செவ்வாய், 28 ஜனவரி, 2014

ராஜபக்சேவை மன்னிக்கும் மணியன் ! அப்போ வைகோ?

தமிழருவி மணியன் என்ற மிகுந்த யோக்கிய குணம் படைத்தவர் மாற்று அணி என்ற போர்வையில் நச்சுப்பாம்புகளிடம் அப்பாவி மக்களை கூட்டிக் கொடுத்திட துடியாய் துடிக்கிறார்‍ என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை. தனிப்பட்ட முறையில் அவர் மீது நமக்கு எவ்வித காழ்ப்பும் கிடையாது. ஆனால் அவர் முன்னெடுப்பதாக சொல்லும் அரசியல் மிக மிக கொடூரமான அரசியலாக இருக்கிறது என்பதாலே அவரை நாம் விமர்சிக்கிறோம். அதை மாற்று அணி என்கிறார், ஆனால் அவர் பேச்சில் இருந்து அது மக்களை ஏமாற்றும் அணி என்றே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மணியனின் கடும் கோபத்திற்கு நான் முதலிலே பதில் சொல்லி விடுகிறேன்‍. முகநூலில் அமர்ந்து கொண்டு அரசியல் தெரியாமலும்‌, தரம் தாழ்ந்தும்‌ தன்னை விமர்சிப்பவர்கள்‌, இந்த சமூகத்திற்கு என்ன நன்மையை செய்தார்கள்? என அறச்சீற்றம் காட்டுகிறார்‍. காசு வாங்கி கொண்டு மேடையில் பேசிக் கொண்டிருப்பதாலே இந்த சமூகத்திற்கு தான் அல்லும் பகலும் உழைப்பதாக கருதும் மணியன் இப்படியெல்லாம் கோபப்படலாமா? காசு வாங்கி கொண்டு அவர் எதை பேசுகிறாரோ, எதை எழுதுகிறாரோ அதையே தான்  காசு வாங்காமல் முகநூலில் பேசுகிறார்கள்‌, எழுதுகிறார்கள்‍. எந்த மேடைப்பேச்சுக்கோ, அல்லது பத்திரிக்கை எழுத்துக்கோ தான் காசு வாங்கவில்லை என்று உறுதியாக ஆதாரத்தோடு அவர் மறுக்கட்டும், அவர் மீது நான் வைக்கும் அத்துனை குற்றச்சாட்டுக்களையும் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்‍. எழுத்துலக மேதைகளும்‌, மணியனை போன்ற அரசியல் தரகர்களுக்கும் முகநூல் மற்றும் இணையங்களில் எழுதுபவர்கள் மீது அப்படியென்னதான் கோபமோ தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் தன்னை விமர்சிக்க தகுதி வேண்டும்‌, வெங்காயம் வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள்‌.

சரி அது போகட்டும், அதை பற்றி இன்னொரு நாள் பேசிக் கொள்வோம்... 


கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஜூனியர் விகடன் இதழில் மன்னிப்பு கேட்கட்டும் மோடி என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய மணியன், அதில் 2002 ஆம் ஆண்டு மோடி ஆட்சி காலத்தில் குஜராத்தில் கலவரம் குறித்து எழுதுகையில் "இந்தப் பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்யமாட்டேன்’ என்று முஸ்லிம் சமு தாயத்திடம் மோடி மன்னிப்பை வேண் டுவதுதான் நியாயம். " என்று எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாக அன்றே நாம் எழுதினோம்.  ராஜபக்சேவும்  மன்னிப்பு கேட்டாலும் போதுமா? என்று எழுதி இருந்தோம். அதனை தொடர்ந்து  அதே கருத்தை வலியுறுத்தி முகநூளில் கூட பலரும் எழுதினார்கள். அதற்கு 2014 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தன் இயக்கத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் நாம் வைத்த கேள்விக்கு பதில் அளித்து பேசி இருக்கிறார். அந்த கூட்டத்தில் தான் ராஜபக்சேவுக்கும் பாவ மன்னிப்பு அருள வாழும் ஏசுபிரான்(?) மணியன் முன்வந்திருக்கிறார். அவர் பேசுகையில் " மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாம் சொன்னால், ராஜபக்சே மன்னிப்பு கேட்டாலும் மன்னித்து விடுவீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். இலங்கையில் தமிழனும், சிங்களவனும் ஒன்றாகி வாழும்  நிலை ஏற்பட்டால் ராஜபக்சேவையும் மன்னிக்க தயார்"  என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். (ஆதாரம் : இந்த வார ஜூனியர் விகடன்) மணியன் மன்னிக்கட்டும் ஆனால் இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளி கூண்டில் ஏற்றாமல் ஓயமாட்டேன் என்று காவி துண்டை சாரி... கருப்பு துண்டை முறுக்கும் வைகோ என்ன செய்யப் போகிறார் என்பதே நம் பிரதான கேள்வி...

உலக நாடுகளில், ராஜபக்சே சர்வதேச குற்றவாளி என்ற உண்மை மெல்ல மெல்ல உருவாகி வரும் இந்த நிலையில் தான் மணியன் இப்படி பேசி இருக்கிறார். அவரது பேச்சில் ராஜபக்சேவுக்கு மன்னிப்பு என்பதையும் தாண்டி இன்னொரு விஷயமும் பொதிந்து கிடக்கிறது. அது உலக தமிழர்களின் கனவு தமிழீழ விடுதலை எதிர்ப்பே. இன்று உலகெங்கும் வாழும் பெரும்பாலான தமிழர்கள் போராடுவது இரண்டு கோரிக்கைகளுக்குக்காக ஒன்று தமிழீழ விடுதலை, மற்றொன்று ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்காக. ஆனால் மணியன் சிங்களவர்களோடு தமிழர்கள் ஒன்றாக வாழவேண்டும் என்கிறார். புலிகள் போராடியது சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வதற்காக அல்ல, சிங்களவர்களுக்கு இணையாக, தனி இறையாண்மை மிக்க சுதந்திர தமிழீழத்தில் வாழ்வதற்கே என்பதை கூட மணியன் மறுதலிக்கிறார். தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை, ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களோடு தான் வாழவேண்டும் என்றுதான் ராஜபக்சேவும் சொல்கிறார். இத்தனை லட்சம் தமிழர்கள் கொள்ளப்பட்டது சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்கிறோம் என்று சொன்னதற்காக அல்ல, நாங்கள் பிரிந்து தனி நாடாக போகிறோம் என்று போராடியதற்காக என்பதால் தான் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாத மணியன் ஈழ தமிழர்கள் பற்றி பேசுவதற்கு தகுதியானவர் தானா? என்பதை தமிழ்தேசிய போராளிகளே விளக்கட்டும்...      

இதன் மூலம் தன்னைப் பற்றியும் தன், சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் பற்றியும் அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்றே நம்மால் உணரமுடிகிறது. காங்கிரசில் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த மணியன், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடியும் தருவாயில், சிங்களவர்களின் வெற்றி உறுதியான பிறகு, ஈழ விவகாரத்தை காரணம் காட்டி, கட்சியில் விலகினார். அதன்பிறகு மேடைக்கு மேடை ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றுவேன் என்று நீட்டி முழங்கினார். தற்போது மன்னிப்பு கேட்டால் போதுமானது என்கிறார். கடந்த வாரம் கூட ஒரு தொலைகாட்சி பெட்டியில் ஒன்னரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு என்னை இன்னமும் வாட்டி வதைக்கிறது என்று நீலி கண்ணீர் வடித்தார். இப்போது கண்ணீர் துளிகள் வற்றிப் போய்விட்டதா? அல்லது மோடியை பிரதமராக்க ராஜபக்சேவை புனிதராக்குவது தான் சமயோசித யுக்தி என்று மக்களை ஏமாற்றுகிறாரா? என்று கேட்க தோன்றுகிறது.

மணியனின் பேச்சை கூட புறந்தள்ளிவிடலாம், அவர் ஒரு நாக்கு வியாபாரி. ஆனால் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்த காங்கிரசை கருவருக்கவே பாரதிய ஜனதாவோடு கூட்டு சேர்கிறேன் என்று தன்னிலை விளக்கம் அளித்த வைகோ, மணியனின் சொல்படி ஆடும் வைகோ இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். ராஜபக்சேவை மன்னிக்கப் போகிறாரா? அல்லது மணியனை கண்டிக்கப் போகிறாரா? எனக்கென்னமோ மணியனையும், ராஜபக்சேவையும் சேர்த்தே மன்னிப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று சொன்ன சுப்ரமணிய சுவாமியையே மன்னித்த வைகோ, வைகோவை முதல்வராக்குவேன் என்று ஓயாமல் கூவும்  மணியனை மன்னிக்காமலா? போய்விடுவார்...

வைகோ மன்னிப்பார்... ஆனால்  மான ரோஷம் உள்ள தமிழர்கள்??? 

 - தமிழன் வேலு                  

  

வியாழன், 16 ஜனவரி, 2014

தீண்டப்படாத அம்பேத்கர் ..!

புத்தக சந்தைக்கு செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. பேஸ்புக்‌, டிவிட்டர்‍ போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாட்டு பெருக்கம் அதிகம் இருப்பினும் புத்தக சந்தையில் கூட்டம் அலைமோதவே செய்கிறது. எழுத்தாளர்களும்‌, பதிப்பாளர்களும் தத்தமது புத்தகங்களை சமூக வலைதளங்களில் விளம்பரபடுத்திக் கொண்டிருக்கின்றனர்‍. இணையதளங்கள் எளிதாக்கப்பட்டதன் விளைவாக வீட்டிலிருந்தபடியே புத்தக சந்தையில் என்னென்ன புத்தகங்கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும்‌, எவ்வளவு ரூபாய் என்பதெல்லாம் மிக எளிதாக தெரிந்து கொண்டு விடுகிறார்கள்‍. கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தக சந்தைக்கு செல்லும் வழக்கத்தை நானும் உருவாக்கி கொண்டேன்‍. புத்தக சந்தையில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எவ்வித சலிப்பையும் உண்டு பண்ணுவதில்லை. புத்தக சந்தையில் உள்ள கூட்டத்தை பார்க்கும் போதெல்லாம் புத்தகம் வாங்குவதற்கும் கூட ஆர்வமுள்ள தமிழர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற பெருமை தான் வரும்‌. அதேபோலத்தான் இந்த வருட புத்தக சந்தையின் அனுபவமும் அமைந்தது. அதே நேரத்தில் வருத்தமும்‌ சேர்ந்தே அமைந்தது. 

700 அரங்கங்கள்‌, 5லட்சம் தலைப்புகள்‌, 10 லட்சம் பார்வையாளர்கள்‍, 20லட்சம் வாசகர்கள் என பரந்து விரிந்த 37வது புத்தக சந்தையில் ஒவ்வொரு கடையிலும் கூட்டம் அலைமோதியது. இரண்டு கைகளிலும் புத்தகப் பைகளோடு நின்றவர்களும், சென்றவர்களும் தான் ஏராளம்‌. 777 கடைகளை கொண்ட புத்தக சந்தையில் எல்லாக் கடையிலும் வாங்குவதும்‌, பார்வையிடுதுமாக மக்கள் பெருமளவு இருக்க ஒரே ஒரு கடை மட்டும் பார்வையிடுவதற்கு கூட யாருமில்லாமல் வெறிச்சோடி கிடந்தது. கடை எண். 618, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் தான் அது. 


தமிழ்ச்சூழலில் இன்றைய இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதாக  எழுத்துலக மேதாவிகள் புலம்புவது உண்டு. ஆனால் அவர்களே கூட மறந்துக்கூட அம் பேத்கர் சிந்தனைகளையோ, அவர்தம் எழுத்துக்களையோ மேற்கோள் காட்டி பேசுவதில்லை, எழுதுவதில்லை. நாடு, மொழிகளை கடந்து வெளிநாட்டவர்களின் நூல்களையும்‌, அவர்களின் சிந்தனைகளையும் தமிழில் மொழி பெயர்த்து சிலாகித்து கொண்டாடும் அவர்களே, உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளையும்‍, எழுத்தக்களையும் நியாயமற்ற முறையில், எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி நிராகரிக்க துணிந்துவிடுகிறார்கள்‍. அப்படியானால் அவர்களுக்கு இருப்பது சாதிய சிந்தனை அல்ல என்று யாராலும் சொல்ல முடியுமா? ஒருவர் என்ன எழுத வேண்டும் என்பதும், எதை வாசிக்க வேண்டும் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்பதில் எள் முனையளவும் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் விருப்பங்களை சாதி இந்துக்கள் எவ்வித பரிசீலனையும் இன்றி நிராகரித்தார்களோ, அதே போல ஒருவரின்  மீது எவ்வித ஆய்வுகளும் இன்றி அவர்தம் சிந்தனைகளை புறந்தள்ளுவதும். மறைக்க முனைவதும் வெட்க கேடானது என்பதை யாரும் மறுக்க முடியுமா? அம்பேத்கரை விமர்சிக்கும் உயர்சாதி இந்துக்கள் ஆய்வுக்காக கூட அவரை பரிசீலிப்பது கிடையாது. பள்ளி சிறுவனாக இருந்த அம்பேத்கரை  ஒரு சாதி இந்து மாட்டுவண்டிக்காரன் வண்டியில் இருந்து கீழே தள்ளிவிடும் போது என்ன நினைத்தானே, அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிறகும்  அதே நினைப்போடு தான் மற்றொரு சாதி இந்து மாட்டுவண்டிக்காரனும் அவருக்கு வண்டி ஓட்டுவதற்கு மறுதலித்தான்‍. அன்றைக்கும் அவரை தீண்டப்படாதவராகவே பார்த்தார்கள், இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய பின்னர் இன்றைக்கும் அவரை தீண்டப்படாதவராகவே பார்க்கிறார்கள்‍ என்பதை எண்ணி மானரோஷம் உள்ள ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனிய வேண்டும். ஒரு சாதி இந்து எவ்வளவு தான் கல்வி அறிவு குறைந்தவனாக இருந்தாலும் அவன் உயர்ந்தவன்‍, ஒரு தீண்டப்படாதவன் எவ்வளவு தான் கல்வி அறிவிலே சிறந்து அறிவாற்றலோடு திகழ்ந்தாலும் அவன் தாழ்ந்தவன் என்கிற மனுதர்ம சனாதன சிந்தனையில் இருந்துதான் இப்படிப்பட்ட வெட்ககேடான பார்வை பிறக்கிறது. 

தாழ்த்தப்பட்ட மக்களை சாதி இந்துக்கள் எந்தெந்த வழிகளில் முன்னேற விடாமல் தடுத்து வைத்திருந்தார்களோ, அதையே காரணமாக கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கான வலுவான கோரிக்கைகளை அம்பேத்கர் முன்வைத்தார். அரசியல், கல்வி. பொருளாதாரம் மற்றும் சமூக உரிமைகளே அவை. ஒரு புரிதலுக்காக அம்பேத்கர் முன்வைத்த அரசியல் உரிமைகளை பற்றி பார்த்தோமானால் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கான பிரிதிநிதிகளை தாங்களே தேர்வு செய்து கொள்ளும் தனி வாக்காளர் முறையை தான் அவர் முன்வைத்தார். சட்டமன்றத்தில் மட்டுமின்றி, ஆட்சி மன்றத்திலும் தங்கள் பிரிதிகளை தாங்களே தேர்வு செய்துகொள்ள அது வழிவகுக்கும். ஆனால் காந்தி போன்ற சனாதனவாதிகள் இது இந்துக்களிடம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை நிரந்தரமாக பிரித்து வைத்திட வழி வகுத்திடும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள். பின்னர் அம்பேத்கர் முன்வைத்த தாழ்த்தப்பட்டவர்களின் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, முற்றாக நிராகரித்தார்கள். செத்துவிடுவேன் என்று மிரட்டி தான் காந்தி அம்பேத்கரை சமாதனப் படுத்தினார். இந்த இடத்திலே தான் காந்தி தேசாபிமனியாகவும், அம்பேத்கர் பிரிவினைவாதியாகவும் காட்சிப் படுத்தப்பட்டார். அதனால் தீவிர சனாதனவாதியான காந்தியை தேச தந்தையாக கொண்டாடுபவர்கள், வெகு மக்களின் உரிமைகளுக்காக போராடிய அம்பேத்கரை பிரிவினை வாதியாகவும், சாதிக் கண்ணோட்டம் கொண்டவராகவும் இன்றளவும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி அது சாத்தியமானது? என்ற கேள்வியோடு ஆழ்ந்து நோக்கும் எவராலும் காந்தியின் அழுக்கு படிந்த சிந்தனை புலப்படுவதை தவிர்க்க இயலாது. காந்தி முன்வைத்தது இந்துக்களோடு சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் தனி தொகுதி முறை. இந்த இடத்தில், தீவிர இந்துக் கண்ணோட்டம் கொண்ட உயர் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை, தங்கள் காலடியில் மிதிபடும் புழுவாக கருதி கொண்டிருக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களில் அல்லது அவர்களின் உரிமைகளில்  எப்படி  அக்கறை செலுத்துவார்கள்? என்ற கேள்வியோடு அம்பேத்கரை பார்க்கும் எவராலும் அவரின் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை, சமூகநீதியை புறந்தள்ளிவிட இயலாது. இந்த இடத்திலே இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் காந்தியின் கூற்றுப்படி தனி வாக்காளர் முறையினால் உயர்சாதி இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிரந்தர பிரிவினை ஏற்படும் என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொள்வோம். தனி வாக்காளர் முறை இல்லாத பொழுது மட்டும் உயர்சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை கட்டித்தழுவி கொண்டாடினார்களா? என்பதையும், ஆயிரக்கணக்கான சாதிகளாக இந்துக்கள் ஒருவருக்கொருவர் நெருங்க முடியாத அளவில் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை, உண்மை அப்படி இருக்க, சில நூறு தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு தனி வாக்காளர் முறை வழங்குவதனால் இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிரந்தர பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று காந்தி துடித்தது எவ்வளவு அழுக்கு படிந்த சிந்தனை என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.                                          

இப்படி அம்பேத்கரின் சிந்தனைகளை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். சாதி இந்துக்களுக்கு எப்போதுமே அம்பேத்கரை எதிர்கொள்வது மிக கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் தந்திரமான, சூழ்ச்சியால் எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள்‍. உதாரணமாக இந்துப் பெண்களின் உரிமைகளுக்காக இந்து சட்ட மசோதா உருவாக்கிய அம்பேத்கருக்கு எதிராக இந்துப் பெண்களையே போராட தூண்டியவர்கள் அவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றளவும் அம்பேத்கர் அவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறார் என்பதனாலே ஆர்.எஸ்.எஸ். போன்ற தீவிர இந்து சனாதன அமைப்புகள் அம்பேத்கர் இந்துமதத்திற்கு எதிரானவர் கிடையாது, அம்பேத்கரே கூட ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு வந்திருக்கிறார் என்ற பொய் பிரச்சாரங்களை எல்லாம் கட்டவிழ்த்து விடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேரெதிர் கொள்கையை கொண்டுள்ள பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இந்துமதத்தை தீவிரமாக தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கரே ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு வந்திருக்கிறார் என்று புளுகுவதும், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அம்பேத்கர் மீது கொண்டுள்ள அபிரிமிதமான நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை தன்வயப்படுத்தும் யுக்தி என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.   

மேலும் சமீப கால நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களும், வெறுப்பு பிரச்சாரங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த இழிவான செயலை செய்தவர்கள் மீது முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் எழுத்துலக மேதாவிகளும், இன்னபிறரும் பாய்ந்து பிராண்டினார்கள். ஆனால் மருந்துக்கு கூட தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான கோரிக்கை என்ன? என்பதையும், தாழ்த்தப்பட்ட மக்களின் குரலையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை. மாறாக அவர்களுக்குள் இருந்த பழைய பகையை தீர்த்துக் கொள்வதற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனையை பயன்படுத்திக் கொண்டார்கள். இன்னும் சிலரோ தாழ்த்தப்பட்டவர்கள் செய்வதும் தவறுதான் என்று நடுநிலை நாயகமாக சொம்படித்தார்கள். அவர்களை பொருத்தமட்டில் நேற்றல்ல, இன்றைக்கும் அம்பேத்கரும், தாழ்த்தப்பட்ட மக்களும் தீண்டப்படாதவர்களே...  தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு சமகாலத்து முற்போக்குவாதிகள்  தீர்வு சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். தாழ்த்தப்பட்டவர்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்தான் நம்மை நாம் காப்பாற்றி கொள்ளவேண்டிய சூழல் இருக்கிறது.

ஆகவே ...  

அம்பேத்கர் குறித்த தேடலையும், அவர்தம் சிந்தனைகளை ஆழ்ந்து வாசித்து,சமகால பிரச்சனைகளோடு அம்பேத்கர் முன்வைத்த முடிவுகளை பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவேனும் தாழ்த்தப்பட்டவர்கள் அம்பேத்கரின் சிந்தனைகளை வாசிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது..!

- தமிழன் வேலு