மதிக்கு கல்யாணம் செய்ய முடிவு செஞ்சிட்டாங்க. அதுவும் அவன் லவ் பண்ண பொண்ணையே கட்டி வைக்க அவங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டாங்க. எல்லாம் நல்லபடியாத்தான் நடந்துகிட்டு இருக்கு. ஆனா மதி மட்டும் சித்த பிரம்மை புடிச்சவன் போல அலையுறான். எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு கத்துகிறான். யார்கிட்டயும் சரியா பேசறதில்ல, பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் அடிக்க ஆரம்பிச்சிட்டான். சென்னைக்கு வந்த பிறகு கடந்த மூணு வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருந்த பொண்ணை தான் வேணாம்ன்னு சொல்றான். அந்த பொண்ணு கீதா இவனைத்தான் கல்யாணம் செஞ்சிக்குவேன்ன்னு தீர்மானமா இருக்கு. வீட்டுல பொண்ணு கேட்டு வந்தவங்கள எல்லாம் மட்டுமருவாதி இல்லாம பேசி தொரத்திடுச்சி. பொண்ணோட தீவிரத்த பார்த்து, பொண்ணு வீட்டலயும் ஒத்துக்கிட்டாங்க. இவனும் தான் அந்த பொண்ணை கல்யாணம் கட்டிக்க ஆர்வமா இருந்தான். மதியோட அப்பா பெரியசாமி அந்த பொண்ணு வேணாம்ன்னு முரண்டு பிடிச்ச்சப்பலாம் உனக்கா கல்யாணம்? எனக்குதானே... எனக்கு பிடிச்ச பொண்ண தான் கட்டிக்குவேன்ன்னு வாதம் பண்ணுனவன் தான் மதி. இப்ப பெத்தவங்க ஒத்துகிட்டாங்க, கட்டிக்கப்போறவன் வேணாங்குறான். நாலுமாசமா வேலையையும் விட்டுட்டு கிராமத்திலே கிடக்கான். என்னன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறான். ஒட்டுமொத்தமா கல்யாணமே வேணாங்குறான். 'ஊருல ஒருத்தன், கல்யாணம் வேணாங்குறான்னா, ஒண்ணு பொண்ணு புடிக்காம இருக்கணும், இல்ல அவனுக்கு நோவு கீவு எதுனா இருக்கணும்'. இவன் பார்த்த பொண்ணு தான், இப்ப வேணான்னுறான்னா கண்டிப்பா எதோ நோவுதான். மெட்ராசுலயே கிடந்தான்ல கண்டவ கூட போயிருப்பான்னு ஊருக்குள்ள ஆளாளுக்கு ஒரு பேச்சு பேச ஆரம்பிச்சிடாங்க. பெத்தவங்க, கூட பொறந்தவங்க கதி கலங்கி நிக்குறாங்க. அவன லவ் பண்ணுன பொண்ணு கீதா சாப்டாம, எந்நேரமும் அழுவிகிட்டே இருக்குறதா தகவல். பெத்தவங்க கேட்டாங்க காரணத்த சொல்லல, கூடப் பொறந்தவங்க கேட்டாங்க சொல்லல, கட்டிக்கப் போறவ கேட்டா அப்பவும் சொல்லல, கூடப் படிச்ச பசங்க கேட்டும் சொல்ல மாட்டேங்குறான்.
எதுத்த வீட்டு முருவாயி கிழவி வந்து, மதி அம்மாகிட்ட பேசிகிட்டு இருந்துச்சி. நம்ம பரமு மவன் கருப்பன் கல்யாணம் ஆவாமதான் செத்துப் போனான். அவன்தான் இவன புடிச்சிகிட்டு ஆட்டுறான். எதுக்கும் நம்ம பூசாரிகிட்ட கூப்பிட்டுகிட்டு போ. அப்படியே நம்ம வீரனார் கோயிலுக்கும் அழைச்சிகிட்டு போ. எல்லாத்தையும் நம்ம வீரனார் பாத்துக்குவான். மனச தெம்பா வச்சிருடின்னு சொல்லிட்டு, வெத்தலை வாங்கி போட்டுக்கிட்டு போய்டுச்சி கிழவி. ஏதோதோ பண்ணி பாத்தாச்சி. வாய தொறக்க மாட்டேங்குறான். கடைசியா மதியோட அக்கா செல்வி வந்தாங்க. நா பேசிப்பாக்குறேன், என்கிட்டே கண்டிப்பா சொல்வான்ன்னு நம்பி புருஷன் வீட்டுல இருந்து வந்தாங்க. மதிகூட பொறந்தவங்க ரெண்டு அக்காங்க. ரெண்டாவது அக்காதான் செல்வி. தட்டுல சோறு போட்டு எடுத்துகிட்டு அவன்கிட்ட போனாங்க. அவன்கிட போயி உக்காந்தாங்க. டேய் என்னடா முடிகூட வெட்டாம பித்துக்குளி மாதிரி கிடக்க... சாப்பிட்டு போய் முடிவெட்டிகிட்டு வாடான்னு சொன்னாங்க. அம்மா... நம்ம மாரிய வரசொல்லும்மா, இவன முடிவெட்ட அழைச்சிகிட்டு போவான்ன்னு அம்மாகிட்ட சொன்னா செல்வி. அக்கா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லல, சாப்பிட்டு எழுந்து போய்ட்டான். எங்கயோ போயிட்டு விளக்கு வைக்கிற நேரத்துக்கு வீட்டுக்கு வந்தான். மீண்டும் அவனிடம் செல்வி பேசப் போனாள்.
டேய்... என்னடா உனக்கு ஆச்சு? ஏண்டா இப்டி பண்ற? ஊருல ஆளாளுக்கு ஒருமாதிரி பேசுறான். அம்மா சாப்டாம கிடக்கு. அந்த புள்ளையும் சாப்டாம கிடக்காம். என்னன்னு சொல்லுடா?
"................." எதுவும் பேசாமல் அப்டியே உக்கார்ந்திருந்தான்.
இப்ப நீ சொல்லப் போறீயா? இல்ல நா ஊருக்கு போவட்டுமா? உன்ன கெஞ்சி கேக்குறேன் சொல்லுடா...
"................................." மீண்டும் அமைதியாகவே உக்கார்ந்திருக்கான். ஆனா நிம்மதியாக இல்ல, இருப்பு கொள்ளாமல் தவிப்பது முகத்தில் ரேகைபோல் தெரிகிறது...
டேய் தம்பி... மனசுக்கு புடிச்சவங்க கட்டிக்கலன்னா மனசு என்ன பாடுபடும் ன்னு எனக்குத் தாண்டா தெரியும். அந்த பொண்ணு பாவம் டா... நல்ல புள்ளையா இருக்கா அவள தவிக்க விட்டுடாத... அந்த பாவம் நம்ம வம்சத்தையே அழிச்சிடும் டா ன்னு செல்வி சொல்லவும், மதி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது. எதுவும் சொல்லாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறான்..
ரொம்ப நேரத்துக்கு பிறகு 'மன்னிச்சிடுக்கா' என்று மட்டும் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
எதுக்கு மன்னிப்பு கேக்குறான். பெரியசாமிக்கு ஒன்னும் புரியல. நிலை தடுமாறி நிற்கிறார். அவர் மனைவி, செல்வி என எல்லோரும் அழுகிறார்கள். ரொம்ப சிரமப்பட்டு அவரும் அழுகையை அடக்கி கொண்டு நிற்கிறார்...
மணி இரவு ஒன்பதை தாண்டி ஓடிக்கொண்டிருகிறது. நண்டு சிண்டுங்க எல்லாம் தூங்கிடுச்சிங்க, பெருசுங்க ஒன்னொன்னா பாயை போட்டு தூங்க ரெடியாயிடுச்சிங்க. எதுத்த வீட்டு முருகேச அண்ணன் வாசல்ல கட்டிலை போட்டு படுத்துட்டார். அவர் பொஞ்சாதி கீழ பாயை விரிச்சி உக்காந்திருக்கு. புள்ளைங்க தூங்கிடுச்சி. முருகாயி கிழவி இப்பதான் வெத்தலை பையை தேடிகிட்டு அலையுது. தெருவோட கடைசி லைட் கம்பத்துக்கு கீழ ஆம்பள ஆளுங்க சீட்டு அடிகிட்டு இருக்காங்க. மாரியாயி கோயிலு லைட் கம்பத்துக்கு கீழ வாலிப பசங்க கபடி ஆடிகிட்டு இருக்கானுங்க... கோ கோ ஆடிகிட்டு இருந்த பொட்ட புள்ளைங்கள, ஆம்பள பசங்க வீட்டுக்கு போக சொல்லி விரட்டுராணுக. இருட்டுல யாரோ தனியா வருவது போலிருக்கு... ஆம் மதி வருகிறான். மறுநாள் காலையில பூசாரிகிட்ட போகணும் ன்னு அம்மா வந்து சொன்னதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் போய்கிட்டே இருக்கான்...
மதி ஏன் கல்யாணம் வேணாம்ன்னு சொல்றான்?... செல்விகிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்டான்?...
மதி அப்ப பத்தாவது படிச்சிகிட்டு இருந்தான். செல்வி பதினொன்னாவது. ரெண்டுபேரும் ஓரே பள்ளிக்கூடத்தில தான் படிச்சாங்க. கூட படிக்கிற தினேஷ்ங்குற பையன செல்வி லவ் பண்றதா அரசபுரசலா மதிக்கு தெரியவந்துச்சி. செல்விகிட்ட நேரா போனான். வீட்டுல யாரும் இல்ல. செல்வி சோறாக்கி கிட்டு இருந்தாள்.
நீ தினேஷை லவ் பண்றியாமே...
ஏய் யாருடா சொன்னது? அதெல்லாம் ஒண்ணுமில்லன்னு தலைய தூக்காமலே பதில் சொன்னாள்.
'பசங்கல்லாம் கிண்டல் பண்றாங்க உண்மையை சொல்லுப்ள'.. மறுபடியும் கேட்டான். இல்லவே இல்லன்னு செல்வி மறுத்துட்டா.. அதோடு விஷயம் முடிஞ்சிது. அதுக்கப்புறம் அதபத்தி அவன் செல்விகிட்ட கேட்கல. அதுக்கப்புறம் ஒருமாசம் கழிச்சி நோட்டு எடுக்க செல்வி பையை மதி எடுத்தான். இங்க்லீஷ் புக்ல, கடைசி பக்கத்தில் தினேஷ் பேரு இருந்துச்சி. அப்பல்லாம் செல்போன் புழக்கம் அதிகம் இல்லாத காலம். கிராமங்களில் சுத்தமாகவே இல்லை. ஊருல ஒருத்த ரெண்டு பேரு வச்சிருப்பாங்க. அந்த ஊருல யாருக்கு போனு வந்தாலும், அவங்களுக்கு தான் வரும். அப்ப படிக்கிற பொண்ணுங்க மனசுக்கு புடிச்ச பையன் பேரையும், படிக்கிற பசங்க பொண்ணுங்க பேரையும் நோட்டு புக்ல தான் எழுதி வப்பாங்க. ஊருல பாழடஞ்ச வீடு இருந்தா, அதுதான் அந்த ஊரோட காதல் கோட்டையா இருக்கும். அந்த வீட்டு சுவத்தை பார்த்தே அந்த ஊரில் யார், யாரை லவ் பண்றாங்கன்னு கண்டுபுடிச்சிடலாம். சுவத்துல ஹார்டின் போட்டு அம்பு வேற விட்டுருப்பானுங்க. புள்ளங்க மேல பெத்தவங்களுக்கு டவுட்டு வந்தா முதல்ல பள்ளிக்கூடத்து பையைதான் சோதிச்சி பாப்பாங்க. லவ் லட்டர்ஸ் அதிகமா புழக்கத்தில் இருந்த காலமது. அன்றைக்கு லவ்வர்ஸ்களின் காதல் மொழியாக லவ் லட்டர்ஸ் தான்.
மறுபடியும் செல்விகிட்ட கேட்டான். இல்லவே இல்லன்னு புடிவாதமா சொல்லிட்டா. இவனுக்கு தெரிஞ்சா அப்பாகிட்ட சொல்லிடுவான்னு பயம். காரணம், மேகலா லவ் பண்ணின விஷயத்தை அவங்க அப்பாகிட்ட போட்டு கொடுத்தது இவன்தான். அப்புறம் பக்கத்துக்கு ஊரு மேஸ்திரி வீடு கட்டுற இடத்துல சித்தாளு பொம்பள கூட இருந்ததை பார்த்து, திருடன் திருடன்னு கத்தி ஊரு சனத்தையே அந்த இடத்துக்கு வர வச்சவன். இப்படி பலபேரு காதலை பிரிச்ச்சவன் இவன்தான். ஊருல ஒருத்தரும் லவ் பண்ணக்கூடாதுன்னு சொல்லி திரிஞ்சவன். அன்னைக்கு மறுநாள் பக்கத்துக்கு தெரு கதிருக்கு கல்யாணம் என்பதால், முதநாள் நைட்டு டிவி, டெக்கு வாடகைக்கு எடுத்து வந்து, படம் ஓட்டினாங்க. ஆம்பள, பொம்பள என சகட்டு மேனிக்கு எல்லாரும் படம் பாத்துகிட்டு இருந்தாங்க. செல்வி தல வலிக்குதுன்னு சொல்லிட்டு படம் பாக்க வரல, மதி, அப்பா, அம்மா எல்லாரும் படம் பாக்க போயிட்டாங்க. ராத்திரி 11 மணி இருக்கும் மதிக்கு தண்ணி தாகம் கூடவே தூக்க கலக்கம் வேற. வீட்டுக்கு போனான். தெருவுல யாருமே இல்ல. வாசல்ல படுக்கிற பெருசுங்க கூட படம் பாக்க போயிட்டாங்க. வேகமாக வீட்டுக்கு போனான். வீட்டு திண்ணையில் செல்வி உக்கார்ந்திருந்தா. தலைவலின்னு சொன்னவ, இந்த நேரத்துல ஏன் உக்கார்ந்திருக்கா ன்னு இவனுக்கு டவுட்டு வந்துடுச்சி. வீட்டுக்கு பின்னாடி போனான். அடுப்பெரிக்க அடுக்கி வச்சிருந்த குச்சி கட்டுக்கு பின்னால யாரோ உக்கார்ந்திருப்பது தெரிந்தது. நேரா வந்தான் தண்ணி கொடத்தை தூக்கி போட்டு உடைச்சான். செல்வியை எட்டி உதைச்சான். ஊருல ஒரு பொட்டச்சியும் லவ் பண்ணக்கூடாதுன்னு சொல்றவன் நான், என் வீட்டிலேயே லவ்வா? ன்னு அவள மறுபடியும் அடிக்கப் போனான். அப்பா வரட்டும் ன்னு மிரட்டிட்டு தூங்க போயிட்டான். ஊருல திருவிழா, கல்யாணம், காதுகுத்தி, கருமாதி அன்னைக்கெல்லாம் படம் ஓட்டுவாங்க. அப்ப ஊரு சனமே படம் பாக்க போய்டுவாங்க. அன்னைக்கு நைட்டு தான் லவ் பண்றவங்களுக்கு 'லவ்வர்ஸ் டே'. வெளியூர் பசங்கள லவ் பண்ற பொண்ணுங்க கூட அவங்க ஆள வரசொல்லி தகவல் அனுப்புவாங்க. இதை கண்டுபுடிக்கவே ஊருல ஒரு க்ரூப் இருக்கும். அந்த க்ரூப்ல மதியும் ஒரு ஆளு. க்ரூப்போட கண்ணுல மண்ணை அள்ளிப் போட்டுட்டு தான் லவ்வர்ஸ் பேச முடியும். எப்படா விடியும் அப்பா கிட்ட சொல்லலாம் ன்னு தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான். பொழுது விடிஞ்சதும் முத வேலையா அப்பாகிட்ட மதி செல்வியோட லவ் மேட்டரை சொல்லி, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிட்டான். மதியின் அம்மா, ஏண்டி... நாயே... திமிரெடுத்து திரியுரியா? படிக்க போறா கொழுப்பாடின்னு சொல்லி, செல்வியை விளக்கமாறு பிய்யுற அளவுக்கு அடிச்சாங்க. பெரியசாமி செல்விக்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கினார். அதுக்கப்புறமும் செல்வி தன் காதலை மறக்க விரும்பவில்லை. ஆத்துக்கு குடி தண்ணி எடுக்கப் போனப்ப, தினேஷ் கூட பேசிகிட்டு இருந்ததா, மலர் அக்கா வந்து சொல்லிட்டாங்க. அப்பவும் முருவாயி கிழவி தான் இவளுக்கு புத்தி கேட்டுப் போச்சி, நம்ம சாமி முன்னாடி சத்தியம் வாங்குங்க, அப்பத்தான் இவ அடங்குவா என்று எடுத்து கொடுத்திச்சி. வீரனார் கோயில் முன்னாடி செல்வி கையில சூடத்தை ஏத்தி வச்சி, சத்தியம் பண்ண சொன்னாங்க. செல்வி சத்தியம் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சி இருந்தப்ப, செல்வியோட அக்கா தான் மயிரைப்புடிச்சி இழுத்து அடிச்சாங்க. 'திமிரு எடுத்து அலையுராளா ... அவள உதைங்கடா' ன்னு கிழவி கத்தினது வானமே அதிரும்படி இருந்துச்சி. ஆளாளுக்கு அடிச்சாங்க. அடி தாங்காம செல்வி சத்தியம் பண்ணி கொடுத்திட்டா. மறுநாள் குளிக்க போறேன்னு சொல்லிட்டு போன செல்வி, வீரனார் கோவில் முன்னாடி தினேஷ் கூட 'இந்த சாமியே நம்மள சேத்து வைக்கும்' ன்னு சொல்லி பேசிகிட்டு இருந்ததை மோட்டார் ஓட்டுற சேகர் மாமா வந்து சொல்லிட்டாரு. இனி இவள ஒரு நைட்டு வச்சிருந்தாலும் நம்ம மானத்தை வாங்கிடுவா... சீக்கிரம் இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் ன்னு பக்கத்துல இருக்க, அசூர்ல மாப்பிள்ளை பார்த்து அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. மாப்ள டீக்கடை மாஸ்டர். சென்னையில வேலை செய்வாப்ள.
கல்யாணம் ஆகி 6 மாசம் நல்லாத்தான் போச்சு. குழந்த பிறக்கலன்னு லேசா ஒரு பேச்சு கிளம்பிச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் மாப்ள மெட்ராசுக்கு வேலைக்கு போகல. உள்ளூர்லேயே இருந்தாப்ல... 6 மாசத்துக்கு அப்புறம் தான் பூகம்பம் ஆரம்பிச்சுது. மாப்ளைக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரிய வந்துச்சி. மெட்ராசுக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு போனவர் மாதக்கணக்கில் ஊர் திரும்பவே இல்லை. கொஞ்சநாள் போன் பண்ணி பேசிகிட்டு இருந்தவரு, அதுக்கப்புறம் போன் பண்றதையும் நிறுத்திட்டாரு. மாதக்கணக்கு நாட்கள் ஓடின. இன்றைக்கு வருவார், நாளைக்கு வருவார் என்று இளவுகாத்த கிளி போல செல்வி காத்துக் கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பெத்தவங்க, செல்வியை வீட்டோட வந்திடும்மான்னு கூப்பிட்டாங்க. இனி அந்த ஊருக்கு வந்தா என் புருசனோட வரேன், இல்லேன்னா வரவே மாட்டேன்ன்னு பிடிவாதமா இருந்திட்டா. 'நீங்க அமைச்சி கொடுத்த வாழ்க்கை தானே, வாழ்ந்தாலும், செத்தாலும் இனி இங்கேதான்' என்பது போலிருந்தது அவளின் வீராப்பு. 'பொண்ணோட சந்தோஷத்தை விட கவுரவம் பெருசா பாத்திங்கல்ல, இப்ப என்ன உங்க கவுரவம் வாழ்த்தா' என்று காரி துப்பியதை போலிருந்தது அந்த வீராப்பு. மறு கல்யாணம் பண்ணி வைக்கவும் பெத்தவங்க தயாரானங்க, செல்வி முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா. அப்போது தான் முத தடவையா மதி கொஞ்சம் கலங்கினான். எதோ பெரிய தப்பு பண்ணிட்டோமோன்னு வருந்தினான். 'ஒருவேள அவ லவ் பண்ணுன பையன கட்டிக்கிட்டு இருந்திருந்தா சந்தோசமா இருப்பாளோ?' என்று யோசிக்க யோசிக்க அழுகை முட்டி கொண்டு வந்தது. தன் புருஷன் எப்படியும் வந்திடுவார் என்ற நப்பாசை செல்விக்கு இருந்துச்சி. அவருக்கு சாதகம் சரியில்ல, அதான் இப்டி எங்களை புடிச்சி ஆட்டுது, எங்கூர்ல குமார் மாமா கூடத்தான் நாலுவருஷம் எங்கோ இருந்திட்டு வந்தாப்ல சொல்வா ... அதுமாதிரி நிச்சயமா அவரு வருவார்ன்னு அவ நம்பிகிட்டு இருந்தா. வருஷம் ரெண்டாச்சி. ஆள் மட்டும் வரவே இல்ல. எங்கோ திருப்பூர் ல ஒரு பொண்ணு கூட குடுத்தனம் நடத்தறதா கூட தகவல் வந்துச்சி. அதெல்லாம் கேட்டா செல்வி செம கோவமா சொல்றவங்கள திட்ட ஆரம்பிச்சிடுவா... ரெண்டரை வருஷம் கழிச்சி மனுஷன் வந்தாப்ல. அதன் பிறகு நாட்கள் ஓடுகின்றன. செல்வியும் சிரிக்கத்தான் செய்கிறாள். உண்மையில் செல்வி மகிழ்ச்சியாக தான் இருக்கிறாளா? அது செல்விக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். என் வாழ்க்கையை எல்லாருமா சேர்ந்து சீரழிச்சிட்டாங்களே என்ற கோபம் அவ மனதில் எங்கோ மூலையில் இல்லாமலா போய்விடும்? என்பது தான் மதியின் கவலை. தன் காதலை பிரிக்க முன்னாடி நின்னவன் இப்ப காதலிக்கிறான் என்ற எந்த கோபமும் இல்லாமல், தம்பி ஆசைப்பட்ட பொண்ணையே கட்டிக்கட்டும் ன்னு அப்பாகிட்ட சண்டைக்கு போன செல்வி, மதியின் மனதில் பெரும் புயலை கிளப்பிவிட்டாள். மதி கூனிக் குறுகி போகிறான். செல்வி முகத்த பாக்கவே கூச்ச்சப்படுறான். அந்த குற்ற உணர்ச்சியில் தான் கல்யாணம் வேணாங்குறான்.
பெத்தவங்க ஆம்பள பசங்க காதலிச்சாலும் எதிர்க்கத்தான் செய்றாங்க. ஆனா ஒரு கட்டத்தில் 'எப்படியே ஒழிஞ்சி போ' 'என் சொத்துல சல்லிப் பைசா கொடுக்கமாட்டேன்' ன்னு சொல்லியாவது ஆம்பள பசங்களின் காதலை ஏற்றுக் கொள்ளும் பெத்தவங்க, பொம்பள பசங்களோட காதலை மட்டும் எந்த நிலையிலும் ஏத்துக்க தயாரா இல்ல. பொம்பள புள்ள காதலிச்சா வீட்டோட மொத்த கவுரவமும் போச்சேன்னு, பெண்ணை அடித்து உதைக்கிறார்கள். அவர்களின் மயிரை அறுக்கிறார்கள். அவசர, அவசரமா யார் என்னென்னு கூட தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். வீட்டுக்கு தெரியாமல் விரும்பியவனை கட்டிக் கொண்டால், காசுபணம் செலவு பண்ணி, தேடிக் கண்டுபிடிச்சி பிரிச்சாத்தான் அவங்க கவுரவம் காப்பதபட்டதா நம்புறாங்க. கீழ்சாதி பையனை கட்டிக்கிட்டா ரெண்டுபேரையும் கொல்லக் கூட அவங்க தயங்குவதில்லை. வயிற்றில் புள்ள இருந்தா அதையும் சேர்த்தே கொன்றுவிடுகிறார்கள். ஆனா நம்ம வீட்டு ஆம்பள புள்ளையும், யாரோ ஒருத்தரோட பொம்பள புள்ளையதான் காதலிக்கிறான் என்பதை அவர்கள் என்றைக்கும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
மறுநாள் பொழுது விடிந்ததும், எந்த வீரனார் முன்னால செல்வி அடிக்கப்பட்டாலோ, கையில் சூடம் ஏற்றி வைத்து சத்தியம் செய்ய சொன்னார்களோ, அந்த வீரனார் முன்னால தான் மதிக்கு காத்துக் கருப்பு புடிச்சிருக்கா ன்னு பூசாரி முன்னாடி மொத்த குடும்பமும் கைகட்டி நிக்குது. அன்னைக்கு அவள உதைடா ன்னு கத்தின முருவாயி கிழவி, இன்னைக்கு 'எப்பா வீரனாரப்பா உம புள்ளையா காப்பாத்துப்பா' ன்னு மண்ணோடு, மண்ணா விழுந்து கும்புடுது ...
- தமிழன் வேலு