சனி, 21 ஜூலை, 2012

அண்ணன் சீமானுக்கு பதிலடி


விகடன் மேடையில் அண்ணன் சீமான் அளித்த பேட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டனாக அல்லது திருமாவின் தம்பியாக பதில் சொல்லவேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த நடையில் ஆடை அலங்காரம் இன்றி, எதுகை மோனையின்றி பதில் சொல்கிறேன்....

சீமான் : சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அண்ணன் திருமாவளவன் தனித்து நின்றிருந்தாலே ஈழத்துயரத்தின் எதிரொலியும், எங்களோடு இயைந்தவர்களின் குரலும் அவரை அமோகமாக வெற்றி பெற செய்திருக்கும்.

தமிழன் வேலு : முதலில் அண்ணனுக்கு ஒன்றை சொல்கிறேன் தலைவர் திருமாவும் சரி, அவரது தம்பிகளாகிய நாங்களும் சரி, ஈழத்திற்கு நாங்கள் போராடுகிறோம், அதனால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஓட்டுப் பிச்சை எடுக்கும் பழக்கம் இல்லை என்பதையும், எழவு வீட்டில் களவு பார்க்கும் புத்தியும் எங்களுக்கு இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ளகிறேன்.

தி.மு.க. வேண்டாம், அ.தி.மு.க. வேண்டாம், காங்கிரஸ் வேண்டாம், பி.ஜே.பி வேண்டாம் என்று 1999லிருந்து அழைத்து கொண்டிருக்கிறார் திருமா. ஆனால் அதற்க்கு தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் அசைந்து கொடுத்தபாடில்லை. 1999 லும் 2004 லும் சிதம்பரம் தொகுதியில் தனித்து தான் களம் கண்டார். ஆனால் அங்கேயும் வந்து சாதியவாதிகள் தோற்க்கடித்தார்கள். 1999 யில் 2.25 லட்சம் வாக்குகள், 2004யில் 2.5லட்சம் வாக்குகள் பெற்றார். 2004யில் 2.5லட்சம் வாக்குகள் பெற்று தேசிய கட்சியான பிஜே.பியையும், தமிழகத்தின் பிரதான கட்சியான அதி.மு.க. வையும் டெபாசிட் இழக்க வைத்தார்.

ஊரெல்லாம் சுற்றிவந்து பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்டார்களே தவிர திருமாவளவனுக்கு ஒட்டு கேட்கவில்லை. பொன்னுசாமி வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று ஈழத்திற்காக பேசுவார் என்று நம்பினார்களே தவிர 25ஆண்டுகாலமாக திருமாவளவன் ஈழத்தை பற்றியே பேசிக்கொன்டிருக்கிறாரே இந்த தொகுதியில் திருமாவளவனை ஆதரிப்போம் என்று யாரும் முன்வரவில்லை.. 2009யில் தனித்து களம் கண்டிருந்தால் கூடுதலாக பத்தாயிரம் ஓட்டுக்கள் வாங்கியிருக்கலாமே தவிர வெற்றி பெற்று இருக்க முடியாது. அப்படி ஒரு நிலையில் கூட 2009யில் தனித்து களம் காண தான் முன்வந்தார். ஆனால் அவரை தாண்டி கட்சி உள்ளது. அவரது தலைமுறையை தாண்டியும் இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை முன்னேடுக்கவேண்டியதன் அவசியம் இருக்கிறது. தொடர் தோல்விகளால் தலைமை வேண்டுமானால் சோர்வடையாமல் இருக்கலாம் ஆனால் கடைநிலை தொண்டர்கள் சோர்ந்து போவார்கள் இயக்கம் உடைந்து போகும். எனவே ஏதாவது ஒரு அணியில் இணைந்து களம் காண வேண்டியதன் அவசியம் ஏற்ப்பட்டது. அ.தி.மு.க.வுடன் கொள்கை ரீதியாகவோ, தொகுதி உடன்பாட்டின் படியே கூட்டணி சேர வாய்ப்பில்லாத நிலையில் தனித்து களம் காணுவது இயக்கத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதாலும் தி.மு.க. கூட்டணியில் இணைந்து களம் காண வேண்டியதன் நிலை ஏற்ப்பட்டது.

சீமான்: திராவிட தலைமைகளை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததே அண்ணன் திருமா தான்.. அண்ணன் திருமா அவர்களே நான் பேசும் அனைத்தும் நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடங்களே நான் வேறு எங்கும் கற்றுவரவில்லை.

தமிழன் வேலு :இந்த கேள்விக்கும் அண்ணன் சீமானே பதில் சொல்லி இருக்கிறார்.  இந்துமயமாகிவிட்ட திராவிட கட்சிகள் என்றபோர்வையில் உள்ள ஓட்டுப் பொருக்கி அரசியல் கட்சிகளை வீழ்த்துங்கள் என்று சொல்லிக் கொடுத்தாரே ஒழிய எங்கள் பாட்டன் காட்டிய திராவிடக் கொள்கைகளை வீழ்த்துங்கள் என்று சொல்லித்தரவில்லை   அண்ணன் சீமான் அவர்களே திராவிடம் என்பது பெரியார் என்ற கன்னடரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சித்தாந்தம், திராவிடம் என்பது அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ என்ற தெலுங்கர்களின் வெற்று முழக்கம் அல்ல. எங்கள் பாட்டன் அயோத்திதாசரின் கொள்கை முழக்கம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பேசிய எங்கள் தாத்த இரட்டைமலை சீனிவாசன் சோலார் தங்கவயலில் பேசும்போது நாங்கள் கலப்படமில்லாத திராவிடர்கள் என்று பேசியிருக்கிறார். கலப்படமில்லா திராவிடர்கள் என்று பொருள்பட பேசியிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் திராவிடத்தை பற்றி சொல்லும்போது இந்த மண்ணின் பூர்வீக குடிகள் நாகர்கள் தான். நாகர்கள் என்றால் யார்? இந்தியா முழுமைக்கும் சேரி என்ற சிறைச்சாலையில் வாழ்பவர்கள் தான் நாகர்கள். இவர்கள் தான் முற்காலத்தில் திராவிடர்களாக வாழ்ந்தார்கள், தமிழர்களாக வாழ்ந்தார்கள். தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக சொல்கிறார். அதனால் தான் வடக்கே நாகலாந்த், மையத்தில் நாகபுரி கடைசியிலே நாகர்கோவில். ஆக நாகர்கள் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தார்கள் என்றால், தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்கள் திராவிடர்களாக இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அப்படி வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆரியத்தை எதிர்க்கும் கூரிய வாளான திராவிடம் இன்று முனை மழுங்கி இருக்கலாம். அதை கூர்மை படுத்துவதை விடுத்து திராவிடத்தை எதிர்ப்பது மடமை.

சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமான திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்துத்துவத்தை வேரறுக்க முடியாது. இந்துத்தை வேரறுக்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ் தமிழ்தேசியத்தை கட்டி எழுப்ப முடியாது....

அண்ணன் சீமான் அவர்களே உங்களிடம் இளைய தலைமுறை எதோ ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறது. மாற்றத்தை கொடுக்க முடியாவிட்டாலும் ஏமாற்றத்தை கொடுக்காதீர்கள். ஒருவன் சோற்றில் மண்ணை அள்ளிப் போடுவதை விட வரலாற்றை திரிப்பது கொடுமையானது... வரலாற்றை திரிக்காதீர்கள்.... வருங்கால தலைமுறையை வஞ்சிக்காதீர்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக