வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பேருந்து பயணமும்.. பக்கத்து சீட்டில் தேவதையும்... (தொடர்ச்சி)

இந்த இடத்திலே சுத்த சைவர்களை பற்றிய என் அனுபவம் ஒன்று நினைவுக்கு வந்தது. நீங்கள் என்னோடு வர சம்மதித்தால் உங்களை நான் மைலாப்பூருக்கு அழைத்து செல்வேன். பேருந்து திட்டக்குடி நோக்கி சென்று கொண்டிருக்க, நாம் மட்டும் மைலாப்பூருக்கு சென்று வரலாம். எனக்கிருக்கும் பறக்கும் சக்திமூலம் உங்களை என்னால் தூக்கி செல்ல முடியும். கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு தான் நாம் செல்லப்போகிறோம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த சம்பவம் இது. மாங்கொல்லையில் அம்பேத்கர் பிறந்ததினம் கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்த காலம் அது. “அங்கிருக்கும் மக்களின் (பார்ப்பனர்கள்) பழக்க வழக்கங்களும், நிகழ்ச்சிக்காக வரப்போகும் மக்களின் பழக்க வழக்கமும் வேறு வேறானவை. அவர்கள் மதுப்பழக்கம் உடையவர்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள்” என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திலே சொல்லி இருந்தார். பிறகு நீதிமன்ற அனுமதியோடு விழா நடந்தது என்பது தனிக்கதை. அம்பேத்கர் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் கழித்து நண்பர் ஒருவரை சந்திக்க மைலாப்பூர் செல்ல வேண்டியிருந்தது. என்னிடம் டூவீலர் இல்லாததால் நண்பரின் தம்பியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எங்களை கபாலீஸ்வரர் கோயில் அருகே நண்பர் நிற்க சொல்லி இருந்தார். சாயங்கால நேரம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்துக் கொண்டும் போயிக்கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரத்தில் நண்பர் வந்துவிட்டார். ஒரு வேலை விஷயமாக அவரை சந்திக்க போயிருந்தேன். அரைமணி நேரத்திற்கு பிறகு அவரிடம் இருந்து நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். கிளம்பும் போது நண்பரின் தம்பி என்னிடம், மச்சி... ஒரே தலைவலியா இருக்கு, பீர் சாப்பிடலாமா? என்றார். வேனாம்யா முகப்பேர் போயிடலாம் என்றேன். இல்ல வா... இங்க எதிர்லயே டாஸ்மாக் இருக்கு. ஒரு பத்து நிமிஷத்துல போயிடலாம், சும்மா பீர்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். யோவ் டூவீலர் ல போகவேண்டி இருக்கு, போலீஸ் புடிச்சா வம்புயா என்று என் கவலையை சொன்னேன். சாதா பீர்தானே, சாப்பிட்டு ஒரு ஸ்வீட் பீடா போட்டா சுத்தமா வாசனையே இருக்காது என்றார். சரி வா... என்று சொல்லி டாஸ்மாக் கடைக்கு போனோம். அங்கு ஒரு குடிமகன், ‘தலைவா வண்டியை இங்க நிறுத்தாதீங்க, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நிறுத்துங்க’ என்றார். ஏன் தலைவா என்றேன். இல்ல உங்க வண்டி நம்பரை மப்டில நிக்கிற போலீஸ் காரங்க நோட் பண்ணிக்குவாங்க, பக்கத்து சிக்னல்ல போலீஸ் நிப்பாங்க, அவங்க கரெக்டா உங்களை பிடிச்சு பில்லு போட்டுடுவாங்க என்றார். நம்மூரு போலீஸ்காரங்க திருடனை புடிக்க இப்டிலாம் யோசிச்சிருந்தா நாடு எப்பயோ முன்னேறி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, வண்டியை கோயில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு வந்தேன். உள்ளே சென்றால் பார் அவ்வளவு சுத்தமாக இல்லை. நின்றுகொண்டு தான் குடிக்க வேண்டும். சுவத்துல எல்லாம் பான்பராக் கரை, ஒரு மூலையில் யாரோ வாந்தி வேறு எடுத்திருந்தார்கள். ஆங்காங்கே குடித்த பாட்டில்களும், கிளாஸ்களும், பீடி, சிகரெட்களும் எக்கச்சக்கமா சிதறி கிடந்தன. அந்த இடமே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இங்கு குடிக்க வேண்டாம் என்று நினைக்கையில் பீர் பாட்டிலை திறந்து கையில் நீட்டிவிட்டார் நண்பரின் தம்பி. நிறைய பிராமினர்களும் அங்கு குடிக்க வந்திருந்தார்கள். தொட்டதிற்கெல்லாம் ஆச்சாரம், ஆச்சாரம் என்று கூச்சல் போடும் அவர்கள், ஆச்சாரத்தை அற்ப போதைக்காக மார்வாடி கடையில் அடகு வைத்துவிட்டு வந்திருந்தார்கள் போலும். பாதிக்கு மேல் பிராமினர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேச்சு மொழியை வைத்து நானாக அனுமானித்துக் கொண்டது அது. அதில் மூன்று நான்கு பேர் உச்சிக் குடுமியோடு இருந்தார்கள். மதுபானக்கடை படத்தில் ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. ஒரு முடக்கு பீரை குடித்துவிட்டு சைடிஷ் வாங்க சென்றேன். அங்கே குடுமி வைத்த சுத்த சைவர் ‘போட்டி(குடல்)’யை போட்டியே இல்லாமலும், ஆசாரமே இல்லாமலும் உள்ளே திணித்துக் கொண்டிருந்தார். அதையும் கடந்து மீன் வறுவல் வாங்க சென்றேன். அங்கே சுத்த சைவர் ஒருவர் ‘அம்பி நன்னா மீனை பொறிச்சி குடுடா’ நேத்தைக்கு கொடுத்தது சுத்தமா நன்னால்ல அடிச்ச சரக்க அதுவே கொடுத்துடுச்சு’ என்று ஆச்சாரம் பேசிக்கொண்டிருந்தார். பெரும்பாலும் சுத்த சைவர்களோ, பார்ப்பான்களோ தங்கள் தனி ஒழுக்கத்தின் மீது ஆச்சாரம் பேணுவதில்லை. ஒடுக்கப்பட்ட,விளிம்புநிலை மக்கள் மீது, வலிய திணிக்கிறார்கள் என்பது வெளிச்சம். அவர்களின் ஆச்சாரம் என்பது அடக்குமுறையின், தீண்டாமையின், சாதிக்கொடுமையின் உச்சமே ஒழிய, ஒழுக்கம் அல்ல என்பது அன்றைக்கு நான் தெரிந்து கொண்ட உண்மை. இப்போது நாம் மீண்டும் பேருந்துக்கே செல்லலாமா? டாஸ்மாக் கடை வரை அழைத்து வந்து, சரக்கு ஏதும் வாங்கி கொடுக்காமலே இழுத்துட்டு போறியேடா பாவி என்ற உங்களின் பொருமல் எனக்கு கேட்காமல் இல்லை. இருந்தாலும் பேருந்து பயணத்துக்கு சரக்கு அடிச்சா சரிவராது என்பதால் நாம் பேருந்துக்கு செல்வது தான் சரியாக இருக்கும். 

நெஞ்செல்லாம் நிறைந்த கருவாட்டு வாசனையில் தேவதையை மறந்தே விட்டேன். அவள் இருக்கையை பார்க்கையில் கண்ணயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறாள். எழுந்து பார்க்கையில் அவள் என்னை தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு நானும் தூங்க தயாரானேன். நான் அமர்ந்திருந்த சீட்டு அசவுகரியமாக இருக்க தூக்கமின்றி அவதிப்பட்டேன். அருகில் பெருசாவும் இல்லாமல், சிறுசாவும் ஒரு தினுசாக இருந்த ஆசாமி ஆலமரம் அடியோடு சாய்ந்து மேலே விழுவது போல தூங்கி தூங்கி மேலே விழுகிறார். அவர் மேலே விழும் வேகத்தில், நானும் தூக்க கலக்கத்தில் இருக்க, தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்துவிடுவேனோ என்ற பயம் வேற அடிக்கடி வந்து தொலைக்கிறது. போதாக்குறைக்கு படிக்கட்டுக்கு நேரெதிர் சீட்டு என்பதால் பேருந்து செல்லும் வேகத்தில் ஊதக்காற்று வேறு என்னை கட்டிக் கொண்டு விலக மறுக்கிறது. குளிருக்கும், தூக்கதிற்குமான போராட்டத்தில் குளிரே வென்றது. அதோடு விக்கிரவாண்டி அருகில் இருக்கும் மோட்டலும் வந்தது. மோட்டல் ஊழியர் பேருந்தை தட்டி, தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பினார். ‘மரிக்கொழுந்தே என் மல்லிகப்பூவே’ என்ற பாடல் உச்சஸ்தாயில் ஸ்பீக்கரில் அலறிக்கொண்டிருந்தது. ஆண்கள் எல்லோரும் வேகமாக கீழே இறங்குகிறார்கள் நானும்தான். நேராக சென்று குளிருக்கு இதமாக சூடாக ஒரு பால் குடித்துவிட்டு பாத்ரூம் செல்ல கிளம்புகையில், ஆண்கள் எல்லாம் சாரை, சாரையாக ரோட்டோரமாக சென்று கொண்டிருந்தார்கள். பாத்ரூம் வசதி இருந்தாலும் கண்ட இடத்தில் ஜிப்பை திறந்து கொண்டு ஒண்ணுக்கு போவதில் ஆண்களுக்கு அலாதி பிரியம் போல. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று பாத்ரூம் அவ்வளவு சுத்தமாக இருக்காது. சில நேரங்களில் தண்ணீர் வசதி கூட இருக்காது. கோயம்பேடு பாத்ரூமில் மலம் கழித்துவிட்டு தண்ணீர் கூட ஊற்றாமல் அப்படியே காய்ந்துபோய் கிடக்கும் காட்சியை காணலாம். அந்த கழிவறைக்குள் செல்வதற்கு திடமான மன தைரியம் வேண்டும். அப்படித்தான் நெடுஞ்சாலை மோட்டல்களிலும் இருக்கும். இரண்டாவது அதிகபட்சம் பதினைந்து நிமிடம் பேருந்து நிற்கும் அதற்குள் பாத்ரூம் செல்வது, டீக்குடிப்பது, தம் அடிப்பது எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு பேருந்துக்குள் ஏறிவிட வேண்டும். பேருந்து கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமாக கூட இருக்கலாம். அங்கிருக்கும் கழிவறையில் ஒரே நேரத்தில் அதிகமாக இருபது பேர் யூரின் போகலாம். மோட்டல்களில் ஒரே நேரத்தில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் நிற்கும். ஒரு பேருந்துக்கு 50 பேர் என்று கணக்கு வைத்தால் கூட 500 பேர் அங்கு கூடுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் ரொம்ப அவசரம் இல்லையெனில் கீழே இறங்குவதில்லை. ஆனால் பெரும்பாலான ஆண்கள் கீழே இறங்கி டீ குடிப்பது, தம் அடிப்பது போன்ற காரியங்களால் பயணக் களைப்பில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். 200 பேர் என்றே வைத்துக் கொள்வோம். கிடைக்கும் பதினைந்து நிமிடத்தில் எல்லோரும் குறித்த நேரத்தில் தங்கள் வேலைகளை முடித்து கொண்டு வர முடியாது. ஆகவே ஆண்கள் ரோட்டோரத்தில் ஜிப்பை திறந்து கொண்டு அவசர அவசரமாக நிற்கிறார்கள். பாத்ரூம் அசவுகரியமாக இருந்தால் கூட பெண்கள் பாத்ரூமுக்குள் தான் சென்றாக வேண்டும். காமுகர்களின் கழுகுப்பார்வைக்கு அப்போது கூட ஓய்வில்லை என்பதாலே. பெரும்பாலான பெண்கள் மோட்டல்களில் இருக்கும் கழிவறையை பயன்படுத்த விரும்புவதில்லை. வீடு சென்றுசேரும் வரை அடக்கி கொள்கிறார்கள் என்பது மிகுந்த கவலை தரக்கூடிய ஒன்று. அங்கு விற்பனைக்கு இருக்கும் பொருட்களின் விலையெல்லாம் இரண்டு மடங்கு அதிகம். யூரினுக்கு 3 ரூபாயும், டூ பாத்ரூம் செல்ல 5 ரூபாயும் வசூலிக்கிறார்கள். இருப்பினும் போதுமான அளவில் தரமான கழிப்பறை வசதியை அவர்கள் செய்து கொடுப்பதில்லை. எல்லாம் முடிந்து பேருந்தில் ஏறியவுடன், பஸ் கிளம்ப போகிறது, எல்லாரும் வந்தாச்சா, பக்கத்து சீட்டு ஆளுங்க எல்லாம் சரியா இருக்காங்களா? பாருங்க என்று கண்டக்டர் சொல்லவும் நான் தேவதையை பார்க்கிறேன் அழகே சாட்சியாக அமர்ந்திருக்கிறாள். கீழே இறங்காத அவள் தான் வைத்திருந்த தண்ணீரை குடித்தாள். இவ்வளவு நேர பயணத்தில் நாம் கிழிந்த கந்தல் துணிப்போல் ஆகிவிட்டேன். அவள் மட்டும் பேருந்து ஏறுவதற்கு முன்பு பார்த்த அதே அழகில் அப்படியே இருக்கிறாளே என்ற ஆச்சர்யம் இலைய்பாகவே வந்து போனது. அந்த நடுநிசியில் கூட அவள் இதழ்கள் சிரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. இதற்கு முன்னர் எந்த தேவதையும் இவ்வளவு நேர காட்சியை எனக்கு கொடுத்ததில்லை. மோட்டலில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து பேருந்து ரோட்டில் ஏறும் போது வெளியே எட்டிப்பார்க்கிறேன். குற்றால ஐந்தருவி என்னங்க, அம்பது அறுபது அருவிகளை ஒரே நேரத்தில் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நீரையெல்லாம் சுத்திகரிச்சி, தஞ்சாவூர் பக்கம் திருப்பிவிட்டால் முப்போகம் அமோகமா விளையும். ரோட்டில் ஏறிய பேருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்ட, விலகி சென்றிருந்த ஊதக்காற்றும் மீண்டும் என்னை தேடி வந்து கட்டிக்கொண்டுவிட்டது. தேவதையை பார்க்க ஆசைப்பட்டு குளிரில் நடுங்கும் கொடுமையை எங்கு சொல்ல...

கடுமையான போராட்டத்திற்கு பிறகு என்னையும் அறியாமல் முன்சீட்டு கம்பியில் தலைவைத்து தூங்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பின் நடந்தவை எல்லாம் அந்த தேவதைக்கே வெளிச்சம். கண்விழித்து பார்க்கையில் விருத்தாசலம் தாண்டி பெண்ணாடம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. செல்போனை எடுத்து மணிப் பார்த்தால் மணி 3.45. கடுமையான கழுத்துவலியில் கழுத்தை திருகி தூர எறிந்துவிடலாம் என்று கூட நினைக்கிறேன். கோமாவில் இருந்து மீண்டவன் எதையோ தேடுவது போல நான் என் தேவதையை தேடுகிறேன். அவள் அமர்ந்திருந்த முன் சீட்டில் பார்த்தால் தேமேவென பொக்கைவாய் கிழவி ஒன்று வெத்தலை போட்டுக் கொண்டிருக்கிறது. தேவதைகளுக்கு உருமாறும் சக்தி இருக்குமா? என்று நினைத்தேன். ச்சே.. ச்சே... இது கலியுகம் அப்படி எல்லாம் நிகழ வாய்ப்பே இல்லை. உளுந்தூர் பேட்டையிலோ அல்லது விருத்தாச்சலதிலோ இறங்கி இருக்கணும். அதுதான் உண்மையாக கூட இருக்கும். அதற்கப்புறம் விருத்தாச்சலத்தில் கிழவி ஏறி இருக்கும் என்று நினைக்கிறேன். நாலு மணிநேரம் என்கூட அவள் பயனித்திருக்கிறாள், அவளின் கவனத்தை என் பக்கம் திருப்ப இயலவில்லை. எப்போதும் சிரிப்பது போல சிரித்தாலே ஒழிய பிரித்யோகமாக எனக்காகவே சிரிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவளிடம் ஒரே ஒரு வார்த்தைக் கூட பேச துணிவில்லை. அவ்வளவு பயந்தாங்கொள்ளியா நான் என்று யோசிக்கிறேன். டீக்கடையில் திரும்பி திரும்பி பார்த்தவள், தனிமையில் இருக்கும் போது ஏன் என்னை கவனிக்கவில்லை? டீக்கடையில் நிற்கும் போது ஓஓஓ வென நண்பன் ஒருவன் சத்தம் எழுப்பினான். அதனால் அவள் திரும்பி பார்த்திருக்கலாம். அப்போதும் கூட அவள் எனக்காக திரும்பி பார்த்திருக்கமாட்டாளோ? என்று யோசித்துக் கொண்டே கிழவி அருகில் சென்று அமர்ந்தேன். பாட்டி எங்க போறீங்க? என்றேன். இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் ஒருவேளை அவள் பதில் சொல்லி இருக்கலாம். இளமங்கலம் போறேன் ராசா... ஏன் கேக்குற? ஒண்ணுமில்ல இதுக்குமுன்ன இந்த சீட்டுல உக்கார்ந்திருந்த பொண்ணு எங்க இறங்கிச்சி தெரியுமா பாட்டி என்றேன். போடா ராஸ்கோல் அத கேக்கத்தான் இங்க வந்தியா? அது இல்ல பாட்டி என்று இழுத்தேன். கொலைவெறியோடு கிழவி முறைப்பது தெரிந்ததும் மறுபடி என் சீட்டுக்கே வந்துட்டேன். கவலைப்படாதடா வேலு... என்னைக்காவது ஒருநாள் டீக்கடை பக்கம் வராமலா போய்டுவா என்று மனசை தேற்றிக் கொண்டிருக்கையில் கண்டக்டர் விசில் ஊதி திட்டக்குடி கடைசி எல்லாரும் இறங்குங்க... திட்டக்குடி கடைசி எல்லாரும் இறங்குங்க... என்று சத்தமாக கத்தினார். அவரருகே சென்று சார் ஒரு டவுட்டு என்றேன். சொல்லுப்பா என்றார். என் சீட்டுக்கு முன்னாடி சீட்டுல ஒரு பொண்ணு இருந்துச்சுல என்று இழுத்தேன். ஆமா அதுக்கு என்ன? என்று படாரென பதில் வந்துச்சு அவரிடம் இருந்து. எங்க இறங்குச்சி ன்னு கேட்டா கிழவி மாதிரி இவரும் முறைப்பாரோ? என்று டவுட்டு வந்தாலும் என்ன செஞ்சிடுவாரு இது நம்ம ஏரியா என்ற தைரியத்தில் கேட்டேன். யோவ் போய்யா போ ... வேற வேலை எனக்கில்லையா? என்று அடிக்காத குறையா முறைக்கிறார்...

பேருந்து பயணமும்.. பக்கத்து சீட்டில் தேவதையும் ...


சென்னைக்கு வந்தபிறகு எத்தனையோ முறை அங்கனூருக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் இந்தமுறை சென்ற பயணம் சற்றே வித்தியாசமான அனுபவம், கூடவே இனியமையான பயணமும் கூட. சனிக்கிழமை இரவு அங்கனூருக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தேன். அலுவலக வேலைகளை மாலை 6 மணிக்கெல்லாம் முடித்துக் கொண்டு ரூமிற்கு சென்றேன். சிறிதுநேரம் வழக்கம்போல நண்பர்களோடு நக்கல் நையாண்டி என அரட்டை அடித்துவிட்டு குளிக்க சென்றேன். குளித்து முடித்து 6.30 மணிக்கெல்லாம் ரெடியாகிவிட்டிருந்தேன். மீண்டும் நண்பர்களோடு டீக்கடைக்கு சென்று சூடாக இஞ்சி டீயை ஆர்டர் செய்துவிட்டு, வாழைக்காய் பஜ்ஜியை உள்ளே திணித்துக் கொண்டிருந்தோம். நடந்து வருகிறாளா? மிதந்து வருகிறாளா? என்று வியந்து போகும்படியாக தேவதை ஒருத்தி ஒய்யாரமாக வந்தாள். நாலு பசங்க ஒண்ணா சேர்ந்து சந்தோஷமா இருந்தா அழகான பொண்ணுங்களுக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன். நாலு பேரையும் பார்த்து பொத்தாம் பொதுவா சிரிச்சிட்டு போய்டுவாளுங்க. அதுவரைக்கும் நாலு பேரு ஒண்ணா சேர்ந்து டீக்குடிச்சி, ஒண்ணா சுத்திக்கிட்டிருந்த பசங்க, அதுக்கப்புறம் தனித்தனியா அவள தேட ஆரம்பிச்சிடுவானுங்க. ஆனா நாங்கெல்லாம் உயிருக்கு உயிரான, ரத்தத்துக்கு ரத்தமான, கண்ணுக்கு கண்ணான நண்பர்கள். சட்டை பேண்டு, சோப்பு, சீப்பு, பவுடர், செருப்பு, கூலிங் க்ளாஸ் எல்லாமும் ஜட்டி தவிர மாத்தி போட்டுக் கொள்ளும் நண்பர்கள் என்பதால் வெகு இயல்காக அந்தமாதிரி அழகிகளை கடக்கும் பக்குவத்தை பெற்றிருந்தோம். கிட்டத்தட்ட ஜென் நிலை என்றுகூட சொல்லலாம். நாலு பசங்க இருந்தாலே, பெண்ணுங்களையே பிடிக்காத கேரக்டர்ன்னு ஒருத்தன், எவ்ளோ அழகான பிகரா இருந்தாலும் அட்டண்ட் டைம்ல மடக்கலாம் மச்சி ன்னு மன்மத கேரக்டர் ஒருத்தன் இருப்பானுங்க. கடந்து சென்ற அழகியை பற்றிய விவாதம் ஸ்டார்ட். டீ மாஸ்டர் கொடுத்த சூடான இஞ்சி டீயை விட அது சூடாக மாறியது. 

மச்சான் அவ உன்னதாண்ட பார்த்து சிரிச்சா... இது நான்...

'சூப்பர் டா மச்சான்... காசு அவன்தானே கொடுக்கப்போறான்'... இது பொண்ணுகள பிடிக்காத கேரக்டர் ன்னு ஒருத்தனை சொன்னனே அவன் சொன்னது...

ஹே... அசால்ட் மச்சி அவ கண்ணை பார்த்தியா? இது அந்த மன்மதன் கேரக்டர் சொன்னது...

இல்ல மச்சான், அவளுக்கு ஒன்னரை கண்ணுடா... அதான் அவ எவனைப் பார்த்தாலும் உன்னைப் பாக்குற மாதிரியே தெரியுது... இது அந்த சன்யாசி கேரக்டர் சொன்னது...

இன்னிக்கு நம்ம மன்மதன் ட்ரீட். 5 நிமிஷத்துலயே பிகர் உஷார் பண்ணிட்டானே.. இது இன்னொருத்தன்.

அடப் பாவிகளா.. உங்க பஞ்சாயத்த நாளைக்கு வச்சிக்கோங்க, நான் ஊருக்குப் போகணும் வாங்கடா... இது நா சொன்னது... (நம்புங்க அவ்ளோ நல்லப்பையன்)

அப்படி இப்படி பேசி முடிச்சி ரூம்க்கு போனா மணி 7 ஆயிடுச்சி. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு 8 மணிக்கு ரூமை விட்டு கிளம்பிட்டேன். 7 மணிக்குமேல ஒன்பது வரைக்கும் ட்ராபிக் செம்மயா இருக்கும். எப்படியும் முகப்பேர்ல இருந்து, கோயம்பேட்டுக்கு ஷேர் ஆட்டோல போறதுக்கு அரை மணிநேரத்துக்கு மேல ஆகும். பஸ் ஸ்டாண்டு போறதுக்குள்ள 9 மணி ஆயிடும். அப்புறம் சாப்பிடனும். அங்கனூருக்கு போகணும்ன்னா திட்டக்குடி பஸ்ல தான் போவேன். ஏன்னா அதுதான் வசதி. திருச்சி பஸ்ல ஏறி தொழுதூர்ல எறங்கி மறுபடியும் திட்டகுடி வரணும்.அப்படி போனா தொழுதூர் ல விடியற்காலை 4 மணிக்கெல்லாம் இறக்கி விட்டுருவாங்க. அப்புறம் அந்த நேரத்துல அங்க மாத்து பஸ் இருக்காது என்பதால்... திட்டக்குடி பஸ்ல போனா 5 மணிக்கு திட்டக்குடில இறங்கி பொறுமையா ஒரு டீ குடிச்சிட்டு, அகரம் சீகூர் பார்டருக்கு நடந்து போனா கிட்டத்தட்ட 5.30 ஆயிடும். அங்க போயிட்டு அம்மாவுக்கு வெத்தலை, பாக்கு, தின்பண்டம் வாங்கிட்டு, மறுபடியும் ஒரு டீ குடிச்சிட்டு செத்த நேரம் உலாத்திக்கிட்டு இருந்தா போதும் 6 மணிக்கு சன்னாசினல்லூர் பஸ்ல ஏறி அங்கனூர் போய்டலாம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல இருந்து திட்டகுடிக்கு 9.45 க்கு ஒரு பஸ்சும், 10.45 க்கு ஒரு பஸ்சும் இருக்கு. அதை ரெண்டையும் விட்டுட்டா கூட விருத்தாசலம் பஸ்ல ஏறி அங்க இருந்து மாறி போய்டலாம். 9.45 பஸ்ல ஏறுனா சரியா 4.30 மணிக்குள்ள திட்டக்குடில இறக்கி விட்டுடுவாங்க. யாராவது வேலைக்காகாத சோம்பேறி டிரைவரா இருந்தா கூட 5குள்ள போய்டலாம். கோயம்பேடுக்கு 9.00 மணிக்கு வந்து, பக்கத்துல இருக்க ஹோட்டல்ல 2 தோசை, ஒரு ஆபாயில் சாப்பிட்டுவிட்டு, மறுபடி ஒரு டீ குடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டு உள்ள 9.30 மணிக்கு போயிட்டேன். 1வது பிளாட்பார்ம்ல திட்டக்குடி பஸ் நிற்கும். திட்டகுடிக்கு போகிற 9.45 பஸ் நின்னுச்சி. பஸ்ல பாதி சீட்டுக்கு மேல காலியாதான் கிடந்துச்சி, சரி அடுத்த பஸ்ல போகலாம்ன்னு முடிவு பண்ணி எதிர்ல இருந்த சேர்ல உக்கார்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கி இருந்தேன். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு எப்பவுமே திருவிழா போல மக்கள் கூட்டம் வருவதும், போவதுமாக இருந்துகொண்டே இருக்கும். ஒருநாள் இந்த பேருந்து நிலையத்துக்கு லீவ் விட்டுட்டா என்னவாகும் ன்னு யோசிச்சி பார்க்கிறேன். கண்டக்டர்கள் எல்லாம் அவரவர் பேருந்துக்கு பயணிகளை பிடிக்கும் ஆர்வத்தில் பேருந்து செல்லும் ஊர் பெயரை மைக்கே இல்லாமல் முழங்கி கொண்டிருந்தார்கள். திட்டக்குடி பஸ் கண்டக்டர் விருத்தாசலம், திட்டக்குடி ன்னு திரும்ப திரும்ப கத்திகிட்டு இருந்தாரு. சீட்டு கிடைக்குமா? என்ற தவிப்பில் பெரியவர்கள் விறுவிறுன்னு வந்துகிட்டு இருக்க, ஊருக்கு போக அப்பா அம்மாவோட வந்த நண்டு சிண்டுகள் ஆங்காங்கே எந்த கவலையும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு அழகான தேவதை இப்ப என்னை கடந்து செல்லப் போகிறாள் என்பதை என் ஏழாம் அறிவு அல்ல, காற்றில் மிதந்து வந்த சென்ட் வாசனை சொன்னது. அந்த அழகியை இதற்கு முன்னர் நான் பார்த்திருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி. தேவதைகள் வானத்தில் பறப்பார்கள் என்று சொல்லும் கவிஞர்களை அடுத்தமுறை பார்க்க நேரிட்டால், தேவதைகள் தெருவிலும் நடப்பார்கள், பேருந்திலும் பயணிப்பார்கள் என்று சொல்லவேண்டும் என்று தோன்றியது. இங்க அவளைப் பத்தி சொல்லணும். அவ தேவதை தான். ஆனால் கவிஞர்களால், இலக்கியங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவள். மஞ்சள் நிற சுடிதார் அவள் நிறத்துக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. நகரத்துப் பெண்களைப் போல தலைவிரிக் கோலத்தில் இல்லாமல், தலைவாரி இருந்தாள். இரவு நேரப் பயணத்துக்கு பூ சரிவராது என்பதால் பூ வைப்பதை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நெற்றியில் பச்சை நிற பொட்டுவைத்து அதன்மேல் மஞ்சள் நிற சின்ன பொட்டு வைத்திருந்தாள். காதில் அணிந்திருந்த பேன்சி குடை சிமிக்கியும், மூக்குத்தியும் இன்னும் அவளை கூடுதல் அழகியாக காட்டியது. கைகளில் போட்டிருந்த மஞ்சளும், ஆரஞ்சும் கலந்த மண் வளையல் சத்தம், அழகான குழந்தை சிரிப்பது போலவே இருந்தது. கைகளில் மஞ்சள் நிற பேன்சி வாட்ச் அணிந்திருந்தாள். கால்களில் வெள்ளி கொலுசு. அதிக சத்தத்தை எழுப்பாத முத்துக்கள் இல்லாத கொலுசு அது. வெள்ளை நிற செருப்பு. உதட்டுக்கு சாயம் பூசவில்லை, மாறாக சிரிப்பை பூசிக் கொண்டிருந்தாள். அவள் மாட்டியிருந்த பேக்கை வைத்து கல்லூரி படிப்பாள் என்று யூகித்து கொண்டேன். முழுக்க, முழுக்க கிராமத்து அழகிதான் அவள். அவள் சிரிப்பு, முக வடிவத்துக்கு ஏற்ற உடலமைப்பு, அவள் அணிந்திருந்த உடை இப்படி எல்லாமே அவளை தேவதையாக, ஏஞ்சலாக என்னிடம் கொண்டுவந்து நிறுத்தியது. என்ன ஆச்சரியம்... அவளும் திட்டகுடி பேருந்தில் ஏறிக்கொண்டாள்... 

பஸ் கிளம்ப தயாராகி கொண்டிருக்க, என்னையும் அறியாமல் ஓடி ஏறிக்கொண்டேன். வாசற்படிக்கு நேரெதிரில் மூன்று பேர் அமரும் சீட்டில் கொஞ்சம் இடம் தான் இருந்தது. அந்த சீட் நீண்ட தூர பயணத்துக்கு அவ்வளவு சவுகரியமாக இருக்காது. இருந்தாலும் அந்த சீட்டிலே அமர்ந்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். காரணம் வாசற்படிக்கு முன் இருக்கையில் அவள் இருந்தாள். அதுவும் இரண்டு பேர் அமரும் இருக்கையில் அவள் ஒருத்தி மட்டும்தான் அமர்ந்திருந்தாள். என் சீட்டில் இருந்து மிக நன்றாக அவளை பார்த்து ரசிக்கலாம் என்பதற்காகவே உட்கார்ந்து கொண்டேன். பஸ் நகர தொடங்கியது. அவள் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டு பேக்கை திறந்தாள். போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டாள். செல்போனை கண்டுபிடித்தவன் மீது முதல்முறையாக கோபம் வந்தது. கையில் கிடைத்தால் கொன்றே விடலாம் என்று கூட தோண்டியது. பஸ் மார்க்கெட் வழியாக சென்று, மதுரவாயல் பைபாஸ் வழியாக செல்லும். போன் பேசும் போதுகூட அவள் அழகாக தானிருந்தாள். சேலை கட்டிய பெண்கள் அனிச்சையாக மாராப்பை சரிசெய்வது போல, அடிக்கடி சரிந்துவிழும் தலைமுடியை திரும்ப திரும்ப சரிசெய்து கொண்டே இருந்தாள். பேருந்து நகர தொடங்கியிருந்தது. என்மனம் மட்டும் அவள் சிரிப்பை விட்டு நகராமல் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தது. போனை பேசி முடித்தவள் என் பக்கம் திரும்பினாள். என்னை அவள் பார்க்கவேண்டும் என்ற என் ஆழமான விருப்பம் அவளை சென்றடைந்து விட்டது போலும். ஆசைகளுக்கு பாஷைகள் தேவையில்லை என்று எங்கோ படித்ததாக நினைவுக்கு வந்தது. இப்போது என்முறை போலும் என் மொபைல் ஒலித்தது. நண்பன் அழைத்திருந்தான். டேய் பஸ்ல ஏறிட்டியா? என்றான். ஹ்ம்ம் என்றேன். பஸ் கிளம்பிடுச்சா? என்று அடுத்த கேள்வியை கேட்டான். சுரத்தே இல்லாமல் மீண்டும் ஹ்ம்ம் என்றேன். என்னடா ஒருமாதிரியா பேசுற என்றான். தூங்கி விழித்தவன் போல் "மச்சான் டீக்கடையில் பார்த்தோமே அதே பொண்ணு, என் சீட்டுக்கு பக்கத்து சீட்டுல உட்கார்ந்து இருக்காடா... அப்ப பார்த்ததை விட இப்ப செம்ம அழகா இருக்கா என்றேன். நண்பனிடம் சொன்னது அவள் காதில் விழுந்துவிட்டது போலும். என்பக்கம் திரும்பி வெட்க புன்னகையுடன் சிரித்தாள். சரி... சரி போனை கட் பண்ணுடா என்ன பார்த்து சிரிக்கிறாடா என்று பதிலுக்கு கூட காத்திருக்காமல் நானே இணைப்பை துண்டித்துவிட்டேன். 

மீண்டும் ஒருமுறை என்னைப்பார்த்து சிரிக்கமாட்டாளா? என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கையில் பஞ்சமா பாதகனாக கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டார். என்ன கொடுமை இது, என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்? என்ற கவிஞரின் கவலைக்கு அப்போது தான் எனக்கு அர்த்தம் புரிந்தது. டிக்கெட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு அவளை பார்க்க முயன்றால், எதிரில் சீனப்பெருஞ்சுவர் எழுப்பியதை போல அவளை முழுவதுமாக மறைத்துக் கொண்டு நின்றார். ஒருவழியாக நகர்ந்து சென்று தேவதையிடம் டிக்கெட் கேட்டார். என்ன மனசாட்சியே இல்லாத மனிதனாக இருக்கிறான். தேவதைகள் பயணிக்க கூட கட்டணம் வசூலிப்பார்களா? என்று தோன்றியது. தேவதைகள் பேருந்தில் செல்வதே பெரும் பாக்கியம் என்பது தெரியாத ஞானசூனியனாக இருப்பான் போலிருக்கே. அதோட நிற்காமல் ஏம்மா சில்லரையா குடும்மா என்று டார்ச்சல் வேற. எப்படியாவது இந்த ஆளு நகர்ந்தால் போதும் என்று நினைக்கையில் பேருந்து மார்க்கெட்டை க்ராஸ் செய்தது. அழுகிய காய்கறிகளின் வாடை குடலை புரட்டி போட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் சுத்த சைவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, கருவாட்டுக் கடைகளை மார்க்கெட்டில் இருந்து அப்புறபடுத்த சொன்னார்கள். பெரும்பான்மை மக்கள் சாப்பிடும் உணவு அருவருப்பாக இருப்பதாக கூறும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு, அசுத்த கோளாறால் வேண்டாத வியாதிகளை உருவாக்கும் அழுகிய காய்கறிகளின் நாற்றம் மணக்கிறது போலும். படிக்கருகில் வந்து வெளியே எட்டிப் பார்க்கிறேன். அழுகிய காய்கறிகளை மாடுகளும், பன்றிகளும் போட்டிபோட்டுக் கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன. கழிவுகள் சாலையோரத்திலே குவிந்து கிடக்கின்றன. அதனருகிலே தள்ளுவண்டி உணவகங்கள். மனிதர்கள் அதிலும் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கிருக்கும் கொசுக்கள் மனிதர்களை நேராக நரகத்திற்கே தூக்கி செல்லும் பலம் படத்தைவைகள். இவையெல்லாம் சுத்த சைவர்களுக்கு அசவுகரியத்தை உண்டாக்கவில்லை. பெரும்பான்மை மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு தான் அவர்களுக்கு அபச்சாரமாக தெரிகிறது. என்ன செய்ய இந்த நாட்டில் மட்டும்தான் பெரும்பான்மை மக்களின் பழக்கவழக்கங்களை கடவுளின் பெயரால் பகடி செய்யும் வினோத நிகழ்வெல்லாம் இருக்கிறதே. மீண்டும் என் இருக்கைக்கு வந்தேன். தேவதையிடம் இருந்து நகர்ந்து பின்பக்கமாக கண்டக்டர் சென்றுவிட்டிருந்தார். இப்போது நான் தாராளமாக தேவதையை ரசிக்கலாம். அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டே, தேவதை எந்த ஊருக்கு தரிசனம் கொடுக்கப் போகிறாள் என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். வழியில் எங்கும் இறங்காமல் திட்டக்குடி வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கையில் அவள் என்னை மீண்டும் பார்த்தாள். பேசலாமா என்று நினைக்கையில் என்ன சொல்லி பேசுவது என்ற தயக்கம் எனக்கு முன்பாக வந்து நிற்கிறது. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலைடா, நீ எதுக்காக ஊருக்க போற என்பதை மறந்திட்டியாடா? என்ற அலாரம் வேற லப் டப் என்ற இதயத்தோடு சேர்ந்தே அடிக்கிறது. மெயின் ரோட்டை பிடித்ததும் பஸ் மின்னல் வேகத்தில் பயணிக்க பெருங்களத்தூர் பேருந்துநிலையம் வந்ததே தெரியவில்லை. அங்கிருந்து சில பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் நகர, பஸ்ஸை முந்தி செல்கிறது டாடா மேஜிக் வாகனம் ஒன்று. வண்டி முழுவதும் கருவாடு. கருவாடு அதிகமாக சாப்பிடும் பழக்கம் இல்லாதவன் நான். கருவாட்டு மணம் காற்றில் கலந்து, பேருந்துக்குள் நுழைந்து நாசி வாசியாக என் நெஞ்சுக்குள் சென்றடைகிறது. எத்தனையோ முறை காருவாட்டு வாசனையை நுகர்ந்திருந்தாலும், முதல்முறையாக ஆத்மார்த்தமாக, ஆழமாக சுவாசிக்கிறேன். அத்தனை புத்துணர்ச்சியான மணம் அது. அதுவரை நாசியை அடைத்துக் கொண்டிருந்த அழுகிய காய்கறி நாற்றத்தையும், சாலையோர கழிவுகளின் நாற்றத்தையும் நொடிப்பொழுதில் அகற்றிவிட்டது. டாட்டா மேஜிக் வண்டி கண்ணில் இருந்து மறைந்துவிட்டது கருவாட்டு வாசனை நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க...

- தொடரும்...