திங்கள், 30 செப்டம்பர், 2013

சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? - ஜெயமோகர் கவலை


தன் கவலையை ஜெயமோகர் இப்படி தொடங்குகிறார் "இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள்.அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர். மணப்பெண்ணின் அப்பா அவரைக் கூட்டிவந்து, நடுவே நாற்காலி போட்டு அமரச் செய்து, பாடும்படி கட்டாயப்படுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள். ஆனால், மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்துத்தூங்கிவிட்டன. கொஞ்ச நேரத்தில் பாதிப் பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை யூகித்துப் பாட்டை நிறுத்திவிட்டார். அன்று அந்த மகா கலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்."

அங்கு நடந்த நிகழ்வுகளை ஜெயமொகரே சொல்லி இருப்பதால் நம்மால் ஓரளவு அந்த சூழலை உணர்ந்து  முடிகிறது. மணப்பெண் சிறந்த பாடகியில்லை என்று தெரிந்து தான் அங்கிருந்தவர்கள் பாட சொல்கிறார்கள். அதுவும் மிகுந்த கூச்ச்சப்பட்டவரை கட்டாயப்படுத்தி பாட சொல்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த சங்கீதத்தை கேட்கவேண்டும் என்பதல்ல நோக்கம், அந்த சூழலின் மகிழ்ச்சியை அவர்களின் குரலால் ரசிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சிறந்த சங்கீதத்தை கேட்கவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் என்பதாக இருந்திருக்குமானால் நல்லதொரு  வித்வானை வரவழைத்து கச்சேரி நடத்தி ரசிச்சிருப்பார்கள். பெரிய இடத்து குடும்பம் என்பதால் பணப்பிரச்ச்சனையும்  வர வாய்ப்பில்லை. அடுத்ததாக கமுகறை புருஷோத்தமன் என்ற மகா கலைஞன் அவமானப்படுத்தப் பட்டதாக வருந்துகிறார். அங்கிருந்த யாருக்கும் கமுகறை புருஷோத்தமன் அவர்களின் சங்கீதத்தை கேட்கவேண்டும் என்ற விருப்பமே இல்லை. மணப்பெண்ணின் அப்பாவின் விருப்பத்திற்கு இணங்கவே அவரும் பாடினார். அவர்கள் எல்லோரும் மணப்பெண்ணை  பாட சொல்லும்போதே மணி 9ஐ கடந்துவிட்டதாக ஜெயமொகரே சொல்கிறார். அவர்கள் பாடி, ஆடி மகிழ்ந்ததில் எப்படியும் ஒரு ஒருமணிநேரம் கடந்திருக்கலாம் என்ற தோராயமாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பிக்கும் போது மணி 10 க்கு மேலிருக்கும். அவர் பாடி கொஞ்சநேரத்திற்கு பிறகு தான் கூட்டம் கலைந்ததாகவும், சிறுவர்கள் தூங்கிவிட்டதாகவும் சொல்கிறார். அந்நேரத்திற்கு மேல் இயல்பாகவே சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தூக்கம் வருவது இயல்புதானே. இதில் மகா கலைஞன் எங்கே அவமானப்படுத்தபட்டார்? ஒரு மிகப்பெரிய பாடகரின் பாடல் சிறுமைப் படுத்தப்பட்டதற்கு 'அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை. எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான்' காரணம் என்கிறார் ஜெயமோகர். இந்த கோவம் பாடுவதில் எந்த நிபுணத்துவமும் இல்லாத ரஜினிகாந்தின் மருமகன் பாடுகிறேன் என்று 'கொலைவெறி'யோடு கத்தியபோது வந்திருக்கணும். அப்போது கோவப்பட்டிருந்தால் ரஜினிகாந்த் என்ற மகா நடிகரின் மருமகனையே கேவலப்படுத்தியமையால் ஜெயமோகருக்கு சினிமாப்படத்திற்கு கதை எழுத வாய்ப்பு கிடைக்காது. என்பதால் இங்கே வந்து சாமான்யன்கள் மீது பாய்கிறார்.

அடுத்ததாக தனக்கே உரிய ஆற்றாமையோடு சாமான்யன் எழுதலாமா? சாமான்யன் பாடலாமா? சாமான்யன் பேசலாமா? என்றல்லாம் அபத்தமாக எழுதியிருக்கார். சாமான்யனுக்காக மாடி வீட்டு கோமான் எழுதும்போது, பேசும் போது சாமான்யனுக்காக சாமான்யனே எழுதுவதிலும், பேசுவதிலும் என்ன தவறு இருந்துவிடப் போகிறது? தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு அடக்குமுறையையும் அவரவரே எதிர்த்துப் பேசவும், எழுதவும், போரிடவும் தயாராக இருக்கவேண்டும். அப்போது தான் ஒரு சமூகம் வளர்ந்த, முன்னேறிய அறிவார்ந்த சமூகமாக இருக்கமுடியும். ஆனால் ஜெயமோகரோ ஒரு துறையின் நிபுணன் என்பவன், ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக்கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து, அதன் மிகச் சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும்' என்கிறார். இது கிட்டத்தட்ட ராஜாஜி சொன்ன குலக்கல்வி திட்டத்தை போன்றது தான். 'எழுத்தாளனின் வாரிசு, எழுத்தாளன், செருப்பு தைத்தவனின் வாரிசு செருப்பு தைப்பவன்' என்கிற தொனியில் தான் 'அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும்' என்கிறார். யாரும் இல்லை என்றாலும் இந்த சமூகம் வாழும் என்பதுதான் எதார்த்தம். அப்படி இருக்கையில் ஏன் ஒருவனையே சார்ந்திருக்க வேண்டும்? அடுத்தபடியாக 'பாடத் தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள். ஆனால். இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள்' எந்தவொரு  சமூகத்திலும்  எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு. அதுவே சமூகநீதி. ஆனால் ஜெயமோகரோ ஒரு சிலர்  மட்டும் தான்  சமூகத்தின் மையப்புள்ளி என்றும் அவர்களை பெருவாரியான பலர்  வெறும் பார்வையாளராக இருந்து அவர்களின் பல்லவிக்கு வாயசைக்க சொல்கிறார். இதைதான் மநுவும் சொல்கிறது. பிராமிணர்கள் தான் வேதம் எழுத வேண்டும், பிராமிணர்கள் வேதம் படிக்க வேண்டும், அவர்கள் தான் சத்திரியர்களுக்கு வேதம் சொல்லிகொடுக்கவேண்டும். தப்பு தவறிக்கூட சூத்திரர்கள் வேதம் படிக்கவோ, படிப்பதை காதால் கேட்கவோ கூடாது. அப்படி கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுங்கள் என்றது. அதைதான் நம்ம ஜெயமோகர் ரொம்ப சாப்டாக, மறைமுகமாக  சொல்கிறார்.

அடுத்ததாக 'இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குத் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள்' என்கிறார்.  எழுத்தாளருக்கும், வாசகனுக்கும் உள்ள இடைவெளி இன்றைக்கும் அப்படியே  இருக்கிறது. வாசகர்களை எழுத்தாளர்கள் குறைந்தபட்ச அறிவுடையவர்கள் என்றளவில்  கூட மதிப்பதில்லை. ஆனால் வாசகர்களோ எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். பேஸ்புக்  போன்ற சமூக வலைதளங்கள் எழுத்தாளர்களோடு வாசகர்களை நெருங்க வைத்திருக்கிறது. அதுதான் ஜெயமோகர் போன்ற எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை.அவர்கள் வாசகர்கள் தங்களை தேவ தூதர்களைப் போல் கொண்டாடவேண்டும், அவர்களுக்கு எளிதில் காட்சி அளிக்கக்கூடாது என்பதிலும், தம்மைப் பற்றி  வாசகர்கள் மத்தியில் உள்ள உயர்ந்த பிம்பம் கரைந்துவிடக்கூடாது என்பதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் கல்லெறிந்து விட்டன. அதனால் தான் ஜெயமோகருக்கு இதன் ஜனநாயத்தில் சந்தேகம் வந்துவிட்டது. சமூக வலைதளங்கள் ஜனநாயக களமாக இருக்கவேண்டும் என்பதோ, இந்த சமூகம் ஜனநாயக சமூகமாக இருக்கவேண்டும் என்பதோ ஜெயமோகரின் கவலை அல்ல, அப்படி நினைத்தால் நம்மைவிட அதிசிறந்த முட்டாள்கள் வேறு எவருமில்லை. இந்த சமூகம் தன்னையும், தன்னைப் போன்றவர்களையும் மட்டுமே கொண்டாடவேண்டும் என்பது தான் அவரின் நோக்கம். அதில் சமூக வலைதளங்கள் கல்லெறிந்துவிட்டதால் தான் சமூக வலைதளங்களின் ஜனநாயகத்தைப் பற்றி கவலை கொள்கிறார். இதைதான் 'நம்ம ஊரில் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது' என்று சொல்வார்கள்.  சாமான்யன் நிபுணனை பார்த்து பொறாமை படுவதாக சொல்கிறார் அவர், ஆனால் அவர் எழுத்துக்களை வாசிக்கும் பொழுது சாமான்யங்களின் அறிவுத்திறனைப் பார்த்து நிபுணன் தான் பொறாமைப் படுவதாக தோன்றுகிறது. சாமான்யங்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கும் அரசியலையும், சமூகவியலையும் பற்றி நிபுணன் தான் தொலைகாட்சி போன்ற ஊடகங்களில் கருத்து சொல்லவேண்டும் என்று எண்ணுவது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம். அதைதான் ஜெயமோகர் சரி என்கிறார். 'ஆனால், இன்றைய சாமானியர்களின் ஊடக அலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கெனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது' என்று சொல்லும் ஜெயமோகர் நேற்றைய காலம் வரை நிபுணன்களும், கலைஞர்களும் சாமான்யன்களை வலுக்கட்டாயமாக அடித்து துரத்தினார்கள் என்பதை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எந்த நிபுணர்களுக்கும் இந்த சமூகம்  முழுவதும் அறிவார்ந்த சமூகமாக உற்பத்தியாவதில் உடன்பாடில்லை என்ற உண்மை வாதத்தையும் புறந்தள்ளுகிறார். உண்மையான அறிவையும், கலையையும் எல்லோருக்கும் கிடைக்கும்  படி செய்பவனே நிபுணன், மக்கள் நலன் சார்ந்த முற்போக்குவாதி எல்லாமே. அதைவிடுத்து இந்த சமூகம் முழுவதும் எல்லாவற்றிற்கும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும், தன்னைப் போன்ற சிலரையே சாந்திருக்க வேண்டும் என்று நினைப்பவன் குறுகிய மனநோயாளி என்பதை ஜெயமோகருக்கு சொல்லிக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்..

- தமிழன் வேலு 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ். சின் திடீர் தமிழ்ப்பாசம்

எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் ஒருவன் தப்பும் தவறுமாக தமிழில் பேச முயன்றுவிட்டாலே தமிழ் வளர்ந்து விட்டதாக நினைத்து வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் தமிழர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலும் உணர்ந்து கொண்டதாகவே கருதுகிறேன். என் சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாகவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. யின் சமீபகால செயல்பாடுகளும் அமைந்து வருகிறது. எந்த சூழலிலும், எந்த முகமூடியோடும் தமிழகத்திற்குள் காலூன்ற முடியாமல் திணறும் சங்பரிவார் கும்பல் தமிழகத்தை நோக்கி வேகமாக காய் நகர்த்தி வருகிறது. அதற்காக அவர்கள் தற்போது எடுத்திருக்கும் ஆயுதம் தான் தமிழ். அதனால் தான் திருச்சி இளந்தாமரை மாநாட்டில் மலைக்கோட்டை என்பதை 'மலை கொட்டை' என்று மோடி தமிழை கொலை செய்ததற்கே  'மோடி தமிழில் பேசினார் ... தமிழ் வாழ்க !' என்று முகநூளில் பதிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழர்கள் இருக்கும் வரை மோடி மஸ்தான்கள் அல்ல, கேடி மஸ்தான்களே தமிழர்களை வீழ்த்திவிடுவார்கள். வெளிநாட்டுக்காரன் ஒருவன் தமிழ்நாட்டில் வந்து பிச்சை எடுக்கவேண்டும் என்றால் தமிழில் தான் பிச்சை எடுக்க வேண்டும். அப்போது தான் அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்துகொண்டு பிச்சை போடுவார்கள். இதுவே வெளிநாட்டிலோ அல்லது வெளிமாநிலத்திலோ சென்று அந்தந்த மொழியில் பிச்சை கேட்டால் அந்தந்த மொழிக்காரன் எவனும் தம் மொழி வளர்வதாக எண்ணி பெருமை கொள்ளமாட்டான். ஆனால் தமிழன் மட்டும் பெருமை கொள்கிறான். இது எந்த மாதிரியான தமிழ் பற்று என்று புரியவில்லை.

தலைப்பு திசை மாறுவதாக உணர்கிறேன் மன்னிக்க... என் சந்தேகத்தை நாடாளுமன்றத்தில் பேசிய உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி தருண் விஜயின் பேச்சும், திருச்சி இளந்தாமரை மாநாட்டின் தீர்மானங்களும் உறுதி செய்கின்றன. அந்நிகழ்வுகள் தான் நம்மை எச்சரிக்கின்றன..  


தமிழை இரண்டாவது தேசிய மொழி ஆக்குங்கள் :

'இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழும் நம்மில் பலரும், ஒருவிதமான அகங்காரத்திலேயே இருந்துவிட்டோம். அதனால்தான் நம் சொந்த நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும்  அறிந்துகொள்ளவில்லை. ஏழு கடல்களையும் மலைகளையும் தாண்டி தமிழ் மொழியின் தாக்கம் பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. நம் நாட்டில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய தமிழ் மொழிக்கு, உரிய மதிப்பையும் உயரிய நிலையையும் நாம் கொடுக்கத் தவறி விட்டோம். அதனால், இப்போதாவது விழித்துக்கொள்வது நல்லது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழைப் போதிக்கும் திட்டங்களை நாம் வகுத்தாக வேண்டும். தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்' என்று தமிழ் மீதான திடீர் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யும், இந்திய அரசால் நான்குமுறை தடை செய்யப்பட இயக்கமான ஆர்.எஸ்.எஸ் சை சேர்ந்தவருமான தருண் விஜய். பி.ஜே.பியை சேர்ந்த ஒருவர், அதுவும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழின் பெருமைகளை இப்படி உயர்த்தி பேசி இருப்பதால் உலக தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை உண்டாகிவிட்டதாக சிலர் பெருமை பேசுகிறார்கள். அவருக்கு வாழ்த்து செய்தியை அனுப்புகிறார்கள்.

இந்த தருண் விஜய், இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஹிந்தி மொழி ஆலோசனை குழுவில் இவர் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ வார இதழான 'பாஞ்ஜன்யா' வின் ஆசிரியராக 1986 முதல் 2008 வரை இருந்திருக்கிறார். 'இந்து - இந்தி - இந்தியா' என்ற கொள்கையை தாங்கி கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கிய பங்காற்றிய தருண் விஜய்க்கு திடீர் என்று தமிழ் காதல் வருவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வியில் தான் இந்துத்துவவாதிகளின் சூட்சமம் அடங்கியிருக்கிறது. இதை தான் தமிழ் பார்ப்பன ஊடகங்கள் வானளாவ புகழ்ந்து பேசுகிறார்கள். 'ஆர்.எஸ்.எஸ். காரரே தமிழின் பெருமைகளை பேசுகிறாரே, தமிழ் வாழ்க' என்று சிலாகித்து எழுதுகிறார்கள். ஒருவேளை நாளைக்கே ராஜபக்சே தமிழ்தான் உலகிலேயே சிறந்தமொழி, தமிழை உலகத்தின் முதல் மொழியாக அறிவிக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டால் ராஜபக்சேவுக்கே தமிழ்ப் போராளி, பட்டம் கொடுத்து விடுவார்கள் போலிருக்கு.      


பி.ஜே.பி இளந்தாமரை மாநாட்டு தீர்மானம் :

இலங்கையில் சமீபத்தில் நடந்த வடக்கு மாகாண தேர்தலில் ஆட்சி அமைக்க தேர்வு பெற்றுள்ள விக்னேஸ்வரனுக்கு இம்மாநாடு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைய உள்ள அரசின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு பணிகளை விரைவாக செய்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்வது. இலங்கையில் 13–வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. 

 கச்சத்தீவு நமது சொத்து. கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா, இந்திராகாந்தியால் தாரைவார்த்தபோது வாஜ்பாய் பாராளுமன்றத்தில் அதை எதிர்த்தார். கச்சத்தீவில் நமக்கு உள்ள உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது. தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ். க்கு  திடீர் தமிழ்ப்பாசம் ஏன்?

தமிழக அரசியல், மற்றும் சமூகத்தை பொருத்தமட்டில் பெரியார் ஒரு சகாப்தம். அவரை கடந்து தமிழக வரலாற்றை தீர்மானிப்பதே கடினம் என்பது போல அவரின் உழைப்பும், சமூகத்திற்காக தன் மொத்த வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்ட சமூக பொறுப்புமே அதற்கு காரணம். இந்நாட்டில் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட முசாபர் கலவரம் கூட அதற்கு சாட்சி. ஆனால் தமிழகத்தில் அப்படி எவ்வித அசாம்பவிதங்களும் நடந்ததே கிடையாது. அந்த அளவுக்கு இங்கே இந்து - முஸ்லிம் ஒற்றுமை பேணப்பட்டு வருகிறது. ஆரியப்புளுகுகளையும், மனுதர்மத்தையும் நாறு நாராக கிழித்து தொங்கப்போட்டவர்கள் இருவரே. ஒருவர் புரட்சியாளர் அம்பேத்கர், மற்றொருவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அதோடு மட்டுமின்றி கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து இந்தியாவிலேயே போராட்டம் வெடித்தது தமிழகத்தில் மட்டும்தான். அதை வீரியத்தோடு முன்னெடுத்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியார் பிறந்த மண்ணுக்கு இந்துத்துவவாதிகளால் அவ்வளவு எளிதில் கால்வைத்து முடியுமா? அதற்குத்தான் தேவைப்படுகிறது இந்த தமிழ் முகமூடி. மேலும் பல ஆண்டுகளாக தமிழகத்தில் எப்படியாவது ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும் என்ற பா ஜ கவின் கனவு இன்று வரை நினைவேறாமலேயே  இருந்து வருகிறது . தமிழகத்தில் நடந்த சில தேர்தல்களில் திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்த பிறகும்  தங்களுக்கான ஒரு நிரந்தரமான வாக்கு வங்கியை உருவாக்க முடியாத சூழலில் ,பா ஜ க வினர் தங்களை  தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர்களாக  அடையாளப்படுத்திக்கொள்ள  முயல்கின்றனர். NCERT பாட புத்தகத்தில் தமிழக மாணவர்களையும்  ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்று இருந்த  கார்ட்டூன் தொடர்பாக பா ஜ க , அல்லது அதன் தோழமை இந்து  அமைப்புகள் மேற்கொண்ட போராட்டங்கள் என்ன ? அதோடு மட்டுமின்றி தமிழ் , தமிழ் தேசியம் என்ற பெயரில்   சில தமிழ் அமைப்புகள் பெரியாருக்கு எதிரான கருத்துகளை தமிழ்நாட்டில் பரப்புரை செய்ததின் விளைவு தான் , பெரியாரிய எதிர்ப்பு கொள்கை கொண்ட பா. ஜ. க இப்போது  இந்துதுவதிற்கு வலுசேர்க்க  தமிழ் முகமுடியை அணிந்து கொள்ள துடிக்கிறது.

எந்த காலத்திலும் ஈழத்தமிழர்கள் பற்றியோ, தமிழக மீனவர்கள் பற்றியோ கவலை கொள்ளாத பி.ஜே.பி இன்று தன்னுடைய மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால் அதன் தமிழர்ப் பாசத்திலும், தமிழ்க்காதலிலும் உள்ள உள்ளரசியலை நாம் உற்று நோக்கத்தான் வேண்டும். வட மாநிலங்களிலே காங்கிரசுக்கு நிகராக உள்ள பி.ஜே.பி தென் மாநிலங்களில் கால் பதிக்க  முடியவில்லை.குறிப்பாக தமிழகத்திற்குள். அருகிலே இருக்கும் கர்நாடகாவில் கூட பி.ஜே.பியால் ஆட்சி அமைக்க முடிகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு MLA சீட் கூட வாங்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் காங்கிரசும், பி.ஜே.பி யும் ஒரு மொழி ஆட்சி கொள்கையை கொண்டவர்கள். ஆனால் திராவிட இயக்கங்களால்  தமிழகத்தில்  மாநில சுயாட்சி உரிமை முழக்கம் உருவானது. ஈழம் பற்றி எரிந்துகொண்டிருந்த போதே, தமிழகம் ஈழத்தமிழர்களுக்காக கொதித்தெழுந்த போதே எவ்வித சிறு சலசலப்பையும் காட்டாமல் மவுனம் காத்துக் கொண்டிருந்த பி.ஜே.பி இன்று ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறது என்பது ஏமாற்றுவேலை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? தமிழகத்தில் உருவாக்கி இருக்கும்  காங்கிரசுக்கு எதிரான மனோநிலையை அறுவடை செய்ய பி.ஜே.பி முயல்கிறது என்பதை தவிர இதற்கு வேறேதும் காரணமிருக்க முடியாது. மேலும் கடந்த காலங்களில் தமிழகத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைந்திருக்கிறது. தமிழகத்தில் செல்லாக்காசான பி.ஜே.பி.யோடு கூட்டு சேர திராவிடக் கட்சிகள் எதுவும் தயாராக இல்லாத நிலையில், தமிழ்தேசியம் பேசும் சிலர் காங்கிரஸ் எதிர்ப்பில் பி.ஜே.பி யை முன்னிறுத்த துணிவதை பி.ஜே.பி யும், ஆர்.எஸ்.எஸ்சும் வெகுவாக ரசிக்கிறார்கள். இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் இயக்கங்கள் தமிழகத்தில் தம் கிளையை தொடக்கி கொள்ளவும், தென் மாநிலத்தில் குறிப்பாக மதக்கலவரம் அற்ற தமிழகத்தில் பிரிவினை உணர்வை தூண்டி அதன் மூலம் தன்னுடைய பாரத  கொள்கையை விரிவாக்கி  கொள்ள முயல்கிறது. காங்கிரசின் இரண்டகத்தால் தமிழகம் கொதித்தெழும் போதெல்லாம் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் பி.ஜே.பி தலைவர்கள், காங்கிரஸ் எதிர்ப்பை பி.ஜே.பி ஆதாரவாக மாற்ற முயன்றதை தவிர தமிழர்களின் நலன்களுக்காக சிறு துரும்பையும் அவர்கள் கிள்ளிப் போட்டதில்லை. அதே போல தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே தமிழக பிரச்சனையை கூட்டாக முன்வைக்கும் போதே அல்லது நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சனை எழும் போதே அதை அவர்கள் 'காங்கிரஸ் எதிர்ப்பு தங்களுக்கு சாதகம்' என்றளவிலே கையாண்டு வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானாலும், அரசியல் கட்சி தொடங்க வேண்டுமானாலும் 'தமிழ், தமிழர் உரிமை' என்பதை பெயரளவிலாவது கொண்டிருக்கவில்லை என்றால் அவர்களால் இங்கே கட்சி நடத்த முடியாது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  வெறுப்பு பிரச்சாரம் செய்து  அரசியல் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு கூட 'தமிழ் தேசிய போராளி' பட்டம் கொடுக்கிறார்கள் தமிழர்கள். 'என்னதான் ஒருவன் சாதி வெறியனாக இருந்தாலும், மத வெறியனாக இருந்தாலும் அவன் தமிழ் மொழியை உயர்த்திப் பேசினாலோ, ஈழத்தமிழர்களுக்காக அறிக்கை கொடுத்துவிட்டாலோ அவன் புனிதனாகிவிடுகிறான்'. இது தமிழகத்தின் சாபக்கேடு. இந்தி மொழிக் கொள்கையிலோ, மூன்று தமிழர்கள் தூக்குதண்டனை விவகாரத்திலோ, கூடங்குளம் அணுஉலை விவகாரத்திலோ, முல்லைப் பெரியாறு, காவிரி போன்ற தமிழர்களின் இத்யாதி, இத்யாதி பிரச்சனைகள் எதிலும் காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் ஒரே பார்வை தானே ஒழிய வேறல்ல. இந்தியாவில் பி.ஜே.பியை ஆட்சிக்கு கொண்டுவர, மோடியை முன்னிறுத்துகிறார்கள். ஆனால் மோடியோ 'நான் ஒரு இந்து தேசியவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்' என்கிறார். இந்து தேசிய பெருமை பேசிக்கொண்டு தமிழகத்தில் கால்வைக்க மோடிக்கோ, அவரது அல்லக்கைகளுக்கோ துணிவில்லை. அதனால் தான் அவர்கள் தமிழ், தமிழ்தேசிய பெருமை பேசிக்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையாளர் தோழர் வே.மதிமாறன் அவர்களிடம் கேட்டதற்கு 'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேரெதிர் கொள்கையை கொண்டுள்ள பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இந்துமதத்தை தீவிரமாக தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கரே ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு வந்திருக்கிறார் என்று புளுகுவதும், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அம்பேத்கர் மீது கொண்டுள்ள அபிரிமிதமான நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை தன்வயப்படுத்தும் யுக்தியை போல, தமிழர்கள் தமிழ் மொழி மீது வைத்திருக்கும் பற்றை  பயன்படுத்தி தமிழகத்திற்குள் நுழையும் சந்தர்ப்பவாத முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. இன்று  தருண் விஜய் தமிழை உயர்த்தி பேசிவிட்டார், மோடி தமிழில் பேசிவிட்டார் என்று பெருமை கொள்பவர்கள் மோடி சமஸ்கிருதம் கலக்காத தூயத்தமிழில் சிறுபான்மை பெண்களின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கொள்ளுவோம் ,பாபர் மசூதியை இடித்ததை நியாயப்படுத்தி ராமருக்கு கோவில் கட்டுவோம், இந்தியாவை இந்து தேசமாக அறிவிப்போம்' என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?' என்று எதிர் கேள்வி எழுப்புகிறார்.

மோடி மஸ்தான் வித்தைக்காரர்கள் எதையும் செய்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தீவிர பார்ப்பனிய கண்ணோட்டம் கொண்டவர்கள் தமக்கு உடன்பாடில்லாத கொள்கையை கூட தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துவார்கள் என்பதையே இதில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்...

உணர்ந்து கொள்ளுவார்களா தமிழ்தேசிய வாதிகள்?

- தமிழன் வேலு 

புதன், 4 செப்டம்பர், 2013

பேய் மழையும் .. சேரிக் குடிசையும் ..!

போனடிக்கும் சத்தம் கேட்டு, பதறி அடித்து  கொண்டு எழுந்து போனை எடுக்கிறார் பார்வதி அம்மா. இந்த நேரத்தில் புள்ள ஏன் போன் பண்றான்? அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே... அப்பா வீரனாராப்பா..! எம் புள்ளைக்கு எந்த கேடும் வராம நீதான் பாத்துக்கணும் ன்னு மனசுக்குள்ளே குல தெய்வத்தை வேண்டிக்கிட்டு, ஒருவித பதற்றத்தோடு போனை காதில் வைத்து 'என்னப்பா' என்றதும் 'அம்மா வீடு ஒழுகுதாம்மா? காத்து கூரையை தூக்கிடுச்சா?' ன்னு அழும் குரலில் கேட்கிறான் முரளி. டேய் என்னடா அர்த்த ராத்திரியில போன் பண்ணி உளறுற? கனவு ஏதும் கண்டியாடா? இல்லம்மா இங்க சரியான மழை, கூடவே காத்தும் வேகமா அடிக்குது அதான் பயத்துல உங்களுக்கு போன் போட்டேன் என்கிறான். இங்க மழைலாம் இல்லப்பா, அப்படியே வந்தாலும் அப்பா இருக்காருல்ல அவரு பாத்துக்குவாரு, நீ கவலைப்படாம பத்திரமா இருப்பா,  காலையில கோயிலுக்கு போயிட்டு வா. சரியா... 'சரிம்மா'. உடம்பு எப்படி பா இருக்கு? நல்ல இருக்கும்மா? 'சரி நீ போயி தூங்கும்மா' 'சரிப்பா பாத்து பத்திரமா இருப்பா' ... இந்த தூக்க கலக்கத்திலும் பிள்ளையின் நலம் கேட்கும் அம்மாவின் பாசத்திற்கு தான் எத்தனை வாசமிருக்கு..! 

வாசத்தை நுகர்ந்தவனாய் மனதை தேற்றிக் கொண்டே தூங்க முயன்றான்...  தூக்கம் அவனை நெருங்கவே இல்லை. மணி  1.30 ன்னு கடிகார முள் காட்டுது. மறுபடி எவ்வளவோ முயற்சித்தும் தூக்கம் வரல. யாரோ வானத்தை ரெண்டாக பிளக்கிறார்கள் போல். அப்படி ஒரு இடி சத்தம். மீண்டும் எழுந்து அமர்ந்து கொண்டு மழையை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் முரளி. இந்த மழை எத்தனை கவிஞர்களுக்கு கவிதையாகி இருக்குமோ, எம் மக்களின் கண்ணீரும் சேர்ந்து தானே மழை நீராய் ஓடுகிறது என்ற தவிப்பை அவனால் அடக்கி கொள்ள முடியவில்லை. அந்த கவிஞர்களுக்கெல்லாம் மனசாட்சி என்றுமே இருந்ததில்லை. அதனால் தான் அவர்களின் கவிதைகள் சேரிக்குள் நுழைய மறுக்கின்றன; அவர்களின் எழுத்துக்கள் சேரி மக்களின் கண்ணீரை தீண்ட மறுக்கின்றன... மழையை வர்ணித்து எத்தனை, எத்தனை கவிதைகள், எத்தனை, எத்தனை பாடல்கள், எத்தனை எத்தனை கதைகள் எல்லாமும் மழையை வர்ணனை செய்தவையே.  'மழை மீதேன் இத்தனை வெறுப்பு?' என்று அவனையே அவன் கேள்வி கேட்டுக் கொள்ளவும் அவன் தயங்கவில்லை. பதிலொன்றும் இல்லாமல் இல்லை. வெறுப்பு மழை மீதல்ல, மழையில்லை என்றால் பஞ்சத்தில் தவிக்கும் முதல் மனிதர்களும் சேரி மக்கள் தான் என்பதையும் அவன் அறியாமலில்லை. பஞ்சம் பிழைக்க, மழை வேண்டும் தான். ஆனால் அந்த மழை நீரிலும் சேரி மக்களின் கண்ணீர் நனைகிறதே என்ற ஆற்றாமை தான். தண்ணீருக்குள் அழும் மீனின் கண்ணீரை போல, மழைநீரில் நனையும் சேரி மக்களின் கண்ணீரும் காணாமலே போய்விடுகின்றன, அவர்களின் நெஞ்சத்தை தொடாமலே கரைந்துவிடுகின்றன.  விளை பூமியை பதன்படுத்துவது, விதை நெல்லை பத்திரபடுத்தி வைத்திருப்பது, நாற்று நடுவது, கலை பறிப்பது, பூச்சி மருந்து அடிப்பது, காவல் காப்பது, கதிர் அறுப்பது, கதிர் அடித்து மூட்டை கட்டி, அதை முதலாளி வீட்டில் கொண்டு பத்திரப்படுத்தும் வரை இவர்களுக்கு உறக்கமில்லை. உறக்கமின்றி உழைக்கும் இவர்கள் எத்தனை நாட்கள் உணவில்லாமல் துடித்திருக்கிறார்கள், களைப்பாற உறைவிடமின்றி தவித்திருக்கிறார்கள். உறக்கமின்றி உழைத்த உழைப்பாளிகளுக்கு களத்தில் சிதறிய பதருகளையே கூலியாக கொடுத்த அந்த முதலாளிகள் மீதுதான் வெறுப்பு. கூலியை உயர்த்தி கேட்டதற்கு கூலியாய் கிடைத்தது வெண்மணி கொடூரங்களே. கொடூரங்களை அரங்கேற்றும் கொடியவர்களை அடைகாக்கும் இந்த குடியரசு மீதுதான் வெறுப்பு. உண்மையில் இந்த அரசுகளுக்கு வெட்கமில்லை. சொந்த தேசத்து மக்களை அகதிகளைப் போல், அடிமைகளை போல் நடத்தி, அவர்களின் உணர்வுகளை குப்பைகளென ஒதுக்கும் இந்த அரசுகளுக்கு எவ்வித மானமும் இல்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும், சொந்த நாட்டு மக்களை கூவத்தின் அருகில், குடிசையில் வாழ வைதத்தது தான் இந்நாட்டின் பெருமை. இப்படி சொந்த நாட்டின் இரண்டகத்தை நொந்து கொண்டவனாய் அந்த மழைநாளின் துயர நினைவுகளில் மூழ்கிப் போனான் முரளி...

அப்போது முரளி ரொம்பவே சின்னப்பையன். எதோ ஒரு பண்டிகை நாள் வர இருக்கிறது. முரளியின் வீடு பத்துக்கு பத்தடி கருப்பஞ்சருகு வேய்ந்த கூரையாலும், களிமண் சுவராலும் ஆன வசந்த மாளிகை. உண்மையில் அந்த சுவர்களை பளிங்கு கற்கள் போலவே மொழு மொழு வென வைத்திருப்பார் பார்வதி அம்மா. தரையையும் அப்படித்தான். ஒருமுறை அந்த தரையில்  பம்பரம் விட்டு கையளவு பெயர்த்துவிட்டான் முரளி. அதற்கு பரிசாக அக்காவின் ஐந்து விரல்களையும் முரளியின் முதுகில் பதித்தார்கள். அப்படி பொத்தி, பொத்தி பார்த்து அழகாக பராமரித்த வீடுதான் அது. அந்த வீட்டிலே மின்சார வசதி இருக்காது. 5 மணிக்கெல்லாம் இரவு உணவு தயாராகிவிடும். அப்போதே ஒரு முறை சாப்பிட்டுவிட்டு பம்பரம் ஆட ஓடிவிடுவான் முரளி. அப்படித்தான் அன்றும் சாப்பிட்டுவிட்டு பம்பரம் ஆட சென்றான். அன்று திடீரென்று கடுமையான மழை பிடித்து கொண்டது. சக நண்பர்களோடு ஊர் மாரியம்மன் கோவிலில் நின்றுகொண்டான். ஒருமணிநேரம், ரெண்டுமணிநேரம், மூணு மணிநேரம் நின்றுகொண்டே இருந்தனர். மழை விடவில்லை. ஒருத்தர் ஒருத்தர் வீட்டிலிருந்தும் யாரவாது தேடிகிட்டு வருவதும் அவர்களோடு அவர்களின் யாரோ ஒருவன் செல்வதுமாக ஆட்கள் குறைய தொடங்கியது. மணி இரவு 9.00 ஆகிவிட்டது. இவனுக்குள் பயம் தொற்றிகொண்டது. இப்ப கூட ரெண்டு பெரியவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் அங்கே படுப்பவர்கள். அழுதுவிடுபவன் போலாகிவிட்டான். எதிரில் நிற்பவர்கள் உருவம் கூட தெரியாத இருள். ஆளை அடித்து கொள்ளும்படியான மழை. கூடவே காத்தும்... மின்னலும், பலமான இடியும் சேர்ந்து கொள்ளவே அழுதுவிட்டான்...       

வீரமுத்து தாத்தா அவனை தன் அருகில் அழைத்து நிறுத்திக் கொண்டார். 'டேய் பயப்படாத டா, நாங்க இருக்கோம்ல' என்று தேற்றிகொண்டிருந்தார். பிளாஸ்டிக் கவரை தலையில் போட்டுகொண்டு யாரோ வருவதை பிளாஸ்டிக் கவரில் படும் மழைசத்தம் உணர்த்தியது. கோவிலுக்குள் தான் வந்தார்கள்.  'முரளி... முரளி...' என்று அழைத்தார்கள். அப்போதுதான் தெரிந்தது அது அவன் அக்கா சுந்தரி. அவனை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்கள். வீட்டில் சீமண்ணெய் விளக்கொளியை சுற்றி அம்மா, அப்பா, அக்காக்கள் அமர்ந்திருக்க உள்ளே சென்றான். அப்பா மட்டும் திட்டினார். அம்மா அவனுக்கு சோறு போட்டு கொடுத்தார்கள். சாப்பிட்டு கொண்டிருந்தான். இன்னமும் மழை விடவில்லை. இப்ப காத்தும் கொஞ்சம் வேகமா அடிச்சிகிட்டு இருந்துச்சு. வரும்போது காத்துல நடக்கவே கஸ்டபட்டான். காத்து, மழை சத்தத்தை தாண்டி ஒரு குரல் வேகமாக கேட்டது. அது பக்கத்துவீட்டு பழனி அண்ணனின் குரல். 

'தொரசாமி எப்போவ்... கூரையை காத்து தூக்கிடுச்சிப்பா' ன்னு வேகமா கத்தினார். 

'எந்த பக்கம் டா' அப்பா கேட்டார். 

'மேற்கால பக்கம் பாருப்பா' ன்னு அண்ணன் சொன்னாரு.

தலையில ஒரு துண்டை போட்டுக்கிட்டு அப்பா வேகமா ஓடினாரு. முறத்தை தலையில கவுத்துகிட்டு அம்மாவும் பின்னாடியே போய்ட்டாங்க. காத்து வேகமா அடிக்குது, சீமெண்ணெய் விளக்கு காத்துக்கு நிக்கமாட்டன்குது. அதை சின்ன அக்கா, காத்துக்கு மறைவா பிடிச்சிகிட்டு நிக்குது. இன்னொரு ஒழுகுற இடத்தில வச்ச பாத்திரத்தில இருக்கும் தண்ணியை வெளிய ஊத்தவும், திருப்பி வைக்க்கவுமாக இருந்தாங்க. முரளி ரொம்பவே பயந்துட்டான். பெரிய அக்கா மடியில உட்காந்து கிட்டான். அப்படியே தூங்கியும் போனான்...

கண்ணை கசக்கிகிட்டு காலையில எழுந்து பார்த்தான். விடிய, விடிய கொட்டிய மழைக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது போலும் மழை விட்டிருந்தது. பளிங்கு கற்கள் போன்ற சுவர்கள் கரைந்து போயிருந்தன, மொசைக் போன்ற மொழு, மொழு களிமண் தரைகள் வீங்கி கிடந்தன. கருப்பச்சருகு கூரைகள் வாயைப் பிளந்து கிடந்தன. எல்லாமே அலங்கோலமா இருந்துச்சு. எல்லார் குடிசைகளும் ஒட்டுவேலைகள் நடந்து கொண்டிருந்தன. அம்மா, எப்பவோ கட்டி வச்சிருந்த கருப்பஞ்சருகை தயார் பண்ணி கொண்டிருந்தார், அப்பா வேப்ப மரத்தை வெட்டிகிட்டு இருந்தாரு. அக்காக்கள் ரோட்டுல இருந்து முழங்கால் சேத்துல  தண்ணியை எடுத்துட்டு வந்துகிட்டு இருந்தாங்க. கிழக்கால பக்கமா வீடு சாஞ்சிருந்ததை அப்போதான் முரளி பார்த்தான்...

மரத்தை வெட்டி தூணுக்கு ரெடி பண்ணிட்டாரு அப்பா. வேக, வேகமா  நடக்குது. மழை நீரில் கரைந்து போயிருந்த கிழக்கு பக்க சுவற்றை அப்பா இடித்தார். முழுசா இடிச்சிட்டு ஒரு அஞ்சாறு இளவட்ட பசங்களை கூட்டிகிட்டு வந்து கிழக்கு பக்கமா சாஞ்ச தூணை எடுத்துட்டு, அப்படியே புதுச நட்டு  நிறுத்திட்டாரு. வாயை பிளந்த கூரைகளை சரிசெய்ய அப்பா மேல ஏறிகிட்டாரு. அம்மா அண்டகவையை வச்சி சருகை எடுத்து கொடுக்க, ஒழுகுற இடம், காத்துல தூக்குன இடம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டாரு.  கிழக்கு பக்க சுவரு மட்டும் வைக்கல. பழையை கீத்து, அம்மாவோட சேலையை வச்சி அடைச்சிட்டாரு. எல்லா வேலையும் முடிக்க மணி சாயந்திரம் 2.00 ஆச்சு. அப்போதான் எல்லாரும் காலை சாப்பாடு சாப்பிட்டோம். மறுபடியும் மழை  வரும்,எங்களை  அகதிகளாக்கும் ன்னு யாரும் கனவு கூட காணல...

ஊருக்கு வடக்கு பக்கம் வெள்ளாறு ஒன்னு இருக்கு. அதுல பாலத்துக்கு மேல தண்ணி போனா படையாட்சி தெருவும், சேரி தெருவும் காலியாயிடும். ஆத்துக்கு ஓரமா படையாட்சி குடியிருப்புகள், அடுத்து நடுவுல 214 பறையர் குடும்பம், 2 குறவர் குடும்பம் . (இப்ப ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி குறவர்கள் ஊரைவிட்டு எங்கயோ சென்றுவிட்டார்கள், எப்பாவது வருவார்கள் ) வாழும் சேரி. பெரும்பாலும் 'பறைத்தெரு'ன்னு தான் சொல்வாங்க. அடுத்து கடைசியா பிள்ளைமார் குடியிருப்புகள். படையாட்சி குடியிருப்பும், பிள்ளைமார் குடியிருப்பும் ஊர்தெரு. பெரும்பாலும் படையாட்சி குடியிருப்புகள் மாடி கட்டிடடங்களாக இருக்கும். அவர்கள் வீட்டில் ஒருவராவது வெளிநாட்டில் இருப்பார்கள். அதனால் அடைமழை நாட்களின் முதல் மாடிக்கு சென்றுவிடுவார்கள். ஆத்து தண்ணியால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. இடம் பெயரவேண்டிய அவசியமும் இருக்காது. பிள்ளைமார் குடியிருப்பு பக்கம் ஆத்து தண்ணி வராது. சேரியை மட்டும் அடித்து துவம்சம் பண்ணிடும். பிள்ளைமார் தெருவுல தான் பள்ளிக்கூடம் இருக்கு... முரளி, பார்வதி அம்மா வயித்துல இருக்கும் போது ஒருமுறை ஆத்து வெள்ளம் வந்து எல்லாரும் மூணு நாள் பள்ளிகூடத்துல தான் இருந்தாங்களாம். முரளியோட அக்கா, முரளிக்கு ஒருமுறை இதை சொல்லி இருக்காங்க...

மறுபடி பிடிச்சது மழை. இதை பேய் மழைன்னு தான் சொல்லணும் அவ்வளவு ஆக்ரோஷம். காத்து ரொம்ப உக்கிரமா இருந்துச்சு. ஒருநாள், ரெண்டுநாள் தொடர்ந்தது. முதல்நாள் மழைக்கே நிறைய குடிசைகள் தாங்கல.. முரளி  குடும்பமும், பக்கத்துல இருந்த சிவா குடும்பமும் பழனி அண்ணன் வீட்டுக்கு வந்தாச்சு. பழனி அண்ணன் வீடு கொஞ்சம் பெரிய வீடு. அதோட இல்லாம மரத்தூணுக்கு பதிலா சிமெண்ட் தூணு வச்சி கட்டி இருப்பாரு. முரளியின் அம்மாவும், அப்பாவும் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்களை மூட்டை கட்டி வச்சிட்டாங்க, ஆத்து வெள்ளத்தை எதிர்கொள்ள தயாராயிட்டாங்க. இரவெல்லாம் பெருசுகளுக்கு தூக்கமில்லை... விடிய, விடிய வெத்தலையை போட்டுக்கிட்டு பேசிகிட்டே இருப்பாங்க.. வீரமுத்து தாத்தாவும், ராஜேந்திரன் அண்ணனும்  தலையில பிளாஸ்டிக் கவரை போட்டுக்கிட்டு அடிக்கடி ஆத்து பக்கம் போயிட்டு வருவாங்க. ஆத்துல தண்ணி வருதான்னு பார்க்கத்தான். 

பழனி அண்ணன் வீட்டுல அப்பாவும், பழனி அண்ணனும் பேசிகிட்டு இருந்தாங்க, அம்மா ஒரு மூலையில குத்தவச்சி உக்காந்து இருந்துச்சு. முரளிக்கு தூக்கமே வரல அவங்க பேசறத கேட்டுகிட்டு இருந்தான் ...

'டேய் பழனி வெத்தலை கொஞ்சம் குடுடா'  'வெத்தலை இருக்குப்பா, புகையிலை இல்ல..'

'என்கிட்டே இருக்கு குடுடா ... ' அப்பா  வெத்தலை போட்டுகிட்டே சொன்னாரு 

'என்னடா பழனி, இந்த மழை நம்மள பாடா படுத்துது?'

'என்னப்பா பண்றது, அதுக்காக மழையே வேனாம்னும் சொல்ல முடியாது. மழை இல்லன்னா காடுகளோட சேர்ந்து நம்ம வயிறும் தான் காயும்'   


'எப்படியாச்சும் இந்த காத்து மழைக்கு தாங்குற மாதிரி ஒரு கல்லு வீடு கட்டிபுடுலாம் ன்னு பாக்குறேன் முடியலடா பழனி '

'என்னப்பா பண்றது... இந்த கவர்மெண்டு காசு இருக்குறவனுக்கு தான் வீடு கட்டி கொடுக்குது, முன்பணம் போட்டு வீடு கட்ட காசு இருந்தா நாமலே கட்டிக்க மாட்டோமா?" ன்னு அண்ணன் கேட்டாரு ...

'இவனுங்க தான் கூலி கொஞ்சம் உசத்தி கேட்டா வெளியூர்ல இருந்து ஆளு கூட்டிகிட்டு வந்து வேலை செய்றானுங்க' ன்னு அப்பா சொன்னாரு ...

'யோவ்... எல்லாம் நீங்க செஞ்சதுய்யா, சோத்துக்கு இல்லன்னு கால் காணியையும், அரை காணியையும் ஆயிரம், ஐந்நூறுக்கு அவனுங்க கிட்ட எழுதி கொடுத்தீங்க, இப்ப அவனுங்க ஆடுறானுங்க' ன்னு அண்ணன் கோபபட்டாரு...

'நாம என்னடா பண்ண முடியும், நாம பொறந்த சாதி அப்படி? நம்ம தலையில ஆண்டவன் இப்படி எழுதிபுட்டான். எல்லா கொடுமையும் நம்ம காலத்தோட போகட்டும். நம்ம புள்ளைகலாவது நிம்மதியா வாழும் ன்னு பாத்தா, இந்த கொம்பனுங்க பொழுது விடிஞ்சா, பொழுது போனா பம்பரம் அடிக்க போய்டுரானுங்க' இவனெல்லாம் (முரளி) புக்கை தொறந்து படிச்சே என் கண்ணால பாக்கள டா... அப்பா விதியை நொந்து கொண்டார்...                 

இந்த சோக கதைகளை கேட்ட முரளி தூங்கி போனான்...

விடிகாலம் 3.00 மணிக்கு போகும்போது பாலத்துக்கு கீழ தண்ணி ஓடிகிட்டு இருந்திருக்கு.. அவரு வந்துட்டு மறுபடி 5.30 மணிக்கு திரும்பி போகும்போது அவரு படையாட்சி குடியிருப்பு கிட்ட போகும்போதே தண்ணி அவரை மடக்கிடிச்சு.. வயசான மனுஷன் தண்ணி இழுப்புக்கு தாக்கு பிடிக்க முடியாம கீழ விழ, ராஜேந்திரன் அண்ணன் அவரை பிடிச்சி தூக்கிட்டு வந்திருக்காரு. பறையர்கள் மொத்தம் நாலு தெருவுல இருந்தாங்க, ஒரு ஒரு தெருவா ஓடுனாறு  'டேய்... எல்லாரும் பள்ளிகூடத்துக்கு கிளம்புங்கடா , தண்ணி படையாட்சி தெருவை தாண்டிடுச்சி டா...' ன்னு கத்தி, கத்தி சொல்லி முடிக்கவும் பத்து நிமிஷத்துல மாரியம்மன் கோவில் முன்னாடி மொத்த ஊரும் கூடிடுச்சு... அகதிகளை போல தட்டுமுட்டு சாமான் மூட்டைகளை தலையில வச்சுகிட்டு பள்ளிக்கூடம் நோக்கி நடந்தாங்க. பள்ளிகுடத்து சாவி நாட்டார் வீட்டுலதான் இருக்கும். ராஜேந்திரன் அண்ணன் போயி சாவி வாங்கிட்டு வந்து எல்லாரும் ஒன்னாமன்னா கிடந்தாங்க.. ஒரு அடுப்புதான் எரியும் பெரிய அண்டாவுல சோறு ஆக்கி எல்லாருக்கும் அதிலே சாப்பாடு. இப்படியே ரெண்டு நாள் ஓடிச்சு... உயர்சாதி மக்கள் வாழும் வீதியில் இருக்கும் பள்ளிகூடத்தில் தாழ்த்தப்பட்ட பறையர்கள் இப்போது. அவர்கள் எரிச்சலோடும் ஏலனத்தோடும் பார்ப்பார்கள்...      

ரெண்டு நாள் கழிச்சி மழை விட்டுச்சு . ஆம்பளைங்க மட்டும் தெருப்பக்கம் வந்து பார்த்தாங்க.. அப்பாகூட முரளியும் வந்தான். வீடு இருந்ததற்கான அடையாளமாக நாலு தூணு மட்டும் நிக்குது... தெருவே சுடுகாடு மாதிரி காட்சி தந்தது. அத்தனைப்  கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து ஓடுகிறது. மழைநீர் ஓடிய வீதிகளில் மனிதர்களின் கண்ணீர் ஓடியது...

பிரம்மை பிடித்தவனை போல் அமர்ந்திருந்த  முரளி தோளில் முத்து உலுக்கி எழுப்ப இந்த நினைவுகளில் இருந்து மீண்டெழுந்த முரளியின் கன்னகளும் கண்ணீரால் நனைந்திருந்தது. இருவரும் டீக்கடைக்கு சென்றுவரவும் பார்வதி அம்மா அவனுக்கு போன் செஞ்சாங்க...

'ஏம்பா அந்த ராத்திரியில போன் பண்ணின?' ன்னு அம்மா கேட்க 

'இல்லம்மா இங்க செம்ம மழை, அதான் உங்க நெனப்பு வந்துச்சு, நீங்க என்ன பண்றீங்கன்னு பயந்து தான் போன் பண்ணினேன்...'

'இதுக்குலாமா பயப்படறது? என்ன புள்ளைடா நீ?'

'அம்மா நீ கவலைப்படாத, உனக்கு  ஒரு மாடி வீடு கட்டி தந்துடுறேன், அப்புறம் நாம பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது.'

'சிரித்து கொண்டே அம்மா, உங்க தாத்தா என்ன பொண்ணு பாக்க வரும்போது சொன்னது ' இன்னும் கொஞ்ச நாளில் கல்லு வீடு கட்டிடுவோம் ன்னு' அப்புறம் உங்க அப்பாவும் சொன்னாரு, இப்ப நீயும் சொல்ற... ன்னு நொந்து கொண்டார்...

'..........................' முரளிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. "தீண்டாத வசந்தம்" தான் நினைவுக்கு வருகிறது 

'தாழ்த்தப்பட்ட மக்களின் விருப்பங்கள், விருப்பங்களாகவே இருந்தன, விருப்பங்களாகவே வாழ்ந்தன, விருப்பங்களாகவே முற்று பெற்றன...'

- அங்கனூர் தமிழன் வேலு