சனி, 8 ஜூன், 2013

குப்பத்துக்காரன்

குப்பத்தை கண்டு "ச்ச்சீ"
என்று சொல்லும் பெரியண்ணே ...  

கொஞ்சம் நில்லுங்கள்...

என்னோடு பேசலாம் 
என் வாயில் துருநாற்றம் வீசாது 
உங்களைப் போல நானும் தினமும்
பல் துலக்குகிறேன்...

என் அருகில் நிற்கலாம்
என்னோடு கரம் பற்றலாம்
என் மீது அழுக்கு வாடை வராது
உங்களைப் போல நானும் தினமும்
குளிக்கிறேன் ...

நாகரிகம் உங்களுக்கு மட்டுமே 
சொந்தமானதல்ல; கூவ நாற்றம்  
நாங்கள் விரும்பி ஏற்றதுமல்ல ... 

குப்பை மேடுகள்
கூவ நாற்றம்
அழுக்கு மேனிகள்
ஆங்காங்கே கிழிந்த 
உடைகளோடு மனிதர்கள் ...

கரை பல்லோடு பெருசுகள் 
கீழாடையோடு திரியும் சிறுசுகள்  
ரோட்டோரம் நின்று சத்தமிடும் இளசுகள் 
எண்ணெய் தேய்க்கப்படாத
பரட்டைத் தலைகள் ...

கீற்றுக் கொட்டகை போல்
வீடுகள் - திறந்தவெளி 
சமையல் அறை - தெருவோரம்
சோறு திங்கும் எளிய மக்கள் ... 

வீட்டை சுற்றி சாக்கடை நீர்
சாராயம் குடித்து வீதியில் கிடக்கும்
குப்பண்ணன் - பீ அள்ளும் முனியம்மாள் ...

இதுதானே உங்கள் ...
முகம் சுருங்கவும், 
ச்ச்சீ என்று தூர ஓடவும்
எங்கள் தெருவை நுனிக்காலில் 
கடக்கவும் - எங்களோடு உறவாட 
தயங்கவும் செய்கிறது ...

குப்பத்தை "ச்ச்சீ" என்று உங்களால் 
சொல்லமுடியும் - குப்பத்திலும்,
கூவ நாற்றத்திலும் எங்களை 
சிறைபடுத்திய கொடுமைகளை 
நீங்கள் அறிந்திருக்கவில்லை
அது உங்களுக்கு தேவையுமல்ல

குப்பைகள் குவிந்து கிடக்கும்
குப்பத்தை கடப்பது மட்டும் தான்
உங்கள் பிரச்சனை - குப்பை மேடுகளில்
நாங்கள் சிறைபட்டிருப்பது உங்களுக்கு 
பிரச்சனையல்ல ...

கூவநாற்றம் உங்கள் நாசித்துளைகளை
அடைப்பது மட்டும் தான் உங்களுக்கு 
அறுவறுப்பு - கூவ நீர் எங்கள் குடிசைகளை
வட்டமிடுவது உங்களுக்கு பொருட்டே அல்ல ...

கிழிந்த உடை மனிதர் உங்கள் அருகில் 
நிற்பது மட்டும் உங்களுக்கு கவுரவக் குறைச்சல்;
கிழிந்த கந்தலாடைப் போல எங்களை கிழித்துப்
போட்டிருக்கும் இச்சமூகத்தின் மீது அசைக்க 
முடியாத தேசபக்தி ...

குடித்து விட்டு வீதியில் புரளும் குப்பண்ணன்
மட்டும் தான் உங்களுக்கு கேவலம் - வீதிக்கொரு
சாராயக்கடை திறந்து வைத்திருக்கும் அரசுகள்
மீது உங்களுக்கு எவ்வித கேவலமும் இல்லை ...

பீ அள்ளும் முனியம்மாள் தான் உங்களுக்கு
பிரச்சனை - முனியம்மாள் பீ அள்ளுவது 
உங்களுக்கு பிரச்சனையே அல்ல...

கிழிந்து கந்தலாகி தொங்கும் எங்களை விட,
எங்களை கிழித்து கந்தலாக்கிப் பார்க்கும் 
இச்சமூகம் எங்களை விட கேவலமானது; 
கேவலமான இச்சமூகத்தை தேசபக்தியோடு 
வணங்கும் நீங்கள் அருவருப்பானவர்கள் ... 

ஆனால் ...

உங்களுக்கு நாங்கள் தான் கேவலமானவர்கள்
இச்சமூகம் புனிதமானது ...

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக