இந்திய அரசியலிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு சேரிகளில் சிறைவைக்கப்பட்ட மக்களை வெறும் வாக்கு வங்கியாக, போஸ்டர் ஒட்டுபவர்களாக, கோஷம் போடுபவர்களாக, தடியடி வாங்குபவர்களாக மட்டுமே பயன்படுத்திய அரசியல் கட்சிகள் தான் பெரும்பாலான கட்சிகள். தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இந்திய அளவில் நடைபெற்ற அந்த சோக வரலாற்றை மாற்றி காட்டிய போற்றுதலுக்குரிய தலைவர்கள் ஏராளமானவர்கள். இந்த நேரத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் சட்ட ரீதியாக, சமூக ரீதியாக விடுதலை பெறுவதற்கு தம் வாழ்நாளை அர்ப்பணித்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். இந்த சமூகத்தை சாதி எனும் விஷ செடி சூழ்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியேற முடியாமல், வாழ முடியாமல் திணறிய சூழலில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தான் அந்த செடிகளை எல்லாம் அப்புறபடுத்தி பாதை வகுத்து தந்தார். நாங்கள் கொடி பிடிப்பவர்கள் மட்டுமல்ல, கோட்டையில் கொடி ஏற்றுபவர்கள் என்பதை உத்திரபிரதேசத்தில் மெய்பித்து காண்பித்தவர் மாயவதி. உத்திரபிரதேச மாநில முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற அந்த நாள் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்பது மறுக்க முடியாது. அப்படித்தான் தமிழகத்தில் நாங்கள் போஸ்டர் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல என்பதை நிரூபித்து காட்டியவர் திருமா. கொடி நாட்டவர்களை கொள்கை பேச வைத்தவர் திருமா, கோஷம் போட்டவர்களை மாநாட்டு மேடையில் ஏற்றி சிறப்பித்தவர் திருமா. உத்திரபிரதேசத்தை போல தமிழகத்தில் நிலை உருவாகுமானால் அது எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களால் மட்டும் தான் முடியும் என்பதை எவராலும் மறுக்க முடியுமா? ஆனால் அந்த நாள் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? என்பதே தற்போது சிறுத்தைகளின் முன் கிடக்கும் மில்லியம் டாலர் கேள்வி...
திருமாவின் உழைப்பு அசாத்தியமானது, அவர் எடுத்துக்கொண்ட களங்கள் மிகப்பெரியது, அவர்முன் கிடக்கும் சவால்கள் அதைவிட பெரியது. ஆனால் அந்த சவால்களை எல்லாம் தவிடுபொடியாக்கி முன்னேறி, கோட்டை கொத்தலத்திலே அவர் கொடியேற்றுவது என்பது மேற்சொன்ன எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது என்பதையும் எவராலும் காரணம் மறுக்க முடியாது. இந்தியா சுதந்திர நாடு என்று கொண்டாடுபவர்கள், குடியரசும் ஆனது என்று பரணி பாடுகிறார்கள், ஆனால் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்திய தேசிய கொடியை ஏற்ற முடியவில்லை. இது அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, இந்திய தேசாபிமானிகள்கொண்டாடும் இந்திய சுதந்திரத்திற்கே பெருத்த அவமானம் என்றுதான் சொல்வேன். இப்படிப்பட்ட அவமானகர செயல்களெல்லாம் அடியோடு வேரறுக்கப்பட வேண்டியவை. ஆகவே தான் திருமாவளவன் கைகளுக்கு அதிகாரம் வரவேண்டும் என்கிறேன். ஆனால் சிறுத்தைகளின் மேடைகளில் அப்படிப்பட்ட முழக்கங்கள் இன்னமும் ஒலிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இன்றைக்கு யார் யாரோ முதல்வராக ஆசைப்படுகிறார்கள், எத்தனையோ முதல்வர்களை உருவாக்கிய தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து ஒருவர் ஏன் முதல்வராக கூடாது?.
இந்த கனவு எப்போது சாத்தியமாகும், எப்படி செயல்பட்டால் சாத்தியமாகும் என்பதை பற்றியே இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிறேன். எழுச்சி தமிழர் திருமாவின் உழைப்பை போல சிறுத்தைகளின் வளர்ச்சியும் அசாத்தியமானது. சிறுத்தைகளின் வளர்ச்சியைப் பற்றி திருமா குறிப்பிடும் போது "மைல்கல், மைல்கல்லாக பாய்ந்து வந்திருக்கிறோம்" என்று குறிப்பிடுவார். 2000களில் ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது "இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் அன்றாடம் காய்ச்சிகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், அவர்கள் தான் இந்த இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்கள் என்று சொன்னவர், காலையில் காடு கழனிகளில் வேர்வை சிந்தி உழைத்த என் தம்பிமார்கள், மாலை வீடு திரும்பியதும் என்னிடத்தில் வந்து அண்ணா இன்றைக்கு என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்டு, அதை பேனாவால் எழுதியும், சுண்ணாம்பு சுவர்களில் எழுதியும், சுவரொட்டிகளாக அச்சிட்டும் இந்த இயக்கத்தை வளர்த்தார்கள் என்று பெருமை பொங்க சொன்னார். அது தான் உண்மையும் கூட. தந்தை பெரியாரிடம் இருந்து சில ஆயிரம் தொண்டர்களை பேரறிஞர் அண்ணா பிரித்துக் கொண்டு தனியே வந்தார். கலைஞர் கருணாநிதியிடம் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளை பேரறிஞர் அண்ணா கொடுத்துவிட்டு சென்றார். கலைஞரிடம் இருந்து ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை எம்.ஜி.ஆர். பிரித்துக் கொண்டு தனியே போனார். ஜெயலலிதாவிடம் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளை எம்.ஜி.ஆர் கொடுத்துவிட்டு சென்றார்.. கலைஞரிடம் இருந்து ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை வைகோ பிரித்துக் கொண்டு தனியே போனார். ஆனால் எழுச்சி தமிழர் திருமாவளவனிடம் இன்று லட்சக்கணக்கான சிறுத்தைகள், தொண்டர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு சிறுத்தைகளையும் தன் கடின உழைப்பாலும், பேச்சாலும் அவர்தான் சேர்த்தார். சுயம்பு தலைவர் என்ற சொல்லுக்கு எழுச்சி தமிழர் திருமாவளவன் தான் சொந்தக்காரர். பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்கு அத்வானி இந்துக்களை திரட்டி ரத யாத்திரை சென்ற போது "அன்று அனுமனால் இலங்கை எரிந்தது, இன்று அத்வானியால் இந்தியா எரியபோகிறது" என்று எச்சரித்தார். அதற்கு மறுநாள் மதுரையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகளில் திருமாவின் அந்த முழக்கம் போஸ்டராக ஒட்டப்பட்டது. சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கிய முழக்கம் அது. அதனை போன்றே பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் "எரிபடும் சேரிகளில், இடிபடும் மசூதிகளில் புறப்படும் விடுதலை சூறாவளியே" என்று தம் தம்பிகளை திரட்டிக் கொண்டு வீதிக்கு வந்தவர் திருமா. அன்றைக்கு சிறுத்தைகளின் ஒவ்வொரு சுவரொட்டிகளிலும், சுவர் விளம்பரங்களிலும் திருமாவின் கொள்கை முழக்கம் பிரதானமாக பளிச்சிடும். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. தேனீயைப் போல சுற்றி சுழன்ற சிறுத்தைகள், மயங்கிவிட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது. சிறுத்தைகளின் வளர்ச்சியில் தேக்கம் விழுந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. தேர்தல் வெற்றி தோல்விகளை மட்டுமே கணக்கிட்டு நான் அப்படி சொல்லவில்லை. "தேர்தல் வெற்றி தோல்விகளுக்காக சுனங்கிவிடும் இயக்கமல்ல விடுதலை சிறுத்தைகள், தேர்தலுக்காக துவங்கப்பட்டதல்ல எம் இயக்கம்" என்பார் திருமா. இயக்கத்தின் கொள்கைகளை சட்டமாக்க, தம் மக்களுக்கு அதனை நிறைவேற்றி காட்டிட தேர்தல் வெற்றியும் முக்கியம் என்பதை திமுக வை பார்த்து அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். பெரியாரின் பேச்சுக்களே திமுகவின் திட்டங்களாக, அவர்கள் ஆட்சியில் சட்டங்களாக இடம்பெற்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர், சிறுத்தைகளுக்கு பேசுவதற்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன. வலிகள் இருக்கின்றன, வேதனைகள் இருக்கின்றன, எழுத்தில் வடிக்கமுடியாத கொடுமைகளை எல்லாம் நெஞ்சில் தாங்கியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், அவையெல்லாம் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவற்றையெல்லாம் இளைஞர்களுக்கு உணர்த்தவேண்டிய பெரும் கடமை சிறுத்தைகளுக்கு உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. அந்த சமுதாயக் கடமையில் இருந்து விலகி விட முடியாது என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன். காரணம் ஆதிக்க சாதியினரைப் போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் கூட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தகுதி, திறமை என்று பேசுபவர்கள் அதிர்கரித்து வருவது வேதனை அளிக்க கூடியது. காரணம் அவர்களின் முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகள் எப்படிபட்டது, இன்றைக்கு இவர்கள் அனுபவிக்கிற வசதி வாய்ப்புகள் எப்படி கிடைத்தது என்பதெல்லாம் தெரியாது. தெரிந்தால் அவர்கள் அப்படி பேசமாட்டார்கள். "அவர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) அடிமையாய் இருக்கிறார்கள்" என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தான் இன்றைக்கு சிறுத்தைகளுக்கும் நான் சொல்லிக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன். "அவர்களின் (இன்றைய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்) முன்னோர்கள் அடிமையாய் இருந்தார்கள், கொடுமையை நடத்தப்பட்டார்கள்" என்பதை தெளிவாய் உணர்த்துங்கள்".
விடுதலை சிறுத்தைகளுக்கு ஊடக ஆதரவு இல்லை, ஆகவே ஊடகமாய் செயல்படவேண்டியவர்கள் விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகளே. தமிழகத்தில் திருமாவளவன் காலடி படாத சேரி கிராமங்களே கிடையாது என்று சொல்லலாம். திருமாவின் 30 ஆண்டுகால மக்களுக்கான உழைப்பை மெருகேற்றும் பெரும் பணி அவரின் தம்பிமார்களுக்கு உண்டு. சேரிகள் தோறும் திருமாவின் எழுத்துக்களை, செயல்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டிய மகத்தான பணி அவர்களுடையது. துண்டறிக்கைகளாக, சுவர் விளம்பரங்களாக, தெருமுனை கூட்டங்களாக, பொதுக்கூட்டங்களாக இவற்றை எல்லாம் எடுத்து செல்லவேண்டிய கடமை அவர்களுடையது. இதிலே இன்னொரு முக்கிய பணியும் உண்டு என்பேன். திருமாவோடு புரட்சியாளர் அம்பேத்கரையும் அழைத்து செல்ல வேண்டியதே அது. காரணம் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் அம்பேத்கர் முகமூடியை போட்டுகொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை கவர பார்க்கிறார்கள். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இந்துமதத்தை தீவிரமாக தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கரே ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு வந்திருக்கிறார் என்று அவர்கள் புளுகுவதும், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அம்பேத்கர் மீது கொண்டுள்ள அபிரிமிதமான நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை தன்வயப்படுத்தும் யுக்தி என்பதை எடுத்துரையுங்கள். இந்துத்துவ பயங்கரவாதிகளை அம்பேத்கர் எப்படியெல்லாம் அம்பலபடுத்தினார் என்பதை ஆதாரத்தோடு விளக்குங்கள். என்பது தான் சிறுத்தைகளுக்கு நான் சொல்லிகொள்வது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவன் பேசுவதை தவிர்த்து வேறெந்த பொதுக்கூட்டமும் நடப்பதாக அறிய முடியவில்லை. அப்படியொரு நிலையை அடியோடு மாற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. இங்கு திமுகவை பற்றி குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் 2000 கூட்டங்களை நடத்தவேண்டும் என்று திமுகவினருக்கு கலைஞர் உத்தரவிட்டார், ஆனால் அவர்கள் நடத்தியதோ 3000க்கும் அதிகமான கூட்டங்கள். சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு இளைஞரணியினர் ஒருவாரத்திற்கு தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்தவேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டார், அவர்கள் ஒருவாரத்தில் தமிழகம் முழுக்க 5000க்கும் அதிகமான கூட்டங்களை நடத்தினார்கள். இது தான் திமுகவின் வெற்றிக்கான தாரக மந்திரம் என்பதை சிறுத்தைகள் உணரவேண்டும். பெரிய அளவில் செலவு செய்து மிகப்பெரிய மாநாடு நடத்துவதை காட்டிலும் சிறிய அளவில் நடத்தப்படும் தெருமுனை கூட்டங்களால் தான் மக்களிடம் நெருங்கி பழக முடியும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதே போல கடந்த திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகள் அமைதியாக இருந்த அதிமுக வினர் கடைசி ஐந்தாவது ஆண்டில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம், தெருமுனை கூட்டம் என தமிழகம் தழுவிய அளவில் நடத்தி மக்களோடு மக்களாக நெருங்கினார்கள். அவர்கள் ஆட்சியைப் பிடித்ததற்கு அதுவும் ஒரு வலுவான காரணம் என்பதை மறுதலித்துவிட முடியாது.
கடந்த 15ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் "அரசியல்,சனநாயகம், மற்றும் அரசு நிர்வாகம்" குறித்து தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் திருமாவும் பங்கெடுத்து பேசியிருக்கிறார். திருமாவின் கருத்துரையால் ஈர்க்கபட்ட மாணவர்கள் அவரை பற்றி குறிப்பிடும்போது “ எங்களை போன்ற இளைஞர்களுக்கு இவரை போல உண்மையான வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள், இவரை நாங்கள் அரசியல்வாதியாக மட்டுமல்ல நல்ல ஆசானாகவும் பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டதாக நண்பர்கள் முகனூலில் பதிவிட்டிருக்கிறார்கள். சிலமணிநேர பேச்சுக்களில் பல்லாயிரம் மக்களை கவரும் ஆற்றல் திருமாவுக்கு உண்டு என்பதை அவரை எதிர்ப்பவர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். திமுகவினரை போல வாரத்திற்கு 5000 கூட்டங்கள் நடத்த வேண்டாம், மாதந்தோறும் தாய்மண் இதழில் திருமா எழுதும் "அமைப்பாய் திரள்வோம்" என்ற தலையங்கத்தை கிராமம் தோறும் எடுத்து செல்லும் விதமாக, மாதத்திற்கு 5000 தெருமுனை கூட்டங்கள் நடத்துங்கள் அதுவே போதும். ஒவ்வொரு சேரி கிராமத்தையும், சிறுத்தை கிராமமாக மாற்றுங்கள். சேரியில் மட்டும் கொடியேற்றுவது சிறுத்தைகளின் பணியல்ல, சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டையிலும் கொடியெற்றுவதும் சிறுத்தைகளின் உரிமை என்பதை உணருங்கள், அமைப்பாய் திரளுங்கள் நாளைய அதிகாரம் நம் கையில். இன்றைய தலைமுறை தியாக தலைமுறை, நாளைய தலைமுறை நாடாளும் தலைமுறை என்பார் திருமா. அவரின் காலத்திலே சிறுத்தைகளை நாடாள வைப்பதே அவர் உழைப்புக்கு சிறுத்தைகள் செலுத்தும் மரியாதையாக இருக்கும் . வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கும் - மோடிக்கும் மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல, விடுதலை சிறுத்தைகளுக்கும் முக்கியமான தேர்தல் தான் ..!
- தமிழன் வேலு