வெள்ளி, 21 ஜூன், 2013

ஜெயலலிதா செய்வது அப்பட்டமான பாசிசம் ... கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள் பச்சையான சந்தர்ப்பவாதிகள் ...


நேற்றிரவு விகடன் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். தோழர் ஒருவர் போன் செய்து "என்னங்க விஜயகாந்த் கட்சியை உடைப்பதொடு மட்டுமின்றி, அந்த அம்மா செய்வது நியாயம் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களே" என்றார். எனக்கு சுரீர் என்றது. இரண்டொரு முறை நானும் கிண்டலடித்திருக்கிறேன். 

கருத்து வேறுபாடு என்பது முதலில் விவாதத்தில் தான் ஆரம்பிக்கும். ஆனால் கட்சி தாவியவர்கள் யாரும் விவாதம் செய்ததாக தெரியவில்லை. அதனால் தான், விஜயகாந்திற்கு தலைமை பண்பு இல்லை, அரசியல் முதிர்ச்சி இல்லை என்பது போன்ற விமர்சனங்கள் அவரது எம்.எல்.ஏ க்கள் கட்சி தாவுவதற்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். 

பயன்பாட்டில் உள்ள ஒரு வீட்டை இடிப்பது எவ்வளவு அபத்தமோ, அது போலத்தான் செயல்பாட்டில் உள்ள ஒரு கட்சியை உடைப்பதும்.

விமான நிலையத்தில் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் மீது விஜயகாந்த் கோபப்பட்டார். உடனே பத்திரிக்கையாளர் அவரது கடமையைத்தானே செய்தார், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட விஜயகாந்த்க்கு பொறுமை வேண்டாமா? என்றெல்லாம் குமுறித் தீர்த்தார்கள். 19 ஆண்டுகாலம் வைகோவின் ஜெராக்ஸ் ஆக இருந்தவர் நாஞ்சில் சம்பத், அதோடு மட்டுமின்றி என் நெஞ்சை கிழித்துப் பார்த்தால் அதில் வைகோ தான் இருப்பார் என்று உச்சகட்ட விசுவாசத்தை காட்டிய நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க வில் இணைந்து விட்டார். இன்று வரை எந்த பொறுப்பான பத்திரிக்கையாளரும் வைகோவிடம் இது பற்றி கேள்வி கேட்கவில்லையே ஏன்?

2005 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். தனித்து போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்காமல் இருக்க அவருக்கு பெரிய விளம்பரம் கொடுத்து உசுப்பெற்றியவர்கள் ஊடக நிறுவனங்கள். எப்படியாவது ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட அவர்கள் எடுத்த பெரிய முயற்சி தோல்வி அடைந்து கலைஞர் ஆட்சியில் அமர்ந்தார். இதில் பாடம் கற்றுணர்ந்த ஊடக நிறுவனங்கள் 2011 சட்டமன்ற தேர்தலில் கலைஞரை தோற்கடிக்க விஜயகாந்தை ஜெயலலிதாவோடு கொண்டு சேர்த்தார்கள். அ.தி.மு.க. - தே .மு.தி.க கூட்டணி உருவாக்கத்தை இருகட்சி தலைவர் மற்றும் தொண்டர்களை விட ஊடக நிறுவனங்களே பெரிதும் விரும்பின. அதற்காக தினம் ஒரு செய்தியை வெளியிட்டுக் கொண்டே இருந்தார்கள். விஜயகாந்த் தவிர்க்க முடியாத சக்தி என்பது போன்ற பிம்பத்தை கட்டமைத்தார்கள். அந்த பிம்பத்தின் வெளிச்சத்தில் வைகோ என்றொரு உணர்வாளர் மறைக்கப்பட்டார் என்பதும் வேதனையே. அவர்கள் விருப்பபடி இருகட்சி இடையே கூட்டணி உருவானது. வெற்றியும் அடைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததை விட விஜயகாந்த் அபார வெற்றியை ருசித்தார். எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். ஆட்சியை பற்றிய மதிப்பீட்டை ஆறுமாதம் கழித்தே சொல்வேன் என்று காமராஜர் சொன்னதையே சொன்னார். கூட்டணி உருவாக எவ்வளவு பாடுபட்டார்களோ அதே வேகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விஜயகாந்தை வெளியேற்றவும் அதே வேகத்தில் முயன்றார்கள். 

அதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ஈகோ பாலிடிக்ஸ். 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி இறந்து, அனுதாப அலையில் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, ஆட்சியில் அமர்ந்ததும் அதை மறுத்தார். அதை நினைவில் கொண்ட ஊடகங்கள், அ.தி.மு.க வால், தே .மு.தி.க ஜெயித்ததா? தே .மு.தி.கவால் அ.தி.மு.க ஜெயித்ததா? என்று விசமத்தனமான கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்ததும் ஏறத்தாழ எல்லா ஊடகங்களும் அ.தி.மு.க. வால் தான் விஜயகாந்தால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற முடிந்தது என்று செய்தி வெளியிட அது விஜயகாந்துக்கு எரிச்சலை உண்டாக்கி இருக்க வேண்டும். அந்த பிம்பத்தை உடைக்க விஜயகாந்த் முயல அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் வெளிப்படையாகவே சட்டமன்றத்தில் மோதல் தொடங்கியது. விஜயகாந்தும் வெளிப்படையாகவே எதிர்க்க ஆரம்பித்தார். அதன் பிறகு தான் அவர் மீதும், அவரது கட்சியினர் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்தன. அவரது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க எம்.எல்.ஏ. க்களை இழுக்க தொடங்கியது.

அ.தி.மு.க வால், தே .மு.தி.க ஜெயித்ததா? தே .மு.தி.க வால் அ.தி.மு.க ஜெயித்ததா? என்பது ஒரு புறமிருந்தாலும் தே .மு.தி.க வில் இருந்து வெற்றிபெற்ற 29 பேரின் வெற்றிக்கும் விஜயகாந்தே முழுப்பொறுப்பு. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக சரியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை என்பவர்கள் சற்றே யோசிக்க வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை. எதிர்த்து பேசுபவர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப் படுகிறார்கள். கடந்த கால வரலாற்றிலே இல்லாத அளவிற்கு தே.மு.தி.க. உறுப்பினர்கள் 6 பேர் ஒரு ஆண்டுக்கு சஸ்பென்ட் செய்யப்பாட்டார்கள். பின்பு அது 6 மாதமாக குறைக்கப்பட்டது. விஜயகாந்த் கோபப்பட்டதை கண்டித்த எந்த ஊடகமும் இதை கண்டிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். 

சேந்தமங்கலம் சாந்தி என்றொரு உறுப்பினர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக சென்றுள்ளார். தேர்தல் வெற்றிக்கு முன் அவரெல்லாம் எவ்வளவுப் பெரிய பிரபலம்? என்ற கேள்வியில் இருக்கிறது விஜயகாந்த் விமான நிலையத்தில் கோபபட்டதற்கான நியாயம் ...

விஜயகாந்த், விமான நிலையத்தில் கோப பட்டதை கண்டிப்பவர்களுக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் ...

(1) தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை, இன்னொருவர் அத்துமீறி இடிக்கும் போது, "நான் என் வீட்டை சரியாக பராமரிக்கவில்லை அதனால் அவர் இடிக்கிறார்" என்று புன்முறுவலோடு வேடிக்கை பார்க்க வேண்டும்.

(2) தன் நெஞ்சம் எல்லாம் நிறைந்த காதலியை திருமணம் செய்ய விடாமல் சமூக கட்டுப்பாடு கூறி உறவினர்கள் பிரிக்கும் போது "நான் என் காதலியை நம்பவில்லை, சரியாக நான் காதலிக்கவில்லை" என்று சமாதானம் அடைந்து கொள்ள வேண்டும்.

(3) குறைந்த பட்சம் தன் நண்பர்கள் தன்னிடம் காரணமே சொல்லாமல் தன்னை விட்டு பிரியும் போது "போனால் போகட்டுமே" என்று சலனமின்றி வழியனுப்ப வேண்டும்.

இவை எதுவும் இல்லாத எவரும் விஜயகாந்தின் கோபத்தில் குற்றம் காண இயலாதவர்கள்...

இன்று ஜெயலலிதா செய்வது அப்பட்டமான பாசிசம் ... கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள் பச்சையான சந்தர்ப்பவாதிகள் ...

இப்படி எல்லாம் காரணங்கள் கூறி விஜயகாந்தின் செயல்பாட்டை நான் நியாயப்படுத்தவில்லை. உதாரணமாக பொறுப்பற்ற மனிதராக , குடிகாரராக ஒருவர் இருக்கிறார் என்பதற்காக நாம் யாரும் அவரது வீட்டை இடித்து விடவில்லை. அல்லது மற்றொருவர் இடிக்கும் போது வேடிக்கை பார்ப்பதில்லை. அதுபோலத்தான் தே.மு.தி.க என்பது விஜயகாந்தின் 30 ஆண்டுகால உழைப்பு. அதற்காக அவர் பாடுபட்டிருக்கிறார். தே.மு.தி.க. வின் உருவாக்கத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் விஜயகாந்தே முழுப்பொறுப்பு. அவரது செயல்பாடுகள் சரியில்லை என்றால் மக்களே அவரை புறக்கணிப்பார்கள்..

இறுதியாக ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தவர்களை அவமானப்படுத்துவது ஜெயலலிதாவின் வாடிக்கை. அப்படி அவரிடம் அவமானப்படாமல் வெளியேறியவர்கள் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், விஜய்காந்த் இந்த மூவர் மட்டுமே ... 

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக