சனி, 3 மே, 2014

தொண்டர்களை உசுப்பிய தளபதி

2000 க்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்வி தான். தீர்ப்பளித்த மக்களே கூட தேர்தல் முடிவுகள் அப்படி அமையும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் இரண்டு மணிநேர மின்தட்டுப்பாட்டை தவிர்த்து வேறு விதத்தில் எந்த குறைகளும் திமுக ஆட்சி காலத்தில் பெரிதாக காணப்படவில்லை. ஆனால் தேர்தல் முடிவில் அதிமுக அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்த திமுக விற்கோ பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட தேர்தல் முடிவு கொடுக்கவில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களும், திமுக எதிரிகளும் திமுகவின் தோல்வியை கொண்டாடி கொண்டு இருந்தார்கள். 'இனி திமுகவால் எழுந்திருக்கவே முடியாது' என அவர்கள் கர்ஜித்தார்கள். அதற்கேற்றார் போல் ஆளும்கட்சியும் திமுக மாஜி அமைச்சர்கள் மீதும், திமுக முன்னணி நிர்வாகிகள் மீதும் அடுத்தடுத்து வழக்குகளை போட்டு நிலைகுலைய செய்து கொண்டிருந்தது. அவர்கள் ஜாமீனில் வெளிவருவதும், மீண்டும் வேறொரு வழக்கில் கைதாகி சிறை செல்வதுமாக நிர்வாகிகள் கலங்கினார்கள். நடுநிலை பத்திரிக்கைகள் கூட திமுக தரப்பு நியாயங்களை எடுத்து வைக்க தயங்கின. அப்போது ஒருவர் மட்டும் ஊர் ஊராக சென்று நிர்வாகிகளை சந்தித்தார், அவர்களை தட்டி எழுப்பினார், உடன்பிறப்புகளை உசுப்பினார். தமிழகம் முழுவதும் சுற்றிவந்து இளைஞர் அணியை பலப்படுத்தினார். தோல்வியில் துவண்டு கிடந்த திமுக விற்கு புதிய உற்சாகத்தை பாய்ச்சினார்... அவர்தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர், உடன்பிறப்புகளால் அன்போடு 'தளபதி' என அழைக்கப்படும் மு.க.ஸ்டாலின்.



திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற வாதப் பிரிதிவாதங்கள் ஊடகங்களில் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கையில், 'திமுகவில் அடுத்த தலைவருக்கான சண்டை' என ஊடகங்கள் எழுதிக் கொண்டு இருக்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக 8109 கிலோமீட்டர் தூரம் காரிலேயே பயணம் செய்து பிரச்சாரத்தை அவர் முடித்திருக்கிறார். திமுக தொண்டர்களை பொருத்தமட்டில் கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்பதில் உறுதியாகவும், நம்பிக்கையோடும் இருக்கிறார்கள். அனால் அவர் இந்த இடத்திற்கு அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை, கலைஞரின் மகன் என்பதால் அவருக்கு ஒரு எளிதான அடையாளம் கிடைத்தது என்பதை மறுப்பதிற்கில்லை, ஆனால் கலைஞரின் மகன் என்பதாலோ அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. அப்படி சொல்பவர்கள் முதலில் அவரின் கடந்த கால அரசியல் வரலாறுகளை எடுத்துப் பார்த்துவிட்டு பேசட்டும். 1966 யில் தனது பள்ளி காலத்திலே அரசியல் வாழ்வுக்கு வந்த அவர். 1977ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் இந்திய தேசத்தில் நெருக்கடி நிலை அமலுக்கு வந்த போது  தனது 24ஆம் வயதில் மிசா சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் மிசா சட்டம் தான் அவரை இன்றைக்கு தமிழக அரசியல் அரங்கில் மிளிர செய்திருக்கிறது என்றுகூட சொல்லலாம். திமுக தலைவர் கலைஞரின் மகனாக இருந்தாலும், இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவர், இளைஞரணி செயலாளர், துணைப்பொது செயலாளர் என படிப்படியாக உயர்ந்து, 2009 ஆம் ஆண்டு தான் அவரால் கழக பொருளாளர் என்ற  நிலைக்கு முடிந்திருக்கிறது. நாட்டில் எத்தனையோ தலைவர்களின் மகன்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அத்துனைப் பேரும் மக்களின் அன்பையும், தொண்டர்களின் நம்பிக்கையையும் பெற்றதாக சரித்திரம் இல்லை. ஆனால் ஸ்டாலின் தொண்டர்களின் ஏகோபித்த அன்பை பெற்று, நம்பிக்கையை விதைத்து  தொண்டர்களின் தலைவராக மிளிர்கிறார்.

இப்போது அவர் அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார்... 

2011 சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தொண்டர்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியை அவரே எடுத்துக் கொண்டு செயலாற்றி வருகிறார். இன்னும் சொல்லப் போனால் சோர்ந்து கிடந்த தொண்டர்களுக்கு உற்சாக டானிக்காக இருந்தார். திமுக நெருக்கடியை சந்திக்கும் போதெல்லாம், கழகத்தை கட்டிக் காப்பாற்ற அந்தந்த காலகட்டங்களில் ஒவ்வொரு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் திமுக திணறிய போது கழகத்தை உயிர்ப்போடு வைத்திருந்தவர் அதன் தலைவர் கலைஞர். அதே போல, தற்போது கடந்த மூன்றாண்டுகளாக திமுக தொண்டர்களை உற்சாகத்தோடு வைத்திருந்து, இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை போர்க்குணத்தோடு பணியாற்ற செய்ததில் ஸ்டாலினின் களப்பணிக்கு மிக முக்கிய பங்கிருக்கிறது. கழக தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்வது, கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்வது, அரசியல் ரீதியான நிகழ்வுகளில் பங்கேற்பது, போராட்டங்களில் பங்கேற்பது, தேவையெனில் தானே தலைமை ஏற்பது, எதிர்பாராதவிதமாக சாமான்ய கழக தோழர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களை சந்திப்பது, அவர்களின் கருத்துக்களை பெறுவது என தினந்தோறும் தன் பங்களிப்பை தமிழக அரசியல் பதிவு செய்துகொண்டே வருகிறார்.


திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் வரை, அதிமுக தான் 'நாற்பதுக்கு நாற்பதும் வெல்லும்' என தொண்டைத் தண்ணி வற்றும் வரை முழங்கிய ஊடகங்களை, முதல் நாள் பிரச்சாரத்திலே தெளிவான பேச்சு, கூர்மையான கேள்விகளால் தன் பக்கம் வளைத்தார். ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் திரளும் தொண்டர்கள் கூட்டமும், ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டமும் அவரின் உழைப்புக்கு கட்டியம்  சொல்வதாக அமைந்தது. அவர்  எங்கெங்கு செல்கிறாரோ, அங்கெல்லாம் தொண்டர்கள் கூட்டத்தில் அவர் திக்குமுக்காடினார். தற்போதைய திமுகவை பொருத்தமட்டில் அதன் தலைவர் கலைஞரை தவிர மற்ற தலைவர்களுக்கு எவருக்கும் இவ்வளவு பெரிய கூட்டமும், மக்கள் செல்வாக்கும் சேர்ந்ததில்லை. திமுகவை நோக்கி வீசப்படும் விமர்சனக் கனைகளுக்கெல்லாம் தக்க ஆதாரங்களோடு பிரசாரக் கூட்டத்திலே பதிலளித்தார். முதல்வர் ஜெயலலிதா, மக்களை பார்த்து மத்தியில் அதிமுக தலைமையிலான ஆட்சியை அமர்த்துங்கள் எனக்கூறி, செய்வீர்களா?  நீங்கள் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலடியாக ஸ்டாலின், நீங்கள் (முதல்வர்) சொன்னதையெல்லாம் செய்தீர்களா? செய்தீர்களா? என கேள்வி எழுப்பினார். அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, ஒட்டுமொத்த ஊடகங்களிலும் முக்கிய இடத்தை பிடித்தது. எப்போதும் திமுகவின் சாதனைகளை மட்டும் பட்டியல் போடும் ஸ்டாலின், இந்தமுறை அதிமுக அரசு செய்ய தவறியதையும் சேர்த்து பட்டியல் போட்டு பேசியது அதிமுகவினரை கலக்கமடைய செய்தது. 'ஸ்டாலினின் பிரசாரத்திற்கு பிறகு தான் அதிமுக வின் நாற்பதும் நமதே சுருதி குறைந்தது. அவர் பிரச்சாரம் செய்த 40 தொகுதியிலும் திமுக தொண்டர்களை உசுப்புவதாக அமைந்திருந்தது.     

மற்ற தேர்தல்களை விட, இந்த தேர்தலில் ஸ்டாலின் கூடுதல் பொறுப்புகளையும், சிரத்தையும் எடுத்து பணியாற்றி இருக்கிறார். 'வாரிசு அரசியல்' என்ற எதிர்கட்சிகளின் விமர்சனத்தை முறியடிக்க, தன்னுடைய தனித்திறனை நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுந்ததே அதற்கு காரணம். அதுபோலவே இந்த தேர்தலில், எந்த கூட்டத்திலும், கலைஞரோடு இணைந்து அவர் பேசவில்லை. தனக்கான செல்வாக்கை இந்த தேர்தலில் அவர் நிரூபித்திருக்கிறார். எப்போதும் அதிமுக அரசை மட்டுமே தாக்கி பேசும் ஸ்டாலின் இந்த முறை மதவாதத்துக்கு எதிராகவும் அவர் பேச துவங்கி இருப்பது இந்திய அளவில் அவரின் பார்வை விரிவடைந்து இருப்பதையே காட்டுகிறது. என்னதான் கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருந்தாலும், கட்சியின் தலைமைக்கும், அதன் தொண்டர்களுக்கும் ஒரு இணைப்பு இல்லையென்றால், அந்த கட்சி அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பிறகுஅப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க, கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நேரடி தொடர்பை உருவாக்கிய ஸ்டாலின், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படித்தியதன் விளைவே இந்த தேர்தலில் திமுகவின் பிரமாண்ட களப்பணிக்கு காரணம். திமுக போன்ற பெரிய கட்சிகளில் எப்போதும் புரோட்டாக்கால் பின்பற்றபடுவது வழக்கம். இணையதளத்தில் திமுகவிற்கு ஆதரவாக கருத்துக்களை எழுதும் பாடலூர் விஜய் என்ற மாற்றுத் திறனாளி இளைஞரை, புரோட்டாக்காலை மீறி அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்ததும், அவரிடம் கருத்துக்களை கேட்டறிந்ததும், அவர்களை மேலும், மேலும்  வேகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரஸ் அணியில் இருந்து திமுக விலகிய பிறகு, மீண்டும் காங்கிரசோடு திமுக எக்காரணம் கொண்டும் சேர்ந்துவிடக்கூடாது என்ற தொண்டர்களின் விருப்பத்தை ஸ்டாலின் தலைமையிடம் வலியுறுத்தி, அதனை செயல்படுத்தியும் இருக்கிறார்.

எப்போதும், அரசியல் ரீதியாக கலைஞரை தவிர வேறு எவருக்கும் பதில் சொல்லாத ஜெ. ஸ்டாலினின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார். ஸ்டாலினின் அடுக்கடுக்கான கேள்விகளால் தடுமாறிய ஜெ. ஒரு கட்டத்திற்கு மேல் அவரது கேள்விகளை அலட்சியம் செய்ய முடியவில்லை. அதன் விளைவாகவே பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கம் சொல்லவேண்டிய சூழல் உருவானது. அதுதான் 'தாம் கரசேவைக்கு ஆள் அனுப்பவில்லை' என்று ஜெ.வை தன்னிலை விளக்கம் சொல்ல வைத்தது. திமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்களிடம் அடுத்த தலைவராக மிளிரும் தளபதி ஸ்டாலின், இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்கள் தலைவராகவும் உருவெடுப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. 'இந்த தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையவேண்டும் என்று அவர் சொல்லும் போது விண்ணை அதிரும் அளவுக்கு கரகோஷம் காதை பிளக்கிறது'... பொறுத்திருந்து பார்ப்போம் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை...

- தமிழன் வேலு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக