சனி, 21 ஜூலை, 2012

தலித் விடுதலையே ! தமிழ் தேசிய விடுதலை !!



இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்கள் தமிழர்கள். அப்படி அரும்பாடுபட்டு, அடிமையாக இருந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றியவர்கள் தமிழர்கள். குறிப்பாக தலித்துகள். இப்பொழுது இந்திய தேசியம் தமிழ்த் தேசியத்தை நசுக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த தமிழ்த் தேசியத்திற்கு தன்னுயிரை துச்சமென மதித்துப் போராடிய தலித்துகளை தமிழ்த் தேசியவாதிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை! அவர்களின் இன்னல்களில் பங்கெடுப்பதில்லை!! அவர்களின் கண்ணீரைத் துடைக்க இவர்கள் கரங்கள் நீள்வதில்லை! போராட்டக் களங்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள், எங்களது உடலில் ரத்தம் வடிந்தாலும், எங்கள் வாயில் ஆதிக்க சாதிகள் மலத்தை திணித்தாலும் கண்டு கொள்வதில்லை!!!
தமிழ் நாட்டின் இலக்கியத்தில், வரலாற்றில், தலித்துகளின் கனவுகளும் லட்சியங்களும் பேசப்பட்டிருக்கின்றன, போற்றப்பட்டிருக்கின்றன, சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் உள்ளன. அவர்களை கடவுள் அருள் பெற்றவர்களாக, அவரது கருணைக்குப் பாத்திரமான புண்ய புருஷர்களாக, மேல் தட்டுகளில் இருப்போரையும் உள்ளடக்கிய மொத்த சமூகத்தாலும் தொழத்தக்கவர்களாக காவியங்கள் பாடுகின்றன. கோவில்களில் அவர்கள் சிலைகள் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக வீற்றிருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், அவர்தம் காலத்துக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரும் தேவாம்சம் கொண்டவர்கள் என்றும் சிவனின் அருள் பெற்றவர் என்றும் அவர்களுக்கு முன் தாம் ஒரு எளிய தொண்டனே என்றும் தன் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். புராணக் காலங்களில் மதிப்போடு இருந்த ஆதித்தமிழர்களான தலித்கள் பின்னாளில் சேரிகளில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு விடுவிப்பது, அவர்களை எப்படி அரசியல்படுத்துவது என சிந்தித்த அயோத்திதாச பண்டிதர், தன் தந்தை கந்தசாமியோடு ஊட்டி சென்றார். தன் 25 வயதில் “அத்வைதானந்த” சபையை 1860ல் உருவாக்கி நடத்தினார். நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார். இதன் மூலம் சாதிபேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். இரங்கூனில் செல்வச்செழிப்பாக வாழ்ந்தாலும் தமிழின மக்கள் எப்படி சாதியால் ஒடுக்கப்பட்டார்கள்? தீண்டப்படாத மக்களாக ஒதுக்கப்பட்டது எப்படி? என்றும் அவர்கள் விடுதலை குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் ஊட்டி வந்து, தன் உறவினரான ரெட்டமலை சினிவாசன் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், ஜானகிராமன், ராஜாராமன் 4 மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில் ஊட்டிக்கு ஓய்வெடுக்க ஆல்காட் அவர்கள் வந்திருந்தார். பண்டிதரும் ரெட்டமலை சினிவசனும் ஆல்காட்டை சந்தித்துப் பேசினார்கள். பல முறை விவாதித்தனர்.
மதம், பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இச்சந்திப்புகள் பண்டிதரை இனொரு திசைக்கு இட்டுச்சென்றது .
சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடத்திக்கொண்டிடுக்கும் அருட் பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ஒத்த கருத்துகொண்ட இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான் ரத்தினம் 1882இல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக 1885இல் “திராவிட பாண்டியன்” என்னும் இதழை துவக்கினார். அந்த இதழின் துணை ஆசிரியராக பண்டிதர் பொறுப்பேற்றார். பின்னால் தமிழன் இதழ் சிறப்பாக நடத்தியதற்கு இந்தப் பின்புலமே காரணமாக இருந்தது. ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது. தமிழின பூர்வகுடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்? என்ற தேடுதலால் ஊர் ஊராக சுற்றித்திரிந்தார். அப்போதுதான் “நாராதீய சங்கைத் தெளிவு” எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு, தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாக்கிய பண்டிதர் க.அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. சென்னை இராயப்பேட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தலித் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிறார்கள்.
இதழியலிலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம். பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்த காலம். பிரம்மா சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தையும் இந்துக்குள் வலிய திணித்த காலம். 1861 – 1891 வரை ‘யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் “இந்து” என பதிவு செய்த காலம். இதற்கிடையில் 1881களில் ஆங்கில அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான அடையாளத்தைப் பதிவு செய்கிறார். “ஆதித்தமிழன்” original tamils என்று பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார்.
அப்போதெல்லாம் சாதியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்த காலம். அரிஜன் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக “பஞ்சமர்கள்” என்றும் Depressed Class என்று அழைப்பதை மறுத்து “ஆதித் தமிழன்” என அழைத்தார். சாதியின் பெயரால் அழைக்கப்பட்ட தமிழர்களை சாதியற்ற தமிழர்களாகப் பதிவு செய்தார். இழிவான பெயர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழி என்றார். 1886 ஆண்டில் “ஆதி தமிழர்கள் (தலித்கள்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல” என அறிக்கை விட்டார். “நீண்ட காலத்திற்கு முன் நிலவிய பிராமணிய எதிர்ப்பு மரபின் வாரிசுகளே அவர்கள்” என்றார். தமிழ், தமிழன் அடையாளத்தை தலித் மக்களை மையமாகக்கொண்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்.
இந்திய பாரம்பரியம் பௌத்தம் மதமாக இருந்தது என்பார். அதனை தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்குகிறார். இந்தியா என்ற சொல் ‘இந்திரம்’ என்பதின் திரிபு. இந்தியாவை புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு ‘இந்திரதேசம்’ என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது. இந்த தேசத்தை பவுத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமயம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அந்நியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர மாயத்தன்மையென திரிக்கப்பட்டது. அதாவது சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள்.
”மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆளவேண்டும்” என்கிறார். 30-10-1912 தமிழனில் எழுதுகிறார், 'சுதந்திரம் அளித்தால் இம்மண்ணின் மைந்தரான தமிழருக்கே வழங்கவேண்டும்' என்றார்.  "தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும்”. மேலும் "கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் 1930களில் தலித்கள் ஒரு தேசத்தை ஆளுகிற வர்க்கமாக மாற வேண்டுமென்கிறார். இவ்வாறு பண்டிதர் அயோத்திதாசரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஆதிதமிழர்களான தலித்துகளை மையப்படுத்தியே ஒரு ஆளுமையை, ஒரு தேசத்தை உருவாக்க முயன்றார்கள்.
தமிழகத்தின் மற்றும் ஒரு புரட்சியாக அல்லது எழுச்சியாக பேசப்படுவது மொழிப்போராட்டம். அதில் தலித்துகளின் பங்களிப்பு அளப்பரியது. மொழிப்போரின் முதல் பலியே ஒரு தலித். 1937ல் நடைபெற்ற சென்னை மாகான பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. அத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்தி திணிப்பைத் தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கட்டாயப்பாடமாக வைக்கப் போவதாக முதலமைச்சர் இராசகோபாலாச்சாரி அறிவித்தார். இந்தி மொழியை நம் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு கேடு வரும், அதோடு நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த தமிழர்கள் கூட்டங்கூட்டமாக அணிதிரண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.
மக்களின் தமிழ் மொழி உணர்வை, இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றவை தமிழ் அமைப்புகளே. கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ் கழகம், உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவை, நாமக்கல் தமிழ்ச் சங்கம், தென்காசி திருவள்ளுவர் கழகம், நெல்லைத் தமிழ்ப் பாதுகாப்பு சங்கம்….. போன்ற தமிழ் அமைப்புகளும், வேங்கடாசலம், உமாமகேசுவரனார், சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியம், கு.மு.அண்ணல் தாங்கோ போன்ற தமிழறிஞர்கள் தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் விளைவாக தமிழகம் முழுவதும் (ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்ளடக்கிய சென்னை மாகாணம் என்றாலும் அங்கெல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவில்லை) தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் குறிப்பாக தொல் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் இந்தியெதிர்ப்புப் போர் கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிக அதிகமாக தொல் தமிழர்கள் கலந்துகொண்டு சிறை சென்றனர். அதை "சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றத்தில் தொல் தமிழர்களின் தமிழுணர்வைப் பகடி செய்தார். இதையே "அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என முதலமைச்சர் இராசாசி கேவலப்படுத்தினார். இந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழுக்காக முதன்முதலில் 15.01.1939ல் தன்னுயிரை ஈகம் செய்தவர் எசு.நடராசன் என்ற தொல் தமிழர். அவருக்கு அடுத்தே, மூன்று மாதங்களுக்குப் பின்னர் இடை நிலைச்சாதியைச் சேர்ந்த தாளமுத்து 11.03.1939ல் உயிர்த்தியாகம் செய்தார். ஆனால் ஏடுகளில் பெயர்ச் சூட்டலில் 'தாளமுத்து நடராசன்” என்று தாளமுத்து முன்பாகவும் நடராசன் இரண்டாவது இடத்திற்கும் ஒதுக்கியது. அதை உண்மையாக்கும் பொருட்டு அரசு மாளிகையொன்றிற்கு ‘தாளமுத்து நடராசன் மாளிகை’ என பிழையான வரிசையில் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.
தமிழ்மொழி காக்க உயிர்விட்ட நடராசன் பிணத்தை, மரணத்தை வைத்துதான் தமிழ்மொழி உணர்ச்சியை உசுப்பிவிட்டார்கள். "நடராசன் அவர் குடியில் ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான் அவனுக்கு திருமணம் செய்வோம் என் எண்ணிய நடராசன் பெற்றோர் ஏமாற்றமுற்றதையும் வருத்தமாகக் கூறி மணக்கோலத்தில் போக இருந்த நடராசன் அநியாயமாகப் பிணக்கோலத்தில் சென்று விட்டாரே” என்று நடராசன் இறுதி நிகழ்ச்சியில் கு.மு.அண்ணல்தங்கோ அவர்கள் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ்மொழிக்காக உயிர் விட்ட நடராசனின் மரணம் குறித்து விளக்கம் தந்த முதலமைச்சர் ராசாசி, "நடராசன் படிப்பறிவில்லாதவர், அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப்போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றார். அதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது.
நடராசனின் தந்தையார் முதல்வர் ராசாசியின் விளக்கத்தை மறுத்து, "இந்தி எதிர்ப்பிற்காக மறியலில் ஈடுபட்டு நடராசன் கைதானபோது அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம் என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளீர்கள். ஆனால் "கோழையாக வாழ்வதைவிட வீரனாக சாவதையே நான் விரும்புகிறேன்” என நடராசன் கூறியுள்ளார். அப்படியே வீரமரணமும் எய்துவிட்டார். இப்படியே தலித்துகளின் வரலாறு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது ...
இன்று சிலர் பேசுகிறார்கள் தமிழ்த் தேசியத்தை வீழ்த்தியது திராவிடமே. திராவிடத்தை வீழ்த்தினால் தமிழ்த் தேசியம் மலர்ந்து விடும் என்று. அந்த அறிவுஜீவிகளுக்கு ஒன்றை சொல்கிறேன். திராவிடம் என்பது பெரியாரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சித்தாந்தம். திராவிடம் என்பது அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ என்ற அரசியல்வாதிகளின் வெற்று முழக்கம் அல்ல. எங்கள் பாட்டன் அயோத்திதாசரின் கொள்கை முழக்கம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பேசிய எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் கோலார் தங்கவயலில் பேசும்போது நாங்கள் கலப்படமில்லாத திராவிடர்கள் என்று பேசியிருக்கிறார். 
உதாரணமாக இன்று நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் ரகசியமாகப் பேசு என்று சொல்லுவார்கள். ஆனால் சேரியில் வாழும் தமிழர்கள் கமுக்கமாகப் பேசு என்று தூயதமிழில் பேசுவார்கள். கமுக்கம் என்ற தூய தமிழை கமுக்கமாக சாதி இந்துக்கள் மறைத்து விட்டனர். புரட்சியாளர் அம்பேத்கர் தலித்துகள் யார் என்று குறிப்பிடும் போது இந்த மண்ணின் பூர்வீக குடிகள் நாகர்கள் தான். நாகர்கள் என்றால் யார்? இந்தியா முழுமைக்கும் சேரி என்ற சிறைச்சாலையில் வாழ்பவர்கள் தான் நாகர்கள். இவர்கள் தான் முற்காலத்தில் திராவிடர்களாக வாழ்ந்தார்கள், தமிழர்களாக வாழ்ந்தார்கள். தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக சொல்கிறார். அதனால் தான் வடக்கே நாகலாந்த், மையத்தில் நாகபுரி கடைசியிலே நாகர்கோவில். ஆக நாகர்கள் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தார்கள் என்றால், தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்கள் திராவிடர்களாக இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்.
இந்தியாவில் இரண்டே தேசியங்கள் ஒன்று இந்திய தேசியம், மற்றொன்று தமிழ்த் தேசியம். ஏன் மற்ற மொழிகள் எல்லாம் தேசிய இனங்கள் இல்லையா? என்றால் அவர்கள் எல்லோரும் இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள், சமஸ்கிருத்தத்தை வழிபட்டார்கள். அவர்கள் மொழிவழி தேசியத்தை விரும்பவில்லை. இந்தியாவில் இந்திய தேசியத்தை எதிர்க்கும் ஒரே கருத்தியல் தமிழ்த் தேசியம் மட்டும் தான். தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க ஒரே வழி இதுதான் அது யாதெனில்:
இந்திய தேசியத்திற்கு எதிர்க்கருத்து தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியத்தை வெல்ல ஏழை இந்தியாவை மாற்றவேண்டும், ஏழை இந்தியாவை மாற்ற சாதியத்தை ஒழிக்க வேண்டும், சாதியத்தை ஒழிக்க இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டும், இந்துத்துவத்தை வேரறுக்க அதைக் கட்டி காப்பாற்றும் இந்திய தேசியத்தை எதிர்க்க வேண்டும், இந்திய தேசியத்தை எதிர்க்க தமிழ்த் தேசியத்தை மீட்க வேண்டும். இதுதான் கருத்தியல். ஆக சாதியை ஒழிக்க தமிழ்த் தேசியம் தேவை, தமிழ்த் தேசியத்தை வெல்ல சாதியத்தை ஒழிக்க வேண்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. பிரித்துப் பார்ப்பது இரண்டுக்கும் குந்தகம், இரண்டையும் இழக்க நேரிடும் செயல். சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமாக விளங்கும் திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்துத்துவத்தை வேரறுக்க முடியாது. இந்துத்துவத்தை வேரறுக்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ்த் தேசியத்தைக் கட்டி எழுப்ப முடியாது..
இன்றைய சமகாலத்தில் தமிழ்த் தேசியத்தின் முக்கிய பிரச்சினையான ஈழப்பிரச்சனையில் தலித்துகளின் பங்களிப்பு அளப்பரியது. போராட்ட களங்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள், எங்களது உடலில் ரத்தம் வடிந்தாலும், எங்கள் வாயில் ஆதிக்க சாதிகள் மலத்தைத் திணித்தாலும் கண்டு கொள்வதில்லை !!!
சகோதரி செங்கொடி தான் பிறந்தது பழங்குடியினர் சமூகமாக இருந்தாலும், மக்களோடு சரிசமமாக வாழமுடியவில்லை என்றாலும், மூன்று தமிழர்கள் உயிரைக்காக்க துணிந்தாளே - அவள் பிறந்த பழங்குடியின சமூகத்தின் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தார்களே - எந்த தமிழ்த்தேசியவாதி களத்திலே இறங்கிப் போராடினான்? மேலும் கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயந்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன் இன்னும் பலபேர் உயிர்நீத்தார்கள்
யாருக்காக? எதற்காக? இவர்கள் எல்லோரும் மாடமாளிகையில் வாழும் கோடீஸ்வரர்களா? பெரும் பணமுதலைகளின் பிள்ளைகளா? பெரும் நிலச்சுவாந்தர்களின் வாரிசுகளா?
இல்லையே... அன்றாடம் காய்ச்சிகள்... சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள்... ஆனாலும் தமிழனுக்காக உயிரை இழந்தனர்... ஈழத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பால்குடம் தூக்கும் தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் யோசிக்க மறுப்பது எது?
பால்விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணம் உயர்ந்தாலும், ஈழத்தமிழர் பிரச்சனையானாலும், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க வேண்டுமானாலும் முல்லைப் பெரியார் பிரச்சனையானாலும் வீதியில் இறங்கி உயிரைத் துச்சமென மதித்து உயிர்துறக்கும் அவர்கள் வீடுகள் கொளுத்தப்பட்டாலும், அவர்களை அரசே சுட்டுக்கொன்றாலும், அந்தப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதிகார வர்க்கம் அவர்கள் வாயில் மலத்தைத் திணித்தாலும், சாதி வெறியர்கள் அவர்கள் வாயில் சிறுநீர் கழித்தாலும் தமிழ்த் தேசியவாதிகள் காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள்...
உண்மையான ஆதித்தமிழர்களான தலித்துகளின் விடுதலையைப் பொறுத்தே தமிழ்த் தேசிய விடுதலை அமைந்துள்ளது. ஆனால் சுண்டல் என்றால் தெய்வபக்தி!
இனிப்பு என்றால் தேசபக்தி!! என்ற நிலை மாறி
ஈழப் பிரச்சனை என்றால் தமிழ்ப் பற்று !!
தலித் பிரச்சனை என்றால் சாதிப் பற்று!!
என்ற நிலையை தமிழ்த் தேசியவாதிகள் உருவாக்கி விட்டனர்.
அன்றைக்கு ஆங்கிலேயர்கள் உண்மையான சுதேசியான ஆதித்தமிழனான தலித்துகளிடம் விடுதலையைக் கொடுக்காமல் விட்டதால் இன்று தமிழினம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதுபோல இன்றைய சூழலில் தலித்துகளைப் புறக்கணித்து தமிழ்த் தேசியம் என்பது பகல் கனவே... அப்படி ஆதிக்க சாதிகளிடம் தமிழ்த் தேசியம் கிடைத்துவிடுமானால் இனி என்றைக்கும் தமிழினம் முன்னேறப்போவதில்லை, வீழ்ந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை... தலித் விடுதலையே ! உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை!!

(உதவியது : அயோத்திதாசர்.இன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக