திங்கள், 3 மார்ச், 2014

சமூக நீதி

ஒரு மனிதனின் குணாதிசயங்களை, நல்ல பண்புகளை, திறமைகளை வளர்ப்பதற்கு அவனுள் இருக்கும் புத்திக் கூர்மையை தாண்டி, அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் நிகழ்வுகள், புற சூழல்கள் ஆகியைவையும் முக்கிய காரணியாக அமைகிறது என்பது அறிவியலார் ஒப்புக்கொண்ட ஒன்றாகும். அதனடிப்படையில் அன்றைய நாளின் மகிழ்ச்சியையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் மனிதர்களுக்கு அலாதியான விருப்பமுண்டு. அதேபோல ஏமாற்றங்களையும், வருத்தங்களையும், அவமானங்களையும் கூடுமானவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மனிதர்கள் விரும்புவதில்லை. இந்த பகிர்தல் நண்பர்களோடு, அதிகளவில் நிகழ்கிறது. அதற்கடுத்தபடியாக குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களிலும் , குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உணவருந்தும் போதும் இதுபோன்ற பகிர்தல்கள் நிகழ்கின்றன. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் தலைமுறை தலைமுறையாக கல்வியறிவை பெற்ற குடும்பத்திலும், அப்போது தான் முதல் தலைமுறையாக கல்வி கற்க செல்லும் பிள்ளைகளை கொண்ட குடும்பத்திலும் பகிரப்படும் செய்திகள் முற்றிலும் நேர் முரணானவை. உதாரணமாக " ஒரு மருத்துவரின் வீட்டில் "அந்த மருத்துவர் அன்றைக்கு சந்தித்த விசித்திரமான நோயாளிகளைப் பற்றியோ அல்லது அவர் செய்த அசாதரணமான அறுவை சிகிச்சை பற்றியோ உரையாடல்கள் நிகழலாம். அதேபோல பரம்பரை பரம்பரையாக ஆடு மாடு மேய்க்கும், பண்ணைகளுக்கு சாணி அள்ளும், இரவு பகல் பாராமல் உடல் உழைப்பை பண்ணையாருக்கு அளித்துவிட்டு பட்டினி கிடந்த ஏழை தாழ்த்தப்பட்டவர் வீட்டில் அவமதிப்புகளை, புறக்கணிப்புகளை, உழைப்பு சுரண்டல்களை தாண்டி உரையாடுவதற்கோ, மகிழ்ச்சியை குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்வதற்கோ என்ன செய்திகள் இருந்திருக்கும்?" எனக்கு நன்றாக நினைவு தெரிந்த பின்னரும் கூட, வீட்டில் அப்பா, அம்மா அக்காக்களோடு சேர்ந்து உணவருந்தும் போது "நாளைக்கெல்லாம் சோறாக்க அரிசி இல்ல" என்று எங்க அம்மா எத்தனையோ முறை சொல்லி கேட்டிருக்கிறேன். ஆகவே அந்த மருத்துவரின் பிள்ளை சந்திக்கும் புற சூழலும், நான் சந்திக்கும் புற சூழலும் முற்றிலும் நேர் முரணாக இருக்க, நாங்கள் இருவரும் ஒரே சம அளவில் போட்டியிடுவது எப்படி சாத்தியமாக இருக்க முடியும்? எப்படி சம நீதியாக இருக்க முடியும்? இந்த சமூக முரண்பாடுகளை களையவே இட ஒதுக்கீட்டு கொள்கை கொண்டுவரப்பட்டது என்பதை இன்றைய தலைமுறை இளைஞர்கள் உணர்ந்து கொள்வது இன்றியமையாதது..!

- தமிழன் வேலு

( 04.03.2014 Facebook யில் எழுதியது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக