ஞாயிறு, 9 மார்ச், 2014

கசப்புகளை மறப்போம்.. களத்தில் ஒன்றிணைவோம் ..!

பொதுவாக வெற்றியின் போது ஒட்டி உறவாடுவதும், தோல்வியின் போது விலகி ஓடுவதும் மானுட இயல்பு. அதைவிட தேர்தல் அரசியலில் சொல்லவே தேவையில்லை அப்படி ஒரு கூட்டணி தர்மங்கள்(?) கடைபிடிக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்  போது தான் என்று நினைக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மதிமுக வுக்கு சங்கரன்கோவில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை வைத்து, அப்போது அவர்கள் எதிர்முகாமுக்கு தாவினார்கள் என்பதும் வரலாறு.அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாயிற்று, திமுக வோடு, மதிமுக வுக்கு கூட்டணியும் முடிவாயிற்று, இரு கட்சி தோழர்களும் பிரசாரத்திற்கும் தயாராகிவிட்டார்கள், இரு கட்சி தலைவர்களின் பெயர்கள் அடங்கிய விளம்பர பேனர்களும் தயாராயிற்று, ஆனால் தொகுதி ஒதுக்கீடில் ஒற்றை தொகுதி சிக்கலில் வைகோ அணி மாறினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்ட விளம்பர பேனர்களில், வைகோ பெயரை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தவன் என்ற முறையில் நான் அதை கண்கூடாக கண்டவன். இது போன்ற காரணங்களால் தான் தமிழக அரசியலில் வைகோ நம்பகத்தன்மையை இழந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை. தமிழக அரசியலில் கூட்டணி தர்மம் இப்படி இருக்க, "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் கிடையாது" என்ற வழக்கு மொழியை உடைத்தெறிந்து, அரசியல் நேர்மையில், நம்பகத்தன்மையில், பண்பட்ட தலைவராய், முதிர்ச்சி வாய்ந்த தலைவராய் உயர்ந்து நிற்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.


கடந்த எட்டு ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு விடுதலை சிறுத்தைகள் நெருக்கமான தோழமை உறவை பேணி வருகிறது என்பது நாடறிந்த ஒன்று. இந்த காலத்தில் திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது, அதனூடாக பல நெருக்கடிகளையும், அவதூறுகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன, அதில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதனோடு விழுப்புரத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெறுமனே 2000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக அணியிலும் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றிருந்தது, அந்த தேர்தலில் அக்கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்தது. தேர்தல் தோல்வியினால் அக்கூட்டணியில் இடம்பெற்றுந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் திமுக வோடு தமக்கிருந்த உறவை முறித்துக் கொண்டன. ஆனால் அதன்பிறகும் கூட தேர்தல் களங்களிலும், ஈழத்தமிழர் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் வாழவாதார பிரச்சனைகளிலும், சமூக களங்களிலும் திமுக வோடு விடுதலை சிறுத்தைகள் இணைந்தே பணியாற்றி வந்தார்கள். திமுக சந்தித்த நெருக்கடிகளின் போதும் உற்ற தோழனாய் கரம் கொடுத்தார்கள். உறவு இப்படி இருக்க, தற்போது 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக அணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடந்த முறை வழங்க பட்டதை விட குறைத்து 1 தொகுதியை ஒதுக்கியது திமுக. திமுக அணியை உடைத்துவிட துடித்த சதிகாரர்கள், சிறுத்தைகளை தனிமைபடுத்தி, பொது நீரோட்டத்தில் இருந்து விளக்கி வைக்க நினைத்த வஞ்சகர்கள் கண்ட கனவுகளை எல்லாம் தவிடு பொடியாக்கி, "கொடுத்தது ஒன்றாகினும், கொள்கையில் ஒன்றாய் இருப்போம்" எனக்கூறி திமுக அணியில் தொடர்கிறோம் எனக்கூறி, மேலும் இந்த அணிக்கு இடதுசாரிகளும் வரவேண்டும் என அழைப்பு விடுத்து, அரசியல் நேர்மையாளனாய் உயர்ந்து நின்றார்.

திமுக எடுத்த தவறான முடிவால், தவிர்க்க முடியாத காரணங்களால், சில விரும்பத்தகாத கசப்பான நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. திருமாவளவன் பெருந்தன்மையாய் நடந்து கொண்டாலும், அவரின் தம்பிகள், தலைவருக்கு நிகழ்ந்த அவமானம் என்பதாய் உணர்ந்து, ஆங்காங்கோ, திமுக விற்கு எதிரான போராட்டங்களில் குதித்துவிட்டனர். இப்படியான சூழலில், சமயோசிதமாக பிரச்சனையை கையாண்ட திருமாவளவன் அவர்களும், உடனடியாக பிரச்சனையை முடித்துவைக்க முன்வந்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும், திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். கொந்தளிப்பும், கோபமும் உரிமையை நிலைநாட்டவே தவிர யாரையும் புண்படுத்த அல்ல என்பதை திமுக வினர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். எப்படியாகினும், திராவிட முன்னேற்ற கழக தோழர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் தோழர்களுக்கும் இடையில் எதோ ஒரு இடைவெளி விழுந்துள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. தலைவர்கள் ஒன்றானாலும், தொண்டர்களிடையே தணியாத கோபங்கள் அல்லது வருத்தங்கள் எளிதில் தீர்ந்து விடாது என்பதை இரு கட்சி தலைமைகளும் உணர்ந்து மேலும் சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே இங்கே சுட்டிக் காட்ட விடும்புகிறேன்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்றுந்த காங்கிரஸ் கட்சி தங்களின் வலிமைக்கு மீறி, தொகுதிகளை கேட்டது. அதனால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகும் சூழலும் உருவானது. இதனால் இருகட்சி தலைவர்களுக்கிடையே விரிசல் உருவானது, பிறகு காங்கிரஸ் கட்சி திமுகவை கட்டாயப்படுத்தி 63 தொகுதிகளை பெற்றுக்கொண்டது. இதன்பிறகு இரு கட்சி தலைவர்களும் சுமூகமாக பழகினார்கள். ஆனால் அந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி தொண்டர்களும், திமுக தொண்டர்களும் இணைந்து பணியாற்றவில்லை. மேலும் காங்கிரசின் அந்த செயல் திமுகவினரிடையே தணியாத கோபத்தை உருவாக்கியது என்பதற்கு கடந்தம் மாதம் நடைபெற்ற திமுக வின் செயற்குழுவில், உறுப்பினர்கள் பேசிய பேச்சே சாட்சி. சட்டமன்ற தேர்தலில் திமுக அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே இணக்கம் இல்லாததும் ஒரு காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

கடந்த கால நிகழ்வுகளில் இருந்து தான் நாம், பாடம் கற்க வேண்டும் என்பதால், அந்த தேர்தலில் கிடைத்த கசப்பான அனுபவத்தை நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கடந்த மூன்று தினங்களில் நடைபெற்ற கசப்பான நிகழ்வால், கடந்த சட்டமன்ற தேர்தலைப் போல திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள விரிசல், கூட்டணியின் வெற்றியை எக்காரணம் கொண்டும் பாதித்துவிடக்கூடாது என்பதையும் நினைவுபடுத்துகிறேன். ஆகவே இருகட்சி தொண்டர்களிடையேயும், மற்றும் இதர கூட்டணி கட்சி தொண்டர்களிடையேயும் பலமான இணக்கத்தை உருவாக்க வேண்டிய மகத்தான பணி அக்கட்சிகளின் தலைமைக்கு, அதைவிட, அக்கட்சிகளின் நிர்வாகிகளுக்கு உண்டென்பதை நினைவுபடுத்துகிறேன். இன்னும் நாட்கள் இருக்கிறது. இன்னமும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை, வேட்புமனு தாக்கல் துவங்கவில்லை, பிரச்சாரம் துவங்கவில்லை, அதற்கு முன்பாக தமிழகம் தழுவிய அளவில் , நகர அளவில், வட்ட அளவில், பகுதி அளவில் கூட்டணி கட்சி கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வது மிக முக்கிய பணியாகிறது என்பதை வலியுறுத்துகிறேன். இதுபோன்ற கலந்துரையாடல்கள் தற்போது ஏற்பட்டுள்ள வருத்தங்களை போக்குவதற்கு உதவும் என நினைக்கிறேன். கசப்பான அனுபவங்களை மறப்பதற்கு வழிகோலும் என எண்ணுகிறேன். ஆகவே அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில், திருமாவளவன் சொன்னதைப் போல, மதவாதத்துக்கு, சாதியவாதத்துக்கு எதிரான அறப்போர் இது. தற்போது நாம் மதவாதிகளுக்கு எதிராக போர்க்களத்தில் நிற்கிறோம். இங்கே வருத்தங்களை எண்ணிக் கொண்டு இருக்க முடியாது. நமது ஒரே இலக்கு மதவாதிகளும், சாதியவாதிகளும் வலுப்பெற்றுவிடக்கூடாது. அதற்கு நமது வாக்குகள் ஒன்றுகூட சிதறக்கூடாது..!

தோழமையுடன் 
தமிழன் வேலு  

திங்கள், 3 மார்ச், 2014

சமூக நீதி

ஒரு மனிதனின் குணாதிசயங்களை, நல்ல பண்புகளை, திறமைகளை வளர்ப்பதற்கு அவனுள் இருக்கும் புத்திக் கூர்மையை தாண்டி, அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் நிகழ்வுகள், புற சூழல்கள் ஆகியைவையும் முக்கிய காரணியாக அமைகிறது என்பது அறிவியலார் ஒப்புக்கொண்ட ஒன்றாகும். அதனடிப்படையில் அன்றைய நாளின் மகிழ்ச்சியையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் மனிதர்களுக்கு அலாதியான விருப்பமுண்டு. அதேபோல ஏமாற்றங்களையும், வருத்தங்களையும், அவமானங்களையும் கூடுமானவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மனிதர்கள் விரும்புவதில்லை. இந்த பகிர்தல் நண்பர்களோடு, அதிகளவில் நிகழ்கிறது. அதற்கடுத்தபடியாக குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களிலும் , குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உணவருந்தும் போதும் இதுபோன்ற பகிர்தல்கள் நிகழ்கின்றன. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் தலைமுறை தலைமுறையாக கல்வியறிவை பெற்ற குடும்பத்திலும், அப்போது தான் முதல் தலைமுறையாக கல்வி கற்க செல்லும் பிள்ளைகளை கொண்ட குடும்பத்திலும் பகிரப்படும் செய்திகள் முற்றிலும் நேர் முரணானவை. உதாரணமாக " ஒரு மருத்துவரின் வீட்டில் "அந்த மருத்துவர் அன்றைக்கு சந்தித்த விசித்திரமான நோயாளிகளைப் பற்றியோ அல்லது அவர் செய்த அசாதரணமான அறுவை சிகிச்சை பற்றியோ உரையாடல்கள் நிகழலாம். அதேபோல பரம்பரை பரம்பரையாக ஆடு மாடு மேய்க்கும், பண்ணைகளுக்கு சாணி அள்ளும், இரவு பகல் பாராமல் உடல் உழைப்பை பண்ணையாருக்கு அளித்துவிட்டு பட்டினி கிடந்த ஏழை தாழ்த்தப்பட்டவர் வீட்டில் அவமதிப்புகளை, புறக்கணிப்புகளை, உழைப்பு சுரண்டல்களை தாண்டி உரையாடுவதற்கோ, மகிழ்ச்சியை குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்வதற்கோ என்ன செய்திகள் இருந்திருக்கும்?" எனக்கு நன்றாக நினைவு தெரிந்த பின்னரும் கூட, வீட்டில் அப்பா, அம்மா அக்காக்களோடு சேர்ந்து உணவருந்தும் போது "நாளைக்கெல்லாம் சோறாக்க அரிசி இல்ல" என்று எங்க அம்மா எத்தனையோ முறை சொல்லி கேட்டிருக்கிறேன். ஆகவே அந்த மருத்துவரின் பிள்ளை சந்திக்கும் புற சூழலும், நான் சந்திக்கும் புற சூழலும் முற்றிலும் நேர் முரணாக இருக்க, நாங்கள் இருவரும் ஒரே சம அளவில் போட்டியிடுவது எப்படி சாத்தியமாக இருக்க முடியும்? எப்படி சம நீதியாக இருக்க முடியும்? இந்த சமூக முரண்பாடுகளை களையவே இட ஒதுக்கீட்டு கொள்கை கொண்டுவரப்பட்டது என்பதை இன்றைய தலைமுறை இளைஞர்கள் உணர்ந்து கொள்வது இன்றியமையாதது..!

- தமிழன் வேலு

( 04.03.2014 Facebook யில் எழுதியது )