செல்வா எப்போதும் கலகலப்பாக சிரித்துக் கொண்டே இருப்பவர். உணர்வுகளை மிக தத்ரூபமாக வெளிப்படுத்துவதில் வல்லவர். அன்பையும், கோபத்தையும் எவ்வித பாகுபாடுமின்றி முழுவதுமாக வெளிப்படுத்துபவர். பணம் மட்டுமே பிரதானமாக கொண்ட மனிதர்களிடையே மனிதர்களை, உறவுகளை தேடுபவர். தன் குடும்பத்தின் கடைக்குட்டி என்பதால் தனக்கு இளையவர்கள் யாவரையும் தம்பி தம்பி என்று அன்போடு பழக கூடியவர். ஆனால் நான் இப்போது உங்களுக்கு சொல்லப்போவது வெள்ளுடையில், புன்னகை தவழும் முகத்தோடு வலம்வரும் செல்வாவை அல்ல. ஒரு சாதாரண தீண்டப்படாதவளின் மகன் செல்வாவை. செல்வா, எப்போதும் தனிமையை விரும்பியதில்லை. தனிமை, தன் துயர்மிகுந்த வாழ்வின் நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்துவிடும் என்பதாலே அவர் தனிமையை வெறுப்பவர். தனிமையில் இருக்கும் போதெல்லாம் அவர் கண்கள் குளமாகி இருக்கும். நான் தனிமையில் இருக்கும் போதெல்லாம் தீண்டப்படாதவர்களின் வாழ்வில் ஆண்டைகள் நடத்திய ஊழிக்கூத்துகள் மனக்கண் முன் நிழலாடுவதாய் அவர் சொல்வார். தங்களை வளர்க்க தன் தாய் சந்தித்த அவமானங்களும், வலிகளும் எப்போதும் நெஞ்சில் இருந்து நீங்காத ரணங்கள் என்பார். இருப்பினும் அந்த வலிகளும், அவமானங்களுமே என் தலைமுறையை மீட்டது என்று ஆசுவாசப்படுத்திக் கொள்வார். எல்லோருக்கும் தாயைப் பிடிக்கும், அவர் மட்டும் அம்மா தான் என் தலைமுறையின் வெளிச்சம் என்பார். கருவறையில் இருளையும், வாழ்வில் வெளிச்சத்தையும் தந்த தெய்வம் என்பார். தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் தன் தாயின் வழிகாட்டல் இருப்பதாய், தான் அணிந்திருக்கும் ஒவ்வொரு உடையிலும் தன் தாயின் தியாகமும், உழைப்பும் இருப்பதாய் சொல்லி சிரிப்பார். செல்வா பெருங்குரலெடுத்து பேசுவது அரிதிலும் அரிதாக இருக்கும். அவர் அப்படி பேசினார் எனில் அவரின் உணர்வுகள் வெகுவாக தூண்டப்பட்டிருப்பதாய் எண்ணிக் கொள்ளலாம். அவரின் குரலில் தன் ஆவேசமும், தன் முன்னோர்களின் ஆற்றாமையும் சேர்ந்து ஒரே நேர்க்கோட்டில் வெளிப்படும். ஆண்டைகளுக்கான எச்சரிக்கையாக அது இருக்கும். அப்போதெல்லாம் அவர் கண்கள் ஆவேசத்தில், ஆற்றாமையில், வஞ்சகத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோடு மிளிர்வதை காணலாம். இருள் சூழ்ந்த பொழுதில், ஒற்றை நிலவை சாட்சியாக வைத்து ஒரு சேரித் தெருவில் அவர் உரையாடும் போது அந்த காட்சியை காண நேர்ந்தது. அங்கு அவர் பேசுகையில் தான் அணிந்திருக்கும் வெள்ளுடைக்குப் பின்னால் தன் தாயின் கிழிந்த வாழ்வு இருப்பதாக சொன்னார். தன் தாயின் கிழிந்த வாழ்வுக்கு பின்னாலும், முன்னாலும் ஆண்டைகளின் சூழ்ச்சிகள் இருப்பதாக சொன்னார். எவ்வளவோ சொன்னார், ஏதோதோ சொன்னார். அத்தனையும் தீண்டப்படாதவர்களின் வாழ்வில் காலப்பேய் நிகழ்த்திய கோரதாண்டவம். எல்லோருக்கும் பகலும், இரவுமாய் நாட்கள் கழியும், ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு மட்டுமே இருளும், இருளுமாய் நாட்கள் கழியும் என்றார். இந்த ஒற்றை வாசகதிற்குள் தான் எத்தனை எதிர்க்குரல்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை வலிகள், எத்தனை அழுகைகள் அடங்கியிருக்கின்றன.
செல்வாவோடு பழகும் வாய்ப்பு கிட்டியிருந்தாலும், அவரோடு தனிமையில் உரையாடும் வாய்ப்பு மட்டுமே கிடைக்காமல் இருந்தது. மாலை மங்கும் நேரம், கன்னிப் பெண்ணுக்கு காதல் வந்ததை போல மேற்கு வானம் சிவந்திருக்கும் அந்த பொழுதில் அவரோடு தனிமையில் பயணிக்கும் அந்த வாய்ப்பும் ஒருநாள் கிடைத்தது. கார் எங்கயோ சென்றது. எங்கென்று மட்டும் தெரியவில்லை, எங்கு சென்றால் என்ன? இன்று எப்படியாவது அவர் மனதில் இருக்கும் அந்த சிறுவயது கதைகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற திட்டம் மனதிற்குள் உருவானது. கார் சென்றுக் கொண்டே இருந்தது. இருவருக்குள்ளும் பெருத்த மவுனம் மட்டுமே நீடித்திருந்தது. எங்களை அந்த மவுனம் மட்டுமே இணைத்திருந்தது. கதைகளை கேட்க எண்ணி, தயங்கி, மீண்டும் மீண்டும் அமைதி... காரின் வேகம் குறைந்தது. சாலையின் இருபுறத்திலும் நீண்ட தூரத்திற்கு மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. அவ்வளவு பெரிய கானகத்தை அதற்குமுன்னால் நான் கண்டதில்லை. மனதிற்கு இதமான, ரம்மியமான சூழல், எங்கயோ ஆகாயத்தில் பறப்பதை போன்ற உணர்வை ஏற்ப்படுத்தி விட்டது. அவரிடம் கதை கேட்கவேண்டும் என்பதை மறந்து, அந்த சூழலை அனுபவிக்க துவங்கிவிட்டேன். பறவைகளின் ஓசையும், காற்றில் ஆடும் மரத்தின் சத்தமும் என்னை மெய் மறக்க செய்துவிட்டது. ஒரு மரத்தடியில் அவர் அமர்ந்துவிட்டார். அதுவரையில் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. மீண்டும் நினைவு வந்தவனாய் அருகில் சென்று, அன்றைக்கு அவர் பேசியதை நினைவுப்படுத்தினேன். மீண்டும் அவருக்குள் மவுனம். அந்த மவுனம் எதோ ஒரு பிரளயத்தை உண்டு செய்யப் போகிறது என்ற எண்ணம் எனக்குள் உருவானது. தொண்டையை செருமினார், பேசத் துவங்கினார். மீண்டும் அம்மாவைப் பற்றி பேசினார். சிறுவயதில் தன்னை நோக்கி வந்த அத்தனை அம்புகளையும் தன் அம்மாவே எதிர்கொண்டதாய் சொன்னார். அவர் வளர்ந்த சூழலை சொன்னார். இந்த காட்டிற்கு வந்ததன் காரணத்தை சொன்னார். மரங்கள் மீது அம்மாவுக்கு ரொம்பவே பிரியம் என்றார். அம்மா மரங்களோடு பேசியிருப்பதாகவும் சொன்னார். அந்த ஊரில் இவர்கள் குடும்பத்தை தவிர மற்ற வீடுகள் அனைத்தும் ஆண்டைகளின் வீடு என்றார். அப்போதெல்லாம் அம்மாவுக்கு தோழிகளாக, உறவுகளாக இந்த மரங்களே இருந்தனவாம். ஆண்டைகளுக்கு நடுவில் அடிமை சாதியில் பிறந்த தங்களை தனி மனுஷியாக நின்று தன் அம்மாவே வளர்ந்ததாக சொன்னார். நீளமாக அவரே பேசினார். ஒருமுறை இவரின் சிறுவயதில் பள்ளி நண்பர்களோடு பட்டம் விட்டுக் கொண்டிருந்த இவரின் பட்டம் அருகில் இருந்த தோப்பில் விழுந்துவிட்டது. அதை எடுக்க சென்ற போது "ஈன சாதி மவனே இங்க எங்கடா வந்த?" என்று தோப்புக்காரர் விரட்டினார். அழுத கண்களோடு தன் அம்மாவிடம் சென்றான். மகனின் அழுகையை தாங்காமல், ஆண்டையிடம் அம்மா போட்ட சண்டை இன்னும் நினைவில் இருப்பதாய் சொன்னார். 'யோவ்... உன் காட்டுல வேலை செய்ய நான் வரணும், என்புள்ள அவன் பொருள எடுக்க வரக்கூடாதா? இனிமே வேல கீலன்னு வீட்டுப் பக்கம் வந்துப் பாரு...' என்ற அம்மாவின் பெருங்கோவம் இன்னமும் தம் மனக்கண்முன் நிழலாடுவதாய் சொன்னார். தன் பிள்ளைகளுக்காக யாருடனும் போரிட தயங்காத அந்த தாய் ஒரு சந்ததி எழுச்சியின் தொடக்கம். தன் நினைவுகள் வெறும் நினைவுகளே அல்ல என்பார் அவர். இதயத்தை இரண்டாய் பிளப்பது போன்ற ரணம். அந்த நினைவுகள் தன்னை ஆக்கிரமிக்கும் போதெல்லாம் வானமே உடைந்து விழும் போலிருக்கும். கண்ணீர் கடலலை போல் திரண்டு ஓடும் என்பார். தீண்டப்படாதவர்களின் நினைவுகளுக்கு வயதேன்பதே இல்லை என்பார். நேற்றும், இன்றும் என்றுமாய் நிகழும் அன்றாட சங்கதிகளில் ஒன்று. தான் அமர்ந்திருக்கும் காடு, எத்தனையோ பெரும் கொடூரங்களுக்கான சாட்சி என்று அதன் வராலாற்றை விவரிக்க தொடங்கும் முன்னரே அவர் கண்களில் கலவரம் வெடிக்க தொடங்கியிருந்தது. இந்த காட்டில் சாதியற்ற மனிதர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். ஆம்... எந்த விலங்கும், மற்றொரு விலங்கை அடிமை கொள்வது இல்லை, அப்படியானால் அவை மனிதர்களை விட மேன்மையானவர்களே என்று சொல்லி சிரிக்கிறார். அந்த சிரிப்பில் தன் வலிகளுக்கான மருந்தை அவர் தேடுகிறார். தன் மக்களின் விடுதலைக்கு வழி எங்கேனும் உண்டா என்று அலசுகிறார். 'தன் மக்களுக்கான உரிமைகள் சிலைகள் குடியிருக்கும் சன்னதியில் இல்லை, அதிகாரம் குடிகொண்டிருக்கும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உள்ளதாக சொல்வார்'. செல்வாவின் முன்னோர்கள் ஆண்டைகளின் ஊழிக்கூத்தில் அடித்து விரட்டப்பட்டார்கள். ஆனால் அவரது அம்மா மட்டும், தன் சொந்த மண்ணை விட்டு விலகாது, தன் பிள்ளைகளின் நலனுக்காக எந்த இழப்பையும் தாங்கி கொள்ள வல்லவராய் இருந்தார். தன்னுடைய அம்மா எத்தனை அற்புதமானவள், என்று அவர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வதுண்டு. எந்த வாசனை திரவியங்களாலும், என் அம்மாவின் முந்தானை வாசனையை மறக்கடிக்க செய்ய இயலாது என்பார். ஆண்டைகளின் சாதிக் கொடூரத்தில் இருந்து தன்னை காத்தது என் அம்மாவின் அரவணைப்பே என்பார்.
மற்றொரு நாள் விளைநில காட்டிற்குள் அழைத்து சென்றார். "இதோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கும் எந்த நிலமும் எங்களுக்கு சொந்தமில்லை, ஆனால் என் அம்மாவின் வியர்வை சிந்தாத துளி நிலமும் பாக்கியில்லை" என்று சிரித்துக் கொண்டே அந்த உழைப்பின் தியாகத்தை விவரிக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு சூரியன் கிழக்கை நோக்கி நகர, இரவுப் பணிக்கு நிலவு தயாராகிக் கொண்டிருந்தது. இரை தேடி சென்ற பறவைகள் கூட்டிற்கு திரும்பி கொண்டிருக்கின்றன. அறுவடை முடிந்த நெல்வயல்கள் மஞ்சள் நிறத்தில் பரந்து விரிந்து கிடக்கின்றன. நெற்கதிர்கள் குவித்து வைக்கப்பட்ட களத்துமேடு. நெல்லடிக்க வந்த மனிதர்கள் வீடு சென்று வெகுநேரம் ஆகியிருக்கும். யாருமற்ற அந்த களத்துமேட்டில் ஒற்றைப் பெண்மணியாய் துயர்மிகுந்த தன் வாழ்வின் அத்தனை சோகங்களையும் எண்ணி, வேதனைக் குரலில் பாடிக் கொண்டு, களத்தில் சிந்திய நெல்மணிகளை பக்குவமாக தன் முந்தானையில் சேகரித்துக் கொண்டிருக்கிறார் அம்மா. சில சேரிக் கிராமங்களில் களத்துமேட்டில் சிந்திய நெல்மணிகளை பொறுக்குவதற்கு கூட சேரிப் பெண்களிடையே சண்டை மூளும். அதை ரசித்துப் பார்க்கும் ஆண்டைகள் தான் அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பார்கள். சிலசமயங்களில் ஆண்டைகள் அசிங்கமான வார்த்தைகளில் கூட திட்டுவார்கள். களத்துமேட்டில் சிந்திய நெல்மணிகளில் மட்டுமல்ல, ஆண்டை வீட்டு குதிரில் பதுக்கி வைக்கப்படும் நெல்மணிகளிலும் அவர்களுக்கு பங்குள்ளது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது பரிதாபம். அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்ட துயரங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லை, காரணம் ஆண்டைகள் மட்டுமே வாழ்ந்த அந்த கிராமத்தில் ஒற்றை அடிமைக் குடும்பமாய் நாங்கள் மட்டுமே இருந்தோம். அம்மா நன்றாக பாடுவார்கள். நாற்று நடும்போதும், அறுவடை செய்யும் போதும், கூலிவேலை செய்யும்போதும் தன் வாழ்வின் துயரங்களை பாட்டாக பெருங்குரலெடுத்து பாடுவார். முதல் மனுஷியாக வேலைக்கு செல்வார், கடைசி மனுஷியாக வீடு திரும்புவார். இரவெல்லாம் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்வார். பேசுவார் பேசிக்கொண்டே அழுவார். அந்த அழுகையில் தன் பெண் பிள்ளைகளை பங்கமில்லாமல் கரை சேர்த்துவிட வேண்டும் என்ற தவிப்பு இருக்கும். வேதனை கலந்திருக்கும். சமூகத்தின் மீதான கோபம் கலந்திருக்கும். அவர் கதை சொல்ல துவங்கியதும் நான் தூங்கியிருப்பேன். அம்மாவின் கண்ணீர்த் துளிகள் தான் என்னை உசுப்பிவிடும். மீண்டும் தாலாட்டுப் பாடி என்னை தூங்க வைப்பார்.
ஊரில் அம்மன் கோவில் திருவிழா தொடங்கியிருந்த அந்த நாட்கள் தான் என் வாழ்வில் அத்தனை திருப்பங்களை உருவாக்கப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. கரகம் எடுத்துக் கொண்டு வீதி வீதியாக, பட்டு அலங்காரத்தில் அம்மன் வலம் வரும். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி எடுப்பார்கள். தீபாராதனை காட்டுவார்கள். கரகமெடுத்து வரும் நபரின் காலில் தண்ணீர் ஊற்றி கழுவி, அவரிடம் எல்லோரும் ஆசி வாங்குவார்கள். அவர்களுக்கு அந்த நபர் திருநீறு பூசிவிடுவார். அப்போது நான் ஐந்து வயது சிறுவன். அந்த சாமி தீண்டப்படாதவர்களுக்கு ஆசி வழங்காது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. சாமிகளுக்கு அருகிலே சாதியும் இருக்கும் என்பது எனக்கு அப்போது தெரியாது. என் ஆசைக்காக என்று சொல்வதை விட என் நச்சரிப்பால் நாமும் ஆரத்தி எடுப்போம் என்று ஒப்புக் கொண்டார். ஒவ்வொரு வீதியாக, வீட்டுக்கு வீடு நின்று அம்மன் உலா வருகிறது. கரகம் சுமக்கும் நபர் மட்டும் முன்னே வருவார். அவருக்கு முன்பாக இருவர் லைட் சுமந்து கொண்டு வந்தார்கள். சந்தனக் கலர் பட்டுடையில் அம்மனை அலங்காரம் செய்திருந்தனர். அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து அலங்காரம் செய்திருந்தனர். வண்டியை வாலிப பசங்க இழுந்துக் கொண்டு வர, ஊர்ப் பெரியவங்க சிலரும் வண்டியுடன் வந்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமான படையல்கள் சாமிக்கு படைப்பார்கள். சாமிக்கு படைத்ததும், தட்டிலிருந்து கொஞ்சம் எடுத்து வண்டி இழுக்கும் பசங்களுக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் பூசாரி கொடுப்பார். சமயங்களில் வடை கூட சாமிக்கு படைப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டே வாலிப பசங்க வண்டி இழுக்க முந்திக் கொண்டு நிற்பார்கள். எங்கள் வீட்டிலுந்து நான்கைந்து வீடுகளுக்கு முன்னாள் சாமி வந்துவிட்டது. ஆனந்தத்தில் நான் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தேன். ஒரு பித்தளை குடம் நிறைய தண்ணீரும், ஒரு சில்வர் தட்டில் இரண்டு வாழைப்பழம், பொறி பொட்டலம் ஒன்று, கற்பூரம், ஊழுவத்தியோடு அம்மாவும் காத்திருக்கிறார். நிச்சயம் இன்று எதோ கலவரம் நடக்கப் போகிறது என்பதை அம்மா அறிந்தே வைத்திருந்தார். அடிமை சாதிக்காரர்கள் சாமிக்கு ஆரத்தி எடுப்பதை, ஆண்டைகள் விரும்பமாட்டார்கள் என்பது அம்மாவுக்கு தெரியும். நான் ஏமாறக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அம்மா இதற்கு சம்மதித்தார். எங்கள் வீட்டருகில் கரகம் சுமக்கும் மனிதர் வந்தார். அவருக்கு தண்ணீர் ஊற்ற அம்மா சென்றார்கள். என் கையில் தட்டு வைத்திருந்தேன். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத அந்த சம்பவம் கண் இமைப்பதற்குள் நடந்தேறிவிட்டது. ஆம்... தண்ணீர் குடத்தை எட்டி உதைத்தவர், சாமிக்கு படைக்க என் கையில் வைத்திருந்த படையல் தட்டையும் தட்டிவிட்டார். இத்தனையும் அம்மன் கண்முன்னாலே நிகழ்ந்துவிட்டது. "பாவிப் பயலே... பச்சப்புள்ள கண்ணு முன்னாலேயே இப்பிடி பன்றியே.. நீ நல்லா இருப்பியா? நாசமா போவ" என்று அம்மா மண்ணள்ளி சாபம் விட்டு கதறிக் கொண்டிருந்தார். அம்மன் சாட்சியாக ஆண்டைகளுக்கு அம்மா விட்ட சாபம் இன்னமும் அப்படியே இருக்கு. அம்மாவின் அந்த கோபமும், சாபமும் ஒரு தலைமுறைக்கான கேள்வி என்று செல்வா முடிக்கையில் அனிச்சையாகவே அவர் கண்கள் நீரால் நிரம்பி இருந்தன.
- தமிழன் வேலு