்கொடி செல்லும் திசையை நோக்கி வண்டியை விட்டேன். அது கணேசு மகாலை அடைந்தது. அங்கே திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாட சிறுத்தைகள் மிக உற்ச்சாகத்துடன் காத்திருந்தனர். அங்கே திருமாவளவனுக்கு 500 கிராம் பொற்காசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரபரப்பாய் நின்ற கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தகடூர் தமிழ்செல்வன், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்த மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் ஆகியோருடன் சில கேள்விகளை முன்வைத்தேன்...       

போராளித்தலைவரின் பொன்விழா நோக்கி பொற்காசுகள் வழங்கும் விழா என்று விளம்பரம் செய்து உள்ளீர்கள் அதற்க்கு என்ன காரணம்?
வன்னி அரசு : 
நெருப்பைக் கடப்பது எளிது !
பொறுப்பாய் நடப்பது கடிது !
புயலைக் கொண்டுவருவது எளிது !
மக்களை அமைப்பாக்குவது கடிது !
எது கடிதோ, எது முடியாதோ
அதை நிகழ்த்துதல்தான் புரட்சி !!

புது பக்கெட் வாங்கி பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது, புது செருப்பை போட்டுக் கொண்டு பொது சாலையில் நடக்க முடியாது,  சைக்கிளில் செல்ல முடியாது, நல்ல பெயர் வைக்க முடியாது நல்ல சோறு சாப்பிட முடியாது, கை நிறைய காசு இருந்தும், கொட்டாங்குச்சியில்தான் தேநீர், அது ஒரு காலம் அது நீலத் துண்டுகளின் காலம், அது மனுக்கொடுக்கும் காலம், அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது

அடங்க மறு ! அத்து மீறு !! திமிறி எழு ! திருப்பி அடி !! இந்த நான்கு வார்த்தை திருக்குறளே பொதுப் பாதையைத் திறந்து விட்டது, பொதுக் கிணற்றை உடைத்து சேரிப்பக்கம் மடை மாற்றியது, தேநீர்க் கடைகளெல்லாம் அதிர்ந்தன, தனிக் குவளைகள் உடைந்தன. 

இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
இந்தப் புரட்சியை நடத்திக் காட்டியது யார்? 
எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் சமரசமில்லாமல், கொண்ட கொள்கையில் உறுதியாக போராடி வருகிறார். அதனால் தான் அவரை போராளிதலைவர் என்று அழைக்கிறோம் 

அவரின் உழைப்பை மக்கள் போற்றுதல் தானே சிறப்பாக இருக்க முடியும்? நீங்களே செய்துக் கொண்டால் அது தற்பெருமையாக இருக்காதா?

வன்னி அரசு : நாங்களும் மக்கள் தானே, நெல்லை விதைத்தால், நெல்லைத்தான் தரும் வயல், வானம் பார்த்த பூமியானாலும், கம்மங் கதிர்களும் வரகு கதிர்களும், காத்துக்கிடக்கின்றன விவசாயிகள் வருகைக்காய், முளைப்பாரித் திருவிழாவும் பெரிசுகளின் கும்மியாட்டமும், வயலுக்கும் வீட்டுக்குமாய், தானியங்கள் குவிந்து கிடக்கும்.

அந்த விவசாயிக்குத் தெரியும் நிலம் என்னுடையது பயிர் என்னுடையது உழைப்பு என்னுடையது இலாபமும் என்னுடையது, அந்த விவசாயிக்குத் தெரியும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ்தான்  வெள்ளாமையைப் பெருக்க முடியும் என்று...

பொன்விழாக் காணும் போராளித் தலைவரை...
காலம் முன்மொழிகிறது ! அர்ப்பணிப்பு வழிமொழிகிறது !!

இப்போது சொல்லுங்கள்
இந்த அமைப்பு என்னுடையது ! இந்த கோட்பாடுகள் என்னுடையவை !
இந்த அமைப்பின் அனைத்தும் எனக்கே எனக்கு !

நாங்களே  கொட்டுவோம் தங்கக் காசுகளை !
நாங்களே கட்டுவோம் வலிமையான அமைப்பை !
தொடர்ந்து நடத்துவோம்  தக தக தங்க வேட்டையை...  

கடந்த இரண்டு வருடமாக உங்கள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தீர்கள், இப்போது மட்டும் ஏன் கொண்டாடுகிறீர்கள்? 

மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் : இன்றைக்கு எங்கள் தலைவரை  பற்றி பல செய்திகள் போலி தமிழ் தேசியவாதிகள், சாதிய வாதிகள், இன்றும் பலர் பல பொய் செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.அதை பலரும் நம்புகிறார்கள், பலர் புறம தள்ளுகிறார்கள்.இந்த சூல்நிலையில் தலைவரின் 50 வது பொன்விழா கூட்டம் தலைமை நிர்வாகிகள் நடத்தினோம் . தலைவர் உடனே எனக்கு பிறந்த நாள் விழா வேண்டாம் என்று இரண்டு மூன்று முறை நடக்க இருந்த கூட்டத்தை தடை செய்து விட்டார். நாட்கள் நெருங்கி கொண்டே இருந்தது பிறகு சில தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி பேசி தலைவரை சந்திப்பது என்று முடிவு செய்து சந்தித்தோம். அப்போது தமிழ்நாடு முழுவதும் தம்பிகள் ஆகத்து 17 மாநாடு எங்கே எப்போது என்று கேட்கிறார்கள்.ஆகவே உடன் தகவல் சொல்ல வேண்டும் சொல்லுங்கள் என்று நிர்பந்தம் செய்தோம் அப்படியும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் விடவில்லை நான்கு மணி நேரம் மேல் போராடிய பிறகு சம்மதம் சொல்லும் வகையில் சரி நமது கட்சிக்கு என்று ஊடக பலம் ஏற்ப்படுத்த வேண்டும். அதற்கு நிதி தேவைப்படுகிறது ஆக ஊடகம் அமைக்க என் பிறந்த நாளை பயன்படுத்துங்கள் என்று சொல்லி சம்மதம் தெரிவித்தார். அதன் பின் எப்படி அதை நடைமுறை படுத்துவது நாட்கள் குறைவாக இருக்கிறதே என்று தயங்கினோம். பிறகு அவரே சொன்னார் ஆகத்து 17 வேண்டாம் இந்த ஆண்டின் கடைசியில் நடத்துங்கள் என்றார்.

  தேர்தல் தோல்வி, கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக உங்கள் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், யாருக்கும் பதவிகளே இல்லாத நிலையில்  எப்படி தங்கம் வசூலிப்பது சாத்தியமாகிறது?

மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் : எங்கள் தலைவரின் வளர்ப்பு, சிறுத்தைகளின் போராட்டக்குணம், எடுத்தக்கொண்ட லட்சியம் இவைதான் எங்களை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறது.   மாவட்டம் தோறும் பொன்விழா கூட்டம் நடத்தி அதன் மூலமாக நிதி திரட்டுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். உடனே நாங்கள் எப்போதும் போல ஒரு நிதி கமிட்டி,வரவேர்ப்பு கமிட்டி, விளம்பர கமிட்டி, என்று போட்டோம்.
நிதி கமிட்டியின் மூலம் நன்கொடை அடிப்பது என்று முடிவு செய்து தலைவரிடம் சென்றோம் . அப்பொழுது தலைவர் உடனே நிதி புத்தகம் அடிக்க வேண்டாம் நமது நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். அதில் இருந்து 50 பேரை மட்டும் முடிவு செய்து one person one savaran என்று அறிவித்து மாவட்டத்திற்கு 50 சவரன் கேளுங்கள் அதன் மூலம் நிதியை திரட்டினால் போதும் சுமார் 11 லட்சம் தான் வருகிறது.ஆக மாவட்டம் தோறும கூட்டம் நடத்துங்கள் அதன் மூலம் பெரிய தொகை கிடைக்கும் அதன் மூலம் வூடகம் அமைக்கலாம் என்றார் .ஆனால் 50 சவரன் என்றதும் பெரிய தொகை போல காட்சி தந்தது பலருக்கும், உடனே தலைவர் மற்றவர்களுக்கு முன் உதாரானமாய் முதலில் தலைமை நிர்வாகிகள் நடத்துங்கள் பிறகு அதை கிழே கொண்டு செல்லுங்கள் அப்போது தான் அது வெற்றியடையும் என்று சொன்னார் உடனே நாங்கள் சென்னை T.nagar அந்த நிகழ்வை சிறப்பாக நடத்தினோம். கொடையரங்கம் தொடங்கியது தலைவர் உடனே வேகமாக மேடையேறி தன் கையில் வைத்திருந்த 10 சவரன் நகையை முகமது யூசப்பிடம் கொடுத்து எனது பெயரை அறிவியுங்கள் என்று சொன்னார். அடுத்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் நிதி தந்தார்கள் இதில் என்ன விசேசம் என்ன வென்றால் எல்லோரும் தலைவருக்கு தானே தங்கம் என்று நினைத்து கொண்டு இருக்கையில் தலைவரே தங்கம் கொடுத்தது வியப்பாக இருந்தது. அப்போது தலைவர் சொன்னார் லட்சகணக்கான சிறுத்தைகளில் நானும் ஒருவன் இந்த தங்கம் எனக்காக அல்ல இது முழுக்க முழுக்க உங்களுக்காக எனது காலத்திற்கு பிறகு இந்த கட்சி வலிமையோடு செயல்பட இந்த தங்கம்பயன்படபோகிறது ஆக என்னுடைய பங்கு பத்து சவரன் ஆக நானும் இந்த கட்சிக்கு 10 சவரன் தங்கம் கொடையளிதிருக்கிறேன் என்று சொன்ன போது அரங்கமே அதிர்ந்தது. அய்யா நல்லக்கண்ணு உட்பட மகிழ்ச்சி அடைத்தனர். இப்படி தான் இந்த நிகழ்வுக்கு அச்சாரம் நிகழ்த்தப்பட்டது. அதன் தாக்கம் அடுத்தபடியாக திருவள்ளூரில் தோழர்-பாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.அதன் பின் கடலூர் மாவட்டத்தில் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. அதன் பின் காஞ்சிபுரத்தில் சூ.க.விடுதலைசெழியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை எல்லாம் பார்த்த பின் என் மனதில் ஏன் நாம் நமது பகுதியில் நடத்த கூடாது என்று கேள்வி எழும்போது அது ஆசையாக உருவானது, பெரிய பணி எப்படியும் நாம் ஒருவர் மட்டும் செய்வது என்று தயக்கம் உண்டானது, ஆனாலும் தடைகளை உடைத்து நிகழ்வை நடத்த வேண்டும் என்ற ஆற்றலை தலைவர் திருமா சொல்லி தந்ததை போல என்னோடுஎன் மனம் அறிந்து தோழமையோடு பயணப்படும் வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன் துணையோடு நடத்துவது என்று முடிவு செய்து தலைவரிடம் தேதி சொல்லி வேலையை ஆரம்பித்தேன். ஆம் அந்த நிகழ்வை தமிழ்நாட்டில் இருக்கும் சிறுத்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்ற எண்ணம என்னக்குள் இருந்தது. அதற்காக முதலில் தொலைகாட்சி விளம்பரம் செய்வது என்று முடிவு செய்து அதை சிபிச்சந்தர் மூலம் நிறைவேற்றி தம்பி செந்திலின் மூலம் கலைஞர் TV, கலைஞர் செய்திகள்,பாலிமர் செய்தி தமிழன் TV என்று ஒளிபரப்பு செய்தோம் தோழர்களே தலைவரின் பொன்விழா செய்தி பட்டி தொட்டி முழுவதும் பரவியது.அதன் பின் விளம்பரம் போஸ்டர் வானவேடிக்கை என்று மடிப்பாக்கம் அதிரும் அளவுக்கு செய்ய முடிவு செய்து பணி செய்தோம். அதே போல கொடையரங்கதிர்க்கு யாரை சந்திப்பது என்று முடிவு செய்ய ஒரு பட்டியல் தயார் செய்தேன்.அதில் ஒரு 15 பேர் வந்தது, அதில் நான் சந்தித்தது 7 பேரை மட்டுமே அந்த 7 பேரில் 6 பேர் தலித் அல்லாத எனது நண்பர்கள், அவர்களிடம் நான் சென்று தகவலை சொன்னதும் சந்தோசமாக அந்த இனிமையான சுமையை தாங்க முன்வந்தார்கள் அதில் எனது நண்பர் G.K.ரவி யாதவ சமுகத்தை சேர்ந்தவர், திரு.முருகன் அவர்கள் முதலியார் சமுகத்தை சேர்ந்தவர், திரு. சீதாபதி நாடார் சமுகத்தை சேர்ந்தவர், திரு. K.G.பாண்டியன் தேவர் சமுகத்தை சேர்தந்தவர், திரு. திலிப் கேரள மாநிலத்தவர் இந்த தோழர்கள் மேடையேறி தலைவருக்கு மரியாதை செலுத்தி தங்களின் கொடைகளை இந்த கட்சிக்கு தந்தது கண் கொள்ளா காட்சி,இந்த நிகழ்ச்சி பலரின் மனதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது எனக்கும் மன நிறைவை தந்தது. நிகழ்ச்சியின் மூலம் எனக்கும் கொஞ்சம் பொருளாதார சிக்கல் ஏற்ப்பட்டது. அதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியின் வெற்றி என்னை மனம்நிரைவாக்கியது .நிகழ்ச்சி முடிந்து தலைவர் அவர்கள் என் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தி என் குடும்ப உருபினர்களோடு உரையாடி சுமார் இரண்டு மணி நேரம் எங்களோடு இருந்தது மிக மிக சந்தோசமான தருணம் அந்த சந்தோசம் இந்த நிகழ்ச்சி வேலை பளுவை இலகுவாக்கிவிட்டது. மடிப்பாக்கம் நிகழ்ச்சியின் மூலம் வந்த கொடையின் மூலம் கட்சிக்கு 3 கிலோ தங்கம் கிடைத்து இருக்கிறது என்ற செய்தி கட்சியின் அணைத்து சிறுத்தைகளுக்கும் சந்தோசம்ஏற்பட்டது .ஆம் சீக்கிரம் நமக்கான ஊடகம் கிடைத்துவிடும் நம்பபிக்கையில் இன்னும் வேகமாக பயணம் செய்கிறார்கள். இதோ வருகின்ற 25ம் தேதி வேலூரிலும்,1ம் தேதி போரூர் பகுதியிலும், வரும் 5ம் தேதி மகாபலிபுரதிலும் விழா நடத்த ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டு இருக்கின்றது.உடனே வூடகங்கள் திருமா ஏழை மக்களிடம் தங்கம் கேட்கிறார் மாயாவதியை போல என்று நஞ்சை விதைக்கிறார்கள் ஆனாலும் சிறுத்தைகள் தங்களின் தலைவன் வாக்கே வேத வாக்கு என்று தங்க தலைவனுக்கு தங்கத்தை அள்ளி தருகிறார்கள் ... 

உங்கள் தலைவரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்த பின்பு மாற்றம் ஏதேனும் நிகழ்ந்து உள்ளதா? 

மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் : ஒரு முறை நான் தலைவருடன் அங்கனுர் சென்றேன். தலைவர் வீட்டு வாசலில் நான் அமர்ந்து இருந்தேன்.அப்பொழுது தலைவரின் அம்மா பெரியம்மா என் அருகில் வந்து தரையில் அமர்ந்தார். நான் என்ன அம்மா எப்படி இருக்கிறிர்கள் என்று கேட்டேன் உடனே அம்மா வருத்தமாய் ஆரம்பித்தார்கள் இங்கே எனக்கு செலவுக்கு பணம் இல்ல, சென்னையில அக்கா பானுமதி சின்ன ரூம்ல இருக்கா அவளும் கஷ்டப்படுறா சாப்பாட்டுக்கே இல்லாம கண்ணீர் விடுறா அதை பார்க்க பார்க்க எனக்கு வேதனையா இருக்கு இவ்ளோ பெரிய தலைவர் இவரு ஆனா எங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டேன்றாரு நீயாவது சொல்ல கூடாதா? என்று கேட்ட அந்த வார்த்தை என்னை குத்தியது.உடன் அம்மா கேட்டாங்க அவர் அரசு வேலையால் இருந்து இருந்தா எவ்வளவோ பணம் கிடைச்சு இருக்கும். அதை வைச்சு நாங்க நல்லா இருந்து இருப்போம்.ஆனா இப்போ எங்களுக்கு எந்த பலனும் இல்லை. கஷ்டபடுறோம் நீங்க எல்லாம் சேர்ந்து என் புள்ளைக்கு ஒரு சம்பளம் போட்டு தரக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்??. எனக்கு அதற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை?. அப்படியே மழுப்பி ஆகட்டும் பார்க்கலாம்அம்மா என்று சொல்லி நகர்ந்தேன் ஆனாலும் அந்த வருத்தம்,கேள்வி என்னை தொல்லை செய்து கொண்டே இருந்தது. தலைவர் கிளம்பலாம் என்று சொல்லி காரில் ஏறியதும் அம்மா ஓடி வந்தார் அழுகையோட காசு தந்துட்டு போ என்று கேட்க அண்ணன் எப்போதும் போல பாக்கெட் தடவி இல்லையே என்றார். அம்மாவுக்கு கண்ணீர் பொத்து கொண்டு வந்து விட்டது உடனே என்னை திரும்பி பார்த்தார். நான் கொஞ்சம் பணத்தை அள்ளி எடுத்தேன் அதில் 1000,500, 100 ருபாய் தாள்கள் நிறைய இருந்தன ஆனால் தலைவர் அதில் இருந்து இரண்டு நூறு ரூபாய் தாள்களை மட்டும் எடுத்து மடக்கி கையில் திணித்து நிறைய செலவு செய்யாத அம்மா என்று சொல்லி நகர்ந்தார். அந்த பணம் வெத்தலை பாக்கு போட ஒரு வார செலவுக்கு கூட போதாது எனபது தான் உண்மை ஆனாலும் அதை பெரிய தொகையாக சொல்லி அம்மாவிடம் தந்தார்.எனக்கு ஆச்சர்யம் வியப்பு இப்படியும்ஒரு மனிதர் இருக்க முடியுமா? என்று இன்று வரை அதே ஆச்சர்யத்தோட பயணம் செய்கிறேன்.இன்று தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் அதை நிறைவேற்ற ஆயிரகணக்கான சிறுத்தைகள் காத்து இருக்கிறது ஆனாலும் அவர்களை பொது வேலைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் ஒரு போதும் தன் குடும்பதிர்காகவோ தனக்காகவோ பயன்படுத்துவது இல்லை .அதே நேரத்தில் வேறு நபர்கள் உதவி என்று வந்து விட்டால் உடனே அதை யார் மூலமாகவது நிறைவேற்றி அனுப்பி வைப்பார் .அண்ணன் திருமா நாம் அனைவரும் படிக்கவேண்டிய பாடம் பாதுகாக்கவேண்டிய பெட்டகம் தோழர்களே .. அவரோடு அடுத்து ஒரு நிகழ்வு, ஐயா தொல்காப்பியன் அவர்கள் உடல் நிலை மிக மோசமாகஇருந்த நிலையில் ராமச்சந்திரா மருத்துவ மனையில் இருந்த போது தலைவர் அங்கேயே தங்கி இருந்தார்.அவருடன் நெய்வாசல் ரவி என்பவர் பணிவிடை செய்து கொண்டு இருந்தார் அப்போது நான் காலையில் அங்கு சென்று விடுவேன்.தலைவர் ஐயா அவர்களுக்கு உணவு ஊட்டுவார் அவரால் சாப்பிட முடியாது சின்ன கரண்டில எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் உணவு கொடுப்பார் அப்போது தலைவரின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து அவரின் மேல் விழும் என்னை அந்த நிகழ்ச்சி உசுப்பியது. நாடே அவரை மிகப்பெரிய சிம்மசொப்பனமாய் பார்க்குற நிலையில் தலைவர் இப்படி கண்ணீர சிந்துகிறாரே என்று எனக்குள் கேள்வி. இறப்பு எல்லாருக்கும் சகஜம் தான் அதை நினைத்து தலைவர் அழுகுறாரே என்று கேள்வி எழுந்தது. மருத்துவ மனையிலேயே பல நாட்கள் தலைவர் அவர் தந்தையை பார்த்துக்கொண்டார். அவர் ஐயா மீது வைத்த பாசம் என்னை சுட்டது இப்படியும் மனிதர் இருக்க முடியுமா என்ற ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது தினம் தினம் டாக்டர். சௌந்தராஜன் வந்து பார்த்து கொள்வார் ஒரு நாள் நான் தலைவர் ரவிஅண்ணன் சௌந்தராஜன் இருக்கும் போது மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஐயா உயிர் மறைந்து விடும் ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று சொன்னதும் அண்ணனுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. அந்த பதட்டம் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டது உடனே சௌந்தராஜன் அண்ணன் வெற்றி தலைவரை அழைத்து கொண்டு போகலாம் வாருங்கள் என்று சொல்லி காரில் ஏறினார் எங்கே போவது என்று தெரியாமல் பயணம்? உடனே தலைவர் வேளச்சேரி போங்கள் என்று சொன்னார் அங்கே யாரும் இல்லை. தமிழேந்தி அவர் மனைவி மட்டும் இருந்தார்கள் அவர்களிடம் யாரையும் தலைவரை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு பக்கத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று அமர்ந்தோம்.அங்கே மயான அமைதி தலைவரின் முகத்தில் அதிக பட்ச சோகம் அப்பிக் கொண்டு இருந்தது.அமைதியாக இருந்தது.உடன் அண்ணன் சௌந்தராஜன் தம்பி நமக்கான உறவுகள் எல்லோரும் ஒரு நாள் போய் தான் ஆகவேண்டும் நீங்கள் கவலை பட கூடாது என்று அண்ணன் தோளில்கை வைத்தார் உடனே நான் எப்போதும் கம்பீரமாய், சிறுத்தையாய், எதற்கும் அஞ்சாத சிங்கமாய் பார்த்து ரசித்த அந்த மாமனிதன் உடைந்து அழுத காட்சி என் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது ஆம் தோழர்களே! அந்த அழுகையுடன் அவர் சொன்ன அந்த வார்த்தை மறக்கவே முடியாது. மருத்துவரை பார்த்து அண்ணா என் தந்தைக்கு நான் ஒரு வேளை உணவு கூட போடவில்லை நல்ல துணிமணிகள் எடுத்து தரவில்லை நல்ல செருப்பு வாங்கி தரவில்லை அவரை சந்தோசமாக வாழ வைக்க வில்லை அவரின் ஆசை நான் திருமணம் செய்ய வேண்டும் என்று அதையும் நிறைவேற்றவில்லை இப்படிபட்ட பிள்ளையை பெற்று அவர் எந்த சுகத்தையும் காணவில்லை நான் கொடும் பாவம் செய்துவிட்டேன் பெற்றவர்களுடைய கடனை செலுத்த முடியாத பாவியாகி விட்டேன் என்று சொல்லி சொல்லி அழுத காட்சி என்னை உலுக்கியது.மருத்துவ மனையில் அவர் விட்ட கண்ணீருக்கு பதில் இப்போதுதான் கிடைத்தது அந்த அழுகையுடனே என் தந்தை என்னை வளர்க்க கஷ்டப்பட்டார் ஆனால் அவருக்காக நான் எதையும் செய்யவில்லை என்னை பார்க்க பல முறை சென்னை வந்து பார்க்க முடியாமல் திரும்பி இருக்கிறார் அதனால் கூட்டம் நடக்கும் இடத்திற்கு லட்சகணக்கான சிருதைகளோடு அவரும் தூர இருந்து பார்த்து விட்டு போய்விடுவார் பிறகு தம்பிகள் சொல்லும்போது தான் எனக்கும் தெரியும் அவருக்கான நேரத்தை நான் தரவே இல்லை இப்படி ஒரு தந்தைக்கு செய்யும் சாதாரண கடமையை கூட நான் செய்யவில்லை என்று சொல்லி அந்த குற்ற உணர்ச்சி என்னை கொள்கிறது என்று சொல்லி அழுதபோது மருத்துவர் உள்பட நானும் கலங்கி விட்டோம் , அந்த தருணம், நொடி என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அப்படி பட்ட அய்யா தொல்காப்பியன் அய்யா இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்று வரை அதன் வலிகளோடு பயணம் செய்யும் மகத்தான தலைவன் தான் அண்ணன் திருமா ஆம் அவர் இப்போதும் தன் குடும்பத்திற்காக எதையும் செய்யாத மகனாக தான் இருக்கிறார். அவரின் தம்பி பாரி வேளச்சேரி அலுவலகத்தில் ஒரு சாதாரண தொண்டரை போல அங்கே இருக்கும் வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார் எல்லோரும் சந்திக்கும் நேரத்தில் தான் அவரும் முண்டியடித்து தன்னுடைய கோரிக்கையும் வைப்பார். அப்படி தான் தலைவர் அவர்கள் தன் குடும்பத்தை நடத்துகிறார்.... அம்மா சொன்னதை போல தலைவர் அரசு பணியில் இருந்து இருந்தால் அவர்களும் சந்தோசமாக இருந்து இருக்கலாம் ஆனால் இந்த சமூகத்துக்காக தன்னை தியாகம் செய்து விட்டதால் குறைந்த பட்ச ஆசைகளை கூட அவர் அவர்களுக்காக நிவர்த்தி செய்யவில்லை என்பது வருத்தம் தர கூடிய விஷயம் . இப்படி சுயநலம் அற்ற ஒரு தலைவன் பின்பற்றும் சிறுத்தைகள் அவரை போல இருக்கிறோமா ???? கேள்வி தான் ??? அவரின் கடமைகளை நாம் நிறைவேற்றுவோம் அப்போது தான் நாம் விசுவாசம் நன்றி உணர்ச்சி உள்ள மனிதர்கள் ஆவோம் ...அவருக்கான கடமை நமக்கான கடமை என்று ஏற்று கொள்வோம் ....
தோழர்களே, நம்ம்க்காக அடிமை விலங்கை உடைக்க தலை நிமிர்வை உருவாக்க காலம் நேரம் பார்க்காமல் உழைத்து தலை நிமிர்வை உருவாக்கிய தலைவர் தான் அண்ணன் திருமா இப்படி தன்னை பெற்ற தாய்க்கு செலவு செய்யாத, தந்தைக்கு செலவு செய்யாத உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு கடமையை செய்ய முடியாமல் தவிக்கும் ஒரு பிள்ளைதான் இந்த சமூகத்திற்காக தன்னையும் தன் இளமையையும் தியாகம் செய்த அந்த உத்தம தலைவர் தான் அண்ணன் "திருமாவளவன் " . கட்சிக்கு இன்று பல லட்சங்கள் இருந்தாலும் அதை தன் குடும்பத்திற்காக செலவு செய்யாத நேர்மையான தலைவன் தான் அண்ணன் திருமா.

தங்கம் திரட்டி என்ன செய்யப் போகிறீர்கள்? 
மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் :  எங்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகளை முறியடிக்கவும் ஊடகம்(தொலைகாட்சி) தேவைப்படுகிறது. அதற்காக போராளித்தளைவரின் பொன்விழாவில் பொற்காசுகள் வழங்குகிறோம்.எங்களை வலிமைப்படுத்துக் கொள்ளமட்டும் அல்ல. தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவலங்களை தோலுரிக்கவும் தொலைகாட்சி தேவைப்படுகிறது. தன்னை பெற்ற தாய்க்கு செலவு செய்யாத, தந்தைக்கு செலவு செய்யாத உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு கடமையை செய்ய முடியாமல் தவிக்கும்  அண்ணன் திருமா இன்று தங்கம் கேட்கிறார் எதற்காக அவரின் குடும்பத்திர்காகவா,தனக்காகவா இல்லை. நமது கட்சிக்கு நமக்கு ஊடகம் அமைக்க கேட்கிறார் நாடு முழுவதும் உள்ள தலித்துகளின் தலை நிமிர்வை உருவாக்க கேட்கிறார்.ஆகவே தோழர்கள்  தலைவரின் பிறந்த நாளை அடையாளப்படுத்தி நாடெங்கிலும் அவரின் விழாவை சிறப்பாக நடத்தி ஊடக வலிமையை உருவாக்குவோம். தலைவரின் கனவை நினைவாக்க தங்கத்தை அள்ளித்தருகிரார்கள். இந்த சமூகத்திற்காக நமக்காக தமிழ் தேசிய மக்களுக்காக தன் வாழ்க்கையே தியாகம் செய்த மாமனிதருக்கு புகழ் மாலை சூடுவோம். அவரின் உயர்ந்த லட்சியங்களை,நினைவுகளை, கனவுகளை நினைவாக்குவோம். என்றும் அவரின் பாதையில் பயணிப்போம்...

ஊடகங்களின்  ஆதரவு  இல்லாமல் தான் இத்தனை ஆண்டுகாலம் பயணம் செய்கிறீர்களா? அதற்க்கு சாட்சியங்கள் உண்டா?
தகடூர் தமிழ்செல்வன் : நிச்சயமாக சொல்கிறேன் ஊடகங்கள் எங்கள் செய்தியை இரட்டிப்பு செய்கின்றன. இல்லையென்றால் சிறுமை படுத்துகின்றன. தனுஷுக்கும் , கலமஹாசன் பொண்ணுக்கும் கள்ளக்காதலாம், அதை அட்டைப்படத்தில போட்டு எழுதுகிறார்கள் . ஆனால் இன்று இந்தியா முழுமைக்கும் 85 சதவிகிதம் தனியார் மயமாகிவிட்டது. மீதமுள்ள 15 சதவிகிதமும் விரைவில் தனியார் மயமாகிவிடும். எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் அதற்க்கு மத்திய அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் என்று முழங்கினார் திருமாவளவன் அதை யாரும், எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை.

ஐஸ்வர்யா ராய்க்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஆறுவாரம் கருத்து கணிப்பு போட்டார்கள் . ஆனால் அண்டை நாட்டில் நடக்கும் கொடுமை கண்டு, ஈழத்தை எதிர்க்கும் இந்திய அரசின் குகைக்கே சென்று தனி ஈழமே தீர்வு என்று எழுந்து முழங்கினார் திருமாவளவன், இந்தியாவில் புலிகளுக்கு தடை விதித்த பின்பு நாடாளுமன்றத்தில் ஈழமே தீர்வு என்று முழங்கிய ஒரே தமிழன் திருமாவளவன்  அதை யாரும்  அரை வரிக்கூட எவனும் எழுதவில்லை.... 

மது பார்டியில் நடிகைக்காக நடிகர்கள் அடித்துக்கொண்டனர் என்று  ஆரவாரமாக எழுதுனவனுங்க, ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் ரயில் கட்டணத்தை குறைத்ததும் அனைத்து உறுப்பினர்களும் அமைதி காத்தாலும், மனித மலத்தை மனிதனே அல்லும் கேவலம் இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று கூறி வெளிநடப்பு செய்த திருமாவளவனை பற்றி ஒரு பெட்டி செய்தி கூட இல்லை... 

நயன்தார பிரபுதேவா சண்டை, நமீதாவுக்கு எப்போது கல்யாணம் என்று மைக்கை தூக்கி கொண்டு நடிகர்கள் பின்னாடி அலையும் பத்திகையாளர்கள், ஆறுகோடி தமிழர்களுக்காக 60 லட்சம் தமிழர்களை கூட்டி, அவர்கள் முன்னிலையில் மக்களுக்காக உழைத்த ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்கினால், தினத்தந்தியை தவிர ஒரு செய்திதாள்களிலும், காணவில்லை, ஒரு டிவி செய்தியிலும் காணவில்லை...

சச்சின் வான்கடே மைதானத்தில் நூறாவது சதம் அடிப்பார நு ஒரு பக்கம் முழுமைக்கும் எழுதுனுவங்க, விழுப்புரம் வானூரில் நடந்த கொடுமையை ஒருவரிக்கூட எழுதவில்லை, அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த விடுதலை சிறுத்தைகளை பற்றி யாரும் எழுதவில்லை. 

நாட்டு மக்களுக்காக பிரதமர் ஒரு திட்டத்தை அறிவித்தார் என்று செய்தி போட்டு, அதன் அருகிலே கலர் போட்டோ போட்டு கள்ளக்காதலை மறக்க முடியாத மனைவி கணவரின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டாள் என்று எழுதுகிறார்கள். இந்த செய்தி அந்த செய்தியை மறைக்கிறது... 

திருமாவளவன் ஏன் ராஜபக்ஷேவை சந்தித்தார் என்று எழுதியவர்கள் அங்கே என்ன நடந்தது என்பதை எழுதவில்லை. ராஜபக்ஷே கனிமொழியிடமும், டி.ஆர் பாலுவிடமும் இவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர், அந்த நேரத்தில் இவரும் அந்த இடத்தில் இருந்து இருந்தால் இவரும் போயிருப்பார் என்று சொல்லி சிரித்தான். அதன் பொருள் என்ன? பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறார் என்று குறை சொல்கிறவர்கள்,எழுதுபவர்கள்  தமிழகத்தில் நடக்கும் சேரிக் கொலைகளை கண்டிப்பதில்லை. திருமாவளவன் மீதும், விடுதலை சிறுத்தைகள் மீதும் திட்டமிட்டே அவதூறு பரப்பும் போக்கை முறியடிக்க ஊடக வலிமை தேவைப்படுகிறது. அதற்க்கு பொருளாதார வலிமையையும் தேவைப்படுகிறது. எங்கள் கட்சிக்கு நிதி வேண்டும் என்று நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் யாரும் தரமாட்டார்கள். ஆக எங்கள்  வீட்டை  நாங்களே கட்டுகிறோம், நாங்களே நிதி திரட்டுகிறோம். எங்களிடம் இருக்கும், நாங்கள் வியர்வை சிந்தி உழைத்த அஞ்சு ரூபாயிலும், பத்து ரூபாயிலும் வீட்டைக் கட்டிக் கொள்கிறோம். எங்கள்  போராட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவும், எங்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகளை முறியடிக்கவும் ஊடகம்(தொலைகாட்சி) தேவைப்படுகிறது. அதற்காக போராளித்தளைவரின் பொன்விழாவில் பொற்காசுகள் வழங்குகிறோம்.      

இப்போதுக்கூட ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் சாதி வெறியர்களால் ஐந்து தலித்துகள் கொடூர கொலை பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதைப்பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை. தலித்துகள் மீது நடக்கும் கொடுமையை கண்டித்து எழுதவும் பத்திரிக்கை இல்லை, அதை கண்டித்து போராடும் போராளித்தளைவரின் போராட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசெல்லவும் பத்திரிக்கை இல்லை. இன்று இந்தியா முழுமைக்கும் தலித்துகளுக்காக போராடும் ஒரு அமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் லட்சுமிபேட்டையில் திருமாவளவன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தம் கண்டனங்களை பதிவு செய்துவிட்டு வந்துள்ளார். எந்த பத்திரிக்கை காரன் அதைப்பற்றி எழுதினான். அதற்காகவே எங்களுக்கு ஊடக வலிமை தேவைப்படுகிறது. எங்களை வலிமைப்படுத்துக் கொள்ளமட்டும் அல்ல. தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவலங்களை தோலுரிக்கவும் தொலைகாட்சி தேவைப்படுகிறது.  

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவை தேடவும், அதிகாரத்தை நாடவும் கூட ஒன்றுபடமுடியாமல் கிடந்த எங்களுக்கு ஆயிரக்கணக்கான சிறுத்தைகளை கூட்டி பொன்விழா நடத்தும் அளவுக்கு வலிமையை தந்த போராளித்தலைவருக்குஆயிரம் ஆயிரம் பொற்காசுகள் வழங்கினாலும் தகும்.

நடக்க தெரியாத குழந்தையை தாய் கரம் பற்றி நடக்க சொல்லித்தருவதைப்போல அதிகாரத்தை நோக்கி நகர முடியாமல் கிடந்த எங்களை கரம்பற்றி தாயை போல அழைத்து செல்லும் போராளித்தலைவருக்கு ஆயிரம் ஆயிரம் பொற்காசுகள் வழங்கினாலும் தகும்...

பொற்காசுகள் வழங்கும் விழாவில்  திருமாவளவன் பேச்சின் ஒரு பகுதி :  

என்னுடைய  இத்தனை ஆண்டு உழைப்பை பற்றி எழுத முடியாதவர்கள் இன்று என் பிறந்தநாளுக்கு தங்கம் வசூலிக்கிறேன் என்றதும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனம் பண்ணுகிறார்கள். ''இப்படி விமர்சனம் வரும் என்று தெரியும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் தர வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. இயன்றவர்கள் மனமுவந்து தருவதை மட்டுமே, அதுவும் நகையாக அல்லாமல் தங்கக் காசுகளாக மட்டுமே, ரசீதுடன் பெற்றுக்கொள்கிறோம். இப்படிப் பெறப் படும் ஒவ்வொரு கிராம் தங்கமும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப் படும். நான் 11 ஆண்டுகள் அரசு ஊழியராக இருந்து சம்பாதித்த காசில்கூட, என் அம்மாவுக்கோ அக்காவுக்கோ நகை வாங் கியது இல்லை. அவ்வளவையும் கட்சிப் பணிகளுக்குத்தான் செலவிட்டேன். பணமாகப் பெறுவதைவிட தங்கமாகப் பெறுவது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே!''

ஒரு இயக்கம் வலிமையாக செயல்பட கொள்கை வலிமை மட்டும் போதாது, பொருளாதார வலிமையையும் தேவைப்படுகிறது. பெரியாரின் மறைவுக்குப் பின்னும் அவருடைய இயக்கம் இன்னமும் வலிமையாக செயல்பட அவரது கொள்கைகள் மட்டும் காரணமல்ல, அவரது இயக்கத்தின் சொத்தும் ஒரு காரணம். 13 ஆண்டுகாலம் ஆட்சியைப் பற்றிக் கனவுக்கூட காணமுடியாமல் இருந்த தி.மு.க பதிமூன்று ஆண்டுகாலம் எப்படி தாக்குபிடிக்க முடிந்தது? கொள்கை வலிமையுடன் இருந்த பொருளாதார வலிமையாலே...

தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு எனப் பிரத்யேக சேனல்கள் இருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் ஓர் ஆர்ப்பாட்டம் செய்தால், அது ஒரு செய்தியாகவேனும் பதிகிறது. ஆனால், நாங்கள் நடத்தும் பொதுக் கூட்டமோ, பிரமாண்ட மாநாடோ எதுவுமே பொதுமக்களைச் சென்று சேர்வதே இல்லை. அதனாலேயே எங்களுக்கு என்று தனி சேனல் தொடங்குவது அவசியம் ஆகிறது. சேட்டிலைட் சேனல் துவங்க 20 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் 5 கோடி ரூபாய் வங்கிக் கணக்கிலும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதற்காகத்தான் என் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களிடம் பொற்காசுகளை நன்கொடையாகப் பெறுகிறோம்!'' ஊடக வலிமை இல்லாமல் அரசியல் களத்தில் நிர்ப்பது ஆயுதமின்றி போர்க்களத்தில் நிர்ப்பதர்க்கு சமம். எங்களுக்கு என்று ஊடகம் தேவைப்படுகிறது. நிதியை தங்கமாக வசூலிக்கிறோம். நான் ஒன்றும் மாடமாளிகையில் பிறந்தவன் அல்ல, நிலச்சுவான்தாருக்கு பிள்ளை அல்ல, பெரும் பண முதலாளிக்கு வாரிசு அல்ல, நானும் அன்றாடம் காய்ச்சி தான், நானும் ஆடு மாடு மேய்த்து இருக்கிறேன், உழைப்பின் வலி எனக்கும் தெரியும். விறகுகளை வெட்டி, அதை தலையில் சுமந்துக் கொண்டு காலில் செருப்பு இல்லாமல் கடும் வெயிலில், கடும் பொடியில்  எட்டுக் கிலோமீட்டர் தூரம் சென்று விற்று வந்துள்ளேன். ஏழைகள் வலியை நான் உணர்வேன். இந்த தங்கம் எனக்கு அல்ல. எம் மக்களாகிய உங்களுக்குத்தான் சொத்து சேர்க்கிறேன். அதனால் தான் நானும் என் பங்கிற்கு பத்து சவரன் தங்கம் கொடுத்துள்ளேன்.கருணாநிதி கேட்டால் தங்கத்தில் நாற்காலி செய்து தருவார்கள், ஜெயலலிதா கேட்டால் தங்கத்தில் கழிவறையே செய்து தருவார்கள். ஆனால் எம் மக்களால் அது முடியாது. நான் மாயாவதியை பின்பற்றுவதாக சொல்கிறார்கள், இதுவரை நான் நேரில் அவரைப் பார்த்தது கூட கிடையாது. எனக்கென்று அரசியல் குருக்கள் யாரும் கிடையாது. அரசியல் செய்ய யாரும் சொல்லித்தரவில்லை. நம்மை எல்லாம் மனிதராக்கிய மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கரின் வழி நடக்கிறோம். எங்களுக்கு அடையாளம் அம்பேத்கர், மாயாவதிக்கு அடியாளம் அம்பேத்கர். அவ்வளவுதான் எனக்கும் மாயாவதிக்கும் உள்ள உறவு. 1941 ஆம் ஆண்டு புரட்சியாளரின் 50 ஆவது பிறந்தநாளுக்கு பவுன் தங்கம் மக்கள் கொடுத்துள்ளார்கள். அதை அவர் 10 ஆயிரத்துக்கு விற்று கட்சிப் பனி ஆற்றி உள்ளார்.  என்று எனக்கு ஒரு நண்பர் செய்தி அனுப்பினார். அந்த வழியில் தான் நாங்கள் தங்கம் வசூலிக்கிறோம். இந்தியாவிலே ஒரு தலித் அமைப்புக்கு பொருளாதார வலிமையைக் கூட்டி சொத்தை சேர்த்து வைக்கும் முதல் தலித் இயக்கம் என்ற பெருமையும் நமக்கிருக்கிறது.நம்முடைய போராட்டங்களை, புரட்சிகளை பற்றி பேசாதவர்கள், இன்று அவதூறு பரப்பும் நோக்கில் செய்தி வெளியிடுகிறார்கள். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். மாவட்டம் தோறும் தங்கவேட்டையை நடத்துங்கள்....

                                             ........................

அவர்களின் ஆதங்கம் நியாயமானது. விடுதலை சிறுத்தைகளின் செய்திகள் இரட்டிப்பு செய்யப்படுவது உண்மையே என்றாலும், தங்கம் வசூலிக்கும் போது யாரும் இரையாகாமல்  சந்தோசப்படுவோம். ஒரு உண்மையை நாமும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும், தமிழக அரசியலில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் உருவான தலித் இயக்கம் இவ்வளவு வலிமையாக நிற்பது  இதுவே முதல்முறை. தேர்தல் தோல்விகளால் நாங்கள் சோர்ந்து போகமாட்டோம் என்பதை விடுதலை சிறுத்தைகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். வாழ்த்துக்கள் திருமா உங்கள் பொன்விழாவுக்கும் ! உங்கள் கட்டுமானப் பணிக்கும் !! 

தொகுப்பு :
அங்கனூர் தமிழன்வேலு 

1 கருத்து: